Wednesday, January 31, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - கண்டகர் உய்ந்தார் எவர் ?

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - கண்டகர் உய்ந்தார் எவர் ?


சூழ்ச்சியால் சீதையை கவர மாரீசனின் உதவியை நாடுகிறான் இராவணன். அப்படி செய்வது தவறு என்று இராவணனுக்கு , மாரீசன் சில அறிவுரைகள் கூறுகிறான்.

"தண்ணீரை திருடியவர்கள், நாடு கவர்ந்தவர்கள், முறை இல்லாமல் வரி கொண்டவர்கள், மற்றவன் மனைவியை கவர்ந்து கொண்டவர்கள் போன்ற இவர்களை அறம் கொல்லும் . தீயவர்கள் யாரும் தப்பிப் பிழைக்க முடியாது " என்கிறான்

பாடல்

நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார்,
    நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்கு
    ஆய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர்
    தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார்
    எவர்? ஐயா!


பொருள்

நாரம் கொண்டார் = நீரை எடுத்துக் கொண்டவர்கள்

நாடு கவர்ந்தார் = நாட்டினை கவர்ந்து கொண்டவர்கள்

நடை அல்லா = வழி முறை இல்லாத

வாரம் கொண்டார் = வரி கொண்டவர்கள்

மற்று ஒருவற்கு  ஆய் = மற்றவர்க்கு என்று ஆகி

மனை வாழும் = அவர்கள் இல்லத்தில் வாழும்

தாரம் கொண்டார் = தாரத்தை அபகரித்துக் கொண்டவர்கள்

என்று இவர் தம்மைத் = என்ற இவர்களை

 தருமம் தான் = அறம் தான்

ஈரும் கண்டாய்! = இறுதியை காணும் , அழிக்கும்

கண்டகர்  = தீயவர்

உய்ந்தார் எவர்? ஐயா! = தப்பியவர்கள் யார் ஐயா ? (யாரும் இல்லை )

நார என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள்  உண்டு.அதில் முக்கியமான அர்த்தம் "நீர்"  என்பது. (ஆத்மா என்பது இன்னொரு அர்த்தம்) .

அயனம் என்றால் வழி என்று  நமக்குத்  .தெரியும். சூரியன் , பூமியின் வட பகுதியில் சஞ்சரிக்கும் நேரத்துக்கு உத்தராயணம் என்று பெயர். தென் பகுதியில் இருக்கும் நேரத்துக்கு தட்சிணாயனம் என்று பெயர். (உத்திரம் = வடக்கு)

இராமன் வழி என்பதைக் காட்ட இராமாயணம்.

நீரின் வழி வந்ததால், நாரம் + அயனம் = நாராயணம் , நாராயணன்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.

நாரம் கொண்டார் என்றார் நீரைப் பறித்துக் கொண்டவர்கள் என்று பொருள்.

நாம் ஒரு பட்டியல் இடுகிறோம் என்றால், எதை முதலில் சொல்ல வேண்டும், எதை இறுதியில் சொல்ல வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும் . அந்த முறைப்படிதான் சொல்ல வேண்டும். மனம் போன போக்கில் பட்டியல் போடக் கூடாது.

மாதா, பிதா, குரு , தெய்வம் என்று பட்டியல் போட வேண்டும்.

தீமைகளை பட்டியல் போட வந்த கம்பர், முதலில் நீரை திருடியவர்களை முதலில் சொல்கிறார். உள்ளதற்குள் பெரிய தீமை அது.

இன்று மாநிலங்கள் நீருக்காக அடித்துக் கொள்கின்றன. வரும் நாட்களில் நீரை காரணமாக் கொண்டு பெரும் போர்கள் நிகழலாம். நீர் உயிர் வாழ இன்றி அமையாதது.  அதை திருடியவன் பெரிய திருடன்.

அடுத்தது, நாட்டை கவர்ந்து கொண்டவர்கள். தன் பலத்தால் மற்றவர்கள் நாட்டை பறித்துக் கொண்டவர்கள்.

அரசாங்கம் சக்தி வாய்ந்தது. குடி மக்கள் பலம் இல்லாதவர்கள். அரசாங்கம் முறையாக வரி வசூலிக்க வேண்டும். அடக்கு முறையால், முறையற்ற வரி வசூலித்தால்  அது பெரிய தீமை.

அடுத்த தீமையாக, மற்றவன் மனைவியை அபகரிப்பது. பலம் பொருந்தியவன், பலம் இல்லாதவனின் மனைவியை கவர்ந்து கொள்ள முடியும்.  அப்படி செய்தால், சமுதாயம் சீரழியும். குடும்பங்கள் சிதையும்.

பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் என்பார் வள்ளுவர்.

மாற்றான் மனைவியோடு தனிமையில் இருப்பவனுக்கு பக்கத்தில் சாத்தான் இருப்பான் என்கிறார் நபிகள் நாயகம்.

இப்படி தீமை செய்பவர்களை யார் என்ன செய்யமுடியும் ?

ஒரு அரசே தவறான முறையில் தண்ணீர் தராவிட்டால், முறையற்ற வழியில் வரி வசூலித்தால்  என்ன செய்ய முடியும் ?

யாரிடம் முறையிடுவது ?

மாரீசன் சொல்கிறான் - தர்மம் அவர்களின் இறுதியைக் காணும் என்று. தர்மம் அவர்களை அழிக்கும் என்கிறார் கம்பர், மாரீசன் மூலம்.

யாருக்குப் பயப்படாவிட்டாலும் தர்மத்திற்கு பயப்பட வேண்டும்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_31.html






2 comments:

  1. மாரீசனின் நல்ல அறிவுரை.வேடிக்கை என்ன வென்றால் ராவணன் அந்த மாரீசனையே சீதையை கவர மானாக உபயோகப்படுத்தியது.

    ReplyDelete
  2. இதெல்லாம் சொன்னபின் மாரீசன் எப்படி சீதையும் செல்ல ஒப்புக்கொண்டான் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete