Friday, December 23, 2016

இராமாயணம் - பரதன் - தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்

இராமாயணம் - பரதன் - தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்


தசரதன் இறந்து போனான். இராமன் கானகம் போனான். இறந்த தசரதனுக்கு இறுதிக் கடன்கள் எல்லாம் செய்து முடித்தாகி விட்டது.

 மீண்டும் மந்திரி சபை கூடுகிறது. அரசன் ஆணைப்படி, பரதன் முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்று மந்திரிகள் பரதனை வேண்டுகிறார்கள்.

அதைக் கேட்ட பரதன் "விஷத்தை குடி" என்று சொன்னால் ஒருவன் எப்படி பயந்து நடுங்குவானோ அப்படி நடுங்கினான்.

பாடல்

‘தஞ்சம் இவ் உலகம், நீ
    தாங்குவாய் ‘எனச்
செஞ் செவ்வே முனிவரன்
    செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர் ‘என,
    நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன்
    அருவிக் கண்ணினான்.

பொருள்

‘தஞ்சம் = அடைக்கலம்

இவ் உலகம் = இந்த உலகம்

நீ = நீ

தாங்குவாய் = காப்பாய்

எனச் = என்று

செஞ் செவ்வே = செம்மையாக

முனிவரன் = முனிவர்கள்

செப்பக் கேட்டலும் = சொல்லக் கேட்டதும்

‘நஞ்சினை நுகர் ‘ = விஷத்தை அருந்து

என = என்று சொல்லக் கேட்டு

நடுங்குவாரினும் = நடுங்குபவர்களை விட

அஞ்சினன் = பயந்தான்

அயர்ந்தனன் = தளர்ந்தான்

அருவிக் கண்ணினான் = அருவியே கண்ணாகக் கொண்ட பரதன்


அரசனின் ஆணை. ஆட்சிக்கு உரிய இராமனோ கானகம் போய் விட்டான். நாட்டுக்கு அரசன் இல்லை. மந்திரிகள் எல்லோரும் அரச பதவியை ஏற்றுக் கொள்ளும்படி  சொல்கிறார்கள்.

ஒரு வேளை பரதன் ஏற்றுக் கொண்டிருந்தால் , அவனை பழி சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அவன் ஏற்றுக் கொண்டான் என்றுதான் உலகம் சொல்லும்.

பரதன் அப்படிச் செய்யவில்லை.

மந்திரிகள் அப்படிச் சொன்னவுடன், "விஷத்தைக் குடி" என்று சொன்னால் ஒருவன் எப்படி  நடுங்குவானோ அப்படி நடுங்கினான்.

எவ்வளவு பெரிய பதவி. சக்கரவர்த்தி பதவி. அதிகாரம். செல்வம். ஆள். அம்பு. சேனை. புகழ். என்று கணக்கில் அடங்காத செல்வம்.

அதை  எடுத்துக் கொள் என்றால், உயிர் போவது போல (விஷத்தைக் குடிப்பது) நடுங்குகிறான்.

பதவியின் மேல் கொஞ்சம் கூட ஆசை இல்லாமல்  இருந்தவர்கள் இருந்த நாடு.

தந்தை சொல் உயர்ந்தது என்று பதவியை விட்டு விட்டு இராமன் கானகம் போனான்.

அறம் உயர்ந்தது என்று வந்த பதவியை வேண்டாம் என்று விலக்கி நிற்கிறான்  பரதன். எப்பேர்ப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம்.

இன்று நடக்கும் பதவிச் சண்டைகளை பார்த்தால் மனம் வலிக்கிறது.


சொத்துக்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்கிறார்கள். நீதி மன்றத்தின் படி ஏறுகிறார்கள்.

சொந்த தாய் தந்தையரை கொலை கூட செய்து விடுகிறார்கள்.

அரசியலில் கேட்கவே வேண்டாம்.

சொத்து அல்ல. பதவி அல்ல. அதிகாரம் அல்ல.....தர்மம் தான் உயர்ந்தது என்று வாழ்ந்து காட்டினார்கள் .

கதையை பிடித்துக் கொண்டோம். கருத்தை விட்டு விட்டோமோ என்று சந்தேகம் வருகிறது.

பரதன் ஏன் இராமனை விட பல மடங்கு உயர்ந்தவன் என்பதற்கு  கம்பன் அமைக்கும்  அடித்தளம் இது.

போகப் போகத் தெரியும். பரதன் எப்படி உயர்ந்தவன் என்று.

போவோமா ?


Tuesday, December 20, 2016

திருக்குறள் - எப்படி செயல் செய்ய வேண்டும் ?

திருக்குறள் - எப்படி செயல் செய்ய வேண்டும் ?


ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் ? வேலை செய்வதற்கு எப்படி திட்டமிட வேண்டும் ? திட்டமிடுவதற்கு என்னென்ன வேண்டும் ? எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகு எப்படி முடிவு எடுக்க வேண்டும் ? இதை அத்தனையும் ஒன்றே முக்கால் அடியில் சொல்கிறார் வள்ளுவர்.

பாடல்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

பொருள்

அழிவதூஉம் = அழிவதையும்

ஆவதூஉம் = ஆவதையும்

ஆகி = ஆன பின்

வழிபயக்கும் = வழியை தரும்

ஊதியமும் =  பயனையும்

சூழ்ந்து செயல் = ஆராய்ந்து செய்ய வேண்டும்


இதுல என்ன பெருசா இருக்கு ?

சிந்திப்போம்.

நாம் ஒரு செயலை செய்யப் போகும் போது பொதுவாக  அதில் உள்ள நன்மைகள், சுகம் மட்டும் தான் தெரியும்.

டிவி வாங்கணுமா,கார் வாங்க வேண்டுமா, வீடு வாங்க வேண்டுமா...அதை எப்படியெல்லாம்  அனுபவிக்கலாம் என்று நாம் கனவு காணுவோம். பெரிய டிவி, பெரிய கார், அதில் குளிர் சாதன வசதி, நல்ல ஒலி பெருக்கி சாதனம், அது இது என்று  கனவு காணுவோம்.

வீடு என்றால், அதில் என்னென்ன செய்யலாம், சோபா எங்க போடலாம், AC எங்க மாட்டலாம் என்று சிந்தனை ஓடும்.

ஆனால், அதில் இருந்து வரும் சிக்கல்கள் தெரியாது.

ஒரு வீடு வாங்கினால்,  அதற்கு  வட்டி கட்ட வேண்டும், வீட்டை பாதுக்காக்க வேண்டும், வரி கட்ட வேண்டும், பக்கத்து வீட்டுக்காரரின் தொல்லை, வழக்கு ஏதாவது வரலாம், எங்காவது விரிசல் விட்டால் மனம் வலிக்கும். இப்படி ஆயிரம் தொல்லைகள். நாம் இவற்றை யோசிப்பது கிடையாது.

திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்...மனைவி வருவாள், அவளோடு சந்தோஷமாக இருக்கலாம், ருசியாக சமைத்துத் தருவாள், சமுதாயத்தில் ஒரு  மதிப்பு , மரியாதை வரும் என்று மனம் இறக்கை கட்டி பறக்கும்.

இது ஆவது.

அழிவது எது ?  அவளுக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கும். அவற்றை நிறைவேற்ற  வேண்டும். பிள்ளைகள் வரும். அவற்றை படிக்க வைத்து , ஆளாக்க வேண்டும். மாமியார் மருமகள் உறவில் வரும் சிக்கல்கள். எதிர்பார்ப்புகள். ஏமாற்றங்கள்.

இவை அழிவு.

இப்படி எதை எடுத்தாலும் ஆவதும் இருக்கும், அழிவதும் இருக்கும்.

சரி, புரியுது.

இரண்டையும் பட்டியல் போட்டாச்சு.

எப்படி முடிவு எடுப்பது. எதை எடுத்தாலும் நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும். என்ன செய்வது. மேலே எப்படி போவது ?


"வழிபயக்கும் ஊதியமும்"  நீண்ட கால நன்மை, அல்லது பயன் என்ன என்று அறிய வேண்டும்.

எதைச் செய்தாலும், கொஞ்சம் இழப்பு இருக்கும். கொஞ்சம் பலனும் இருக்கும்.  நீண்ட கால நன்மை என்ன என்று யோசிக்க வேண்டும்.

ஒரு மாணவன் படிக்க உட்காருகிறான் என்றால், நண்பர்களோடு இனிமையாக அரட்டை அடிப்பது, டிவி பார்ப்பது போன்ற சுகங்கள் இழப்பு. அறிவு வளர்வது அதில் வரும்  ஆக்கம். அறிவு வளர்ந்து என்ன செய்வது ? நல்ல மதிப்பெண் வரும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும்...இவை எல்லாம் நீண்ட கால பயன்கள்.


உடற் பயிற்சி செய்கிறோம் என்றால், வலி, உடற் பயிற்சி கூடத்திற்கு (gym ) கொடுக்கும் பணம்,  நேர விரயம் இவை எல்லாம் அழிவு.

ஆக்கம் , உடல் உறுதி.

நீண்ட கால பயன் - ஆரோக்கியமான உடல்,  குறையும் மருத்துவ செலவு, நீண்ட ஆயுள்.

சரி, அழிவு, ஆக்கம், நீண்ட கால பயன் இவற்றை அறிந்து கொண்டோம்.

அடுத்து என்ன செய்வது ?

"சூழ்ந்து"  அதாவது ஆராய்ந்து. அழிவு எவ்வளவு ? ஆக்கம் எவ்வளவு ? நீண்ட கால பயன் எவ்வளவு ?  எப்படி ஆராய்வது ? ஒவ்வொரு செயலுக்கும் வேற வேற மாதிரி  ஆராய வேண்டும். ஒரு டிவி வாங்குவது மாதிரி அல்ல ஒரு வீடு வாங்குவது. அழிவு , ஆக்கம், நீண்ட கால பயன் இவற்றின் அளவை பொறுத்து நம் ஆராய்ச்சி அமைய வேண்டும். சில விஷயங்களை நாமே ஆராய முடியும்.  சிலவற்றிற்கு மற்றவர்களின் உதவி தேவைப் படும்.

வீடு வாங்குவது என்றால் ஒரு வக்கீலை பார்க்க வேண்டும்.

திருமணம் செய்வது என்றால் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

ஆராய என்ன கருவிகள் (tools ) வேண்டும், எப்படி ஆராய வேண்டும், ஆராய்ச்சியின் முடிவை எப்படி உபயோகப் படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஆராய்ந்த பின், "செயல்" .

அதற்கு பின் செயல்பட வேண்டும்.

இதில் இன்னும் கூர்மையாக பார்க்க வேண்டியது என்ன என்றால்,

முதலில் அழிவை சொல்லி அடுத்து ஆக்கத்தை சொல்கிறார் வள்ளுவர்.

ஏன் ?

ஆக்கம் வராவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. நட்டம் வந்து விட்டால்  அதை தாங்கும்  சக்தி வேண்டும்.

உதாரணமாக, வீடு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் விலை உயர்வது  ஆக்கம், நீண்ட கால பலன். அது நிகழாவிட்டால் பரவாயில்லை. ஆனால், வீடு வாங்கிய பின், அந்த வீட்டுக்கு இன்னொருவன்  உரிமை கொண்டாடி  நீதி மன்றம் போனால் , வீடு நம் கையை விட்டுப் போனால்  அந்த நட்டத்தை நம்மால் தாங்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

முதலில் அழிவை ஆராய வேண்டும்.

மேலும், அழிவை ஆராய்வதன் மூலம், அதை எப்படி சமாளிப்பது என்று திட்டமிட முடியும். (Risk Management ).

முதலில் அழிவு.

பின் ஆக்கம்.

பின் நீண்ட கால பயன்

பின் இந்த மூன்றையும் சரியாக எடை போடுவது.

பின், செயல் படவேண்டும்.

புரியுதா ?  

Wednesday, December 14, 2016

இராமாயணம் - யார் ஆட்சி செய்வது ?

இராமாயணம் - யார் ஆட்சி செய்வது ?


ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்துவிட்டார். அவருக்குப் பின் யார் ஆட்சி செய்வது என்று பெரிய  குழப்பம் நிகழ்கிறது. இந்த குழப்பத்தை எப்படி தீர்ப்பது ?

இராமாயணம் போன்ற நூல்களை ஊன்றிப்  படித்தால்     இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

கைகேயி வரம் கேட்டாள் . தசரதன் தந்து விட்டான். அதன்படி பரதன் அரசாள வேண்டும், இராமன் கானகம் போக வேண்டும் என்று கைகேயி   இராமனிடம் கூறுகிறாள். அவனும் சரி என்று காட்டுக்கு கிளம்பி விட்டான். அரசு எனக்குத் தான் சொந்தம். பாட்டனார் சொத்து, அரச தர்மப்படி எனக்குத்தான் வர வேண்டும், தசரதன் யார் இதை பரதனுக்கு கொடுக்க என்று அவன் வாதம் பண்ணவில்லை. அரசை விட தந்தை சொல் முக்கியம் என்று இருந்தான் அவன்.

இராமன் கானகம் போன பின், பரதன் வருகிறான். தாயும், அமைச்சர்களும் அவனை அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள். அவன் ஏற்றுக் கொண்டிருந்தால் அவனை யாரும் குறை சொல்ல முடியாது.  அவன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.  அண்ணன் இருக்கும் போது தான் அரசை ஏற்றுக் கொள்ளுவது  அறம் அல்ல என்று நினைக்கிறான்.

அவனை அரசை ஏற்றுக் கொள்ளும் படி சொன்ன அமைச்சர்களிடம்

"பெரிய கொடுமையைச் செய்த என் அன்னையின் செயலை நல்லது என்று நீங்கள் கூறினால் , இது கலி காலம் தான் வந்து விட்டதோ என்று எண்ணும்படி இருக்கிறது " என்கிறான்.

பாடல்


‘அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,
நடைவரும் தன்மை நீர், “நன்று இது” என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது
கடை வரும் தீ  நெறி்க் கலியின் ஆட்சியோ!


பொருள்

‘அடைவு = அடைய முடியாத. எங்கும் காணாத என்று பொருள்

அருங் கொடுமை = பெரிய கொடுமையை

என் அன்னை = என் தாயின்

செய்கையை = செயலை

நடைவரும் = உயர்ந்த ஒழுக்கத்தை

தன்மை நீர், = இயல்பாகக் கொண்ட நீரங்கள் (அமைச்சர்கள்)

“நன்று இது” = அது நல்லது

என்றிரேல் = என்று கூறினால்

இடை வரும் காலம் = இடையில் வரும் காலம்

ஈண்டு = இங்கு

இரண்டும் நீத்து, = இரண்டையும் தவிர்த்து

இது = இந்தக் காலம்

கடை வரும் = கடைசியில் வரும்

 தீ நெறி்க் = தீய வழியில் செல்லும்

கலியின் ஆட்சியோ! = கலிகாலத்தில் ஆட்சியோ , அல்லது கலி புருடனின் ஆட்சியோ


இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து என்றால் என்ன ?  

இராமாயணம் நடந்தது கிரேதாயுகம். அதற்குப் பின் திரேதாயுகம், துவாபர யுகம் என்று  இரண்டு யுகங்கள் வரவேண்டும். அதற்குப் பின் கலியுகம் வரும். நீங்கள்  சொல்வதைப் பார்த்தால் இப்போதே அந்த இரண்டு யுகங்களும் கழிந்து கலி யுகம்  வந்து விட்டது போலத் தெரிகிறது என்கிறான். 

ஆண்டது போதும் , அரசை இராமானுக்குத் தரலாம் என்று தயரதன் நினைத்தான். சாகும் வரை தானே ஆள வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. அரசின் மேல் அவனுக்கு பற்று இல்லை. 

தந்தை சொல்லே உயர்ந்தது என்று நாட்டை விட்டு கானகம் போனான் இராமன். அவனுக்கும் அரசின் மேல் பற்று இல்லை. 

தந்தை சொல் கொண்டு தாய் தந்த அரசை வேண்டாம் என்கிறான் பரதன்.  அவனுக்கும் அரசின் மேல் ஆசை இல்லை. 

இராஜ்யத்தை ஆள்வதை விட மற்றவற்றை உயர்ததாக அவர்கள் கருதினார்கள். 

இவர்களாவது பரவாயில்லை. படித்தவர்கள். அறம் அறிந்தவர்கள். 

குகன், ஒரு வேடன், படகு ஓட்டுப்பவன். இராமனை கண்ட மாத்திரம் , அரசும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம், உன் கூடவே இருந்து விடுகிறேன். அந்த அரசு துன்பத்தின் இருப்பிடம்  என்கிறான். 

அரச பதவி என்பது "இன்னலின் இருக்கை " என்கிறான். 

கார் குலாம் நிறத்தான் கூற,
     காதலன் உணர்த்துவான், ‘இப்
பார் குலாம் செல்வ! நின்னை,
     இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்,
     இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய!
     செய்குவென் அடிமை’ என்றான்.

என்பது கம்பர் வாக்கு. 

பதவி மோகம் அவர்களுக்கு இல்லை. 

பதவி பதவி என்று அலைவோர் பாடம் படிக்க வேண்டும். 


இராமாயணம் - மன்னவர் மன்னவா

இராமாயணம் - மன்னவர் மன்னவா 



தயரதன் இறந்ததையும் , இராமன் கானகம் போனதையும் அறிந்த பரதன், அந்த இரண்டுக்கும் காரணம் தன் தாயான கைகேயி தான் என்று அறிந்து அவளை சுடு சொற்களால் ஏசி விட்டு, கோசலையை காணச் செல்கிறான். கோசலையும் "உன் தாயின் செயல் உனக்குத் தெரியாததா" என்று கேட்கிறாள். அதனால் மனம் நொந்து, "என் தாய் கேட்ட வரங்கள் எனக்கும் தெரியும் என்றால், மிகப் பெரிய பாவங்களை செய்தவர்கள் செல்லும் நரகத்துக்கு நான் போவேன் " என்று அந்த பாவங்களை பட்டியல் இட்டு சூளுரைக்கிறான்.

அவனுடைய நல்ல மனதை அறிந்த கோசலை அவனை "மன்னர் மன்னவா" என்று வாழ்த்துகிறாள்.

பாடல்


‘முன்னை நும் குல முதலுேளார்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா! ‘என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள்.


பொருள் 

‘முன்னை = முன்னால்

நும் = உன்னுடைய

குல = குலத்தில் தோன்றிய

முதலுேளார்கள்தாம் = அரசர்களில்

நின்னை யாவரே = உனக்கு யார்

நிகர்க்கும் = சமமாகும்

நீர்மையார் = தன்மை கொண்டவர்கள் ?

மன்னர் மன்னவா! = மன்னர்களின் மன்னவனே

என்று வாழ்த்தினாள் = என்று வாழ்த்தினாள்

உன்ன உன்ன = நினைக்க நினைக்க

நைந்து = இற்றுப் போய்

உருகி விம்முவாள் = உருகி விம்முவாள்

தனக்கு பதில் பரதன் முடி சூட்டப் போகிறான் என்று இராமன் தன்னுடைய தாயான  கோசாலையிடம் கூறிய போது  "நின்னினும் நல்லன் " என்று பரதனை கூறினாள்.

அடுத்து, பரதனை நேரில் கண்டு பேசிய பின் அவனை "மன்னர் மன்னவா" என்று  அவனை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போகிறாள்.

இராமன் மன்னனாகி இருப்பான்.

பரதன் மன்னர்களுக்கு எல்லாம்  மன்னவன் என்று வாழ்த்துகிறாள்.

இது வரை சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்களில் யார் உனக்கு இணையாவார்கள் , யாரும் ஆக மாட்டார்கள் என்று கூறுகிறாள்.

அப்படி என்ன செய்து விட்டான்  பரதன் ?

இரண்டே இரண்டு விஷயம் தான்

ஒன்று, நல்லதே நினைத்தது

இரண்டாவது, மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படையாக பேசியது.

இன்னும் பரதன் எப்படி உயருகிறான் என்று  பார்ப்போம்.


Friday, December 9, 2016

திருக்குறள் - உடம்போடு உயிரிடை நட்பு

திருக்குறள் - உடம்போடு உயிரிடை நட்பு


உடம்புக்கும், உயிருக்கும் இடையேயான உறவு எப்படி பட்டது ?

முதலில் உயிர் என்று ஒன்று இருக்கிறதா என்றே நமக்குச் சந்தேகம் இருக்கிறது. அது தெரிந்தால் அல்லவா அதற்கும் உடலுக்கும் இடையில் உள்ள உறவை பற்றி ஆராய முடியும்.

உயிர் வேறு. உடம்பு வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள உறவு என்ன என்பதை ஒண்ணே முக்கால் அடியில் சொல்கிறார் வள்ளுவர்.

என்ன ஒரு சிந்தனை . என்ன ஒரு  தெளிவு. சிலிர்க்க வைக்கும் அர்த்தம்.

பாடல்

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு.

பொருள்

குடம்பை = கூட்டினை

தனித்தொழியப் = தனித்து விட்டு

புட்பறந் தற்றே = புள் + பறந்தற்றே = புள் என்றால் பறவை. பறவை பறந்த மாதிரி

யுடம்பொ டு = உடம்போடு

உயிரிடை நட்பு = உயிருக்கு இடையிலான நட்பு

கூட்டை விட்டு பறவை பறந்து செல்வது மாதிரி உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு.

அதுசரி, அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய build up னு கேட்கிறீர்களா ?

.சிந்திப்போம்

ஒரு பறவை மரத்தில் கூடு கட்டுகிறது.  கூட்டில் முட்டை இடுகிறது. கூட்டை கேட்டு அது  முட்டை இடுவது இல்லை. முட்டையில் இருந்து குஞ்சு வெளி வருகிறது. வந்தவுடன் அது பறந்து விடுவது இல்லை. கொஞ்ச காலம் இருந்து, இறக்கை முளைத்தவுடன் , பறந்து விடுகிறது.  பறவை பறந்து போன பின் கூடு  வெறுமையாக இருக்கிறது.

உயிர்கள் தாங்கள் சேர்த்து வைத்த வினைகளின் பலனை அனுபவிக்க உடலை எடுக்கின்றன. அனுபவித்து முடிந்தவுடன், உடலை விட்டுப் போய் விடுகின்றன. ஆவி போன பின் அந்த உடல் எனும் கூடு வெறுமனே கிடக்கும் . நாளடைவில் , அந்த கூட்டில் உள்ள குச்சிகள் மழையிலும் காற்றிலும் கீழே விழுந்து மக்கிப் போகும். நம் உடல் புதைக்கப் பட்டோ, எரிக்கப் பட்டோ அழிந்து போவதைப் போல.

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால்,  குடம்பை என்பதற்கு முட்டை என்றும் ஒரு பொருள் உண்டு.

அதுவும் ஒரு கூடுதானே.

ஒரு முட்டையை பார்த்தால், அது உயிரற்றது போலத்தான் தெரியும். அதற்குள் உயிர் இருக்கிறது.

ஒரு காலம் வந்தவுடன், முட்டையை உடைத்துக் கொண்டு உள்ளே உள்ள பறவை வெளியே வரும். வெளியே பறவை வந்தவுடன், அந்த முட்டை தனித்து விடப்படும். அதை தூக்கி குப்பையில் போட வேண்டியதுதான். முட்டையின் வேலை முடிந்து விட்டது.

யோசித்துப் பாருங்கள்.

நம் உடல் எதற்கு ? நமக்குள்ளே உள்ள நம்மை அறிய, ஞானம் பெற, அனுவங்களால் அறிவைப் பெருக்க. உடல் என்பது ஒரு கருவி. அது முடிந்தவுடன் , கருவியை தூக்கிப் போட்டுற வேண்டியதுதான்.

நாம் என்ன செய்கிறோம் ?

உடலைப் போற்றி பாதுகாக்கிறோம். அதுக்கு சோப்பு, வாசனை திரவியம், உடை என்று  அதிலேயே நம் கவனம் பூராவும்.  மரணம் வந்தால் கவலைப் படுகிறோம்.

காலத்தில் முட்டை உடைந்தால் தான், உள்ளே உள்ள உயிர் வெளியே வந்து,  வளர  முடியும். முட்டைக்குள்ளேயே இருந்தால், அந்த பறவை இறந்து விடும் அது மட்டும் அல்ல, முட்டையும் அழுகி விடும். முட்டை உடைந்து உள்ளே உள்ள பறவை  வெளியே வருவதுதான் எல்லோருக்கும் நல்லது.

அது போல, இந்த உடலை சரியான வழியில் நாம் உபயோகப் படுத்தி உள்ளே இருக்கும்  உயிர், அல்லது ஆத்மா அல்லது அதன் பெயர் என்னவோ அதை வளர்க்க வேண்டும்.

உடலைப் போற்ற வேண்டும். பாதுகாக்க வேண்டும். உதாசீனப் படுத்தக் கூடாது.  ஆனால், அது உடலுக்காக வேண்டி அல்ல. உடலுக்கு உள்ளே உள்ள உயிருக்காக.

"உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே " என்பார் திருமூலர்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

என்பது திருமந்திரம். 

உடல் என்பது முட்டை

உயிர் என்பது அந்த முட்டைக்குள் இருக்கும் பறவை குஞ்சு 

"தனித்தொழியப்" என்றார். 

பறவை குஞ்சு மீண்டும் முட்டைக்குள் போக விரும்பாது. அதை அனுப்பவும் முடியாது. அதே போல, உயிரும் ஒரு முறை உடலை விட்டு வெளியே வந்து விட்டால் மீண்டும் உடலுக்குள் போக விரும்பாது. முட்டை தனித்துத்தான் கிடக்கும். 

இந்த பிறவி என்ற சக்கரத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று தான் எல்லோரும் சொல்லி வந்திருக்கிறார்கள். 

இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமல் கா என்று உருகினார் பட்டினத்தார் 

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே-நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாழாமற் கா’

என்பது பட்டினத்தடிகள் வாக்கு.

முட்டையிலிருந்து எப்படி குஞ்சு வெளி வரும் ? தானாகவே வந்து விடுமா ? இல்லை, அதை அடை காக்க வேண்டும்.

அப்படி அடை காத்து இந்த உடலில் இருந்து உயிரை வெளிவரச் செய்து அது மீண்டும் இன்னொரு  உடலுக்குள் போகாமல் காப்பது குருவின் வேலை, ஆச்சாரியாரின்  வேலை.

என்னுடைய "வித்து மேலும் விளையாமல்" காத்தவனே என்று திருக்கழுக்குன்றில் இருக்கும் சிவனை போற்றுகிறார் மணிவாசகர்.

பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,

கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

என்பது திருவாசகம்.

முட்டைக்குள் இருக்கும் பறவைக் குஞ்சு சிறை பட்டிருக்கும். முட்டை உடைந்து  வெளியே வந்தால் வானம் வசப்படும்.

நீங்கள் முட்டைக்குள் இருந்து துன்பப் பட பிறந்தவர்கள் அல்ல. வெளியே வந்து  வானத்தை வசப்படுத்துங்கள். உடலை வளப்படுத்தி உயிரை வளருங்கள். வளர்ந்த உயிர் வானத்தை அளக்கும். நல்லதைப் படியுங்கள். நல்லவற்றை கேளுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். உடல் உங்களுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எத்தனையோ விதமான உடல்கள் கிடைத்திருக்கலாம். புல்லாக, புழுவாக, மிருகமாக, பறவையாக ,பாம்பாக என்று ஏதோ ஒன்று கிடைத்து இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால்  அந்த உடல்கள் எல்லாம் எடுத்துத் தான் இருந்தீர்கள்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

என்பார் மணிவாசகர். எத்தனையோ பிறவிகள் எடுத்து , இளைத்து இந்த மனிதப் பிறவியில் உன்னை அடைந்தேன் என்கிறார்.

நல்ல மனிதப் பிறவி கிடைத்தபின்னும் அதை சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கி விடக் கூடாது.

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

என்பது அவ்வை வாக்கு. 



அருமையான இந்த உடலைப் பெற்று ஞானம், கல்வி, தானம் , தவம் என்று நல்ல காரியங்கள் செய்யுங்கள்.

பின் மீண்டும் வராத வானவர் நாடு வழி திறக்கும்.


Thursday, December 8, 2016

நாலடியார் - நன்மையையும் தீமையும்

நாலடியார் - நன்மையையும் தீமையும் 


மனித உறவுகள் சிக்கல்கள் நிறைந்தது.

அவற்றை வெற்றிகரமாக சமாளித்து கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல.

நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நாம் செயலாற்றும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் செய்யும் காரியங்கள் அவர்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம், அல்லது தீமையாகவும் முடியலாம்.

அதே போல் அவர்கள் நமக்குச் செய்யும் காரியங்களும் அப்படியே.

இதில் சிக்கல் என்னவென்றால், நல்லவர்கள் அவர்களுக்கு நாம் ஒரு நல்லது செய்திருப்போம். பின்னாளில் ஏதாவது தீமை செய்தால் கூட, முன்னாளில் செய்த நன்மைகளை நினைத்து நம்மால் விளைந்த தீமைகளை பொறுத்து மன்னிப்பார்கள்.

ஆனால் கயவர்களோ, நாம் எவ்வளவு நன்மை செய்திருந்தாலும், ஒரு தீமை செய்து விட்டால், முன்பு செய்த அத்தனை நல்ல காரியங்களையும் தீயதாகவே பார்ப்பார்கள்.

உதாரணமாக, நண்பர் ஒருவர் தன் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ வரன் ஏதும் இருந்தால் சொல்லும்படி நம்மிடம் கேட்டு இருப்பார், நாமும் நமக்குத் தெரிந்த வரன் ஏதும் இருந்தால் சொல்லி இருப்போம். அது திருமணத்திலும் முடிந்து இருக்கும். பின்னாளில், அந்த திருமணத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால், அந்த நண்பர் நல்லவராக இருந்தால் " சரி,ஏதோ அவருக்கு தெரிந்த வரனை சொன்னார், நம் நேரம் சரி இல்லை..." என்று விட்டு விடுவார். அதுவே அந்த நண்பர் நல்லவர் இல்லை என்றால் "...நான் துன்பப் பட வேண்டும் என்றே இந்த மாதிரி  ஒரு மோசமான வரனை எனக்குச் சொல்லி இருக்கிறான்/ள் " என்று நினைப்பதோடு மட்டும் அல்லாமல், நாம் அவருக்கு முன்பு செய்த நன்மைகளையும் தீமையாகவே  கருதுவார்.

பாடல்

ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்கு
எழுநூறு நன்றி செய்து, ஒன்று தீதுஆயின்,
எழுநூறும் தீதாய்விடும்.

பொருள்

ஒரு நன்றி = ஒரு நல்லது

செய்தவர்க்கு = செய்தவர்களுக்கு

ஒன்றி எழுந்த = பின்னால் வந்த

பிழை நூறும் = நூறு பிழைகள் (தீமைகள்)

சான்றோர் பொறுப்பர்; = சான்றோர் பொறுத்துக் கொள்வார்கள்

கயவர்க்கு = கயவர்களுக்கு

எழுநூறு = 700

நன்றி செய்து = நல்லது செய்த பின்

ஒன்று தீதுஆயின் = ஒரு தீமை செய்து விட்டால்

எழுநூறும் தீதாய்விடும் = முன்பு செய்த எழு நூறையும் தீமை என்றே கருதுவார்கள்.


சரி, கயவர்கள் எப்படியோ போகட்டும். இதில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம் என்ன ?

முதலாவது பாடம், நாம் கயவர்களா ? நல்லவர்களா ? நல்லவர்கள் என்றால் மற்றவர்கள் நமக்குச்  செய்த தீமைகளை அவர்கள் நமக்குச் செய்த நல்லவற்றை நினைத்து மன்னித்து விடவேண்டும்.

இரண்டாவது பாடம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று ஆராய்ந்து பின் உதவி செய்ய வேண்டும். நாம் நல்லதே நினைத்து  உதவி செய்வோம். ஏதோ ஒரு காரணத்தால் அது சரியாக வர வில்லை என்றால்,  உதவி பெற்றவன் கயவனாக இருந்தால், நாம் இது வரை அவனுக்குச் செய்த எல்லா நன்மைகளையும் தீமையாகவே கருதி நமக்கு துன்பம் விளைவிக்க நினைப்பான்.

மூன்றாவது பாடம், மற்றவர்கள் நமக்குச் செய்யும் நன்மைகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவர்கள் நமக்கு தீமை செய்தால், முன்பு செய்த நன்மைகளை நினைத்து , தீமைகளை மன்னித்து விட வேண்டும்.

பாவத்திலேயே பெரிய பாவம் என்று வள்ளுவர் எதை கூறுகிறார் தெரியுமா ? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊருக்கு தீ வைத்தல், பொது நீர் நிலையில் நஞ்சைக் கலத்தல் , குரு நிந்தனை என்று இதை எல்லாம் பெரிய பாவமாக  கருதவில்லை. இதை எல்லாம் விட பெரிய பாவம் ஒருவன் நமக்குச் செய்த நன்றியை மறந்து விடுவது ஆகும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு 

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறந்து விடுவதைப் போல பெரிய தீமை இல்லை என்கிறார்.

எனவே, மற்றவர்கள் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து, அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மறந்து மன்னித்து வாழப் பழகுவோம்.




Wednesday, December 7, 2016

நாலடியார் - வழும்பருக்கில்லா தேரை

நாலடியார் - வழும்பருக்கில்லா தேரை 



சிலர் நிறைய புத்தகங்கள் வாசிப்பார்கள். பெரியவர்கள் பேசிய சொற்பொழிவுகளை கேட்பார்கள். அவர்கள் வீட்டுக்குப் போனால் எங்கு பார்த்தாலும் புத்தகமாய் இருக்கும். படித்தத்தில் பல மனப்பாடம் கூட ஆகி இருக்கும். பல புத்தகங்களில் இருந்து மேற் கோள் காட்டுவார்கள்.

ஆனால், நடை முறை வாழ்க்கை என்னவோ ஒன்றும் படிக்காதவன் வாழ்க்கை மாதிரித்தான் இருக்கும். "இவ்வளவு எல்லாம் படிக்கிறீர்களே , நீங்கள் செய்வதற்கும் படித்ததற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே " என்று கேட்டால் "அதெல்லாம் படிக்க நல்லா இருக்கும்...நடை முறைக்கு சாத்தியம் இல்லை.." என்று படித்ததை எல்லாம் தள்ளி வைத்து விடுவார்கள்.

இந்த தவளை இருக்கிறதே, அது குளத்தில் வாழும். குளத்தில் நல்ல தண்ணீர் தான் இருக்கும். இருந்தும், அதன் முதுகு என்னவோ அழுக்கு ஏறி வழுக்கும் படி இருக்கும். தன் உடம்பில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யத் தெரியாது. அழுக்காக அலையும்.

அது போல, நிறைய படித்தும் கேட்டும் இருந்தும், மன அழுக்கு நீங்காமல் திரிபவர்கள் பலர்.

பாடல்

செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்

தேர்கிற்கும் பெற்றி அரிது.


பொருள்

செழும்பெரும் = செழுமையான பெரிய

பொய்கையுள் = குளத்தில்

வாழினும் = வாழ்ந்தாலும்

என்றும் = என்றும்

வழும்பறுக்க = வழும்பு என்றால் அழுக்கு. அழுக்கை போக்கிக் கொள்ளாத

கில்லாவாந் தேரை:= செய்யாதாம் தேரை

வழும்பில்சீர் = குற்றம் அற்ற உயர்ந்த

நூல்கற்றக் கண்ணும் = நூல்களை கற்ற பின்னும்

நுணுக்கமொன் றில்லாதார் = நுணுக்கம் ஒன்று இல்லாதவர்கள்


தேர்கிற்கும் பெற்றி அரிது = தன்னை தேர்ச்சி கொள்ளச் செய்து கொள்ளும் வன்மை இல்லாமல் இருப்பார்கள்

இந்தப் பாடல், கயமை என்ற அதிகாரத்தில் வருகிறது.

பல படித்தும் அதை தம் வாழ்வில் கடை பிடிக்காதவர்கள் கயவர்கள்.

இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது என்ன என்றால்

"நுணுக்கமொன் றில்லாதார்"

நூலை மேலோட்டமாக படித்து விட்டு செல்பவர்கள். நுணுக்கமாக  ஆராயாதவர்கள். நூலில் சொல்லப் பட்ட உண்மைகளை, ஆழ்ந்த கருத்துக்களை  அறியாதவர்கள் தங்கள் குறைகளை போக்கிக் கொள்ள மாட்டார்கள்.

இரண்டாவது அர்த்தம்,  நுணுக்குதல் என்றால் நுண்ணியமாக வேலை செய்தல் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது, படித்தவற்றில் உள்ளவற்றை , நமது  வாழ்க்கைக்கு ஏற்றவாறு ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  அப்படியே எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது.

மூன்றாவது,

கற்க கசடு அற , கற்பவை, கற்ற பின், நிற்க அதற்குத் தக 

என்றார் வள்ளுவர். படித்தவற்றை , அப்படியே பின் பற்றக் கூடாது. அது வாழ்க்கைக்கு எப்படி  பயன்படும் என்று அறிந்து பயன்படுத்த வேண்டும்.

நான்காவது, நுணுகுதல் என்றால் கூர்மையாக்குதல் என்று பொருள். படிக்க படிக்க அறிவு கூர்மையாக வேண்டும். மேலோட்டமான அறிவு எல்லோருக்கும் இருக்கும். ஆழ்ந்த அறிவு, கூர்மையான அறிவு வளர வேண்டும்.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே " என்பார் மணிவாசகப் பெருந்தகை 


உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

என்பது திருவாசகம்

இன்றிலிருந்து ஒரு உறுதி மொழி எடுத்துக்  கொள்ளுங்கள்.

எது தேவையோ அதை மட்டுமே படிப்பது என்றும், படித்ததில் உள்ளவற்றை ஆராய்ந்து அதன்படி நடப்பது என்றும்.

படித்தபடி நடக்காவிட்டால் , படித்து என்ன பலன் ? எதைக் கேட்டாலும், இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று ஒதுக்கி விடுவதென்றால், படித்து நேரத்தை ஏன் விரயமாக்க வேண்டும் ? படிக்காமல் இருந்தால் , அந்த நேரமாவது மிச்சப்படுமே. காலத்தை வீணடிப்பானேன் ? ஏதோ பெரிய புத்தகங்களை எழுதினவர்கள் எல்லாம் நடை முறையில் நடக்கக் கூடியது எது, நடக்க முடியாதது என்று தெரியாதவர்கள் போலவும், நாம் தான் அனைத்தும் அறிந்தவர்கள் போலவும் நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும்.


ஏன் நுணுக்கமாக அறிய வேண்டும் ? புத்தி ஏன் கூர்மையாக இருக்க வேண்டும் ?

புலன்களும் புத்தியும் கூர்மையாக கூர்மையாக அவற்றிற்கு பின்னால் உள்ள உண்மை புலப்படும்.

சப்தம் வருகிறது. சங்கீத ஞானம் உள்ளவனுக்கு அதில் உள்ள இராகம், தாளம், பாவம், லயம், சுருதி எல்லாம் தெரியும். சங்கீத அறிவு இல்லாதவனுக்கு அது ஒரு சப்தம் அவ்வளவுதான். அறிவு கூர்மையாகும் போது சத்தம் சங்கீதமாகும்.

 இரைச்சலான இந்த உலகத்தின் பின்னால் இருக்கும் இனிய சங்கீதம் தெரிய வேண்டும் என்றால் , புத்தியை கூர்மை படுத்த வேண்டும்.

நுணுகி ஆராயுங்கள். உண்மை வெளிப்படும். பிரபஞ்சம் புலப்படும்.


கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா 
வெளியே, வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே! 
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!

என்று பட்டர் சொன்னது போல , உங்கள் அறிவின் அளவுக்குள் இந்த பிரபஞ்சம் வசப்படும்.






Tuesday, December 6, 2016

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும் 


குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

ஒளவை சொல்கிறாள்.

பாடல்

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்

பொருள்

தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்

தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்

சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும் 

 ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை

உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்

உடற்பிறப்பால் தோள்வலிபோம் = உடன் பிறந்த சகோதர சகோதரிகளோடு வலிமை போய் விடும்

பொற்றாலி யோடெவையும் போம் = தாலி கட்டிக் கொண்டு வந்த மனைவியோடு எவையும் போகும்.


எளிமையான பாடல் தான்.

தாயோடு அறுசுவை போம் ...குழந்தை பிறந்தது முதல் அது தன் தாய் செய்யும் உணவைத்தான் உண்கிறது.   தாயின் கை பக்குவம் தான் ஒரு குழந்தையின்  அடிப்படை  சுவை. உலகில் எவ்வளவு பெரிய சுவையான உணவு செய்தாலும், "எங்க அம்மா செய்தது போல வருமா " என்று சொல்லுவது எல்லோருக்கும் வழக்கம். காரணம், சுவை என்ற ஒன்றை அறிவதே தாயின் உணவில் இருந்துதான்.  எப்போதாவது கணவன் அவனுடைய மனைவியிடம் "எங்க அம்மா கை பக்குவம் உனக்கு இல்லை " என்று கூறினால், மனைவி கோபம் கொள்ளக் கூடாது.  மனைவி எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும், அம்மாவின்  சாப்பாட்டின் சுவை தான் அடிப்படை (base ). அதை மாற்ற முடியாது.

தந்தையோடு கல்வி போம் ... ஏன் ? பள்ளி மற்றும் கல்லூரிக்கு பணம் கட்ட தந்தை வேண்டும்,  தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக  வேண்டி இருக்கும், அதனால் கல்வி தடை படும் என்பதாலா ? இல்லை.

எவ்வளவோ வீட்டில் , தந்தை இருப்பார். அதிகமாக சம்பாதிக்க முடியாமல் இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும் படிக்க வசதி இருக்காது. அந்த மாதிரி இடத்தில், தந்தை இருந்தும் கல்வி போய் விடுகிறதே ?

அவ்வை சொன்னது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அல்ல.

தந்தை மகனுக்கு வேண்டியதைச் சொல்லித் தருவான். அனுபவ பாடங்கள். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை " என்று சொன்னது அதனால் தான். ஒரு மகனின் அல்லது மகளின்   முன்னேற்றத்தில் அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள் ? தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்த தவறுகளை, அவற்றை திருத்திய விதத்தை எல்லாம்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருவான். எனவே தான், "தந்தையோடு கல்வி போம்"


சேயோடு தான் பெற்ற செல்வம் போம் .... பிள்ளைகள் தவறி விட்டால் எவ்வளவு  செல்வம் சம்பாதித்து என்ன பயன் ? அவர்கள் இல்லை என்றால் இருக்கும் செல்வத்திற்கு  ஒரு மதிப்பு இல்லை. 

மனைவி  என்பவள் ஒருவனுக்கு அனைத்துமாகி நிற்கிறாள். தாயாக, தந்தையாக, உடன் பிறப்பாக, உறவினர்களாக,  பிள்ளையாக ...எல்லாமாகி நிற்கிறாள்.

மனைவியோடு அறுசுவை உணவு, கல்வி, வாழ்க்கை, செல்வம், உடல் வலிமை என்று எல்லாம் போய் விடும் என்கிறாள் அவ்வைப் பிராட்டி.  

மனைவியின் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரத்தில், ஒரு மனைவி எப்படி இருக்க   வேண்டும் என்றும் அவ்வை கூறுகிறாள். 

மனைவி என்பவள் ஒருவனுக்கு, தாயைப் போல அன்பு காட்டி, தகப்பனைப் போல   அறிவுரை கூறி,  உடன் பிறப்பைப் போல வலிமை கூட்டி, உறவுகளை போல  வாழ்க்கைக்கு வளம் சேர்த்து இருக்க வேண்டும். 

அப்படிப்பட்ட  மனைவி போனால், எல்லாம் போய் விடும். 

இத்தனையும் தரும் மனைவியை , ஒருவன் எப்படி கொண்டாட வேண்டும் ....

Sunday, December 4, 2016

விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு

விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு 


பொருள் கிடைப்பது கடினம்.  கிடைத்த பொருளை என்ன செய்ய வேண்டும் ? அல்லது பெரும்பாலனோர் என்ன செய்கிறார்கள் ? வீடு வாங்குவது, மனை வாங்குவது, நகை நட்டு வாங்குவது, வங்கியில் போட்டு வைப்பது என்று ஏதோ செய்கிறார்கள். தங்கத்தின் விலை கீழே போகும். வட்டி விகிதம் குறையும். சில சமயம் முதலுக்கே மோசம் ஆகும். என்ன செய்யலாம் ?


பாடல்

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பாலிடை மூழ்கிப் புறள்வர்கீர்த்தி
யருட்பாலர் மறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க ளறிவொன்றில்லார்
குருப்பாலர்க் கடவுளர்பால் வேதியர்பால்பு ரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்தீவார்.

பொருள்

பொருட்பாலை விரும்புவார்கள்  = பொருள் சேர்ப்பதை விரும்புவார்கள்

காமப்பாலிடை மூழ்கிப் = காமத்தில் மூழ்கி

புறள்வர் = புரளுவார்கள்

கீர்த்தி = புகழ்

யருட்பாலர்= அருள்தரும்

அறப்பாலைக் = அறச் செயல்களை

கனவிலுமே =  கனவில் கூட

விரும்பார்கள் = விரும்ப மாட்டார்கள்

அறிவொன்றில்லார் = அறிவில்லாதவர்கள்

குருப்பாலர்க் = நல்ல குருமார்களிடம்

கடவுளர்பால் = கடவுளிடம்

வேதியர்பால் = வேதியர்களிடம்

புரவலர்பால் = அரசனிடம்

கொடுக்கக் கோரார் = கொடுக்க நினைக்க மாட்டார்கள்

செருப்பாலே யடிப்பவர்க்கு = செருப்பால் அடிப்பவர்க்கு

விருப்பாலே = விருப்பமுடன்

கோடி = கோடி

செம்பொன் = உயர்ந்த  பொன்னை

சேவித்தீவார் = வணங்கி தருவார்கள்


பணம்  இருந்தால் முதலில் அதை வைத்து என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று  பார்க்க வேண்டும். குருவிடம் தருவது என்றால் , வித்தை கற்றுக் கொள்ள பணத்தை  செலவிட வேண்டும். வித்தை என்றால் ஏதோ பாடம் படிப்பது பட்டும் அல்ல. உடற் பயிற்சி கற்றுக்  கொள்ளுவது, நல்ல உணவு முறைகளை கற்றுக் கொள்ளுவது, ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்ளுவது, நம் ஆளுமையை (personality ) முன்னேற்றக் கற்றுக் கொள்ளுவது, குழந்தை வளர்ப்பு,  என்று பல விதங்களில் நம்மை உயர்த்திக் கொள்ள பணத்தை செலவிட வேண்டும்.

அடுத்து, கடவுளுக்கு தர வேண்டும். கடவுளுக்கு தருவது என்றால் ஏதோ கடவுள் பணம்  இல்லாமல் நம்மிடம் கையேந்தி நிற்கிறார் என்று அர்த்தம் அல்ல. தர்ம காரியங்களுக்கு செலவிட வேண்டும்.

அடுத்து, வேதியற்கு. உயர்ந்த வேதங்கள்,  தேவாரம்,திருவாசகம், பிரபந்தம்  போன்றவை யாரும்  வாசிக்காமல் , பாடாமல் நாளடைவில் தேய்ந்து நலிந்து போகும். அவை வழக்கொழிந்து போனால் மிகப் பெரிய நட்டம் நமக்கும்  நம் வருங்கால சந்ததிக்கும். அவை அப்படி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் , வேதியர்களை போற்றி, அவர்களுக்கு பொருள் கொடுத்து  காக்க வேண்டும்.

அடுத்து, செல்வாக்கு உள்ளவர்களை பரிச்சியம் செய்து கொள்ள பணம் செலவிட  வேண்டும். பெரிய இடத்தில் உள்ளவர்களின் தொடர்பு நமக்கு மிகுந்த நன்மையைத் தரும்.

அடுத்து, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காக செலுத்த வேண்டும்.

இப்படி எல்லாம் செய்யாமல் , கேளிக்கைகளில், மது, மாது என்று தீய வழிகளில்  பணத்தை செலவிட்டால், பின் தீயவர்கள் சகவாசம் ஏற்பட்டு, அவர்கள்  நம் பணத்தை நம்மிடம் இருந்து நம்மை துன்பப்  படுத்தி பிடுங்கிக் கொள்வார்கள்.

யோசித்துப் பாருங்கள், உங்கள் வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று.

சம்பாதிப்பது மட்டும் அல்ல , சரியான வழியில் செலவழிப்பதும் ஒரு கலை.

அதையும் கற்றுக்  கொள்ளுங்கள்.

விவேக சிந்தாமணி உங்களை அந்த திசையில் சிந்திக்க தூண்டுகிறது.

சிந்தியுங்கள்.


திருக்குறள் - பரத்த நின் மார்பு

திருக்குறள் - பரத்த நின் மார்பு 


புலவி என்றால் பொய் கோபம். ஊடல். புலவி நுணுக்கம் என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். எப்படி மிக நுணுக்கமாக பெண்கள் ஒன்றை கண்டு பிடித்து கணவனோடு சண்டை போடுவார்கள் என்று சொல்ல வருகிறார். காதலில் அதுவும் ஒரு பகுதிதான்.

பாடல்

பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பொருள்

பெண்ணியலா ரெல்லாரும் = பெண் இயல்பு கொண்ட எல்லாரும்

கண்ணிற் = கண்ணால்

பொதுவுண்பர் = பொதுவாக உண்பார்கள், அல்லது இரசிப்பார்கள்

நண்ணேன் = பொருந்த மாட்டேன்

பரத்தநின் = பரத்தன்மை கொண்டவனான உன்

மார்பு = மார்பை

பெண் இயல்பு கொண்ட எல்லோரும் உன் மார்பை இரசிக்கிறார்கள். எனவே நான் உன்னை கட்டி பிடிக்க மாட்டேன் என்கிறாள் தலைவி.

பாடல் என்னவோ அவ்வளவுதான்.

அதில் உள்ள நுணுக்கம் எவ்வளவு தெரியுமா ? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பரத்த = ஒரு பெண் தவறான வழியில் வாழ்க்கை நடத்தினால் அவளை பரத்தை என்று  இந்த சமூகம் கூறுகிறது. அந்த வழியில் செல்லும் ஆணுக்கு ஒரு பெயரும் இல்லையா ?  வள்ளுவர் சொல்கிறார், அப்படி செல்பவனுக்குப் பெயர் "பரத்தன்".  நாலு பெண்களிடம் சென்று வருபவனுக்கு பரத்தன் என்று பெயர் தருகிறார்  வள்ளுவர்.


பெண்ணியலா ரெல்லாரும் = பெண்கள் எல்லாரும் என்று சொல்லவில்லை. பெண் இயல்பு  கொண்ட எல்லாரும். அப்படி என்றால் என்ன அர்த்தம் ?  பெண்களுக்கு  கற்பு, நாணம் போன்ற நல்ல குணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு  பெண் வடிவம், ஆணோடு சேரும் இயல்பு மட்டும் கொண்ட பெண்களை  பெண் இயல்பு கொண்டவர்கள் என்கிறார். பெண்கள் எல்லோரும் என்று  சொல்லி இருந்தால் அது சரியாக இருக்குமா ? இருக்காது.  தன் கணவனை தவிர   வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காத பெண்கள் இருப்பார்கள்  அல்லவா ? எனவே, பெண்கள் எல்லாரும் என்று சொல்ல முடியாது.

கண்ணிற் பொதுவுண்பர் = கண்ணால் பொதுவாக இரசிப்பார்கள் . பெண்களுக்கு  அவர்களுடைய கணவன் பெரிய ஆள் என்று மற்றவர்கள் போற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அதே சமயம் , தன் கணவனை தான் மட்டுமே இரசிக்க வேண்டும் என்ற  தன்னுடைமை உணர்வும் இருக்கும். கணவனை இன்னொரு பெண்  நெருங்குவதை எந்த பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டாள். இங்கே , தலைவி சொல்கிறாள், பெண் இயல்பு கொண்ட பெண்கள் கண்களால் பொதுவாக  பார்த்து இரசித்தார்களாம். அருகில் வரவில்லை. தொடவில்லை. கண்களால்  இரசித்தார்கள் . அவ்வளவுதான்.

பொது உண்பர் - ஒரு அழகான பெண் தெருவில் சென்றால் ஆண்கள் அவளை உன்னிப்பாக  கவனிப்பார்கள். அவள் அழகை வைத்த கண் வாங்காமல் ரசிப்பார்கள். பெண்களுக்கும் ஆண்கள் மேல் ஒரு கவர்ச்சி உண்டு. ஆனால், அவர்கள்  கூர்ந்து நோக்குவது இல்லை. அப்படி லேசாக கடை கண்ணால், அல்லது  கண் பார்வையை மேலோட்டமாக பார்ப்பது என்று உண்டு. ஆங்கிலத்தில்  tunnel vission , peripheral vision என்று  சொல்லுவார்கள்.

ஆண்களுக்கு வீட்டில் ஒரு பொருள் அந்த இடத்தில் இல்லை என்றால் தவித்துப் போவார்கள். கொஞ்சம் பக்கத்தில் இருக்கும். அது அவர்கள் கண்ணில் படாது. மனைவி வந்து "இங்க தான இருக்கு " என்று எடுத்து கையில் கொடுத்தால் அசடு வழிவார்கள். காரணம், அவர்கள் பார்வை ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டுமே பார்க்கும். அக்கம் பக்கம் பார்க்காது.

ஆனால் பெண்கள் பார்வை அப்படி அல்ல. சுத்து வட்டாரத்தை ஒரு அலசு அலசும். எனவேதான் பெண்கள் வேகமான வாகனங்களை ஓட்ட சற்று சிரமப் படுவார்கள்.  பார்வை நேரே சாலையில் மட்டும் இருப்பது இல்லை. அப்படியே அலசிக் கொண்டிருக்கும்.

இதை அறிந்த வள்ளுவர், "பொதுப் பார்வை" என்றார்.

நண்ணேன் = விரும்ப மாட்டேன், பொருந்த மாட்டேன். கட்டி அணைக்க மாட்டேன் என்கிறாள். அவனை அனைத்துக் கொள்ள ஆசைதான். இருந்தும், கூச்சம். எல்லாரும் பார்த்த மார்பு இது. எப்படியெல்லாம் பார்த்து இருப்பார்கள். சீ,  இப்படி எல்லோரும் பார்த்த மார்பை நான் எப்படி அணைப்பேன் என்று தள்ளி நிற்கிறாள்.

இதில் குறிப்பாக பார்க்க வேண்டியது என்ன என்றால்,  கணவன் மேல் தவறு இல்லை. மத்த பெண்கள் பார்த்தார்கள். அதற்கு அவன் என்ன செய்வான். அவன்  அழகாக இருக்கிறான் என்ற பெருமை அவளுக்கு. அவனை எல்லோரும் இரசிக்கிறார்கள் என்ற பெருமிதம் அவளுக்கு. இருந்தும், அவன் யாரையும்  பார்க்கவில்லை. என்னை மட்டுமே விரும்புகிறான் என்ற காதல் எண்ணம் அவளுக்கு.

ஆணின் ஆளுமையை படம் பிடிக்கிறார்.

பெண்ணின் காதலை படம் பிடிக்கிறார்.

மற்ற பெண்கள் பார்த்ததற்கே ஊடல் கொள்ளும் உன் மனைவி, நீ நிஜமாகவே அந்த பெண்கள் பின்னால்  போனால் எவ்வளவு வருந்துவாள் என்று சொல்லாமல் சொல்கிறார்.

அப்படி செய்தால் , உன் மனைவியின் உண்மையான காதலை இழப்பாய் என்று  கணவனுக்கு இரகசியமாக சொல்கிறார்.

காமத்துப் பாலிலும் அறம் சொல்லிச் செல்கிறார்.