Monday, February 5, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - மெய்ம்மை உணர்ந்தாய்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - மெய்ம்மை உணர்ந்தாய் 


சமீபத்தில் ஒரு பெரிய கல்வித் துறையின் தலைவர் கையூட்டு பெற்றதற்காக கைது செய்யப்பட்டதை செய்தித் தாள்களில் படித்து அறிகிறோம்.

ஒரு கல்வித் துறையின் தலைவர். அவருக்குத் தெரியாதா தான் செய்வது தவறு என்று. அவர் படிக்காத நூல்களா ? அவருக்குத் தெரியாததா ? பின் ஏன் இந்த தவறு நிகழ்ந்தது ? அவர் மட்டும் அல்ல. அவர் போல் வரலாறு எங்கும் பலரைக் காணலாம்.

ஏன் படித்தவர்கள் தவறு செய்கிறார்கள் ? அறியாதவன் தவறு செய்தால், அறியாமை என்று மன்னிக்கலாம்.

கற்றவர்கள், கற்றதன் வழி நிற்பதில்லை. "இதெல்லாம் கவைக்கு உதவாது , நடைமுறையில் சாத்தியம் இல்லை, இதெல்லாம் நமக்கு சொன்னது இல்லை " என்று படித்ததை புறம் தள்ளி விட்டு , மனம் போன படி வாழத் தலைப் படுகிறார்கள்.

எது சௌகரியமோ அதை மட்டும் வைத்துக் கொண்டு, அதற்கு ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு , தாங்களாகவே ஒரு வாழ்க்கை வாழத் தலைப் படுகிறார்கள்.

இதற்கு எதற்கு படிக்க வேண்டும்  ?

இராவணன் படிக்காத சாத்திரம் இல்லை. இருந்தும் அவன் புத்தி வேறு வழியில் போனது.

மாரீசன் தன் அறிவுரையை தொடர்கிறான்.

பாடல்

நின்றும் சென்றும் வாழ்வன யாவும்
    நிலையாவாய்ப்
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய்!
    புலையாள் தற்கு
ஒன்றும் உன்னாய்; என் உரை கொள்ளாய்;
    உயர் செல்வத்து
‘என்றும் என்றும் வைகுதி; ஐயா!
    இனி ‘என்றான்.

பொருள்


நின்றும் = அசையாமல் ஒரே இடத்தில் நிற்கும் மரம், செடி , கொடிகளும்

சென்றும் = இடம் இடம் பெயரும் விலங்குகள், பறவைகள், மனிதர்கள் போன்றவைகளும்

வாழ்வன யாவும் = வாழ்கின்ற யாவும்

நிலையாவாய்ப் = நிலைத்து வாழ்வன அல்ல

பொன்றும் என்னும் = அழியும் ஏதேனும் ஒரு நாள்

மெய்ம்மை உணர்ந்தாய்! = என்ற உண்மையை அறிந்தாய்

புலையாள் தற்கு = தீமை செய்வதற்கு

ஒன்றும் உன்னாய் = எதையும் நினைக்கமாட்டாய்

என் உரை கொள்ளாய் = நான் சொல்வதை கேட்க மாட்டாய்

உயர் செல்வத்து = உயர்ந்த செல்வங்களுக்கு

‘என்றும் என்றும் வைகுதி; = என்றும், என்றும் வைத்து வாழ்வாய்

ஐயா! = ஐயனே

இனி ‘என்றான் = இனி என்றான்

இராவணன்  வேதங்களை கற்றறிந்தவன் . அவற்றிற்கு காவலாய் நின்றவன்.

இருந்தும், அவன் கற்ற நூல்கள் படி அவன் வாழவில்லை. அதனால் அழிந்தான்.

படித்தும், அதன் படி வாழாமல்  இருப்பது, அரக்க குணம்.

எத்தனை எத்தனை நூல்களை படித்து இருக்கிறீர்கள். எவ்வளவு அற உரை படித்து இருக்கிறீர்கள்.

அவற்றுள், எத்தனையை , "இதெல்லாம் நமக்கு ஒத்து வராது" என்று ஒதுக்கி  வைத்து இருக்கிறீர்கள்.


அப்படிச் செய்தவன் இராவணன். ஒரு அரக்கன்.


http://interestingtamilpoems.blogspot.com/2018/02/blog-post_5.html

No comments:

Post a Comment