Wednesday, September 30, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?

இராமாயணம்  - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? 



விஸ்வாமித்திரன், பலப் பல காரணங்களைச் சொல்லி , தாடகையை "கொல் " என்றான் இராமனிடம்.

என்னதான் கொடுமைக் காரியாக இருந்தாலும் அவள் ஒரு பெண். பெண்ணைக் கொல்வது என்பது வில் அறத்திற்கு ஏற்றது அன்று என்று இராமன் நினைக்கிறான்.

பெண்ணைக் கொல்வது சரியல்ல என்று இராமனுக்குத் தெரியும். அப்படித்தான் வசிட்டர் அவனுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்.

ஆனால், விச்வாமிதரனோ பெண்ணைக் கொல் என்கிறார்.

செய்தாலும் பிழை. செய்யாவிட்டாலும் பிழை. எப்படியும் அறத்தினின்று பிறழத்தான் போகிறான் இராமன்.

பாடல்

அண்ணல் முனிவற்கு அது
   கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
   தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
   தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
   பெருந்தகை நினைந்தான்.

பொருள்

அண்ணல் முனிவற்கு = முனிவனான விச்வாமித்திரனுக்கு

அது கருத்துஎனினும் = தாடைகையை கொல்வது தான் கருத்து என்றாலும்

‘ஆவி உண்’  = அவள் உயிரை உண்டு வா

என.  = என்று

வடிக் கணை = வடிவான அம்பை

தொடுக்கிலன்; = அவள் மேல் விடவில்லை

உயிர்க்கே = உயிருக்கு

துண்ணெனும் = துன்பம் தரும், நடுக்கம் தரும்

வினைத்தொழில் = தொழிலை

தொடங்கியுளளேனும். = அவள் தொடங்கி இருந்தாலும்

‘பெண்’ என = அவள் ஒரு பெண் என்று

மனத்திடை பெருந்தகை நினைந்தான்.= மனதில் பெருந்தகையான இராமன் நினைத்தான்

பள்ளிக் கூடத்தில் பாடம் படித்து விட்டு வெளி வருகிறோம்.

படித்ததை எல்லாம் அப்படியே நடை முறையில் செயல் படுத்த முடியாது என்பதைக் காட்டும் இடங்கள் இவை.

இராமன் செயல் படமால் பேசாமல் நிற்கிறான்.

அடுத்து என்ன நடந்தது என்று பார்பதற்கு முன்னால் , தாடகை போன்ற ஒரு அரக்கியிடம் கூட  கருணையோடு நடந்து கொண்ட இராமன் சீதையை துன்பப் படுத்தியது  ஏன் என்ற கேள்வியும் சிலர் மனதில் எழலாம்.

சீதையை தீ குளிக்க சொன்னது. அவளை காட்டில் கொண்டு போய் விட்டது எல்லாம்  சரியா போன்ற கேள்விகளும் மனதில் எழலாம்.

அவற்றையும் சிந்திப்போம்.



Sunday, September 27, 2015

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?


வயிற்று வலி, பல் வலி என்று உடலுக்கு ஏதாவது ஒரு வலி வந்து விட்டால்,  "கடவுளே, இந்த வலி தாங்க முடியவில்லையே, இந்த வலியில் இருந்து என்னை காப்பாற்று, உன் கோவிலுக்கு வருகிறேன், மொட்டை போடுகிறேன், அபிஷேகம் பண்ணுகிறேன்..."என்று எல்லா தெய்வத்தையும் வேண்டுவோம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட தாங்க முடியாத வலி வரும்போது இறைவனை நினைக்கிறான்.

உடல் வலி என்று இல்லை, எந்த நோவு வந்தாலும் ...பணக் கஷ்டம், நெருங்கிய உறவுகளுக்கு உடல் நிலை சரி இல்லை, காதலில் தோல்வி, பரிட்சையில் தோல்வி என்று எத்தனையோ நோவுகள் வருகின்றன.

அத்தனை நோவிலும் மனிதன் கடவுளை இரகசியமாகவேனும் நினைக்கிறான்.

ஞானசம்பந்தரிடம் கடவுள் எங்கு இருக்கிறான் என்று கேட்ட போது , வலி உள்ளவன் வாயில் கடவுள் இருக்கிறான் என்றார்.

பெருமாளே என்னை காப்பாற்று...

முருகா என் பிள்ளையை காப்பாற்று...

பிள்ளையாரப்பா என் கணவனை காப்பாற்று ...

என்று அவரவர் , தங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பெயரை சொல்லிச் வேண்டுகிறார்கள்.

சத்தியமாக அவர்கள் இறைவனை நம்புகிறார்கள்...எப்போதும் இல்லாவிட்டாலும் அந்த நோவு உள்ள பொழுதிலேனும் நம்புகிறார்கள்.

அவர்கள் வாயில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான் என்றார் ஞான சம்பந்தர்.

பாடல்


நுண்ணியான் மிகப்பெரியான்
நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்அந்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே.


பொருள்

நுண்ணியான் = மிக மிக நுட்பமானவன்

மிகப்பெரியான் = மிக மிக பெரியவன்

நோவுளார் வாயுளான் = அப்பேற்பட்ட இறைவன், வலி உள்ளவர்கள் வாயில் இருப்பவன்


தண்ணியான் = குளிர்ச்சியானவன்

வெய்யான் = வேப்பமானவன்

அந் தலைமேலான் = தலைக்கு மேலே உள்ளவன்

மனத்துளான் = மனதுக்கு உள்ளேயும் உள்ளவன்

திண்ணியான் = உறுதியானவன்

செங்காட்டங் குடியான் = செங்காட்டங்குடி என்ற ஊரில் உள்ளவன்

செஞ் சடை = சிறந்த சடை

மதியக் கண்ணியான் = நிலவை ஆபரணமாக  தலையில் அணிந்தவன்

கண்ணுதலான் = நெற்றியில் கண் உள்ளவன்  (நுதல் = நெற்றி)

கணபதீச் சரத்தானே. = கணபதிச்சீரம் என்ற ஊரில் உள்ளவனே

என்கிறார்.

அது என்ன தலைக்கு மேல் உள்ளவன், மனதுக்கு உள்ளே உள்ளவன் ?



இறைவன் இரண்டு இடத்தில் இருக்கிறான் என்று மணிவாசகர் சொல்கிறார்.

தலைக்கு மேலே சில அங்குல உயரத்தில். இதயத்தின் உள்ளே.


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

நெஞ்சுக்கு நேரே இரண்டு கையையும் சேர்த்து கூப்பி வணங்குவது ஒரு முறை. 

தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி ஒன்றாகச் சேர்த்து வணங்குவது இன்னொரு  முறை.

தலைக்கு மேலே கையை உயர்த்தி வணங்குபவர்களை உயரச் செய்வான் அவன் என்கிறார்  மணிவாசகப் பெருந்தகை. 

செய்து பாருங்கள். 

நெஞ்சுக்கு நேரே கை கூப்புவதற்கும், தலைக்கு மேலே கை கூப்புவதற்கும் வித்தியாசம்  தெரிகிறதா என்று செய்து பாருங்கள். 

ஞான சம்பந்தரும், மாணிக்க வாசகரும் சொல்லுகிறார்கள். 


Saturday, September 26, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி 


நம் மனம் நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. ஒரு நிமிடம் அமைதியாக இரு என்றால் இருக்காது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும்.

மனதை கட்டுப் படுத்துவது என்பது சாதாரண வேலை இல்லை.

மனம் இருப்பதால்தானே மனிதன் !

பெரிய பெரிய மகான்கள் எல்லாம் ரொம்ப பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள்.

மனம் , அது தன் பாட்டுக்கு  வேலை செய்கிறது. அதனால் தான்  நம்மாழ்வார் முதலிலேயே தன் மனதுக்கு சொல்லி விடுகிறார்...அவனை தொழுது எழு என்  மனமே என்று

உடனே மனம் கேட்கும்,  எதற்கு அவனை நான்  தொழ வேண்டும் என்று ? அவன் என்ன அப்படி என்ன பெரிய ஆளா என்று ?

மனதுக்கு சமாதனம் சொல்கிறார்....அவன் யார் தெரியுமா ...

அதற்கு மேல் வேறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த நலன்களை  கொண்டவன், மயக்கம் இல்லாத மதி நலம் தருபவன் அவன், அமரர்களுக்கு அவன் அதிபதி, நம்  துன்பங்களை எல்லாம் போக்குபவன் அவன்..எனவே அவனை தொழுது ஏழு என் மனமே "

என்று மனதுக்கு சொல்கிறார்.

" உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் 
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் 
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன் 
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே "


இங்கே, திருவரங்கதமுதனார், இராமானுஜரைப் பற்றி கூறும் போது ,

"என் மனமே, உன்னை நான் அடி பணிகின்றேன். இறை நம்பிக்கை இல்லாதவர்களின் தொடர்பை விடுத்து, இராமானுசரிடம் அன்பு கொள்ளவோர் அடிக் கீழ் என்னை சேர்த்ததற்கு  "

பாடல்

பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள்

பேரியல்நெஞ்சே!  = பெரிய மனமே

அடி பணிந்தேனுன்னைப் = உன்னை அடி பணிந்தேன்

பேய்ப் பிறவிப் = பேய் போன்ற பிறவி கொண்ட

பூரிய ரோடுள்ள = மக்களோடு உள்ள

சுற்றம் புலத்திப்  = உறவை நீக்கி

பொருவருஞ்சீர் = ஒப்பற்ற குணங்கள் உடைய

ஆரியன்= ஆரியன்

செம்மை = சிறந்த

இராமானுச = இராமானுசன்

முனிக் கன்பு செய்யும் = முனிவனுக்கு அன்பு செய்யும்

சீரிய பேறுடை யார் = சீரிய பேறு உடையவர்கள்

அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே = அடிக்கு கீழ் என்னை சேர்ததற்கே.



Friday, September 25, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2


கல்வி கற்கும் முறை.

நாம் எவ்வாறு கல்வி கற்கிறோம் ?

முதலில் நமக்கு சிலவற்றை சொல்லித் தருகிறார்கள். பின் சிறிது நாள் கழித்து, முதலில் சொன்னவை அவ்வளவு சரியில்லை, என்று திருத்திச் சொல்கிறார்கள்.

முதலில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று சொல்லித் தருகிறார்கள். பின்னாளில், சூரியன் உதிப்பது இல்லை. அது ஒரே இடத்தில் தான் இருக்கிறது.  பூமிதான் சுற்றி வருகிறது என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் உயர் வகுப்புகளுக்குப் போனால், சூரியன் நிலையாக இல்லை, அதுவும் பால்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

ஏன், முதலிலேயே இதை சொல்லித் தரக்கூடாதா ?

பொருள்கள் மூன்று நிலையில் இருக்கின்றன. திட, திரவ, வாயு நிலையில் இருக்கின்றன என்கிறார்கள். பின், அதெல்லாம் சரி இல்லை....பொருள்கள் எல்லாம் அணுவால் ஆனது என்கிறார்கள். பின், அணு கூட இல்லை, அவை எலேக்டரோன் , ப்ரோடான், நியுட்ரான் என்ற துகள்களால் ஆனது என்கிறார்கள்.

ஏன் , மூன்றாம் வகுப்பிலேயே இதை சொல்லித் தரக் கூடாதா என்றால் சொல்லித் தரக் கூடாது. சொல்லித் தந்தால் புரியாது.

படிப்படியாகத் தான் சொல்லித் தர முடியும். படிக்க படிக்க , முன்னால் படித்தது மாறும்.

இராமன், முதலில் வசிஷ்டரிடம் பாடம் பயின்றான். அது ஒரு உயர் நிலை பள்ளி மாதிரி.

அடுத்து விச்வாமித்ரரிடம் பாடம் பயிலப் போகிறான். அது கல்லூரி படிப்பு மாதிரி.

வசிட்டர் சொல்லித் தந்த அறங்களை இன்னும் கூர்மை படுத்தி, அவற்றின் நெளிவு சுளிவுகளை விஸ்வாமித்ரர் சொல்லித் தருகிறார்.

பொய் சொல்லக் கூடாது என்பது ஒரு அறம் .

புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் , பொய்யும் சொல்லலாம் என்பது இன்னொரு அறம்.

முரண்பட்ட அறங்களை எதிர் கொள்ள நேரும்போது என்ன செய்ய வேண்டும்.

எப்படியும் ஒரு அறத்தை விட்டு விலகித்தான் போக வேண்டி இருக்கும்.

அப்படி என்றால், எந்த அறத்தை விடுவது, எதை கைகொள்வது ?

இந்த சிக்கலுக்கு இராமன் வழி காட்டுகிறான்.

இந்த மாதிரி சிக்கல் வரும்போது, பற்றற்ற ஞானிகளின், உலக நன்மையில் நாட்டம் கொண்ட சான்றோர் சொல்வதை கேட்டு நடப்பது என்பது இராமன் காட்டிய வழி.

நாம் படித்த பாடங்கள் நமக்கு சரியான ஒரு முடிவை எடுக்க உதவி செய்யாவிட்டால், கற்றறிந்த சான்றோரிடம் கேட்பதுதானே முறை.

இராமன் அதைத்தான் செய்தான்.

முதலில் தாடகை வதத்தை எடுத்துக் கொள்வோம்.

இராமனுக்கு தெரிகிறது  தாடகை ஒரு பெண், அவளைக் கொல்லக் கூடாது என்று. அப்படித்தான் வசிட்டர் சொல்லித் தந்திருக்கிறார்.

ஆனால் இப்போது தாடகையை கொல்லவில்லை என்றால் அவள் இராமனையும், இலக்குவனையும், விச்வாமித்ரரையும் கொன்று விடுவாள்.

என்ன செய்வது ?




இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி

 இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி 



பக்தி செய்யும் போது மனதில் உள்ள ஆணவம், அகத்தை அழிய வேண்டும். சில பேர் பக்தி செய்வதிலேயே கூட கர்வம் கொள்வது உண்டு ...

"திருமலை பெருமாளுக்கு இத்தனை இலட்சம் நன்கொடை தந்தேன் "

"தினப்படி இரண்டு நேரம் பூஜை பண்ணுகிறேன், சுலோகம் எல்லாம் எனக்கு அத்துப்படி "

என்று பக்தி செய்வதில் ஒரு அகந்தை வந்து விடுகிறது. நான் அவனை விட அதிகம் பக்தி செய்கிறேன், நான் அவனை விட அதிகம் கோவில்களுக்குச் செய்கிறேன் என்று.

இந்த பக்தியால் ஏதாவது பலன் உண்டா ?

பக்தி என்பது இயல்பாக , மூச்சு விடுவது போல, கண் இமைப்பதுபோல இயல்பாக இருக்க வேண்டும்..

அந்த பக்தி எப்படி இயல்பாக வரும் ?

பக்தி இல்லாதவர்களை விட்டு நீங்கி இருக்க வேண்டும். பக்தர்கள் மத்தியில் இருந்தால் பக்தி என்பது ஒரு இயல்பான ஒன்றாக ஆகி விடும்.

பாடல்

கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.


பொருள்



கள் ஆர் மொழில் தென் அரங்கன்

கள்ளார் = தேன் நிறைந்த

பொழில் = பூங்காவனங்கள் சூழ்ந்த

தென் னரங்கன் = திருவரங்கத்தில் பள்ளி கொண்ட அரங்கனின்

கமலப் பதங்கள் = தாமரை போன்ற பாதங்களை

நெஞ்சிற் = மனதில்

கொள்ளா = வைக்காத

மனிசரை = மனிதர்களை

நீங்கிக் = விட்டு நீங்கி

குறையல் பிரானடி = திருமங்கை மன்னனுடைய திருவடிகள்

கீழ் = அடியில்

விள்ளாத அன்பன் = என்றும் நீங்காத அன்பன்

இராமா னுசன் = இராமானுசன்

மிக்க சீலமல்லால் = உயர்ந்த குண நலன்களைத் தவிர

உள்ளாதென் னெஞ்சு = உள்ளாது என் நெஞ்சு = நினைக்காது என் நெஞ்சு

ஒன்றறியேன் = இதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது

எனக்குற்ற பேரியல்வே.= எனக்கு அமைந்த இயல்பு அது

இயல்பான பக்தி. இயல்பான ஒரு மரியாதை.

Thursday, September 24, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1



தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றது சரியா ?

வாலியை மறைந்து நின்று கொன்றது சரியா ?


அன்று தொட்டு இன்று வரை இந்த சர்ச்சை நடந்து கொண்டேதான் இருக்கிறது.  எத்தனை முறை முடிவுகளை எட்டினாலும், ஒரு திருப்தி இல்லை.

இராமன் ஏன் அப்படிச் செய்தான் ? இராமன் அப்படி செய்யலாமா ? இது ஒரு தவறு இல்லையா ? இராமன் செய்தான் என்பதால் அது சரியாகி விடுமா ? இராமன் வழியில் செல்ல நினைப்பவர்களுக்கு இது ஒரு தடை இல்லையா ?

தாடகை, அவள் எவ்வளவுதான் பெரிய அரக்கியாக இருந்தாலும், அவள் பெண் தானே. ஒரு பெண்ணைக் கொல்வது அறமாகுமா ?

வாலி, எல்லா விதத்திலும் சுக்ரீவனை விட உயர்ந்தவன். பின் எதற்காக அவனைப் பகைத்து சுக்ரீவன் கூட நட்பு பாராட்டினான். சரி, அது வேண்டுமானால் எப்படியோ போகட்டும், மறைந்து நின்று தாக்கலாமா ?

இவை இரண்டும் அறத்தின்பாற்பட்டு நில்லாத செயலாகவே தோன்றுகிறது.


தாடகையை கொன்றது, வாலியை மறைந்து நின்று கொன்றதற்கு முன்னால் இராமன் செய்த இன்னொரு தவறும் கூட இருக்கிறது.

அப்பா சொன்னார் என்பதற்காக கடமையை விட்டு விடுவதா ? நாட்டு மக்களை காக்கும் கடமை இராமனுக்கு இல்லையா ? தந்தை சொன்னார் என்பதற்காக கடமையில் இருந்து நழுவலாமா ?


அவை அப்படியே இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம்.

இப்போது, இன்னொரு கேள்வியை எடுப்போம்.

ஒன்றுக்கு ஒன்று முரணான அறங்கள் இருந்தால் எதை கையில் எடுப்பது. ஒன்றைச் செய்தால் மன்றொன்று அடிபட்டுப் போகும்.

உதாரணமாக,

ஒருவன் மது போதையில், ஒரு பெண்ணை துரத்தி வருகிறான். அவன் கையில் அவள் அகப்பட்டால் அவள் கற்பு பறிபோவது திண்ணம். அவளை கொலை கூட செய்து விடுவான். அந்தப் பெண் ஓடிவந்து உங்கள் கண் எதிரிலேயே ஒரு இடத்தில் மறைந்து கொள்கிறாள்.  போதையில் வந்த அந்த ஆள் , அந்தப் பெண் எங்கே என்று கேட்கிறான்.

நீங்கள் என்ன செய்வீர்கள் ?

பொய் சொல்வது அறத்தின் பாற்பட்ட செயல் அல்ல.

உண்மை சொன்னால், அந்த பெண்ணின் மானமும் உயிரும் போகும்.

என்ன செய்வீர்கள் ?

வள்ளுவர் சொன்னார் , பொய்மையும் வாய்மை இடத்து, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று.

ஒரு வேளை நீங்கள் உண்மை சொல்லி, அந்த மனிதன் அந்தப் பெண்ணை கெடுத்து கொலையும்  செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நீதி அவனை  தூக்கில் போடும்.

அப்போதும் அந்த மனிதன் என்ன சொல்லுவான் "நான்தான் குடி வெறியில் இருந்தேன் என்று தெரியும் தானே உனக்கு...எதற்காக அந்தப் பெண்ணை காட்டிக் கொடுத்தாய் ...இப்போது பார் ...நீ சொன்ன உண்மையால் இரண்டு உயிர்கள் போகப் போகின்றன ..." என்று.

பொய் சொல்வது அறம் அல்லதான். இருந்தும் எல்லோரும் அந்த இடத்தில் பொய் தான் சொல்லி இருப்பார்கள்.

சரி, இது ஒரு வாதம்.

இன்னொன்றைப் பார்ப்போம்.

அறம் என்பது முடிந்த முடிவா ? இது தான் அறம் என்று யாராவது இறுதியாகக் கூற முடியுமா ?

கொல்வது பாவம் தான். ஆனால் ஊரில் பல பேரை கொன்றவனை நீதி தூக்கில் போடுகிறது. அது பாவம் இல்லையா ? நாடுகளுக்கு இடையே சண்டை வரும் போது  ஒரு நாட்டின் இராணுவம் இன்னொரு நாட்டின் இராணுவத்தில் உள்ளவர்களை கொல்கிறது . அது பாவம் இல்லையா ?

போதைப் பொருள்களை உட்கொள்ளுவது பாவம் தான். அறம் இல்லை தான். ஆனால், தாங்க முடியாத வலியில் ஒருவன் துடிக்கும் போது அவனுக்கு சிறிது போதைப் பொருளை மருந்து போல கொடுத்து அவன் வலியை தணிப்பது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை.

அறம் என்பது முழுவதுமாக வரையறுக்கப் பட்டது அல்ல. அது காலம், இடம், பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும்.

மீண்டும் இராமனிடம் வருவோம்....







Tuesday, September 22, 2015

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க 


"இத்தனை நாள் வாழ்ந்து நீங்க என்ன கிளிச்சீங்க ? கொஞ்சம் கூட வெக்கம் இல்லை உங்களுக்கு. இப்படியே போனால் கொஞ்ச நாளில் இறந்து போவீர்கள். நீகள் இறந்த பின்,  இந்த உடல் இருக்கிறதே, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கும் ஒரு பொருளாகப் போய் விடும்"

என்று வெறுத்து கோபித்து சொல்கிறார் திருநாவுகரசர்.

பாடல்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.


பொருள்

நடலை = துன்பமான

வாழ்வு = இந்த வாழ்வை

கொண்டு = வைத்துக் கொண்டு

என் செய்தீர் = என்ன செய்தீர்கள்

நாணிலீர் = நாணம் இல்லாதவர்களே

சுடலை = சுடு காடு

சேர்வது = போய்ச் சேர்வது

சொற் பிரமாணமே = சத்ய வாக்கே

கடலின் = திருபாற்கடலில்

நஞ்சமு துண்டவர் = நஞ்சை அமுதமாக உண்டவர்

கைவிட்டால் = கை விட்டு விட்டால்

உடலி னார்  = இந்த உடல்

கிடந்து = கிடந்து

ஊர் = ஊர்

முனி = கோபிக்கும்

பண்டமே. = பொருளே

என்னய்யா, இன்னுமா எடுக்கல, சீக்கிரம் எடுங்கள் என்று ஊர் கூடி கோபித்து  அனுப்பும்  இந்த உடலை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருகிறீர்கள் என்று  கேட்கிறார் நாவுக்கரசர் .

பதில் ?



இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை

இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை 


ஒரு நாள் நம் உடையை சரியாக இஸ்திரி (iron ) போடாமல் போட்டுக்கொண்டு வெளியே செல்ல முடியுமா ? கசங்கின ஆடையை உடுத்திச் செல்வோமா ?

உடம்பை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகள், அல்லது தொள தொள என்று தொங்கும் ஆடைகளை நம்மால் உடுக்க முடியுமா ? எவ்வளவு சங்கடப் படுவோம் ?

சகர்வர்த்தியின் பிள்ளைகள் , இராமனும், சீதையும், இலக்குவனும் மர உறி உடுத்துச் சென்றார்கள்.

அது உடலோடு சரியாகப் பொருந்தாது. மெத்தென்று மென்மையாக இருக்காது. அங்கங்கே குத்தும். உரசும். எரிச்சல் தரும்.

அப்பா சொன்னார் , என்ற ஒரே காரணத்துக்காக இராமன் மர உரி உடுத்து கானகம் போனான்.

கணவன் போகிறான் என்ற ஒரே காரணத்துக்காக சீதை மாற உரி உடுத்து, அவன் பின் கானகம் போனாள் .

அண்ணன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக இலக்குவன் சென்றான்.

இவர்கள் சென்றதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது.

அப்பாவின் மேல் உள்ள மரியாதை, கணவன் மேல் உள்ள காதல், அண்ணன் மேல் உள்ள பாசம் என்று.

அவர்களை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வர  பரதனும் மர உரி உடுத்து கானகம் போனான்.

அறத்தை நிலை நாட்ட மட்டுமே அவன் சென்றான்.

மந்திரிகளை விட்டு அழைத்து வரச் சொல்லி இருக்கலாம்.

அல்லது அவனே கூட சாதாரண ஆடை அணிந்து சென்றிருக்கலாம். அதை விடுத்து அவனும் மர உரி உடுத்துச் சென்றான்.


பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தை அடைகிறான். பரதனைப் பார்த்து அவர் கேட்கிறார்

"நீ முடி சூடி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. முடியெல்லாம் சரியாக சீவாமல் சடை பிடித்துப் போய் இருக்கிறது. இப்படி மர உரி உடுத்து இங்கு எதைத் தேடி வந்தாய் " என்று.

பாடல்


‘எடுத்த மா முடி சூடி நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான்.

பொருள் 

‘எடுத்த மா முடி = உன் தாய் எடுத்துக் கொடுத்த பெரிய மணி முடியை

சூடி = தலையில் அணிந்து

நின்பால் = உன்னிடம்

இயைந்து = அனுசரித்து வந்த

அடுத்த பேர் அரசு ஆண்டிலை = அந்த பெரிய அரசை நீ ஆளவில்லை

ஐய! நீ = ஐயனாகிய நீ

முடித்த = தலையை வாராமல் முடித்து

வார் சடைக் கற்றையை  = சடை கற்றையை

மூசு =  மொய்க்கும்

தூசு = தூசு என்றால் ஆடை

உடுத்து  = உடுத்து

நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான். = இந்த கானகத்திற்கு வந்ததன் காரணம் என்ன ?

மூசு தூசு என்றால் உடலை சுற்றி இருக்கும் ஆடை. பொருந்தாத ஆடை. மர உரி.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

ஏதோ பேருக்கு போய் அண்ணனைப் பார்த்து விட்டு வந்தவன் அல்ல பரதன்.

வருத்ததோடு, சிரத்தையோடு போனவன்.

தவறுக்கு வருந்தி பிராயாசிதம் தேடி போனவன்.



Saturday, September 19, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே 


பெரிய பெரிய மகான்கள் தோன்றிய பூமி  இது.எவ்வளவோ நல்ல நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள். அவர்களிடம் இருந்து அந்த நல்ல விஷயங்களைப் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு அதை சொல்ல மனம் வரவில்லை. அப்படி சொல்லாமல் போனால் அந்த பெரிய உண்மைகள் நாளடைவில் மறைந்து போகும். அது மட்டும்  அல்ல,அதை கண்டு சொன்ன அந்த மகான்களின் பேரும் பெருமையும் மறைந்து போகும்.

தான் கற்ற திவ்ய மந்திரங்களை எல்லோரும் உய்ய ஊருக்கே சொன்னவர் இராமானுஜர்.

அதனால், அதை பெற்றவர்கள்  வாழ்ந்தார்கள்.

அந்த உண்மைகள் நிலைத்தன.

அந்த மந்திரங்களை கண்டு சொன்ன பெரியவர்களின் பெயரும் நிலைத்தது.

அப்பேற்பட்ட மகான் இராமானுஜர். அவரின் பாதார விந்தங்களைச் சேர அவருடைய நாமங்களைச் சொல்லுவோம்.

பாடல்


பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.


பொருள்

(மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.  இந்த பாசுரத்தில் பல இடத்தில் மன்னு என்ற வார்த்தை  வருகிறது. மன்னு புகழ் கோசலை மணி வயிறு வாய்த்தவன் )


பூமன்னு = பூவில் நிலைத்து வாசம் செய்யும்

மாது = திருமகள்

பொருந்திய  மார்பன் = பொருத்தமாக வந்து சேர்ந்த மார்பை உடையவன்

புகழ்மலிந்த = புகழ் நிறைந்த

பாமன்னு = நிலைத்து நிற்கும் பாடல்களை தந்த

மாறன்  = நம்மாழ்வார்

அடிபணிந் துய்ந் தவன் = திருவடிகளை பணிந்து உயர்ந்தவன்

பல்கலையோர் = பல கலைகளை கற்ற பெரியோர்

தாம்மன்ன = அவர்கள் நிலைத்து நிற்க

வந்த = வந்த

இராம னுசன் = இராமானுசன்

சர ணாரவிந்தம் = திருவடித் தாமரைகளை

நாம்மன்னி = நாம் என்றும் நிலையாக அடைந்து

வாழநெஞ்சே!  = வாழ்வதற்கு நெஞ்சே

சொல்லுவோம்  = சொல்லுவோம்

அவன் நாமங்களே = அவனுடைய நாமாங்களையே

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்ன மாதிரி ,

இராமானுஜர் திருவடிகளை அடைய அவருடைய நாமங்களே துணை



திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே

திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே 


சில மதங்களைப் பார்த்தால், அவை, எங்கள் கடவுளை வணங்குபவர்களுக்குத்தான் சொர்க்கம், எங்கள் புனித நூலை பின் பற்றுபவர்களுக்குத்தான் சொர்க்கம், வீடு பேறு என்று கூறும். நற்கதி  அடைய வேண்டும் என்றால் முதலில் அவர்கள் மதத்துக்கு மாற வேண்டும்.

இந்து மதப் பெரியவர்கள் அப்படி எல்லாம் நினைக்கவில்லை.

ஞான சம்பந்தர் கூறுகிறார்.....

வையகம் துயர் தீர்கவே என்று. இந்த உலகம் பூராவிலும் உள்ள துயரங்கள் தீரட்டும் என்று.

இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, சைவ சமயத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் அல்ல....உலகில் உள்ள அனைத்து துயரமும் தீரட்டும் என்று வேண்டுகிறார்.

பாடல்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.


பொருள்

வாழ்க அந்தணர் = அந்தணர்கள் வாழ்க

வானவ ரானினம் = தேவர்கள் , பசுக்கள்  வாழ்க

வீழ்க தண்புனல் = குளிர்ந்த மழை விழட்டும்

வேந்தனு மோங்குக = அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்து பெருமை அடையட்டும்

ஆழ்க தீயதெல் லாம் = தீயது என்று சொல்லப் பட்டது எல்லாம், மூழ்கிப் போகட்டும்

அரன் நாமமே சூழ்க = சிவனின் நாமமே எங்கும் நிறையட்டும்

வையக முந்துயர் தீர்கவே. = வையகமும் துயர் தீரட்டும்

அந்தணர்கள் வாழ்க என்றார். ஏன் அந்தணர் மட்டும் வாழ வேண்டும். மற்றவர்கள் வாழ வேண்டாமா ?

அந்தணர் என்போர் அறவோர் என்பார் திருவள்ளுவர். அறவழியில் நிற்பவர்கள் யார் என்றாலும் அவர்கள் அந்தணர்கள் தான். அறவழியில் நிற்பவர்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

மக்கள் அற வழியில் நிற்க வேண்டும்.
நல்ல மழை பொழிய வேண்டும்.
பசுக்கள் வாழ வேண்டும் என்றால் நிறைய புல் வேண்டும். ஊரெல்லாம் பச்சை பசேலென்று இருக்க வேண்டும்.
அரசன் நல்ல ஆட்சியை தர வேண்டும்.
தீமை எல்லாம் குழி தோண்டி  புதைக்கப் பட வேண்டும்
வையகம் துயர் தீர வேண்டும். வையகத்தில் யாரும் துன்பப் படக் கூடாது.

எவ்வளவு பெரிய  மனம்.எவ்வளவு உயர்ந்த எண்ணம்.

அப்படிப்பட்ட பெரியவர்கள் வாழ்ந்த நாடு இது.





திருப் புகழ் - இவன் நம்ம ஆளு

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு 


ஆளும் கட்சி ஆள் என்றால் காவல் துறை தொடப் பயப்படும். நமக்கு எதுக்கு பெரிய இடத்து வம்பு என்று.

அது போல, முருகனின் பக்தர்கள் என்றால், எமன் தொடப் பயப்படுவான்.

ஆனால், நீங்கள் முருகனின் பக்தர்கள் என்று யார் சொல்வது ? யார் சொன்னால் எமன் கேட்பான் ?

முருகனே வந்து சொன்னால் , அதுக்கு வேற அப்பீல் இல்லை அல்லவா ?

எமன் வரும்போது, முருகன் நேரில் வந்து அவனிடம், "இவன் நம்ம ஆளு" என்று சொல்வானாம்.

எப்ப தெரியுமா ?

கடைசி காலத்தில், நம்மைச் சுற்றி கொஞ்ச பேர் நிற்ப்பார்கள்....அப்போது வருவான்....

யார் எல்லாம் அந்த கொஞ்சப் பேர்?

பசி என்று அறிந்து, பால் தந்து, முதுகு தடவி விட்ட தாயார்,
உடன் பிறந்த தம்பி
வேலை ஆட்கள்
அன்பான தங்கை (அது என்ன தங்கைக்கு மட்டும் அன்பான ?)
மருமக்கள்
பிள்ளைகள்
மனைவி

எல்லோரும் சுத்தி நின்று வருந்தி நிற்கும் போது , மயில் மேல் வலிய ஏறி வந்து, பயப்படாதே என்று ஆறுதல் கூறி, இந்த மனிதன் நம் அன்பன் என்று அந்த எமனிடம் கூறுவாயே,

சிவன் தந்தவனே, திருச்செந்தில் இருப்பவனே....

என்று பொழிகிறார் அருணகிரிநாதர்.

திருச்செந்தூர் திருப்புகழ்.....

பாடல்

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

சீர் பிரித்த பின்

தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து
முதுகு தடவிய தாயார்

தம்பி

பணிவிடை செய் தொண்டர்

பிரியமுள தங்கை

மருகருயிர் எனவே சார்

மைந்தர்

மனைவியர்

கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி

பகர் கேடா

வந்து தலை மயிர் அவிழ்த்து தரை புக மயங்க

ஒரு மகிட (எருமை)  .மிசை ஏறி

அந்தகனும் எனை அடர்ந்து  வருகையில்

இனி அஞ்சல் என வலிய மயில் மேல் நீ

அந்த மறலியொடு அந்த மனிதன்
எமது அன்பன் எனது அன்பன் என மொழிய வருவாயே

சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் (மார்பகங்கள்)

சிந்து பய மயிலும் அயில் வீரா (சிந்தும் பாலினை அருந்தும் கூர்மையான வேலினைக் கொண்ட வீரனே) 

திங்கள் அரவு நதி  துன்று சடிலர்  அருள் (நிலவும், பாம்பும், கங்கை நதியும் தலையில் கொண்ட சிவன் அருளிய )

செந்தில் நகரில் உரை பெருமாளே


Friday, September 18, 2015

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம்

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம் 


எல்லாவற்றையும் கேள்வி கேட்டு, சோதனை செய்து, தர்க ரீதியாக நிரூபணம் செய்ய வேண்டும் என்று மனம் எதிர் பார்க்கிறது.

எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் பண்ணி விட முடியுமா ?

எதையுமே ஓரளவுக்கு மேல் ஆராய்ந்து கொண்டு இருக்கக் கூடாது. ஆராய்ச்சிக்கு முடிவே இல்லை. முடிந்த முடிவு தெரிந்த பின்தான் எதையும் செய்வேன் என்று இருந்தால் எதையுமே செய்ய முடியாது.

லட்டை கையில் கொடுத்தால் , அது என்ன, எப்படி இருக்கும்  என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் முகர்ந்து பார்த்து அதன் வாசனையை இரசிக்கலாம். சிறிது வாயில் போட்டு சுவை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். பிடித்தால் முழு லட்டையும் உண்ண வேண்டியதுதான்.

அதை விட்டு விட்டு, இனிப்பு என்றால் என்ன, அந்த இனிப்பு எப்படி வருகிறது, இந்த மஞ்சள் நிறம் எப்படி வந்தது.  இந்த நறுமணம் எப்படி வருகிறது. அது எப்படி இந்த மூக்கினால் நுகரப் படுகிறது, மனத்தால் அறியப்படுகிறது என்று ஆராய்ச்சியில் இறங்கி, இவற்றிற்கு எல்லாம் ஒரு தீர்வான விடை காணாமல் இந்த லட்டை உண்பது இல்லை என்று இருந்தால் வாழ்வில் எந்த இன்பத்தையும் அனுபவிக்க முடியாது.


ஞான சம்பந்தர் சொல்கிறார்....காரண காரியங்களை ரொம்பவும் சோதிக்க வேண்டாம். சோதியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ரொம்ப ஆராய்ச்சியில் இறங்கி விடாதீர்கள். சோதி வடிவாக இருக்கிறான் அவன். உங்கள் துக்கங்கள் நீங்க மனம் பற்றி வாழுங்கள். அறிவு பற்றாது. அறிவு கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும்.


பாடல்

ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

சீர் பிரித்த பின்

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும்  மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள்  சோதி
மா துக்கம்  நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்க  இறையே  வந்து சார்மின்களே.

பொருள் 

ஏதுக்களாலும் = காரணங்களாலும்

எடுத்த மொழியாலும் = தர்க வாதத்தாலும்

மிக்குச் = மிகுதியாக

சோதிக்க வேண்டா = சோதிக்க வேண்டாம்

சுடர் விட்டுளன் = சுடர் வடிவாக உள்ளான்

எங்கள்  சோதி = எங்கள் ஜோதியான அந்த இறைவன்

மா துக்கம்  = பெரிய துக்கம் (பிறவிப் பிணிதான் பெரிய துக்கம்)

நீங்கல் உறுவீர் = நீங்கப் பெறுவீர்

மனம் பற்றி வாழ்மின் = மனம் ஒன்றி வாழ்வீர்

சாதுக்கண் மிக்க  = அன்பு நிறைந்தவர்களே

இறையே  வந்து சார்மின்களே  = இறைவனையே வந்து பற்றுங்கள்


கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால், கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அறிவோ எல்லை அற்றது.

வாழ் நாளோ மிகக் குறைவு.

அதிலும், அறிவை சேர்த்துக் கொள்ள செலவழிக்கும் நாட்கள் இன்னும் மிக மிகக் குறைவு.


எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்தாலும், ஒரு சிறு துளியின் ஒரு பகுதியைக் கூட   முழவதும் அறிந்து கொள்ள முடியாது.

என்ன செய்யலாம் ?







பிரபந்தம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?

பிரபந்தம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?


அனைத்து உயிர்களும் இன்பம் வேண்டுகின்றன. துன்பம் வேண்டும் உயிர் எதுவும் கிடையாது.

இருந்தும், துன்பம் வரத்தான் செய்கிறது.

பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உடல் நலக் குறைவு, ஏமாற்றங்கள், தோல்விகள், கண்ணீர், என்று ஏதோ ஒன்று அவ்வப்போது தலை காட்டித்தான் போகிறது.

இன்பம் எவ்வளவு வந்தாலும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறோம்.

துன்பம் வந்தால் ?

கொஞ்சம் துன்பம் வந்தாலும் துவண்டு போகிறோம்.

ஐயோ, எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது என்று வருந்துகிறோம் ? நான் யாருக்கு என்ன தீமை செய்தேன், எனக்கு ஏன் இது வர வேண்டும் என்று அங்கலாய்கிறோம்.

எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன், நினைக்கிறேன், கோவில் குளங்களுக்குப் போகிறேன், பூஜை புனஸ்காரங்கள் செய்கிறேன்...இருந்தும் எனக்கு ஏன் இந்த சோதனை என்று வருந்துகிறோம்.

சாத்திரங்கள் எல்லாம் பொய்யா ? இதுக்கெலாம் ஒரு அர்த்தம் இல்லையா , கடவுள் ஒன்று   இல்லையா என்று கூட சந்தேகம் வருகிறது.

யாரிடம் போனால் துன்பம் தீரும் என்று பார்க்கிறோம்.

கொஞ்ச பேர் வருந்துவார்கள், பின் அவர்கள் வேலையை பார்த்துகொண்டு போய் விடுவார்கள்.

இன்னும் சில பேர், "நல்லா வேணும் " என்று உள்ளுக்குள் மகிழக் கூட மகிழ்வார்கள்.

யார் துணை ?

நம் சமய இலக்கியங்கள் துன்பத்தை ஏற்றுக் கொள்ள நம்மை பக்குவப் படுத்துகின்றன.

பொதுவாக இலக்கியங்களையும், குறிப்பாக சமய இலக்கியங்களையும் படிக்கும் போது , துன்பம் என்பது ஏதோ நமக்கு மட்டும் வருவது அல்ல, நம் துன்பம் ஒன்றும் அப்படி பெரியது அல்ல, இதைவிட பெரிய பெரிய துன்பங்களை மனிதர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அவற்றிற்கு முன்னால் என் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்ற ஆறுதல் பிறக்கும்.

மேலும், துன்பங்களுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்ற எண்ணம் வரும். துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் வரும்

.
நோய் என்றால் துன்பம். நமக்கு வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதலும், மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமையும் தவத்தின் வடிவம் என்கிறார் திருவள்ளுவர்.


உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே-தவத்திற்கு உரு.

துன்பம்     வரும்போது அதை அமைதியோடு ஏற்றுக் கொள்வதுதான் தவம் என்கிறார் வள்ளுவர்.

துன்பத்தை எவ்வாறு எதிர் கொள்வது ? துன்பம் வந்து விட்டால் என்ன செய்வது ?

சரி, துன்பம் வந்தால் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

எனக்கு துன்பம் தா என்று யாராவது வேண்டுவார்களா ?

என்னை கத்தியை எடுத்து வெட்டு, எனக்கு சூடு போடு என்று யாராவது வேண்டுவார்களா ?

வேண்டுவார்கள்.

அப்படி வெட்டுவதன் மூலமும், சூடு போடுவதன் மூலமும் அதை விட பெரிய துன்பம் தீரும் என்றால்.

மருத்துவரிடம் போய் அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுக்கிறோம். என்னை வெட்டு, அறு , ஊசியால் குத்து , தையல் போடு என்று வேண்டிக் கொள்கிறோம். அப்படி செய்வதற்கு பணம் தருகிறோம். செய்து விட்டால் மருத்துவருக்கு நன்றி சொல்கிறோம்.

ஏன், அறுக்கும், வெட்டும், ஊசி குத்தும் துன்பங்கள், அவற்றை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கும் என்பதால்.

இப்போது யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு வந்த துன்பங்கள், அவற்றை விட  ஒரு பெரிய துன்பத்தில் இருந்து உங்களை காக்கும் என்றால், வந்த துன்பத்தை  சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா ?

இறைவன் நமக்குத் துன்பத்தை தருகிறான் என்றால், அதை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கிறான் என்று பொருள். அதற்காக அவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

சொன்னார் - குலசேகர ஆழ்வார்.

பாடல்


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

வித்துவ கோட்டத்தில் உள்ள பெருமாளே, நீ எனக்கு எவ்வளவு துன்பம் தந்தாலும், அந்த துன்பங்களை தருவதற்குக் காரணமான உன் அருளையே நான் பார்ப்பேன் என்கிறார். மருத்துவன் அறுத்து சுட்டாலும், அவன் மேல் மீளாத காதல் கொண்ட நோயாளன் போல, நீ எனக்கு துன்பங்களைத் தந்தாலும், அதற்கான உன் அருளையே நான் நினைப்பேன் என்கிறார். 


பொருள்

வாளால் அறுத்துச் = கத்தியால் அறுத்து

சுடினும் = புண் புரையோடாமல் இருக்க சூடு வைத்தாலும்

மருத்துவன் பால் = மருத்துவன் மேல்

மாளாத = தீராத

காதல் = காதல் கொண்ட

நோயாளன் போல் = நோயுள்ளவனைப் போல்

மாயத்தால் = மாயத்தால்

மீளாத் துயர் தரினும் = இறுதியே இல்லாத துயரை நீ தரினும்

வித்துவக்கோட்டம்மா நீ = வித்துவக் கோட்டத்தில் உள்ள பெருமானே

ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே! = உன் அருளையே நான் அதில் பார்ப்பேன்

பிரபந்தத்தை வாசியுங்கள். வாழ்க்கையில் துன்பங்களை எப்படி ஏற்றுக் கொள்வது, தாங்கிக் கொள்வது என்று புரிபடும்.











Wednesday, September 16, 2015

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து 


உடம்பில் ஒரு பாகத்தில் வலி வந்தால், அந்த பகுதி மட்டும் வலிக்கும். 

கண் வலி என்றால் கண் மட்டும் வலிக்கும். 

கால் வலி என்றால் கால் மட்டும் வலிக்கும். கை வலிக்காது.

ஆனால், இந்த பிரசவ காலமும், பிரசவமும் இருக்கிறதே, உடம்பின் ஒவ்வொரு பாகமும் வலிக்கும், சோர்ந்து போகும். அது மட்டும் அல்ல, ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, பத்து மாதமும் ஏதோ ஒரு அங்கம் வலித்துக் கொண்டே இருக்கும். ஒரு நாள் கால் வலிக்கும், இன்னொரு நாள் முதுகு, இன்னொரு நாள் தலை என்று அங்கமெல்லாம் நோகும்.

பட்டினத்தார், எல்லாம் துறந்தவர், தாயின் அந்த வேதனையை உணர்ந்து பாடுகிறார். 

பாடல் 


ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி”

பொருள் 

ஐயிரண்டு = ஐந்து இரண்டு = பத்து 

திங்களாய் = மாதமாய் 

அங்கமெலாம் = அனைத்து அங்கங்களும் 

நொந்து = சோர்ந்து, சலித்து 

பெற்றுப்  = பிள்ளையைப் பெற்று 

பையலென்ற போதே  = பையுள் என்றால் துன்பம். அந்த பிரசவ வலியோடே 

பரிந்தெடுத்துச் = குழந்தையை அன்போடு எடுத்து 

செய்ய இரு கைப்புறத்தி லேந்திக் = கையில் ஏந்தி 

கனக முலை தந்தாளை = தங்கம் போல உயர்ந்த தன் தனங்களைத் தந்தாளை 

எப்பிறப்பிற் காண்பே னினி = இனி எந்தப் பிறப்பில் காண்பேன் 




நந்திக் கலம்பகம் - என்னதே

நந்திக் கலம்பகம் - என்னதே 


காதலையும், காமத்தையும் நேரடியாகச் சொல்வதை விட மறைமுகமாக சொல்வதில் சுவை அதிகம்.

நந்திக் கலம்பகத்தில் ஒரு பாடல்.

தலைவி சொல்கிறாள்....நான் அணிந்திருக்கும் இந்த உடையும் , வளையலும் என்னுடையதே...நந்திவர்மன் என்னோடு இல்லாத போது.

அவ்வளவுதான் பாடல் வரியின் அர்த்தம்.

நந்தி வர்மன் வந்து விட்டால், இந்த ஆடைகளையும், வளையலையும் அவன் எடுத்துக் கொள்வான் என்று சொல்லாமல் சொல்கிறாள்.


சொல்லாமல் விட்டதை புரிந்து கொள்ளும் போது, அந்த பெண்ணின் நாணம், தவிப்பு, வெட்கம், பிரிவின் வேதனை, அவன் மேல் அவள் கொண்டிருக்கும் ஆசை அனைத்தும் தெரியும்.

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது

பொருள்

எனதே கலை = கலை என்றால் உடை. என் உடை என்னுடையதுதான்

வளையும் என்னதே = வளையலும் என்னுடையதுதான்

மன்னர் = மன்னவனாகிய

சின = சினம் கொண்ட

ஏறு = எருதினைப் போன்ற

செந்தனிக்கோல்= செம்மையானா, செங்கோல் செலுத்தும்

நந்தி = நந்திவர்மன்

இனவேழம் = யானை போல

கோமறுகில் = வீதியில்

சீறிக் = கோபம் கொண்டு

குருக்கோட்டை வென்றாடும் பூமறுகில் = குருக் கோட்டை என்ற இடத்தில் வெற்றி பெற்று வீதி வழியே

போகாப் பொழுது = செல்லும்  போது

(போகா என்பதை செய்யா என்ற வாய்பாடகாகக் கொண்டால் செல்லும் போது என்று பொருள் தரும். கொய்யாப் பழம் என்று சொல்கிறோம். ஆனால் கொய்து தானே இருக்கிறது. அது போல. கொய்யாப் பழம் என்றால் கொய்த பழம். போகாப் பொழுது என்றால் போன பொழுது.)

இதை இன்னொரு விதமாக யோசித்துப் பார்ப்போம்.

அவன் இருக்கும் போது இந்த உடைகளையும், வளையல்களையும்  அவன் எடுத்துக் கொள்வான் , மற்ற நேரத்தில் அது என்னுடையது தான் என்பது ஒரு பொருள்.

இன்னொரு பொருள், அவன் என்னை விட்டு நீங்கினால், நான் மெலிந்து இந்த வளையலும், உடையும் நழுவி விழுந்து விடும். அவை என்னோடு இருக்காது. அவன் என்னோடு  இருந்தால், அந்த மகிழ்ச்சியில் நான் பூரித்து, இந்த வளையலும், உடையும் என்னோடு ஒட்டி இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்.

உங்களுக்கு எப்படி சௌகரியமோ , அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.



Monday, September 14, 2015

இராமாயணம் - அறம் அற்ற செயல்கள்

இராமாயணம் - அறம் அற்ற செயல்கள் 


அற வழியில் செல்லுங்கள், ஒழுக்கமாக இருங்கள் என்று சொல்லுவது எளிது. எது அறம் , எது ஒழுக்கம் என்று சொல்லுவது தான் கடினம்.

அறம் என்று ஒன்று உண்டு அது அமரர்கும் அறிய ஒண்ணாதது என்றார் கச்சியப்ப சிவாசாரியார்.

தேவர்களாலும் அறிய முடியாதது என்றால் மனிதர்கள் எப்படி அறிந்து அதன்படி நடப்பது ?

தர்மத்தை நிலை நிறுத்த யுகம் தோறும் யுகம் தோறும் அவதரிப்பேன் என்றான் கண்ணன்.

ஏன் ? ஒரு முறை வந்து நிலை நிறுத்தினால் போதாதா? ஒவ்வொரு யுகத்திலும் ஏன் வர வேண்டும் ?

போதாது.

எல்லா யுகங்களிலும் மனிதர்கள் தர்மம் தவறித்தான் போகிறார்கள். இறைவனே வந்து அதை நிலை நிறுத்த வேண்டி இருக்கிறது.


தர்மத்தை யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் ?

நல்லவன், மனத் தூய்மை உள்ளவன் சொன்னால் கேட்பார்கள்.

அதைத் தெரிந்து, கம்பன் பரதன் மூலம் அறத்தை சொல்கிறான்.

இராமன் கானகம் செல்வது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் இன்னின்ன பாவங்கள் செய்தோர் செல்லும் நரகத்திற்கு நான் செல்லக் கடவேன் பரதன் பட்டியல் தருகிறான். மொத்தம் 46 பாவங்களைச் சொல்கிறான்.


பாடல்

‘அறம் கெட முயன்றவன்,
    அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
    பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
    கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
    துயரம் சூழ்ந்துேளான். ‘

பொருள்

அறம் கெட முயன்றவன், = அறம் கெட முயன்றான்

அருள் இல் நெஞ்சினன், = அருள் இல்லாத மனத்தை உடையவன்

பிறன் கடை நின்றவன் = பொருள் வேண்டி மற்றவர்களிடம் சென்றவன்

பிறரைச் சீறினோன், = மற்றவர்கள் மேல் கோபப் பட்டவன்

மறம் கொடு மன் உயிர்  கொன்று வாழ்ந்தவன், = கொலைத் தொழில் ஈடுபட்டு,
உயிர்களை கொன்றவன்

துறந்த மாதவர்க்கு = துறவிகளுக்கு

அருந் துயரம் சூழ்ந்துேளான். ‘= துன்பம் தந்தவன்


அறத்தை கெடுக்க வேண்டாம். கெடுக்க நினைத்தாலே போதும் அதுவே பெரிய பாவம்.

மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் வள்ளுவர். 

மனதால் கூட அறத்தை சிதைக்க நினைக்கக் கூடாது. 

ஒருவன் தர்மம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை , அதை செய்ய விடாமல்  தடுப்பது கூட அல்ல , தடுக்க நினைப்பது கூட அறம் வழுவிய செயல்தான். 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவஊம் உண்பதுஊம் இன்றிக் கெடும்  

என்பார் வள்ளுவர். கொடுப்பதைப் பற்றி பொறாமை பட்டால் கூட போதும், அதுவே பெரிய பாவம். 

ஒருவன் கோவிலுக்குப் போகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை போக விடாமல் தடுப்பது, தடுக்க நினைப்பது ஒரு பாவச் செயல். 

அருள் இல்லாமல் இருப்பது ஒரு பாவம். 


அருள் என்றால் என்ன ? நாம் எப்படி அருள் செய்ய முடியும். நாம் படித்த வரை கடவுள் தான் பக்தர்களுக்கு அருள் தர முடியும் ?

வள்ளுவர் சொல்கிறார். 

வலியார் முன் தன்னை நினைக்க-தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

நம்மை விட பலம் குறைந்தவர்களிடம் நாம் அதிகாரம் செய்யும் போது , நம்மை விட  பலம் நிறைந்தவர்கள் முன் நாம் எப்படி இருந்தோம் என்று நினைத்துப் பார்த்து  செயல்படுவது அருள். 

வேலைக் காரர்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்களிடம், நம்மை விட பணத்தில் , அறிவில், அதிகாரத்தில், புகழில் மெலிந்தவர்களிடம் மென்மையாக, பண்புடன் நடந்து கொள்வது அருள். 

உயிர் போனாலும் மற்றவர்களிடம் சென்று எனக்கு அஞ்சு பத்து கொடு என்று கேட்க்கக் கூடாது.  

ஏற்பது இகழ்ச்சி என்றாள் அவ்வை பாட்டி. 


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.


பிச்சை எடுத்துதான்  வாழ வேண்டும் என்று விதி இருந்தால், அந்த விதியை எழுதிய  இறைவனும் கெட்டுப் போகட்டும் என்று இறைவன் மேல் சீறுகிறார் வள்ளுவர்.  பிறரிடம் இரந்து வாழ்வது அவ்வளவு கொடுமையானது என்பது அவர் எண்ணம். 

மற்றவர்களிடம் கோபப் பட்டவன் - கோபம் கொள்வது அறம் பிறழ்ந்த செயல் என்பது பரதன் கூற்று. கோபமும் காமமும் தவத்தை அழிக்கும் இரண்டு அரக்கர்கள் என்று சொல்லுவார் கம்பர். 

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். 

நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள் நாம். 

எப்படி வாழ வேண்டும் என்று காலம் கடந்து வந்து கம்பன் நம்மை கை பிடித்து அழைத்துச்  செல்கிறான். 





Thursday, September 10, 2015

அபிராமி அந்தாதி - பூத்தவளே

அபிராமி அந்தாதி - பூத்தவளே 



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


எந்த வீட்டுக்கும், காலையில் போய் பார்த்தால் தெரியும்...ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கும். ...

குழந்தைகளை எழுப்புவதும், அவர்களை குளித்து பள்ளிக்குச் செல்ல தயார் பண்ணுவதும், சிற்றுண்டி தயார்  பண்ணுவதும்,  மதிய உணவு தயார் செய்ய  வேண்டும், இதற்கிடையில் தொலை காட்சியில்  ஏதாவது ஓடிக் கொண்டிருக்கும், தொலை பேசி வரும்...இப்படி பெரிய களேபரமாய் இருக்கும்.

ஒரு வீட்டில்,இரண்டு அல்லது மூணு பேரை தயார் செய்து அனுப்புவது என்றாலே இவ்வளவு சத்தம், களேபரம்....இந்த உலகையே படைப்பது என்றால் எவ்வளவு சிக்கலான காரியம் ?

இந்த உலகத்தை ஒரு மலர் மலர்வது போல மிக மென்மையாக அபிராமி படைத்தாளாம்.

பூத்தவளே புவனம் பதினான்கையும்

அனைத்து உலகங்களையும் ஒரு மலர் மலர்வது போல் படித்தாள்.

சரி, படைத்தாகி விட்டது. அத்தனை உயிர்களையும் காக்க வேண்டும் அல்லவா. எப்படி மென்மையாக படைத்தாளோ, அதே போல் அனைத்து உயிர்களையும் காக்கின்றாள்.

பூத்த வண்ணம் காத்தவளே. 

நமக்கு வாழ்வில் துன்பம் வரும். வேண்டியது கிடைக்காது. கிடைத்தது கை விட்டுப் போகும்.  நட்டம் வரும். இழப்பு வரும். கிடைக்க வேண்டியது கிடைக்காமல் துன்பப் படுவோம்.

வீட்டில் விசேஷம் என்றால் அம்மா பல பலகாரங்கள் செய்வாள். குழந்தை அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்கும்.  தாய் பார்த்துக் கொண்டே இருப்பாள். அளவுக்கு மேலே போனால், பலகாரங்களை எடுத்து உள்ளே வைத்து விடுவாள். "காலியா போச்சு, நாளைக்குத் தருகிறேன் " என்று மறைத்து வைத்து விடுவாள். குழந்தை அழும். அம்மாவுக்குத் தெரியும், அழுதாலும் தர மாட்டாள். குழந்தையின் மேல் உள்ள அன்பால், அதுக்கு ஒரு தீங்கு வந்து விடக் கூடாதே என்று நினைத்து அந்த ருசியான பலகாரங்களை மறைத்து  வைப்பாள்.

அபிராமியும் அப்படித்தான். நமக்குத் தராமல் சிலவற்றை மறைத்து வைக்கிறாள் என்றால் ஏதோ காரணம் இருக்கும்.

"பின் கரந்தவளே" (கரத்தல் = மறைத்து வைத்தல்)

பெண் பல வடிவம் எடுக்கிறாள். அது தாயக இருந்தாலும், தாரமாக இருந்தாலும், சகோதரியாக இருந்தாலும், மகளாக இருந்தாலும் ஒரே பெண் பல வடிவம் எடுக்கிறாள்.

மகள் சின்னப் பெண்ணாக இருப்பாள்., அப்பாவுக்கோ , அம்மாவுக்கோ உடல் நிலை சரி என்றால், திடீரென்று வளர்ந்து பெரிய பெண் போல அவள் வீட்டை நிர்வகிக்க தொடங்கி விடுவாள். அவளே சமையல் செய்வாள். காப்பி போடுவாள். "பாரேன், இந்த பிள்ளைய " என்று பெற்றவர்களே வியப்பார்கள்.

நமக்கு உடல் நிலை சரி என்றால் , மனைவியே தாயாக மாறி பணிவிடை செய்வாள்.

பாட்டியாகவே இருக்கட்டும், பேரன் ஒரு சேலை வாங்கித் தந்தால் , பதினாறு வயது பெண் போல வெட்கப் படுவாள்.

அவளுக்கு வயது இல்லை. எல்லாமாக அவள் இருக்கிறாள்.

பட்டர் பார்க்கிறார்...இந்த அபிராமிக்கு எத்தனை வயது இருக்கும் ? ஒரு சமயம் பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரி இருக்கா....இன்னொரு சமயம் பார்த்தால் பெரிய பெண் போல இருக்கிறாள்...

"கறை கண்டனுக்கு மூத்தவளே". கண்டத்திலே கறை உள்ளவன் சிவன். அவனை விட மூத்தவள் போல இருக்கிறாள்.

"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே " திருமாலுக்கு இளையவள் போலவும் இருக்கிறாள்.

 இவளை விட்டால் வேறு யார் நமக்கு ?

பாட்டை இன்னொரு தரம் படியுங்கள் ...


பூத்தவளே,

புவனம் பதினான்கையும்

பூத்தவண்ணம் காத்தவளே

பின் கரந்தவளே

கறைகண்டனுக்கு மூத்தவளே

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


(இதற்கு உரை எழுதிய பெரியவர்கள் பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். புவனம் எழா ? அல்லது பதினான்கா ? 

சிவனுக்கு மூத்தவள், திருமாலுக்கு இளையவள் என்றால் சிவன் திருமாலை விட  இளையவனா மூத்தவனா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.  
இது எனக்குத் தோன்றியது. அனைத்தயும் படித்துப் பாருங்கள். பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள் )


Tuesday, September 8, 2015

தண்டலையார் சதகம் - எலி அழுதாலும் பூனை விடுமா ?

தண்டலையார் சதகம் - எலி அழுதாலும் பூனை விடுமா ?


தண்டலையார் சதகம் என்ற நூலை எழுதியவர் படிக்காசு புலவர்.  இந்த நூல் முழுவதும் இனிமையான எளிமையான தமிழ் பாடல்கள்.

உடம்பில் வலு இருக்கின்ற போது என்னவெல்லாம் செய்கிறோம், சொல்கிறோம்.

சண்டை பிடிக்கிறோம், வாதம் செய்கிறோம், மற்றவர்களின்  உணர்சிகளைப் பற்றி கவலைப் படுவது கிடையாது.

அறச் சிந்தனை கிடையாது.

ஒரு நாள் வரும். படுக்கையில் படுத்து செய்ததெல்லாம் அசை போட்டுக் கொண்டிருக்கும் போது , செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யலாம் என்று நினைக்கும் போது, எழுந்திரிக்க முடியாது, பேச முடியாது, நடக்க முடியாது...

இன்னும் கொஞ்ச நாள் ஆரோக்கியம் வேண்டும் என்றால் கிடைக்குமா ? நல்லது செய்து விட்டு வருகிறேன் என்று கிளம்ப முடியுமா ?

முடியாது.

இயலாமையை நினைத்து கண்ணீர் விடலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

பூனை , எலியைப் பிடித்து கொண்டு போகும். எலி என்னதான் அழுதாலும் பூனை விடாது.

அது போல, நம் காலம் முடியும் போது என்னதான் அழுதாலும் மரணம் விடாது.

அதற்கு முன் நல்லது செய்யுங்கள்.

பாடல்

பொலியவளம் பலதழைத்த தண்டலநீ ணெறிபாதம்
     போற்றி நாளும்
வலியவலம் செய்தறியீர் மறஞ்செய்வீர் நமன்தூதர்
     வந்து கூடி
மெலியஅறைந் திடுபொழுது கலக்கண்ணீர் உகுத்தாலும்
     விடுவ துண்டோ
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித் ததுவிடுமோ
     என்செய் வீரே.          


பொருள்

பொலியவளம் = பொலிவு தரும் வளங்கள்

பலதழைத்த = பல தழைத்து நிற்கும்

 தண்டல = தண்டலை எனும் ஊரில் உள்ள சிவனை

நீ  ணெறிபாதம் = நீண்ட நல் (நெறியில்) செலுத்தும் பாதங்களை

போற்றி  = போற்றி

நாளும் = ஒவ்வொரு நாளும்

வலிய = வல்லமை பெற

வலம் செய்தறியீர் = வலம் செய்து அறியீர் .

மறஞ்செய்வீர் = கொடுமைகள் செய்வீர்

நமன்தூதர் = எமனின் தூதர்கள்

வந்து = வந்து

கூடி = கூட்டமாக

மெலிய = நீங்கள் மெலிவு அடைய

அறைந் திடுபொழுது = கூப்பிடும் போது

கலக்கண்ணீர் உகுத்தாலும் = கலங்கி கண்ணீர் உகுத்தாலும்

விடுவ துண்டோ = விடுவது உண்டோ ?

எலியழுது புலம்பிடினும் = எலி அழுது புலம்பினாலும்

பூனைபிடித் ததுவிடுமோ = பூனை பிடித்தது விடுமோ ?

என்செய் வீரே. = என்ன செய்யப் போகிறீர்கள் ?

நம் ஓலை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே ..நல்லதைச் செய்யுங்கள்




Monday, September 7, 2015

இராமாயணம் - பரதன் - குலப் பழி

இராமாயணம் - பரதன் - குலப் பழி 


ஒரு தவறு செய்யும் முன், அந்தத் தவறு யாரையெல்லாம் பாதிக்கும் என்று நினைக்க வேண்டும்.

நம்மை மட்டும் பாதித்தால் பரவாயில்லை. நம் குடும்பத்தில் உள்ளவர்களை பாதித்தால் அது மோசம். நம் குலத்தையே பாதித்தால் அது இன்னும் மோசம் அல்லவா.

ஒருவன் கொலை செய்கிறான் என்றால் அவன் மட்டும் தண்டனை அடைய மாட்டான். அவன் மனைவியும், பிள்ளைகளும் "கொலைகாரன் மனைவி" என்றும் "கொலைகாரன் பிள்ளை" என்றும் தூற்றப் படுவார்கள்.


சில பழிகள், குலத்திற்கே கேடு விளைவிக்கும்.

தனக்கு வந்த அரசால் இந்த சூரிய குலமே பழிச் சொல்லுக்கு ஆளாகும் என்றும் நினைக்கிறான் பரதன்.

கைகேயி அப்படி நினைத்தாள் இல்லை. தீர்க்க சிந்தனை இல்லை.

பாடல்


‘இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்,
“பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால் -

மரதக மலை என வளர்ந்த தோளினான்.


பொருள்

‘இரதம் ஒன்று ஊர்ந்து = இரதத்தில் சென்று

பார் இருளை நீக்கும் = உலகில் உள்ள இருளை நீக்கும்

அவ்வரதனில் = அந்த சூரியனின்

ஒளி பெற மலர்ந்த தொல் குலம் = ஒளி  பெற சிறந்த இந்த சூரிய குலம்

“பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால்  = பரதன் என்ற ஒருவனால் பழி அடைந்தது என்று சொல்லும் நிலை வந்து விட்டதே என்று என்று எண்ணி வருந்தினான்


மரதக மலை என வளர்ந்த தோளினான். = மரகத மலை போல வளர்ந்த தோளினை உடைய  பரதன்

இலஞ்சம் வாங்கும்போது, பொய் புரட்டு செய்யும் போது, கொலை , களவு செய்யும் போது  குடும்பத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். தாய் தந்தையரை நினைக்க வேண்டும்.   குலத்தை நினைக்க வேண்டும்.

தவறான செய்கைகள் , செய்பவனுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்திற்கு மட்டும் அல்ல,  அவன் குலத்துக்கே கெட்ட  பெயரை கொண்டு வந்து சேர்க்கும்.

அதனால் தான் வள்ளுவரும் - "ஈன்றாள் பசிக் காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை " என்றார்.

இந்த அரசை தான் பெற்றுக் கொண்டால் தன் குலத்துக்கே பழி வந்துவிடுமே என்று அஞ்சினான் பரதன்.

அப்படி நினைத்ததால் அவன் உயர்ந்தான்.

அது உயரும் வழி.






Sunday, September 6, 2015

இராமாயணம் - பரதன் - அன்பு உடையார் போல் அழுகின்றேன்

இராமாயணம் - பரதன் - அன்பு உடையார் போல் அழுகின்றேன் 


அறத்தின் படி வாழ வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நான் ஒழுக்கம் இல்லாமல் வாழ நினைக்கிறேன் என்று யாரும் முனைந்து செயல்படுவதில்லை.

இருந்தும், உலகில் எத்தனையோ அறம் பிறழ்ந்த செயல்கள் நிகழ்கின்றன.

ஏன் ?

அன்பு இல்லாத காரணத்தால்.

சுயநலத்தால்.

என்னிடம் பணம் இருக்கிறது. அதை இலஞ்சமாகக் கொடுத்து எனக்கு வேண்டியதை நான் பெற்றுக் கொள்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம்.

தவறு இருக்கிறது...யாருக்கோ ஞாயமாக கிடைக்க வேண்டியதை நீங்கள், உங்கள் பணத்தின் மூலம் அபகரித்துக் கொள்கிறீர்கள். அந்த முகம் தெரியாத மனிதன் துன்பத்தில் ஆழ்கிறான்.

அந்த மனிதனின் மேல் உங்களுக்கு அன்பு இல்லை. அவன் எக்கேடும் கெட்டு போகட்டும், நான் சுகமாக இருந்தால் சரி என்ற நினைப்புதான் இலஞ்சம் என்ற பெரிய  நோயை கொண்டு வருகிறது.

திருட்டு, கொலை, கற்பழிப்பு என்று எந்த குற்றத்தை எடுத்துக் கொண்டாலும், அடிப்படை அன்பு இல்லாத தன்மைதான்.

அறம் செய் , அறம் செய் என்று சொல்லுவது எளிது. அதற்கு அடிப்படை அன்பு வேண்டும்.

அன்பு இருந்தால் அறம் தானே வரும்.

அறம் அற்ற வழியில் வந்த இராஜியத்தை நினைத்து அழுகிறான் பரதன். அப்படி அழும் போதும் , இதெல்லாம் கண் துடிப்பு என்று உலகம் தன் அன்பை தூற்றுமோ என்று கவலைப் படுகிறான்.

பாடல்


‘வில் ஆர் தோளான் மேவினன்
    வெம் கானகம் ‘என்ன,
நல்லான் அன்றே துஞ்சினன்;
    நஞ்சே அனையாளைக்
கொல்லேன், மாயேன்; வன்
    பழியாலே குறைவு அற்றேன்
அல்லேனோ யான்! அன்பு

    உடையார்போல் அழுகின்றேன்!‘‘


பொருள்

‘வில் ஆர் தோளான் மேவினன்
    வெம் கானகம் ‘என்ன, = வில்லை உடைய தோள்களை கொண்ட இராமன் கானகம் போனான் என்று


நல்லான் அன்றே துஞ்சினன் = நல்லவனாகிய தசரதன் அன்றே இறந்தான்

நஞ்சே அனையாளைக் = நஞ்சு போன்ற கைகேயியை

கொல்லேன், = நான் கொல்லவில்லை

மாயேன்; = நானும் இறக்கவில்லை

வன் பழியாலே குறைவு அற்றேன் = பழிக்கு ஒன்றும் குறைவு இல்லை

அல்லேனோ யான்! = அப்படிபட்டவன் அல்லவா நான்

அன்பு உடையார்போல் அழுகின்றேன்! = அன்பு உடையவர்களைப் போல நானும் அழுகின்றேன்

அன்பிருந்தால், மற்றவர்கள் படும் துயர் கண்டு அழுகை வரும்.

அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

இராமனின் துன்பம் நினைத்து பரதன் அழுதான்.


அதிலும், அந்தத் துயருக்கு நாமே காரணம் என்றால், அந்த அழுகை இன்னும் அதிகமாகும். பரிதாப உணர்ச்சியும், குற்ற உணர்வும் சேர்ந்து அழுகை அதிகமாகும்.

 
அன்பிருக்கும் இடத்தில் அறம் இருக்கும்.

சரி, என்னிடம் அன்பும் இல்லை, அறமும் இல்லை அதனால் என்ன என்று கேட்டால்....அப்படிப் பட்டவர்களை அறம் அழிக்கும் என்கிறார் வள்ளுவர்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்.

அன்பில்லாதவர்களை அறம் அழிக்கும்.

அன்பு உள்ள இடத்தில் அறம் தழைக்கும்.

பரதன் மனதில் அன்பிருந்தது.


Friday, September 4, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2



வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்

=============== பாகம் 2 =================================================

ஈதல் - அறம்
தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
காதலர் இருவர் கருத்து ஒருமித்து, ஆதரவு பட்டது - இன்பம்
பரனை நினைத்து இம்மூன்றையும் விடுவது - வீடு பேறு

இது பாடலின் சாரம்.

இதை மேலும் ஆழ்ந்து சிந்தித்தால், ஒன்று புலப்படும்.

இந்த "பரனை நினைத்து" என்ற சொற்றடரை மற்ற மூன்றுக்கும் சேர்த்துப் பார்ப்போம்.

பரனை நினைத்து ஈதல் - அறம்
பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
பரனை நினைத்து காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே - இன்பம்
பரனை நினைத்து இம் மூன்றையும் விடுதல் - வீடு பேறு


அது என்ன பரனை நினைத்து ஈதல் அறம் ?

பொருளை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். வேண்டா வெறுப்பாக, எரிச்சலோடும் கொடுக்கலாம். அப்படி கொடுப்பது அறமாகாது.

நாம் பெற்ற பொருள் அவன் தந்தது என்று நினைத்து அதை மற்றவர்களுக்குத் தருவது அறம்.

வரும் போது கொண்டா வந்தோம் ?

இதையே அருணகிரிநாதரும்

"வையிற் கதிர் வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்கு என்றும் நொய்யிர்  பிளவேனும் பகிருங்கள்"

என்றார்.

கொடுக்கும் போது முருகனை நினைத்து, இப்படி ஒரு செல்வத்தை நமக்கு கொடுத்ததற்கும், கொடுத்த செல்வத்தை மற்றவர்களுக்கு தானம் செய்யும் மனதை தந்ததற்கும் அவனை வாழ்த்தி மற்றவர்களுக்குத் ஈதல் வேண்டும் என்கிறார்.


வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 

இறைவனை வாழ்த்தி தானம் செய்ய வேண்டும். நான் கொடுக்கிறேன், என் செல்வம், என்ற ஆணவம் இல்லாமல் ஈதல் அறம் .

பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்

இரை தேடும் போதும் இறையும் தேட வேண்டும். 

செய்யும் செயலில் பக்தி கலக்கும் போது அதில் ஒரு ஆனந்தம், அமைதி பிறக்கிறது.  அதை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது.  போட்டி பொறாமை  மறைகிறது. இறைச் செயல் என்று நினைத்து செய்யும் போது  அதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற சுயநல கலப்பு மறைகிறது. 

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தது 

கணவனும் மனைவியும்  ஒன்றாக இருக்கும் போதும் இறைவனை நினைக்க வேண்டும்  என்கிறார்.

இப்படி ஒரு அன்பான, அழகான, பண்புள்ள, என் மேல் ஆர்வம் உள்ள கணவனையோ, மனைவியையோ தந்த இறைவனுக்கு நன்றி என்று நினைக்க வேண்டும்.  நினைத்துப் பாருங்கள் , உங்கள் துணை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் நீங்கள் விரும்படியும் இருக்கலாம், மற்றபடியும் இருக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன், அழகுடன், அன்புடன், பண்புடன், உங்கள் நலத்தில்  அக்கறை உள்ள துணை இறைவன் அருளால் அமைவது. நீங்கள்  என்ன செய்து விட முடியும் இங்கே. உங்களுக்கு கிடைத்தது அவன் அருள் . அதை நினைத்து, காதல் செய்யுங்கள். அடுத்த முறை உங்கள் துணையை  அன்போடு பார்க்கும் போது , அவன் அருளை நினைத்துப் பாருங்கள். அதன் சுகமே தனிதான். 

இந்த மூன்றையும் விடுவது என்பது எளிதான காரியம் அல்ல.  வேண்டா வெறுப்பாக  விடுவது ஒரு துறவறம் இல்லை. மருத்துவர் உங்களுக்கு சர்க்கரை வியாதி  என்று சொல்லி விட்டார்.  சர்கரையின் பக்கமே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்.  அதற்காக நீங்கள் சர்க்கரையை விட்டால் அதன் பெயர்  துறவறம் அல்ல. 

பரனை நினைத்து விடுவது வீடு பேறு.

இவற்றையெல்லாம் விடுவது இவற்றை விட பெரிய ஒன்றை அடைய என்று நினைக்கும் போது,  விடுவது ஒன்றும் பெரிதாகத் தெரியாது. 

பாட்டி பெரிய ஆளு....
 

Wednesday, September 2, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்


வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்



திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே

திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே


சொர்க்கம் நல்லதுதான்.

வீடு பேறு வேண்டும்தான்.

கைலாயம் கையில் கிடைத்தால் சுகம் தான்.

வைகுண்டம், பரமபதம் ..அடடா கிடைத்தால் என்ன சுகம்.

சரி, போகலாமா என்று கேட்டால் யார் வரத் துணிவார்கள் ?

யாராவது, இறைவனிடம் நான் உன்னிடம் வரவேண்டும் என்று வேண்டுகிறார்களா. அப்படியே வேண்டினாலும், சரி வா என்று இறைவன் அழைத்தால் போய் விடுவார்களா ?

இந்த உலகை விட்டுப் பிரிய யாருக்கு மனம் வரும்?

வைகுந்தம் அப்புறம் போகலாம், இந்த பூலோகத்தை அனுபவிப்போம் என்று இங்கேயே இருக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

இந்தச் சிக்கல், நமக்கு மட்டும் அல்ல, மாணிக்க வாசகருக்கே இருந்திருக்கிறது.

இறைவன் நேரில் வந்து, " வா போகலாம் " என்று அழைத்தான். சற்று தயங்கி நின்றார். இறைவன் போய் விட்டான்.

கிடந்து புலம்பித் தவிக்கிறார். ஐயோ, போகவில்லையே என்று.

திருவாசகம் எல்லாமே இந்தப் புலம்பல்தான்.

பாடல்

மானேர் நோக்கி உடையாள் பங்கா மறையீ றறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழைபொ றுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.

பொருள்

மானேர் நோக்கி = மானைப் போன்ற கண்களைக் கொண்ட 

உடையாள் = உடையவளான பார்வதியை 

பங்கா  = பாதியாக கொண்டவனே

மறையீ றறியா = மறை + ஈறு + அறியா = வேதங்கள்  உன்னை முடிவாக அறியா

மறையோனே = மறைந்து இருப்பவனே, மறைகளுக்கு அப்பாற்பட்டவனே

தேனே = தேனே

அமுதே = அமுதே

சிந்தைக் கரியாய் = சிந்தனைகளுக்கு அரியவனே

சிறியேன் பிழைபொ றுக்கும் = சிறியவனான என் பிழைகளைப் பொறுக்கும்

கோனே = தலைவனே

சிறிதே கொடுமை பறைந்தேன் = சிறிய கொடுமைகள் சில சொன்னேன்

சிவமா நகர் = சிவ மாநகர் = கைலாயம்

குறுகப் போனார்  அடியார் = அடியார்கள் சென்றார்கள்

யானும் = நானும்

பொய்யும் = பொய்யும்

புறமே போந்தோமே. = வெளியே நின்று விட்டோம்

இறைவன் , வலிய வந்து ஆட்கொண்டான். இவர் போகவில்லை.

ஏன் போகவில்லை ?

பெரிய வேலையில் இருந்தார். பாண்டியன் அரசவையில் முதல் அமைச்சர் வேலை என்றால் சாதரணமா.

இப்படித்தான் வேலை, குடும்ப பொறுப்பு என்று அதை விட உயர்ந்தவற்றை விட்டு விடுகிறோமோ ?

வள்ளலார் கூட இதைப் பற்றி பேசி இருக்கிறார்...


தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

அம்மா ஒரு தடை. பின்னர் தாரம் ஒரு தடை. பின்னர் பிள்ளைகள்....

இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இவை எல்லாம் எப்போதுதான்  தீருவது என்று சோர்கிறார் வள்ளல் பெருமான்.

ஒன்றைச் செய்யும் போது, மற்றது ஏதோ ஒன்றைச் செய்யாமல் விடுகிறோம்.

எதைச் செய்கிறோம் , எதை விடுகிறோம் என்று சிந்திப்போம்.