Wednesday, July 30, 2014

தேவாரம் - என் வேதனையை விலக்கிடாய்

தேவாரம் - என் வேதனையை விலக்கிடாய் 


மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவனின் ஆணவம்.

நான் , எனது என்ற ஆணவமே அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம்.

நான் பெரியவன் - இறுமாப்பு

என்னைப் பற்றி தவறாகச் சொன்னால் - கோபம் வருகிறது

எனக்கு என்ன ஆகுமோ என்ற பயம் வருகிறது

என்னை மதிக்க வில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை

நான் உண்மையில் பெரிய ஆள் இல்லையோ என்ற சந்தேகம்

என் உடமைகளை யாரும் கவர்ந்து கொள்வார்களோ என்ற பயம்

என்னைத் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்

அவள் எனக்குத் தான் சொந்தம் என்ற காமம்

அது எனக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற தவிப்பு

நான் செய்த தவறு மற்றவர்களுக்குத் தெரிய வந்தால் என் மதிப்பு என்ன ஆகும் என்ற கவலை

என்று நமக்கு வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் ஆணவம்.

ஆணவ மலம் ஆதி மலம். குழந்தையாக இருக்கும்போதே நம்மோடு வந்து  விடுகிறது.

தேவாரத்தில், அப்பர் ஸ்வாமிகள் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது  பாட்டில்  இராவணனை  குறித்து  பாடுவார்.

இராவணன் ஆணவத்தின் உச்சம். அவனுக்கே அருள் புரிந்தாயே எனக்கும் அருள் புரி என்ற வேண்டுதலாக இருக்கும் அந்த பாடல்கள்.

நாம் ஒன்றும் இராவணனுக்கு குறைந்தவர்கள் அல்ல. அவனுக்கு பலம் இருந்தது, ஆணவமும் இருந்தது.

நாம் பலம் இல்லாமலேயே அவனை விட அதிகம் ஆணவம் கொண்டு அலைகிறோம் .

அவனை விட பெரிய ஆணவக்காரார்கள் நாம்.

அப்பர் குறிப்பிடும் இராவணன் நாம் தான் என்று எண்ணிப் பார்த்தால் பதிகம்  விளங்கும்.


பாடல்

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங்காநட மாடவல்லாய்

ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்

வேர்த்தும்புரண்டும்விழுந் தும்எழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்

ஆர்த்தார்புனல் சூழ்அதிகைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

சீர்  பிரித்த பின்

போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்! புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!

ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ் அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால், என் வேதனை ஆன விலக்கியிடாய்-

ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

பொருள்

போர்த்தாய் = போர்த்திக் கொண்டாய். உடுத்திக் கொண்டாய்

அங்கு = அங்கு

ஒர் ஆனையின் = ஒரு யானையின்

ஈர் உரி-தோல்! = உரித்த தோலை

புறங்காடு = புறத்தே இருக்கும் காடு, சுடுகாடு

அரங்கா = அதை அரங்கமாகக் கொண்டவனே

நடம் ஆட வல்லாய் = நன்றாக நடனம் ஆட வல்லாய்

ஆர்த்தான் = ஆரவாரித்தான்

அரக்கன் தனை = இராவணன் தன்னை

மால் வரைக் கீழ் = கயிலை மலையின் கீழ்

அடர்த்திட்டு = நழுக்கி, அழுத்தி

அருள் செய்த  அது கருதாய் = பின் அருள் செய்த அதை நினைக்க மாட்டாய்

வேர்த்தும் = வியர்த்து

புரண்டும் = புரண்டு

விழுந்தும் எழுந்தால் = விழுந்தும் எழுந்தால்

என் வேதனை ஆன விலக்கியிடாய் = என் வேதனைகளை விலக்க மாட்டாய்

ஆர்த்து ஆர் புனல் சூழ் = பொங்கி வரும் நீர் சூழ்ந்து வரும்

அதிகைக் = திருவதிகை என்ற திருத் தலத்தில்

கெடில = கெடில நதிக் கரையில்

வீரட்டானத்து உறை அம்மானே = எட்டு வீரட்டானங்களுள் ஒன்றான அங்கு வாழும் என் அம்மானே

ஆணவம் துன்பத்தைத்  தரும்.

ஆண்டவனிடம் சரண் அடைவது அந்த ஆணவத்தைப்  போக்கும்.

நாம் சரண் அடைவதால் அவனுக்கு ஆகப் போவது என்ன.

நம் ஆணவம் குறையும். அதனால் துன்பம் குறையும்.

துன்பங்களைத் தாங்கும் மனபலம் வரும்.

கைலாய மலையைத் தூக்கிய இராவணன் துன்பப் பட்டான் என்றால் நாம் எம்மாத்திரம்.

ஆணவம் மனிதனை அளவுக்கு அதிகமாக ஆட வைக்கிறது. மலையைத் தூக்கினால்  என்ன என்று சிந்திக்க வைக்கிறது.

சிந்திப்போம்



No comments:

Post a Comment