நாலாயிர திவ்ய பிரபந்தம் - கல்லணைமேல் கண் துயிலக் கற்றனையோ ?
இலக்கியங்களை, அதிலும் குறிப்பாக பக்தி இலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும் ? அவற்றைப் படிப்பதால் என்ன நன்மை ?
அதில் அறிவு பூர்வமாக என்ன இருக்கிறது ? கடவுளைப் பார்த்து நீ பெரிய ஆள், உன்னைப் போல் உண்டா, நீ அதைச் செய்தாய், இதை செய்தாய், நீ இப்படி இருக்கிறாய், நீ அப்படி இருக்கிறாய் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன இருக்கிறது.
மிஞ்சி மிஞ்சி போனால் கொஞ்சம் நிலையாமை, மற்றவர்களுக்கு உதவுவது என்பது பற்றி கொஞ்சம் உபதேசம் இருக்கும்.
இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது என்று சலிப்பு வரலாம்.
அதிலும் இன்றுள்ள இளைய தலைமுறை, அறிவியல், தர்க்கம், கணிதம் என்று படித்த இளைய தலைமுறை இந்த பக்தி இலக்கியம் எல்லாம் bore என்று தள்ளி விடலாம்.
அப்படி என்னதான் இருக்கிறது இதில் ?
நமக்கு துன்பம் வந்தால் நாம் என்ன செய்வோம் ?
துவண்டு போவோம், வருந்துவோம், நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் வருகிறது என்று நொந்து கொள்வோம், எப்படி இதை சமாளிக்கப் போகிறோமோ என்று திகைப்போம்...சில சமயம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி விடலாமா என்று தோன்றும், சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள்....
இந்த இலக்கியங்களை படிக்கும் போது துன்பங்களை தாங்கி, அவற்றை தாண்டிச் செல்ல மனம் பக்குவப் படுகிறது. பழக்கப் படுகிறது.
இராமனுக்கு அரசை தருவதாக முதல் நாள் சொன்ன தசரதன் மறு நாள் இராமனை காட்டுக்கு அனுப்பி விடுகிறான்.
இராமன் எப்படி எல்லாம் துன்பப் பட்டிருப்பான் என்பதை தசரதனின் மன நிலையில் இருந்து குலசேகர ஆழ்வார் உருகுகிறார்.
பிள்ளையை ஹாஸ்டலில் விட்டு விட்டு வந்த பின் தவிக்கும் பெற்றோரின் மனம் போல புலம்புகிறது.
பிள்ளைக்கு ஒரு துன்பம் என்றால் எந்த பெற்றோருக்கும் வருத்தம் வரத்தான் செய்யும்.
அதுவும், அந்த துன்பம் ஒரு தகப்பனால் ஒரு பிள்ளைக்கு வந்தது என்றால் அந்த தகப்பன் எப்படி துடித்துப் போவான் ?
அதை விடவா நமக்கு ஒரு துன்பம் வந்து விடும் ?
மெல்லிய பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கி பழக்கப் பட்டவன் நீ. எப்படித்தான் இந்த கல்லின் மேல் படுத்து உறங்குவாயோ என்று உருகுகிறான் தசரதன்.
அவனை விடவா நமக்கு ஒரு துன்பம் வந்து விடும்...பெற்ற பிள்ளையை காட்டுக்கு அனுப்பியதை விடவா ஒரு துன்பம் இருக்கும் ?
பாடல்
கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே
பொருள்
கொல்லணை = கொல்லும்
வேல் = வேல் போன்ற கூறிய
வரிநெடுங்கண் = நீண்ட கண்களை கொண்ட
கோசலைதன் = கோசலையின்
குலமதலாய் = குளத்தில் தோன்றிய பிள்ளையாய்
குனிவில் லேந்தும் = வளைந்த வில்லை ஏந்தும்
மல்லணைந்த = வலிமையான
வரைத்தோளா = மலை போன்ற பெரிய தோளை உடையவனே
வல்வினையேன் = பொல்லா வினயை உடைய நான்
மனமுருக்கும் வகையே கற்றாய் = மனம் உருகும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் = மெல்லிய படுக்கையில்
முன்துயின்றாய் = முன்பு துயின்றாய்
இன்றினிப்போய் = இன்று இனிப் போய்
வியன்கான மரத்தின் நீழல் = பெரிய கானகத்தில் மரத்தின் நிழலில்
கல்லணைமேல் = கல் தரையில்
கண்டுயிலக் கற்றனையோ = கண் துயில என்று கற்றாய்
காகுத்தா = காகுந்தன் என்ற பரம்பரையில் வந்தவனே
கரிய கோவே = கரிய நிறம் கொண்ட அரசனே
காலம் எப்படி மனிதனைப் புரட்டிப் போடுகிறது.
இராமனுக்கே இந்த கதி என்றால் நாம் எம்மாத்திரம்.
அரசு வந்து விட்டது என்று ஆடவும் இல்லை.
அரசு போய் விட்டதே என்று அழுது புலம்பவும் இல்லை.
இந்த நிதானத்தை சொல்லித் தருவது இலக்கியம்.
துன்பத்தை தாங்கும் சக்தி தருவது இலக்கியம்.
அந்த சக்தி வேண்டாமா ?