Friday, June 1, 2018

திருக்குறள் - பெருமை வேண்டுமா?

திருக்குறள்  - பெருமை வேண்டுமா?


பெருமையோடு வாழ வேண்டும் என்று விரும்பாதவர் யார்? எல்லோரும் பெருமையோடு, சிறப்பாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். மற்றவர்களை விட செல்வத்தில், அறிவில், பதவியில் என்று ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களை விட சிறந்து விளங்கவே விரும்புகிறார்கள்.

ஆனால், எப்படி அந்தப்  பெருமையை பெறுவது? அதற்கு என்ன வழி?

அதை அறிவதற்கு முன், ஒருமை மகளிர் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

திருமணம் ஆன பின், கணவன் எப்படி இருந்தாலும், பெண்கள் அவனை விட்டு விட்டு இன்னொருவனை மணந்து கொள்ள விரும்புவதில்லை. பெருவாரியான பெண்கள் நிலை அது. விதி விலக்குகள் இருக்கலாம். இருக்கிறது.

கணவன் மேல் ஆயிரம் குறைகள்  சொல்லுவார்கள். கணவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது, அப்பாவி, சோம்பேறி, என்றெல்லாம் கூறுவார்கள். இருந்தும், கணவனை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பேச மாட்டார்கள். அவனை விட்டு விட்டு இன்னொருவனை மனதில் நினைக்க மாட்டார்கள். அதுவே கற்பு என்று கூறப் படுகிறது. நமக்கு இவன் தான் என்பதில் மிக உறுதியாக இருப்பார்கள்.

அவர்களை வள்ளுவர் "ஒருமை மகளிர்" என்கிறார். ஒன்றைத் தவிர வேறு எதையும் நினைக்க மாட்டார்கள்.

அது போல, பெருமை வேண்டுபவர்கள், கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். எந்தத் துறையை எடுத்தாலும், அதில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்து மாறக் கூடாது. ஒன்றை செய்யும் போதே, மனம் அதை விட்டு விட்டு இன்னொன்றுக்குத் தாவ விடக் கூடாது.

உயர்ந்த ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும். குறிக்கோளில் உறுதி வேண்டும்.

பாடல்

ஒருமை மகளிரே போலப் பெருமையும் 
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு


பொருள்

ஒருமை மகளிரே போலப் = ஒருமை மகளிரைப் போல

பெருமையும்  = பெருமையானது

தன்னைத்தான் = ஒருவன் தன்னைத் தான்

கொண்டுஒழுகின் = ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்

 உண்டு = வரும்.

பெருமையை அடைய கொண்ட குறிக்கோளில், ஒழுக்கமான வழியில் இருந்து மாறக் கூடாது.

எவ்வளவு துன்பம் வந்தாலும், கற்புடைய மகளிர் எப்படி தங்கள் கணவனை , அவன் எப்படி இருந்தாலும் விட மாட்டார்களோ, அது போல குறிக்கோளை விடக் கூடாது.

ஒழுகின் - அற வழியில் , இடை விடாமல் முயற்சி செய்தால்

அது படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, பெருமை அடைய இதுவே வழி.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_1.html




1 comment:

  1. இதை விட சிறந்த உதாரணத்தை கொண்டு இந்த குறளை இவ்வளவு கச்சிதமாக விவரித்து இருக்கமுடியாது.

    ReplyDelete