Friday, January 6, 2017

திருக்குறள் - உயர்ந்த செல்வம் எது ?

திருக்குறள் - உயர்ந்த செல்வம் எது ?


செல்வம் எது என்று என்னிடம் கேட்டால் - பணம், காசு, வீடு, மனை, பங்கு பத்திரங்கள், கார், நிலம் , நகை என்று அடுக்கிக் கொண்டே போவேன்.

இன்னும் சில பேர், இதெல்லாம் பெரிய செல்வம் இல்லை. கல்விச் செல்வம்தான் பெரிய செல்வம் என்று சொல்லுவார்கள்.

இன்னும் சில பேர், ஆரோக்கியம்தான் சிறந்த செல்வம் என்பார்கள். என்ன இருந்து என்ன பயன், நல்ல உடல் ஆரோக்கியம் இல்லை என்றல் எதையும் அனுபவிக்க முடியாது. எனவே உடல் ஆரோக்கியம்தான் உள்ளதிற்குள் சிறந்த செல்வம் என்பார்கள்.

இன்னும் சிலரோ, இதெல்லாம் பெரிய செல்வம் இல்லை, முக்தி அல்லது வீடு பேறு பெறுவதுதான் சிறந்த செல்வம் என்பார்கள்.

வள்ளுவரைக் கேட்டால் இது எதுவுமே பெரிய செல்வம் இல்லை...எல்லாவற்றையும் விட பெரிய செல்வம் "வேண்டாமை" என்ற எண்ணம் தான் என்கிறார்.

பாடல்

வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை 
யாண்டு மஃதொப்ப தில்.


சீர் பிரித்த பின்

வேண்டாமை அன்ன விழுச்  செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அது ஒப்பது இல்

பொருள்

வேண்டாமை = வேண்டாம் என்று சொல்லும் மனம் அல்லது எண்ணம்

அன்ன = போன்ற

விழுச்  செல்வம் = சிறந்த செல்வம்

ஈண்டு இல்லை  = இங்கு இல்லை

யாண்டும் = மற்றவற்றில்

அது ஒப்பது இல் = அதற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை

வள்ளுவர் ஏன் வேண்டாமை என்பதை சிறந்த செல்வம் என்கிறார் என்று சிந்திப்போம்.

வள்ளுவர் சொன்னார் என்பதற்க்காக அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.

வேண்டும் வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் மேலும் மேலும் உயர்கிறோம், சம்பாதிக்கிறோம்..வேண்டாம் என்று வைத்தது விட்டால் பின் உழைப்பு ஏது, செல்வம் ஏது ?

பின் ஏன், வேண்டாமை என்பதை சிறந்த செல்வம் என்கிறார் ?

நமக்கு எவ்வளவு தான் செல்வம் இருந்தாலும், நமக்கு மேலே ஆயிரம் பேர் இருப்பார்கள். அவர்களை விட நம் செல்வம் ஒன்றும் பெரியது இல்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

இருக்கும் வீட்டை விட பெரிய வீடு, பெரிய கார், பெரிய சேமிப்பு, பெரிய பட்டங்கள் என்று மேலும் மேலும் வேண்டும் வேண்டும் என்றே அலைந்து கொண்டு இருப்போம். எவ்வளவு சேர்த்தாலும் , பற்றாக் குறைதான். சேர்த்ததை அனுபவிக்க  முடியாது. சேர்த்த செல்வத்தை வேறு யாராவது கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம்.

எவ்வளவு சேர்த்தாலும், நிறைவு , திருப்தி என்பதே கிடையாது. மனம் அமைதி அடையாது.

வேண்டாம் என்று வைத்து விட்டால், ஓட்டம் நிற்கும். அலைச்சல் நிற்கும். நம்மை விட அவன் அதிகம் வைத்து இருக்கிறான். அவனைப் போல நமக்கும் வேண்டும் என்ற பொறாமை, போட்டி, எல்லாம் நிற்கும்.

கேட்க நல்லா இருக்கு. அப்படி யாராவது இருந்திருக்கிறார்களா ? அப்படி இருக்க முடியுமா ?

முதலில் மாணிக்க வாசகர்....


உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

வேண்டேன் , வேண்டேன் என்று  உருகுகிறார்.

அடுத்தது, தொண்டரடிப் பொடி ஆழ்வார்

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

இந்திர லோகமே கிடைத்தாலும் வேண்டேன் என்று இருக்கிறார்.

அடுத்தது திருமூலர்

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்

ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

கடவுளே கிடைத்தாலும் , அதற்கு ஆசைப் படாதீர்கள் என்கிறார்.

நம்ம ஆட்கள் எப்போதும் மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப் படுவார்கள்.

சொர்கத்துக்கு போனாலும், அதற்கும் மேல் ஏதாவது உண்டா என்று ஆசைப் படுவார்கள்

பரமபதம் போனாலும், அதற்கு மேல் நித்ய சூரிகளாக இருக்க ஆசைப் படுவார்கள்.

சொர்கத்துக்கு அப்பால் உள்ள இடத்துக்கு வாலி போனான் என்பார் கம்பர்

தன் அடி தாழ்தலோடும்
    தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
    ‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும்
    ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
    அப்புறத்து உலகன் ஆனான்.

வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் என்பது கம்பர் வாக்கு.

அங்கேயும் போய் , அதை விட சிறந்தது ஏதாவது இருக்கிறதா என்று தேடாதீர்கள்....அங்கும் "வேண்டாமையைப்" போல சிறந்த செல்வம் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்

யாண்டு மஃதொப்ப தில்...எப்போதும் அதைப் போல சிறந்த செல்வம் இல்லை என்கிறார்.

வேண்டாமை என்பது ஒரு செல்வம் என்று நினைத்தாவது பார்த்து இருக்கிறோமா ?

நினைத்துப் பார்ப்போம்.




1 comment:

  1. மிகவும் பொருள் நிறைத்த குறள். சிந்தனைக்குரியது. நன்றி.

    ReplyDelete