கம்ப இராமாயணம் - தழுவிய கைகள்
போரில் அடிபட்டு இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.
இராவணா, யாரையெல்லாம் தழுவிய கைகள் உன்னுடையவை ....
போர்மகளை , கலை மகளை, புகழ் மகளை, சீர் மகளை, திருமகளை என்று எல்லோரையும் தழுவினாய். இது எல்லாம் போதாது என்று கற்பின் கனலியான சீதையை தழுவ நினைத்தாய். அதனால் உயிரைக் கொடுத்தது மட்டும் அல்ல, பழியும் கொண்டாய். கடைசியில் இப்போது மண்ணைத் (பார் மகழை ) தழுவி கிடக்கிறாயே
என்று புலம்புகிறான்.
பாடல்
'போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய கை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தெரிவு அரிய தெய்வக் கற்பின்
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத் மார்பால்?'
பொருள்
போர்மகளை = போர் மகளை
கலைமகளை = கலை மகளை
புகழ்மகளை = புகழ் மகளை
தழுவிய கை = தழுவிய உன் கைகள்
பொறாமை கூர = பொறாமை கொள்ளும் படி இருக்க
சீர்மகளை = செல்வ மகள்
திருமகளை = திருமகளை
தேவர்க்கும் = தேவர்களுக்கும்
தெரிவு அரிய = அறிய முடியாத
தெய்வக் கற்பின் = தெய்வீக கற்பு நெறி கொண்ட
பேர்மகளை = பேர் கொண்ட சீதையை
தழுவுவான் = தழுவ நினைத்து
உயிர் கொடுத்து = அதில் உயிரைக் கொடுத்து
பழி கொண்ட பித்தா! = பழி கொண்ட பித்தனே
பின்னைப் = பின்னால்
பார்மகளைத் தழுவினையோ = நில மகளை தழுவி கிடக்கிறாயோ
திசை யானைப் = எட்டுத் திசைகளை காக்கும் யானைகளை
பணை இறுத்த = தந்தங்களை உடைத்த
பணைத் மார்பால்?' = பெரிய மார்பால்
உயிர் கொடுத்தும் புகழ் கொள்ள வேண்டும் என்பார்கள் பெரியவர்கள்.
இவன் உயிர் கொடுத்து பழி கொண்டதால் அவனை பித்தன் என்று வீடணன் அழைத்தான்.
கல்வி, செல்வம், வீரம் என்று எல்லாம் இருந்தும் சீதையைத் தழுவ நினைத்து பழி சுமந்து உயிர் கொடுத்தான்.
பழி சுமத்தும் பாடல்தான்.
சோகமான பாடல் தான்.
இருந்தும் கம்பனின் கவிச் சுவை எப்படி இருக்கிறது பாருங்கள்.
என்ன ஒரு கற்பனை. என்ன ஒரு சொல் ஆளுமை !