Wednesday, February 12, 2014

நாச்சியார் திருமொழி - தலை அல்லால் கைம் மாறிலேனே

நாச்சியார் திருமொழி - தலை அல்லால் கைம்  மாறிலேனே 




எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலயு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே

 இப்படியும் கூட காதலிக்க முடியுமா என்று வியக்க வைக்கும்  பாடல்.

"அவனை இப்போது வரச் சொல். அவன் வரா விட்டால், நாளடைவில், வயதாகி,  என் சிவந்த இதழ்களும், என் மார்புகளும் அழகு அழிந்து போகும். அப்படி அழகு அழிந்து போனால் அவனுக்குத் தான் நஷ்டம். அதனால் அவனை இப்போதே வரச் சொல்.

அவனுக்கு என்ன கல்  நெஞ்சம்.என்னை வருத்த வேண்டும் என்றே புன் முறுவல் மட்டும் காட்டி விட்டு வரமால்  போகிறான். போகட்டுமே. எனக்கு என்ன. பின்னாடி எப்பவவாவது நான் வேண்டும் என்று வருவான் அல்லவா ...அப்போது இந்த இதழ்களும் என் மார்புகளும் அழகு அழிந்து போய் இருக்கும். யாருக்கு நட்டம் ?

அதனால் அவனை இப்போதே வரக் கூவுவாய் குயிலே...அப்படி நீ அப்படி கூவுவாயாகில் என் தலையையே உனக்கு நான் தருவேன் "

 என்கிறாள்.


பாடல், சீர் பிரித்த பின்

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீ கேசன் வலி செய்ய
முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இல்லேனே 

பொருள்

எத்திசையும் = அனைத்து திசைகளிலும் உள்ள

அமரர் = தேவர்கள்

பணிந்து = பணிந்து

ஏத்தும் = புகழ் பாடும்

இருடீ கேசன் = தன்னைக் கண்டவர்களின் புலன்களை கொள்ளை கொள்ளுபவன்

வலி செய்ய = எனக்கு துன்பம் செய்ய

முத்தன்ன =  முத்துப் போன்ற

வெண் = வெண்மையான

முறுவல் = புன்முறுவல்

செய்ய = செய்துவிட்டுப் போனான், நானோ 

வாயும் = என் சிவந்த இதழ்களும்

முலையும் = முலையும்

அழகு அழிந்தேன் நான் = அழகு அழிந்தேன் நான்

கொத்து = கொத்து கொத்தாக

அலர் = மலர்ந்து இருக்கும்

காவில் = கானகத்தில்

மணித்தடம் = அழகான இடத்தில்

கண் படை கொள்ளும் = கண் மூடித் தூங்கும்

இளம் குயிலே = இளம் குயிலே

என் = என்னுடைய

தத்துவனை = தத்துவனை. தத்துவம் என்பது உண்மை. அதுதான் பொருள். அதுதான் நம்பிக்கை. அவன் தான் அவளுக்கு எல்லா  தத்துவங்களும்,அவற்றின் பொருளும்.

வரக் = வரும்படி

கூகிற்றியாகில் = நீ கூவுவாயானால்

தலை அல்லால் கைம்மாறு இல்லேனே = என் தலையைத் தவிர தருவதற்கு ஒன்றும்  இல்லை  என்னிடம். தலையை தருவேன் என்றால் தலையை வெட்டித் தருவேன் என்று அல்ல. என்னையே தருவேன் என்று ஒரு பொருள். தலை என்பது  அறிவு, அதனால் வரும் அகங்காரம், நான் என்ற அகந்தை இவற்றின்  இருப்பிடம். அவன் வருவது என்றால் இதை எல்லாம் விட்டு விடுவேன் என்கிறாள். மாற்றி யோசித்தால், இதை எல்லாம் விட்டால் தான் அவன் வருவான் என்பது  புலனாகும். அகந்தை போன இடத்தில் அவன் வருவான். இராவணன் மலையைத் தூக்க முடியும் என்று அகந்தை கொண்டான். அது முடியாது என்று அகந்தை போன இடத்தில் அவன் வந்தான்.

கோவிலில் போய் முடி காணிக்கை செலுத்துகிரோமே எதற்கு ?

முடி ஒரு அழகு. அழகு அழியும். அந்த முடி இல்லாவிட்டால் நம்மை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள். ஒரு நாள் இந்த முடி தாங்க  உதிரும்.அப்போது நம் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு வெள்ளோட்டம். நம்  ,மரியாதை, மதிப்பு நம் முடியில் இருக்கிறது !

இரண்டாவது, முடியை எடுக்கும் போது நம் சாயலே மாறிப் போகிறது. நான் என்பது யார் ? அந்த முடியா ? முடியில்லாத நானும், முடியுள்ள நானும் வேறு வேறு  ஆட்களா ?

 மூன்றாவது,நம்மால் தலையைத் தர முடியாது...முடியைத் தருகிறோம். ரொம்ப ஒன்றும் தூரம் இல்லை....






1 comment:

  1. ஆஹா, இப்போது எனக்கு இராமாயணமா, திருக்குளா, குறுந்தொகையா, நாச்சியார் திருமொழியா எது மிகவும் பிடிக்கும் என்று சொல்லத் தெரியவில்லை. என்ன ஒரு அன்னியோன்னியமான, புன்முறுவல் வரவழைக்கும் பாடல்!

    அற்புதமான உரை. மொட்டை அடிப்பதைப் பற்றி நீ எழுதியதைப் படித்துச் சிரித்தேன்!

    ஒரே ஒரு சந்தேகம்: "திருமால் முத்தான புன்னை செய்துவிட்டுப் போனதால், நான் அழகு அழிந்துவிட்டன்" என்றல்லவோ பாடலில் வருகிறது? ஒருவேளை திருமால் திரும்பி வந்தால் அழகு மீண்டும் வந்துவிடுமோ என்னவோ?!

    ReplyDelete