Friday, June 8, 2018

குறுந்தொகை - இனிது என்று கணவன் உண்டலின்

குறுந்தொகை - இனிது என்று கணவன் உண்டலின் 


உணவு என்பது உடலுக்கு சக்தி தரும் பொருள் மட்டும் அல்ல. அது உணர்வு சம்பந்தப் பட்டது.

பல வீடுகளில், உணவு சமைக்கப் பட்டு, மேஜையின் மேல் வைத்து விடுவார்கள். அவரவர் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் போட்டு சாப்பிட்டு விட்டு போவார்கள்.

மாட்டுக்கு வைக்கோல் போடுவதைப் போல, போட்டு விட்டுப் போய் விட வேண்டியது. மாடு எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பது மாதிரி.

ஒன்றாக இருந்து உண்ண வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, பல வீடுகளில் கணவனும் சரி பிள்ளைகளும் சரி போட்டதை சாப்பிட்டுவிட்டு போவார்கள். சாப்பாட்டைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை சொல்வது கிடையாது. மணிக்கணக்கில் சூட்டில் நின்று சமைத்ததை, ஏதோ கடனே என்று அள்ளிப் போட்டுக் கொண்டு போவது நல்லாவா இருக்கு. இரசித்துச் சாப்பிட வேண்டும். உணவு தயார் செய்த அம்மாவை, மனைவியை பாராட்ட வேண்டும். உணவு ருசியாக இருந்தால், "இன்னிக்கு இது ரொம்ப பிரமாதம் ..உன் கை பக்குவமே அலாதி தான் " என்று உளப் பூர்வமாக சொல்ல வேண்டும்.

அவ்வளவு நேரம் பட்ட பாடெலாம் அந்த ஒரு வார்த்தையில் கரைந்து போகும்.

அவள் அப்போதுதான் திருமணம் ஆகி வந்திருக்கிறாள். கணவனும் மனைவியும்  மட்டும் இருக்கிறார்கள். அவனுக்கு நல்ல உணவு தயாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆசை. புதுப் பெண். உணவு தயாரித்து பழக்கம் இல்லை. நல்ல சேலை ஒன்றை உடுத்திக் கொண்டு சமையல் ஆரம்பிக்கிறாள்.  அடுப்பில் ஏதோ கொதித்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் தயிர் சாதம் செய்து விடலாம் என்று தயிர் சாதம் பிசைந்து கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் அடுப்பில் வைத்த உணவு கொதித்து விட்டது. தயிர் சாதம் பிசைந்த கை. வெளியில் போய் கழுவி விட்டு வர நேரம் இல்லை. கையை அப்படியே அந்த நல்ல சேலையில் துடைத்துக் கொள்கிறார்கள். அடுப்பில் இருந்த உணவை கவனிக்கிறாள். புகை அடிக்கிறது. அந்தக் காலத்தில் gas அடுப்பு ஏது. நெற்றியில் வழியும் வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொள்கிறாள்.

எல்லாம் தயார் ஆகி விட்டது.

கணவனும் வந்து விட்டான். உணவு பரிமாறுகிறாள்.

மனைவியைப் பார்க்கிறான். சற்றே கலைந்த தலை. தயிர் படிந்த சேலைத் தலைப்பு. புகை படிந்த முகம். இருந்தும் அவனுக்கு உணவு செய்து விட்டோம் என்ற  சந்தோஷம் மற்றும் காதல்.

அவனுக்கும் மனதில் காதல் பொங்குகிறது. உன் சமையல் பிரமாதம் என்கிறான். அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. முகம் பிரகாசமாக மாறி விடுகிறது.

குறுந்தொகை காட்டும் காட்சி.

பாடல்


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!

பொருள்

முளிதயிர் = கட்டித் தயிர்

பிசைந்த = பிசைந்த

காந்தள் = காந்தள் மலர் போன்ற

மெல் விரல் = மெல்லிய விரல்களை

கழுவுறு = துடைத்துக் கொண்ட

கலிங்கம் = சிறந்த ஆடை சேலை)

கழாஅது உடீஇ = மாற்றாமல் அதையே உடுத்துக் கொண்டு

குவளை உண் கண் = குவளை மலரைப் போன்ற குவிந்த கண்கள்

குய்ப்புகை கழுமத் = புகை நிறைந்த

தான் துழந்து = அவள் கையில் பிசைந்த

அட்ட தீம் புளிப் பாகர் = லேசாக புளித்த தயிர் சாதம்

‘இனிது’ எனக் = நன்றாக இருக்கிறது என்று

கணவன் உண்டலின் = சொல்லி கணவன் உண்டதைக்

நுண்ணிதின் = நுண்ணிய

மகிழ்ந்தன்று = மகிழ்ந்த

ஒள் நுதல் முகனே! = ஒளி நிறைந்த முகம் உடையவள்

முகத்தில் ஒளி வருமா ? சந்தோஷம் நிறைந்து இருத்தால், மனதில் அன்பு நிறைந்து இருந்தால் ஒளி உண்டாகும்.

அந்தக் காலத்தில் ப்ரதீப மஹாராஜா என்று ஒருவர் இருந்தார். இராமரின் முன்னோர். அவர் உடம்பில் இருந்து ஒளி வீசிக் கொண்டிருக்குமாம்.

இராமர் கறுப்புதான். இராமர் உடம்பில் இருந்து ஒளி வீசியதாம். கரிய உடலில் இருந்து ஒளியா ? அதுவும் எப்படி பட்ட ஒளி? சூரியனை மிஞ்சும் ஒளியாம்.

கம்பர் சொல்கிறார்.


வெய்யோன் ஒளிதன் மேனியின் விரி சோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.

சூரிய ஒளி, இராமரின் மேல் இருந்து வரும் ஒளியில் மறைந்து விட்டதாம். அவ்வளவு ஒளி பொருந்திய உடல்.

மனைவியை பாராட்டிப் பாருங்கள். அவள் மகிழும் போது, அவள் நாணும் போது ஒளி விடுவதைக் காண்பீர்கள். 

கணவனுக்கு அருகில் இருந்து உணவு பரிமாறிப் பாருங்கள். உறவு பலப்படும். 

இலக்கியங்கள் நம் வாழ்வை மெருகூட்டும். மேலும் சிறப்படையச் செய்யும். 

அன்பு பலப்படட்டும். குடும்பங்கள் சிறக்கட்டும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_8.html

2 comments:

  1. Simply beautiful..thanks for sharing..please keep up the good work and share more

    ReplyDelete
  2. எத்தனை நூற்றாண்டுகளுக்கு முந்திய பாடலின் காட்சி, ஏதோ இன்று கண் முன்னே நடப்பது போல இருக்கிறது. ஒரு புகைப்படமோ, ஓவியமோ, ஒளிப்படமோ காண்பது போல இருக்கிறது.

    அற்புதமான உரையுடன் உங்களுக்குத் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete