திருக்குறள் - இல்வாழ்வான் கடமை - பாகம் 3
பிரமச்சாரி, வானப்ரஸ்தம் சென்றவன், துறவிகள் என்று முதலில் காக்க வேண்டிய மூவரைச் சொன்னார்.
அடுத்தது,
துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்ற மூவரைச் சொன்னார்.
அடுத்த குறளில் 5 பேரைச் சொல்கிறார்.
பாடல்
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.
பொருள்
தென்புலத்தார் = தென் திசையில் உள்ளவர்கள்
தெய்வம் = தெய்வம்
விருந்து = விருந்து
ஒக்கல் = சுற்றத்தார்
தான் = தான்
என்று ஆங்கு = என்று அங்கு
ஐம்புலத்து ஆறு = ஐந்து இடங்களில் உள்ளவர்களை
ஓம்பல் தலை = காப்பது சிறந்தது
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
தென் புலத்தார் - இது இறந்த நம் முன்னோர்களைக் குறிக்கும். அவரக்ளுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம் போன்ற கடமைகளைச் செய்ய வேண்டும்.
தெய்வம் = தெய்வத்தை போற்றுவது, கோவில்களில் செய்யப்படும் நற்காரியங்களுக்கு உதவி செய்வது இதில் அடங்கும்.
விருந்தினர் = விருந்து என்றால் புதியது என்று அர்த்தம். புதியதாய் தன் இல்லத்திற்கு வந்தவர்களை போற்றி உபசரித்தல் இல்லறத்தில் உள்ளவனின் கடமை. இந்த விருந்து இரண்டு வகைப் படும். ஒன்று தெரிந்து வருவது. இன்னொன்று தெரியாமல் வருவது. தெரியாமல் என்றால் நமக்கு முன் பின் தெரியாதவர் நம் இல்லத்திற்கு வந்தால் அவரை வரவேற்று உபசரிக்க வேண்டியது இல்லறத்தில் உள்ளவனின் கடமை.
ஒக்கல் = சுற்றத்தார். உறவினர்களுக்கு வேண்டிய , முடிந்த உதவிகளைச் செய்வது. இந்த சுற்றத்தில் மனைவியும், பிள்ளைகளும் கூட அடங்குவர்.
அப்படி என்றால் நான் என் மனைவிக்கு ஒரு புடவை வாங்கித் தந்தால் அது ஒரு அறமா என்றால் அதுவும் ஒரு அறம் தான்.
மனைவி மற்றும் பிள்ளைகளின் நியாமான ஆசைகளை தேவைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு இல்லறத்தானின் கடமை என்று கூறுகிறார் வள்ளுவர். மனைவி என்பவள் நம் தேவைக்கு இருப்பவள் என்று இல்லாமல், அவளின் தேவைகளையும் பூர்த்தி செய்வது அறத்தின் பாற்பட்டது.
தான் = தனக்குத் தானே செய்து கொள்வது. இது தான் உள்ளதிற்குள்ளேயே ஆழ்ந்த சிந்தனை கொண்ட கருத்து. ஒருவன் தனக்குத் தானே வேண்டியவற்றை, நல்லனவற்றை செய்து கொள்ளுதலும் அறமே என்கிறார் வள்ளுவர்.
அது எப்படி அறமாகும் ?
மேலே சொல்லப் பட்ட அனைத்து அறங்களையும் செய்வதற்கு இல்லறத்தில் இருப்பவன் நல்ல நிலையில் இருந்தால் தானே முடியும். அவன் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தால் அவன் எங்கே விருந்தினரை உபசரிக்க முடியும், உறவினர்களுக்கு உதவ முடியும் ? எனவே ஒருவன் தன்னைத் தான் பேணி பாதுகாத்துக் கொள்வதும் இல்லறமே.
அது சுயநலம் இல்லை. இல்லறத்தில் இருப்பவனே அறத்தின் ஆணி வேர். அவன் நன்றாக இருந்தால் தான் சமுதாயத்தில் அறம் நிலைக்கும். எனவே, தன்னையும் சேர்த்துச் சொன்னார் வள்ளுவர்.
திருக்குறளில் மூன்று பாலை வரிசை படுத்திய முறையாகட்டும்,அவற்றுள் அதிகாரங்களை வரிசைப் படுத்திய முறையாகட்டும், ஒவ்வொரு அதிக்கரத்திலும் உள்ள குறள்களை வரிசைப் படுத்திய முறையாகட்டும், ஒவ்வொரு குறளிலும் உள்ள வார்த்தைகளை வரிசைப் படுத்திய முறையாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு முறைமை இருப்பதைக் காணலாம்.
இங்கே 5 பேரைச் சொன்னார்.
தென் புலத்தார்
தெய்வம்
விருந்து
சுற்றம்
தான்
என்ற ஐந்தில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு காரணம் இருக்கிறது. ஏன் இந்த வரிசையை மாற்றிச் சொல்லி இருக்கக் கூடாதா ?
தென் புலத்தாரும், தெய்வமும் கண்ணுக்குத் தெரியாதவர்கள். ஒரு நம்பிக்கையில் செய்வது தான். யாருக்குத் தெரியும் அவர்களுக்குச் செய்யும் தர்மங்கள் அவர்களை சென்று அடையும் என்று.
சுற்றமும், தானும் ...இவர்களுக்குச் செய்யும் தர்மத்தில் ஒரு சுயநலம் இருக்கிறது. என் அண்ணன் தம்பிக்கு, அக்காள் தங்கைக்கு, மனைவி மக்களுக்கு நான் செய்வது ஒரு சுயநலத்தின் பாற்பட்டது.
எனவே இந்த இரண்டுக்கும் மத்தியில் விருந்தை வைத்தார்.
மேலும், தனக்குச் செய்து கொள்ள வேண்டியதை கடைசியில் வைத்தார். இல்லை என்றால், தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மம் என்று சொல்லி, இன்னும் எனக்கே மிஞ்சவில்லை, நான் எப்படி மற்றவர்களுக்குச் செய்ய முடியும் என்று செய்யாமலே இருந்து விடுவான்.
சுயநலம் வேண்டும், ஆனால் அது கடைசியில் வர வேண்டும்.
பிதுர்களுக்கு, தெய்வத்திற்கு, விருந்தினருக்கு, சுற்றத்தாருக்கு செய்த பின் தனக்கு செய்து கொள்ள வேண்டும்.
வீட்டில் உணவு கொஞ்சம் கம்மியாக இருந்தால், முதலில் விருந்தினருக்கு தர வேண்டும். அவர் உண்டது போக மீதம் இருந்தால் மனைவி மக்களுக்குத் தர வேண்டும். அவர்கள் உண்ட பின் மீதம் இருந்தால் , எவ்வளவு இருக்கிறதோ அதை தான் உண்ண வேண்டும்.
முதலில் எனக்குப் போடு என்று உள்ளதை எல்லாம் உண்டு முடித்து விடக் கூடாது.
இல்லறம் என்று சொல்லும் போது கணவனும் மனைவியும் சேர்ந்ததுதான் இல்லறம்.
எனவே, கடைசியில் உள்ளதை கணவனும் மனைவியும் பகிர்ந்து உண்ணலாம்.
இப்படி அறத்தை சொன்ன இன்னொரு மொழி இருக்குமா உலகில் ?
அது என்ன "ஐம்புலத்து ஆறு"
புலம் என்றால் இடம். இந்த ஐந்தும் அறம் செய்யும் இடங்கள். ஆறு என்றால் வழி. இந்த ஐந்து இடத்திலும் நல்ல வழியில் அறம் செய்ய வேண்டும்.
தனக்கு உள்ள வருமானத்தை ஐந்தாகப் பிரித்து இந்த வழியில் செலவு செய்ய வேண்டும். அப்படி என்றால் அரசனுக்கு தரவேண்டிய வரியை ஏன் வள்ளுவர் சொல்லாமல் விட்டார் ? வரி செலுத்துவது தர்மம் இல்லையா என்று கேட்டால், நாம் செலுத்தாவிட்டாலும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். தர்மம், அறம் என்பது நாம் மனம் வைத்துச் செய்வது. வரி, நாம் மனம் வைக்காவிட்டாலும், அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.
இல்லறம் என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு, எத்தனை சமுதாய நோக்கு உடையது என்று குறள் காட்டுகிறது.
அறிவோம். அறியத் தருவோம்.