Tuesday, May 31, 2016

திருக்குறள் - வருமுன்னர் காவாதான் வாழ்க்கை

திருக்குறள் - வருமுன்னர் காவாதான் வாழ்க்கை 



பாடல்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும். 

பொருள்

வருமுன்னர்க் = வருவதற்கு முன்

காவாதான் = காத்துக் கொள்ளாதவன்

வாழ்க்கை = வாழ்கை

எரி = தீயின்

முன்னர்  = முன்னால்

வைத்தூறு = வைத்த வைக்கோல்

போலக் கெடும் = போலக் கெடும்


தீயின் முன்னால் வைத்த வைக்கோல் எப்படி எரிந்து சாம்பலாகுமோ அது போல  வருவதற்கு முன்னால்  காத்துக் கொள்ளாதவன் வாழ்கையும் ஆகும்.

ரொம்ப சிரமப் பட வைக்காத குறள். நேரடியான அர்த்தம் தரும் குறள் .

சற்று உள்ளே இறங்கி ஆராய்வோம்.

முதலாவது, தீயின் பக்கத்தில் வைக்கோலை வைத்தால், ஒரு காற்று அடித்தால், ஒரு வைக்கோல் பிரண்டு தீயின் மேல் விழுந்தால் அந்த வைக்கோல் போர் முழுவதும் பற்றி எரிந்து விடும். யாரும் வந்து அந்த தீயை எடுத்து வைக்கோல் போரின் மேல் போட வேண்டாம். தானாகவே பற்றி எரிந்து சாம்பாலகிப் போய் விடும்.

அது போல, தவறுகளும், குற்றங்களும் செய்தால் அதன் விளைவுகள் வாழ்க்கையையே நாசமாக்கி விடும். யாரும் வந்து செய்ய வேண்டாம்.

படிக்கிற காலத்தில் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தால், அதன் விளைவு  பின்னாளில்  வாழ்வே நாசமாகி விடும்.


இரண்டாவது, வைக்கோலில் தீ பிடித்துக் கொண்டால் அது மட்டும் எரியாது. அக்கம் பக்கத்தில் உள்ளதையும் சேர்த்து எரிக்கும். அது போல, ஒருவன் தவறு செய்தால் அதன் விளைவு அவனுக்கு மட்டும் அல்ல, அவனை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

ஒரு குடும்பத் தலைவன் ஏதோ ஒரு தவறு செய்கிறான்...அலுவலகத்தில் பணத்தை தவறான வழியில் எடுத்து விடுகிறான், அல்லது வேறு ஏதோ தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை வேலையில் இருந்து அனுப்பி விடுகிறார்கள். அது அவனை மட்டும் பாதிக்காது. அவனை நம்பி உள்ள அவன் குடும்பத்தையும் பாதிக்கும் அல்லவா ?

ஒரு வீட்டில் கணவனோ மனைவியோ தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் கண்டதையும் கண்ட நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால், பிற்காலத்தில் அவர்கள் நோய் வாய்ப்படும்போது அது அவர்களை மட்டும் பாதிக்காது...அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும் அல்லவா.

இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

கவனிக்க வேண்டியது என்ன என்றால், செய்யும் தவற்றின் விளைவுகள் செய்பவனை மட்டும் பாதிப்பது இல்லை , அவனை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கிறது.

மூன்றாவது, நெருப்பு சிறு பொறி தான். வைக்கோல் போர் மிகப் பெரியதுதான். இருந்தாலும், சின்ன நெருப்பு பெரிய வைக்கோல் போரை எரித்து சாம்பாலாக்கி விடும். அது போல தவறும் குற்றமும் சின்னதாக இருக்கலாம். ஆனால், அது ஒருவனின் பெரிய செல்வத்தையும், வாழ் நாள் எல்லாம் கட்டிக் காத்த புகழையும் ஒரே நொடியில் அழித்து விடும் ஆற்றல் வாய்ந்தது. என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. தவறு செய்து மாட்டிக் கொண்டாலும் பணத்தைக் கொண்டு வெளியே வந்து விடுவேன் என்று நினைக்கக் கூடாது. அத்தனை செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய் விடும்.

நான்காவது, மரக் கட்டையில் தீ பிடித்தால் போராடி அனைத்து விடலாம். அணைத்த பின் மீதி உள்ள கட்டை பயன்படும். வைக்கோல் போரில் தீ பிடித்தால், அணைப்பதற்குள் எல்லாம் எரிந்து சாம்பலாகி விடும். மேலும், எரியாத வைக்கோல் நீரில் நனைந்து , புகை சுற்றி கருகிய வாடை அடிக்கும். அதை மாடு கூட தின்னாது. ஒன்றுக்கும் பயன்படாது. எவ்வளவுதான் சொந்தம் பந்தம், பெரிய இடத்து நட்பு என்று இருந்தாலும், குற்றங்களும் தவறுகளும் மனிதனின் வாழ்க்கையை சில நொடிகளில் சின்னா பின்னாமாக்கி விடும். அதில் இருந்து தப்பி வந்தாலும், அந்த வாழ்க்கை இனிமையானதாக இருக்காது. ஒரு பயனுள்ள வாழ்க்கையாக இருக்காது.

ஐந்தாவது, வள்ளுவர், வைக்கோல் போரின் மேல் வைத்த தீ என்று என்று சொல்லவில்லை. தீயின் முன்னால் வைத்த வைக்கோல் போர் என்றார். நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று இல்லை. தவறு செய்யும் இடத்தில் நீங்கள் இருந்தாலும் போதும், தவறு செய்பவர்களோடு  சகவாசம் வைத்துக் கொண்டிருந்தாலும் போதும் அது உங்கள் வாழ்வை  நாசமாக்கி விடும். "இவனும் அவனும் கூட்டு களவாணி தான் " என்று தான் உலகம் சொல்லும்.  குற்றங்களுக்குப் பக்கமே போகக் கூடாது.

ஆறாவது, பெரிய வைக்கோல் போரை எரிக்க பெரிய தீ பந்தம் வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். உங்கள் வாழ்வை நாசமாக்க பெரிய தவறுகள் வேண்டாம். சின்ன சின்ன தவறுகள் போதும். எப்பவாவது தண்ணி அடிப்பது, அலுவலகத்தில் இருந்து எப்பவாவது பென்சில் , பேனா போன்றவற்றை வீட்டுக்கு கொண்டு வருவது போன்ற சின்ன தவறுகள் போதும். என்றேனும் காற்று அடித்து அந்த சிறு தவறுகள் பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும்.

சின்ன தவறுகள், சின்ன குற்றங்கள், சின்ன எதிரிகள் எல்லாம் சின்ன நெருப்பு பொறி மாதிரி.

குற்றங்களும், தவறுகளும் நிகழா வண்ணம் உங்களை காத்துக் கொள்ளுங்கள். வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மதியீனம்.

அடுத்த முறை ஜிலேபி போன்ற இனிப்புகளை தொடுமுன், பெப்சி போன்ற குளிர் பானங்களை தொடுமுன்,  படிக்காமல் தொலை காட்சி பார்க்குமுன், உடற் பயிற்சி செய்யாமல் போர்வையை இழுத்து போர்த்தி தூங்கப் போகுமுன்.....  வைக்கோல் போர் ஞாபகம் வர வேண்டும்.

வரும்.

(மேலும் படிக்க

http://interestingtamilpoems.blogspot.com/2016/05/blog-post_31.html

)





Friday, May 13, 2016

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?


எது அழகு என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம் ?

காதலியின் முகம் அழகு, அவளின் வெட்கம் அழகு, குழந்தையின் முகம் அழகு, அப்போது பூத்த பூ அழகு, மழை அழகு, கடல் அழகு என்று அடுக்குவோம்.

ஔவை வேறு ஒரு பட்டியல் தருகிறாள்.

வறுமை அழகு, சாப்பிடாமல் இளைத்த தேகம் அழகு, ஏன் மரணம் கூட அழகு என்கிறாள் கிழவி.

நம்ப முடிகிறதா ?


உலகிலேயே மிக அழகானது, முதல் இரவு முடிந்து வெளியில் வரும் பெண்ணின் முகம் மிக அழகானது என்கிறாள்.

அடுத்து, விரதம் இருந்து இளைத்த ஞானியாரின் மேனி அழகு. காய்ச்சல் வந்து, உடல் நிலை சரியில்லாமல் இளைத்த மேனி அல்ல, ஞானம் வேண்டி ,ஊண் உறக்கம் இன்றி தவத்தால் விரதத்தால் இளைத்த மேனி அழகு. யோசித்துப் பார்ப்போம். அளவுக்கு அதிகம் தின்று தொந்தியும் தொப்பையும் உள்ள உடல் அழகா, விரதத்தால் இளைத்த மேனி அழகா ?


அடுத்து, கொடுத்து இளைத்த ஒருவனின் வறுமையும் கூட அழகு என்கிறாள் அவ்வை. ஒரு காலத்தில் பெரிய தனவந்தனாக இருந்து , எல்லோருக்கும் உதவி செய்து அதனால் வறுமையின் வாய்ப்பட்டாலும் , அந்த வறுமை கூட அழகுதான் என்கிறாள்.


இது எல்லாவற்றையும் விட அழகு, நாட்டுக்காக சண்டையிட்டு, அதில் மார்பில் புண் ஏற்று இறந்த வீரனின் சமாதியின் மேல் இருக்கும் அந்த கல் அழகு என்கிறாள்.


பாடல்


சுரதம் தனிவிளைந்த தோகை சுகிர்த
விரதம் தனிவிளைந்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்லபிர மம்


பொருள்

சுரதம் = கூடல் , புணர்ச்சி

தனி = தனிமையில்

விளைந்த = சுகித்த, தோய்ந்த

தோகை = இளம் பெண்

சுகிர்த = ஞானம் (வேண்டி, தேடி)

விரதம் = விரதம் இருந்து

தனி விளைந்த மேனி = இளைத்த மேனி

நிரதம் = நித்தம்

கொடுத்திளைத்த தாதா =கொடுத்து இளைத்த செல்வந்தன்

கொடுஞ்சமரிற் = கொடும் + சமரில் = கொடிய சண்டையில்

பட்ட = இறந்து பட்ட

வடுத்துளைத்த = வடு துளைத்த = விழுப் புண் ஏற்ற

கல்லபிர மம் = கல் + அபிரமம் = அந்த நடு கல் அழகானது.

அபிரமம் என்றால் அழகானது என்று அர்த்தம். அபிராமி என்றால் அழகானவள் என்று பொருள்.


அழகு என்பது வேறு உடல் வனப்பில் மட்டும் அல்ல.


என்ன ஒரு அருமையான பாடல்.

கிழவி பெரிய ஆள் தான்.

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post_13.html )



Thursday, May 12, 2016

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின்

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின் 


இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே

நாம் பலமுறை கேட்ட பாடல் தான். திருவிளையாடல் படத்தில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

 இதில் என்ன புதுமை இருக்கிறது தெரிந்து கொள்ள ?

நம்மிடம் இனிது எது என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

-நல்ல சுவையான உணவு
- காதுக்கு இனிய இசை
- நல்ல சினிமா, நாடகம், தொலைகாட் சி தொடர்
- கணவன்/மனைவியோடு இருப்பது, நண்பர்களோடு அரட்டை அடிப்பது

இப்படி அடுக்கிக் கொண்டே போவோம்.

இனிமையை விட்டு விட்டு, ரொம்ப துன்பமானது, கடினமானது எது என்று கேட்டால்  தனிமை கொடுமை என்று சொல்லுவோம்.

அது கொடுமை என்பதால் தானே சிறையில் போடுகிறார்கள். ரொம்ப பெரிய  தவறு செய்தால் தனிமைச் சிறை என்றே இருக்கிறது. அதில் போட்டு விடுவார்கள்.

அவ்வை சொல்கிறாள்

"இனிது இனிது ஏகாந்தம் இனிது" 

ஏகாந்தம் என்றால் என்ன ?

ஏக + அந்தம்.

அந்தம் என்றால் முடிவு. ஏகம் என்றால் ஒன்று. ஒன்றான முடிவு. அல்லது ஒன்றில் முடிவது. ஒன்றில் இலயித்து விடுவது. அதில் கரைந்து போவது.

வாழ்க்கையின் பல சிக்கலகளுக்கு காரணம் மனம் ஒன்றாதது தான். ஒன்றிருக்கும் போது இன்னொன்றுக்குத் தாவுவது.

படிக்கும் போது தொலைக் காட்சி
அலுவலத்தில் இருந்தால் வீட்டின் எண்ணம்.
வீட்டில் இருந்தால் அலுவகலத்தின் எண்ணம்
இப்படி மனம் எதிலும் ஒன்றாமல் அலை பாய்ந்து கிடப்பதால் எதிலும்  நாம் சாதிக்க முடிவதில்லை.

ஏகாந்தம் இனிது.

சரி, அது தான் இனிமையா ? அதை விட இனிமையானது ஏதாவது இருக்கிறதா என்றால் ,

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

என்றார்.

கடவுளைத் தொழுதால் என்று சொல்லவில்லை. கடவுள் என்று சொன்னால் , உடனே எந்தக் கடவுள் என்று கேட்போம். அந்த சிக்கலைத் தவிர்த்து  அவ்வையார் "ஆதியைத் தொழுதல்" என்றார். 

எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆதி என்று ஒன்றும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதை ஏன் தொழ வேண்டும்  ? அதை விட இனியது வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், 


"அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்"

ஆதியைத் தொழுவதை விட இனியது அறிவுடயவர்களைச் சேர்வது.


இதைப் புரிந்து கொள்வது சற்று கடினம். அறிவுடையவர்களை சேர்வது என்ன அவ்வளவு இனிமையான செயலா என்றால் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் இனிமை தெரியும்.

அறிவுடையவர்கள் நம் வாழ்க்கையின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவர்கள். நம்மை மிக மிக உயரத்தில் கொண்டு சேர்க்கும் வலிமை பெற்றவர்கள். நமது பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு சொல்பவர்கள். அவர்களோடு சில நேரம் இருந்து விட்டு வந்தாலே, நமக்கு ஒரு புத்துணர்ச்சியும், ஒரு உற்சாகமும், வாழ்வில் ஏதாவது  சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் தோன்றும்.

சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் எத்தனை அறிவுடையவர்களோடு தொடர்பு வைத்து இருக்கிறீர்கள் என்று. இல்லை என்றால், இன்றிலிருந்து தொடங்குங்கள். தேடிப்  பிடியுங்கள். அப்புறம் பாருங்கள்  உங்கள் வாழ்வின் திசை போகும் போக்கை. எங்கோ உயரத்திற்கு போய் விடுவீர்கள்.

சரி, அதை விட உயர்ந்தது ஏதாவது இருக்கிறதா ?


அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே


நான் எங்கே இருக்கிறேன் , இந்த அறிவில் சிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்களோடு நான் எப்படி சேர்வது ? அவர்கள் என்னை தங்களோடு சேர்த்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருக்கிறதா ?

நீங்கள் சேரக் கூட வேண்டாம் ...அறிவுள்ளவர்களை பார்த்தால் கூட போதும். நேரில் கூட பார்க்க வேண்டாம், கனவில் கண்டால் கூடப் போதும்...

பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தாள் ஆண்டாள். அவள் கனவிலும் அவன் வந்தான். 

"கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான் " என்றாள் . 

கனவு கண்டவள் , நிஜமாகவே கைப் பிடித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

கனவு காணுங்கள். கனவு மெய்படும்.

சரி, இந்தப் பாடலை சற்று வேறு விதமாகப்  பார்ப்போம். 

பாடலை அடியில் இருந்து மேல் நோக்கிப் படிப்போம். 

முதலில் அறிவுடயவர்களை கனவில் காணுதல், பின் அவர்களை நேரில் காணுதல், பின் அவர்களோடு சேர்தல், சேர்ந்த பின் ஆதியைத் தொழுதல் , அதையும் கடந்து பின் ஏகாந்தமாய் இருத்தல்.

ஆதியோடு ஒன்றாகி விடுதல். ஏக அந்தம்.  முடிவில் எல்லாம் ஒன்றாக இருத்தல். 

ஏக போகமாய், நீயும் நானுமாய் , இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் என்று அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகிறார். 


இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
ஏகநாயகா”
(திருவிடைமருதூர்த் திருப்புகழ்)

அறிவுடையவர்களை தேடிக் கண்டு பிடியுங்கள். 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 


(மேலும் வாசிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post.html )