Wednesday, June 6, 2018

தேவாரம் - அஞ்சினேன்

தேவாரம் - அஞ்சினேன் 


எவ்வளவு துன்பம் இருந்தாலும், வாழ்க்கையை வேண்டாம் என்று யாரும் சொல்லுவது இல்லை. பொறுக்க முடியாத துன்பம் என்று சொன்னாலும், பொறுத்துக் கொண்டு வாழத்தான் ஆசைப்படுவோமே தவிர, வாழ்வை யாரும் முடித்துக் கொள்ள விரும்புவதில்லை.

அதில் தவறு ஒன்றும் இல்லை. வாழ்க்கை வாழத்தானே.

ஆனால், இந்த உடல் மேலும்,  இந்த உலக வாழ்க்கை மேலும் கொண்ட பற்றினால், இதை விட உயர்ந்தவற்றை மறந்து போய் விடுகிறோம்.  உணவு, உறக்கம், உறவுகள் என்று வாழ்க்கை போய் விடுகிறது. இந்த அர்த்தமில்லாத வாழ்வை கண்டு அஞ்சினேன் என்கிறார் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்.

பாடல்


இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு, 
பறை கிழித்தனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு, 
திறை கொணர்ந்து ஈண்டி, தேவர், செம்பொனும் மணியும் தூவி, 
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

பொருள்

இறைகளோடு = பட்டம் பதவிகளோடு

இசைந்த இன்பம் = பொருந்திய இன்பம்

இன்பத்தோடு = அந்த இன்பத்துக்கு

இசைந்த வாழ்வு = ஏற்ப ஒன்றிய வாழ்வு

பறை கிழித்தனைய = பறை என்ற தோல் இசைக் கருவி கிழிந்ததைப் போல

போர்வை = போர்வை போர்த்திய இந்த உடலை

பற்றி யான் = பற்றிக் கொண்டு நான்

நோக்கினேற்கு = பார்த்தால்

திறை கொணர்ந்து = கப்பம் கொண்டு வந்து தந்து

ஈண்டி = அருகில் வந்து

தேவர் = தேவர்கள்

செம்பொனும் = சிறந்த பொன்னும்

மணியும் = மணியும்

தூவி = தூவி

அறை கழல் = ஒலி எழுப்பும் கழல்களை

இறைஞ்சும் = போற்றும்

ஆரூர் = திருவாரூரில்

அப்பனே! = உள்ள என் தந்தை போன்றவனே

அஞ்சினேனே = நான் அஞ்சினேன்

வாழ்க்கையை கண்டு அஞ்சவில்லை.  வாழ்க்கை வீணாகப் போவதைக் கண்டு அஞ்சுகிறார்.  வாழ்க்கையை அர்த்தம் இல்லாமல் கழிப்பதை கண்டு அஞ்சுகிறார்.

பறை என்பது ஒரு தோல் இசைக் கருவி. மத்தளம் போன்றது. அதன் மேல் உள்ள தோலில் அடித்தால் சப்தம் வரும். அந்த தோல் கிழிந்து போனால் அது எதற்கும் உதவாது.

நமது உடலும் தோலினால் போர்த்திய ஒன்று தான். ஒரே ஒரு வித்தியாசம், இது கிழிந்திருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் வெளியேற வேண்டும் அல்லவா ?

பறை கிழிந்தனைய உடல். அந்த உடல் வேண்டும் சுகத்துக்கு இவ்வளவு அலைச்சல். வாழ் நாள் எல்லாம் இந்த உடல் வேண்டும் சுகத்துக்காக செலவிடுகிறோம். எவ்வளவு பெரிய வீண் வேலை.

அரிதினும் அரிதான இந்த வாழ்க்கையை பெற்று, பின் அதை அர்த்தம் இல்லாமல்  கழிப்பதை கண்டு அவர் அச்சப் படுகிறார்.

அவர் அச்சம் சரிதானே?

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_6.html



4 comments:

  1. Hi, just chanced upon your blog..simply fantastic..thank you for the great work..why have you stopped writing in this blog?

    ReplyDelete
  2. "இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு" என்ற வாழ்வைத்தான் நாமெல்லோரும் விரும்புகிறோம். அனால் அந்த வாழ்வையே கண்டு அஞ்சினாராம்! நல்ல பாடல். நன்றி.

    ReplyDelete
  3. வாழ்வின் இலட்சியம் 'முக்தி' அல்லாது வேறொன்றில்லை..! மிக நல்ல விளக்கம்...!

    ReplyDelete
  4. தங்கள் முயற்சியும் ..இப்பாடல் விளக்கமும் காலங்கடந்து நிற்கும்...!. .🙏...

    ReplyDelete