Saturday, January 7, 2017

இராமாயணம் - பரதன், குகன் - என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே

இராமாயணம் - பரதன், குகன் - என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே 


பக்தி என்பது உணர்வின் உச்சம்.

அது நம்பிக்கையில் பிறப்பது. அங்கே தர்க்கமும் அறிவும் விடை பெற்று போய் விடுகின்றன.

இராமனைக் கண்டு, அவனிடம் அரசை தர வேண்டும் என்று பரதன் தன்னுடைய மந்திரிகள் மற்றும் படையோடு வருகிறான். வந்த பரதன் கங்கையின் கரையில் காத்திருக்கிறான். ஆற்றைக் கடக்க வேண்டும்.

நமெக்கெல்லாம் கடலைக் கடக்க வேண்டும், அவனுக்கு ஆற்றைக் கடந்தால் போதும் , ஆண்டவனை அடைய.

மறு கரையில் குகன் இருக்கிறான்.

படையோடு வந்த பரதனைக் கண்ட குகன், அவனை தவறாக எடை போடுகிறான். இராமன் மேல் படை எடுத்தது வந்துவிட்டான் பரதன் என்று நினைக்கிறான் குகன். பரதன் மேல் சண்டை போட்டு அவனை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும்  என்று கோபத்தோடு நினைக்கிறான்.

"என் ஆருயிர் நாயகன் இராமனிடம் இருந்து வஞ்சனையாக அரசைப் பறித்துக் கொண்ட பரதன் இப்போது அவன் மேல் படை எடுத்து வந்திருக்கிறான். இவனைப் போக விட்டு விட்டால் இந்த உலகம் என்னை "நாய்" என்று இகழும் " என்கிறான்.

பாடல்

‘அஞ்சன வண்ணன், என் ஆர்
     உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
     மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
     உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
     என்று, எனை ஓதாரோ?


பொருள்

அஞ்சன வண்ணன் = கரிய நிறம் கொண்ட

என் = என்னுடைய

ஆர் உயிர் நாயகன் = அருமையான உயிர் போன்ற நாயகன் (இராமன்)

ஆளாமே = ஆளாமல்

வஞ்சனையால் = சூழ்ச்சியால்

அரசு எய்திய = அரசை பெற்றுக் கொண்ட

மன்னரும் வந்தாரே! = மன்னனாகிய பரதனும் வந்தாரே

செஞ் சரம் என்பன = சிவந்த அம்புகள்

தீ உமிழ்கின்றன = தீயை கக்குகின்றன

செல்லாவோ? = சொல்ல மாட்டார்களோ ?

உஞ்சு இவர் போய்விடின் = தப்பி இவர்கள் போய் விட்டால்

“நாய்க்குகன்” = நாய் குகன்

என்று, எனை ஓதாரோ? = என்று என்னைச் சொல்ல மாட்டார்களா ?

குகனுக்கு இராமன் மேல் , இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் இராமன் என்ற உருவத்தின் மேல் அவ்வளவு காதல்.

இராமனுக்கு ஆயிரம் சிறப்புகள் இருக்கலாம். குகனுக்குத் தெரிந்தது எல்லாம், 'கரிய நிறம் ' மட்டும்தான். அவன் உருவ அழகில் உருகியவன் குகன்.

எல்லோராலும் தவறாக புரிந்து கொள்ளப் படுவதே பரதனின் நிலையாக இருக்கிறது.

ஈன்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. வரத்தின் மூலம் அரசைப் பெற்றுக் தந்தால்  பரதன் ஏற்றுக் கொள்வான் என்று கைகேயி தவறாக எண்ணின்னாள் .

அவன் எனக்கு மகனே இல்லை என்று தசரதன் கூறினான்.

இலக்குவன் அவனை புரிந்து கொள்ளவில்லை.

கோசலை கூட ஒரு கணம் பரதனை தவறாக நினைத்தாள்.

இப்போது குகன் அவனை தவறாக நினைக்கிறான்.

அறத்தின் வழியில் செல்பவர்களை உலகம் எளிதாக புரிந்து கொள்வதில்லை என்பதற்கு பரதன் ஒரு  உதாரணம்.

உலகம் புரிந்து கொள்ளவில்லையே என்பதற்காக பரதன் ஒரு இடத்திலும் தன்  நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

பரதனை முழுமையாக புரிந்து கொண்டவன் ஒருவன் மட்டுமே - அது இராமன்.

யாருக்குப் புரிய வேண்டுமோ அவருக்குப் புரிந்தது.

அற வழியில் செல்பவர்களை உலகம் புரிந்து கொள்ளாவிட்டாலும் ஆண்டவன் புரிந்து கொள்வான்.

3 comments:

  1. மிகவும் அருமையான பதிவு! நன்றி! உலகமே எதிர்த்தாலும், அற வழியில் இருந்து வழுவுதல் தவறு!

    ReplyDelete
  2. சான்றோர் அற வழியில் நடப்பது மற்றவர்களுக்கு
    புரிவதற்காக அல்ல.அது அவர்கள் இயல்பு. புரிய
    வேண்டியவர்களுக்கு புரிந்தால் போதும்.
    நாய் குகன் நான் இதுவரை கேட்டதில்லை. குகனின் சிறப்பு நன்றாக வெளிப்படுகிறது. மிக்க நன்றி

    ReplyDelete
  3. இலங்கையில் இது

    ReplyDelete