Monday, January 29, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செல்வம் பெற்ற வழி

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செல்வம் பெற்ற வழி 


நமக்கு வாய்த்த செல்வம், புகழ் , பதவி, அதிகாரம் எல்லாம் நம் அறிவினாலும், திறமையினாலும் வந்தது என்று நாம் நினைக்கிறோம். நான் செய்தது,  என் திறமைக்கு கிடைத்த பரிசு என்று நினைக்கிறோம்.

இராவணன் அடையாத செல்வம் இல்லை.

கல்வி  - நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
வீரம் - ஏனை திக்கோடு உலகு அனைத்தும் சென்றடக்கிய புய வலியும்
ஆயுள் - முக்கோடி வாழ் நாளும்
தவம் - முயன்றுடைய பெரும் தவமும்

இவை எல்லாம் எப்படி வந்தன ? இராவணன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அவனுடைய தவம் மற்றும் திறமையால் வந்தது என்று.

மாரீசன் சொல்கிறான் , "இவை எல்லாம் உன் திறமையினாலோ, தவத்தாலோ, வீரத்தாலோ வந்தது அல்ல. அறத்தினால் வந்தது. நீ அறம் வழுவினால், இவை அனைத்தும் போய் விடும் " என்று அறிவுரை கூறுகிறான்.

பாடல்

'திறத் திறனாலே, செய் தவம் முற்றித் திரு உற்றாய்,
மறத் திறனாலோ? சொல்லுதி-சொல் ஆய் மறை வல்லோய்!-
அறத் திறனாலே எய்தினை அன்றோ? அது, நீயும்
புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ?

பொருள்

'திறத் திறனாலே = மிகப் பெரிய திறமையால்

செய் தவம் = செய்த தவத்தால்

முற்றித் = முழுவதுமான

திரு உற்றாய் = செல்வத்தைப் பெற்றாய்

மறத் திறனாலோ? = அதர்மத்தினாலா ?

சொல்லுதி = சொல்லுகிறாய்

சொல் ஆய் = ஆயிந்த சொற்களை கொண்ட

மறை வல்லோய்! = வேதங்களில் வல்லவனே

அறத் திறனாலே = அறத்தினால்

எய்தினை அன்றோ? = அடைந்தாய் அல்லவா

அது = எ அவற்றை

நீயும் = நீயும்

புறத் திறனாலே = அறத்திற்கு புறம்பான செய்கையால்

பின்னும்  = பின்னால் அவற்றை

இழக்கப் புகுவாயோ? = இழக்கப் போகிறாயா ?

அற வழியில் சென்றால் செல்வம் நிலைக்கும். அறம் அல்லாத வழியில் சென்றால் செல்வம் போகும்.

இன்றைய சூழ்நிலையில் அரசியலில், பெரிய பதவிகளில் இருப்பவர்கள் , பணம் மட்டும் இருந்தால் போதும், எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்று தவறு மேல் தவறு செய்கிறார்கள்.

இராவணனிடம் இல்லாத வீரமா, செல்வமா, புகழா, படையா...

தோற்று, அவமானப் பட்டு, கடைசியில் இறந்தும் போனான்.

இராமாயணம் படிப்பது கதைக்காக அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி முறை.

அது சொல்லும் அறத்தை விட்டு விட்டு கதையை பிடித்துக் கொள்ளக் கூடாது.

கதையை விட்டு விட்டு அறத்தை பிடித்துக் கொள்ள வேண்டும்.

நீரையும் பாலையும் பிரித்தால் மட்டும் போதாது, பாலைப் பருக வேண்டும். நீரை அல்ல.

இராமாயணத்தில் ஒவ்வொரு பாட்டிலும், ஒரு பாடம் இருக்கிறது.

மாரீசன் என்ற அரக்கன் இராவணன் என்ற இன்னொரு அரக்கனுக்கு சொன்ன அறிவுரை இது....

நினைத்துப் பார்த்திருப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_29.html




1 comment:

  1. எந்த இதிகாசங்களையோ இலக்கியங்களையோ படித்தால் அதில் உள்ள சாரத்தை படிப்பினையை எடுத்து கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்தி கொள்ளவேண்டும் என்பதை அழகாக கூறி உள்ளீர்கள்.
    மாரீசன் மந்தோதரி,விபீஷணன் கும்பகர்ணன் என பலர் எடுத்து கூறியும் தன்னை திருத்தி கொள்ள தவறி விட்டான்.விநாச காலம் வந்தால் அறிவரையை கேட்கும் திறனை இழந்து விடுகிறோம் போல தெரிகிறது.

    ReplyDelete