Monday, May 29, 2017

இராமாயணம் - கவிதையும் ஆறும்

இராமாயணம் - கவிதையும் ஆறும் 


கவிதை என்பது ஒரு ஆறு போல இருக்க வேண்டும் என்கிறார் கம்பர்.

இன்று யார் யாரோ கவிதை எழுதுகிறார்கள்.  கவிதை எழுத முதல் தகுதி காதல் தோல்வி என்று வைத்திருக்கிறார்கள்.

எப்படி ஆறு இருக்கிறதோ அது போல கவிதை இருக்க வேண்டும் என்கிறார்.

ஆறு எப்படி இருக்கும் ?

பாடல்

புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

பொருள்


புவியினுக்கு அணியாய் = நிலமகள் கழுத்தில் கிடக்கும் ஒரு சங்கிலி போல, இடுப்பில் உள்ள ஒரு ஒட்டியாணம் போல அணிகலனாக

ஆன்ற பொருள்தந்து = வரும் வழியில் உள்ள நல்ல பொருள்களை எல்லாம் ஏந்தி கொண்டு வந்து

புலத்திற்றாகி = புலன்களையும் தாண்டி மகிழ்ச்சி தருவதை போல

அவி அகத் துறைகள் தாங்கி =  மனதுக்கு குளிர்ச்சி தந்து

ஐந்திணை நெறி அளாவி = ஐந்து திணைகளையும் தொட்டுக் கொண்டு

சவி உறத் தெளிந்து = தெளிந்த நீரோடையாக

தண்ணென்று = குளிர்ந்து

ஒழுக்கமும் தழுவிச் = கரைகளுக்குள், ஒரு கட்டுப்பாட்டோடு

சான்றோர் கவி எனக் = பெரியவர்கள் சொன்ன கவிதை போல

கிடந்த = சென்ற

கோதாவரியினை = கோதாவரி  ஆற்றினை

வீரர் கண்டார் = வீரர்களான இராமனும் இலக்குவனும் கண்டார்கள்

அவ்வளவுதானா ?

ஆழ்ந்து சிந்திப்போமா ?

ஆற்றினை பார்த்து இருக்கிறீர்களா ?

அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும். இரண்டு அடி எடுத்து வைத்தால் சில் என்று இருக்கும். கரையில் ஆழம் இல்லை என்று இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், திடீரென்று ஆழமாக இருக்கும். இழுத்து விடும்.  நதியின் ஆழம் எவ்வளவு என்று  மேல் இருந்து பார்த்து சொல்ல முடியாது.

சில கவிதைகள் அப்படித்தான். பார்க்க ஏதோ மேலோட்டமாக சாதாரண கவிதை போல இருக்கும். உள்ளே போக போக இழுத்துக் கொண்டே போகும். அவ்வளவு  பொருள் ஆழம் இருக்கும்.

ஆறு மலையில் இருந்து வரும் போது வரும் வழியில் உள்ள பல மலர்கள் அதன் மேல் விழும். அத்தனை மலர்களையும் சுமந்து வரும். சந்தனம் போன்ற  மரத்தை உரசிக் கொண்டு வருவதால் அந்த மணமும் சேர்ந்து இருக்கும்.

தள்ளி நின்று பார்த்தால் மிதக்கும் பூ தெரியும். நீரில் இறங்கினால் தான் மணம் புரியும்.

கவிதையும் அப்படித்தான். சும்மா வாசித்துக் கொண்டு போனால் ஏதோ அழகு தெரியும். உள்ளே இறங்கி அனுபவிக்கும் போது தான் அதன் மணம் புரியும்.

"புவியினுக்கு அணியாய்"  ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் ஆறு ஏதோ  ஒரு அணிகலன் போல வளைந்து நெளிந்து மின்னும்.

அது போல கவிதை என்பது வாழ்க்கைக்கு ஒரு அணிகலன் போல அழகு சேர்க்க வேண்டும்.


"புலத்திற்றாகி" - புலத்து + இற்று + ஆகி

புலன்களை கடந்து செல்ல வேண்டும். ஏதோ கிளர்ச்சிக்கு மட்டும் பாடல் இருக்கக் கூடாது. ஆற்றில் குளித்தால் புலன்களுக்கு இன்பம் தருவது மட்டும் அல்ல, ஒரு மன நிறைவும் இருக்கும். அது போல ஒரு பாடலைப் படித்தால் மன நிறைவு இருக்க வேண்டும்.

"அகத் துறைகள் தாங்கி" - ஆறு என்பது உயிர் வாழ உதவுகிறது.  உணவு அளிக்கிறது.  ஆறு எப்படி உயிரை தாங்கிப் பிடிக்கிறதோ, அது போல கவிதையும் உள் மனதை தாங்கிப் பிடிக்க வேண்டும். .துக்கம் வந்த நேரத்தில், சோகம் வரும் போது , மனம் சோர்வு அடையும் போது அதை தாங்கிப் பிடிக்க வேண்டும்.  நல்ல கவிதை என்பது மனதுக்கு ஆறுதல் தரும். அகத்துறை என்பது ஆண் பெண் சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கை. அதை தாங்கிப் பிடிக்க வேண்டும். துறை என்றால் கரை என்றும் பொருள்.

ஐந்திணை நெறி அளாவி = ஆறு மலை, காடு, நிலம், கடல் என்று பாய்ந்து ஓடுகிறது. ஒவ்வொரு திணைக்கும் ஒரு ஒழுக்கம் உண்டு. மனித வாழ்வின் ஒழுக்கம் அவன் இருக்கும் இடத்தைப் பொறுத்து அமைகிறது. கவிதை எல்லா வாழ்க்கை முறைகளையும் தொட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.


ஆறு கடைசியில் கடலைப் போய் சேரும். அது போல நல்ல கவிதையும் ஒரு ப்ரமாண்டத்ததில் கலக்க வேண்டும். உண்மை, அழகு, அறம் , ஒழுக்கம் , கடவுள் , மனித நேயம் , காதல் என்று அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்மை விட பெரிய ஒன்றில் அது நம்மை கொண்டு சேர்க்க வேண்டும்.

சான்றோர் கவி என கிடந்த கோதாவரி என்கிறான் கம்பன்.

ஒரு கவிதையை படித்தால் இதில் உள்ளவை எத்தனை அதில் இருக்கிறது என்று பாருங்கள்.

அழகு
பொருள் செறிவு
மன நிறைவு
மன அமைதி
ஒழுக்கம், வாழ்க்கை நெறி

இதெல்லாம் கலந்திருக்க வேண்டும்.

இன்றும் வரும் புதுக் கவிதைகளையும், சினிமா பாடல்களையும் படிக்கம் போது  , நல்ல கவிதைக்கு மனம் ஏங்கத்தான் செய்கிறது.

நல்ல கவிதைகளை தேடிப் பிடித்து படியுங்கள்.


Saturday, May 27, 2017

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்


வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் , அந்தப் பெற்றோருக்குத் தெரியும்....

என்னைக்கும் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போகிறவள் தானே, இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும் என்று அந்த பெண் பிள்ளைக்கு கொஞ்சம் அதிகமாகவே அன்பு காட்டுவார்கள். அதிலும் அப்பாக்கள் ரொம்பத் தான் செல்லம் கொடுப்பார்கள்.

ஒரு பக்கம் செல்லம் கொடுத்தாலும், அம்மாவுக்கு கொஞ்சம் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

போகிற இடத்தில் இந்த பெண் எப்படி சமாளிக்கப் போகிறாளோ ?  போகிற இடத்தில் இந்த சௌகரியம் எல்லாம் இருக்குமா ? இவ்வளவு சுதந்திரம் இருக்குமா ?  என்றெல்லாம் கவலைப் படுவாள். அதற்காக இப்போது இருந்தே அந்த பெண்ணை கஷ்டப் படுத்த வேண்டுமா ? அதுவும் முடியாது.

இப்போது உள்ள அம்மாக்களுக்கு இன்னொரு சிக்கலும் உண்டு. இந்த பெண் எப்படி விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிப்பாள் ? பிடித்த உணவு கிடைக்குமா ? எப்படி துணி துவைப்பாள் ? வேலைக்குப் போகிற இடத்தில் எங்கு தங்குவாள் ? எப்படி இந்த உலகை எதிர் கொள்ளுவாள் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.

இந்த கவலை இன்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே இருக்கிறது.

செல்லமாக வளர்ந்த ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீடு போகிறாள்.

போன இடம் அவ்வளவு பெரிய இடம் இல்லை. அவளின் பிறந்த வீடோ பெரிய பணக்கார வீடு. பால் சோறு தான், தங்கக் கிண்ணம் தான், பெரிய வீடு, வீட்டை அடுத்த தோட்டம் , தோட்டத்தில் மல்லிகையும், முல்லையும் பூத்து குலுங்குகிறது.

போன இடத்தில் சரியான சாப்பாடு கூட கிடையாது.

கட்டிக் கொடுத்த பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வர செவிலித் தாய் போகிறாள்.

அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

இந்தப் பெண் நம் வீட்டில் இருக்கும் போது தேனும் பாலும் கலந்த உணவை பொற் கிண்ணத்தில் ஏந்தி சாப்பிடு சாப்பிடு என்று பூ சுற்றிய குச்சியை வைத்து அவளை விரட்டிக் கொண்டு சென்றோம், பொற் சிலம்பு ஒலிக்க அங்கும் இங்கும்  பூ பந்தலுக்கு கீழே ஓடுவாள். சரியான விளையாட்டுப் பெண்ணாக இருந்தாள் . நீரோடும் இடத்தில் பரல் கற்கள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நீர் சோறுதான் இருக்கிறது. அது கூட மூன்று  வேளையும் இல்லை. ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்கிறாள். அப்போது கூட தந்தை வீட்டில் இருந்த செல்வச் செழுமையை நினைத்து வருந்தவில்லை. இந்த அறிவையும், கற்பையும் இவள் எங்கு கற்றுக் கொண்டாள் என்று அந்த செவிலித் தாய் வியக்கிறாள். பாடல்
   


பாடல்

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று 5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என 10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

பொருள்

பிரசம் கலந்த = தேன் கலந்த

வெண் சுவை = சிறந்த சுவை உடைய

தீம் பால்  = சிறந்த பாலினால் செய்த உணவை

விரி கதிர் = ஒளி விடும்

பொன் கலத்து = பொன்னால் செய்த ஒரு பாத்திரத்தில்

ஒரு கை ஏந்தி = ஒரு கையில் ஏந்திக் கொண்டு

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் = ஒரு சிறிய குச்சியில், பூவை சுற்றி, அவளை அந்த கோலால் அடிப்பது போல விரட்டி

உண் என்று = சாப்பிடு என்று மிரட்டி

ஓக்குபு பிழைப்ப = ஓங்கி கொண்டு சென்றாலும், தப்பி ஓடிய அவள்

தெண் நீர் = தெளிந்த நீர் போல

முத்து அரி = முத்துக்கள் கொண்ட

பொன் சிலம்பு ஒலிப்ப = பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு ஒலிக்க  

தத்து_உற்று = தத்தி தத்தி ஓடி

அரி நரை கூந்தல் = அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த கூந்தல்

செம் முது செவிலியர் = சிறந்த செவிலித்தாயார்

பரி மெலிந்து ஒழிய = பற்ற முடியாமல் 

பந்தர் ஓடி = பந்தலின் கீழ் ஓடி

ஏவல் மறுக்கும் = சொன்னதைக் கேட்க மறுக்கும்

சிறு விளையாட்டி = விளையாட்டுப் பெண்

அறிவும் ஒழுக்கமும் = அறிவும் ஒழுக்கமும்

யாண்டு உணர்ந்தனள்-கொல்  = எப்போது பெற்றாள்

கொண்ட கொழுநன் = கொண்ட கணவன்

குடி வறன்_உற்று என = குடும்பம் வறுமையில் உள்ள போது

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் = தன் தந்தை வீட்டில் கிடைத்த சிறந்த உணவினை நினைக்க மாட்டாள்

ஒழுகு நீர்= ஆற்றில் செல்லும் நீரில் (ஒழுங்கு நீர் = ஒழுங்காக செல்லும் நீர்)

நுணங்கு அறல் போல = மெல்லிய சிறு சிறு கூழான் கற்களைப் போல

பொழுது மறுத்து உண்ணும்  = ஒரு வேளை விட்டு மறு வேளை உண்ணும்

சிறு மதுகையளே =சிறிய இனிய    கைகளைக் கொண்டவளே


பெண்ணைப் பெற்ற அம்மாக்களே, கவலைப் படாதீர்கள். உங்கள் பெண்  எந்த சிக்கலையும் எதிர் கொண்டு சமாளிப்பாள். நீங்கள் சமாளிக்கவில்லையா ? வழி வழியாக இப்படித்தானே செய்து கொண்டு  வந்து இருக்கிறீர்கள். கவலைப் படாதீர்கள். விளையாட்டுப் பெண்ணாக இருக்கும் உங்கள் மகள் , அது விடுதியாக இருந்தாலும் சரி, வேலைக்குப் போகும் இடமாக இருந்தாலும் சரி, புகுந்த வீடாக இருந்தாலும் சரி  , நல்ல படி எதிர் கொண்டு சமாளிப்பாள்.

ஐயோ, நான் அவளுக்கு ஒண்ணுமே சொல்லித் தரவில்லையே என்று பயப்படாதீர்கள். 

இந்தப் பாடலில் செவிலி வியக்கிறாள் - அறிவும்,  ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்  என்று.

எப்படி இவற்றை படித்துக் கொண்டாள் ? யார் இவளுக்குச் சொல்லித் தந்தார்கள் ? நானோ அவளின் தாயோ சொல்லித் தரவில்லை. தானே கற்றுக் கொண்டு விட்டாளே என்று வியக்கிறாள்.

அது தான் பெண்.

மகா சக்தி.  அவள் அனைத்தும் நடத்துவாள். கவலையை விடுங்கள். 

Thursday, May 25, 2017

திருக்குறள் - அமிழ்தின் இயன்றன தோள்

திருக்குறள் - அமிழ்தின் இயன்றன தோள் 


வெயில் காலத்தில் செடிகள் எல்லாம் வாடி நிற்பதை பார்க்கலாம். மாலை நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால் அவை சிலிர்த்து கொண்டு தள தள என்று பச்சை பசேல் என்று ஒரு புத்துணர்ச்சியோடு சிரிப்பது போல இருக்கும். செடிக்கு நீர் வார்த்தவர்களுக்குத் தெரியும் அது.

கணவன் எப்போதெல்லாம் தளர்ந்து, சோர்ந்து போய் இருக்கிறானோ, அப்போது அவன் புத்துணர்ச்சி பெற அவனுடைய மனைவியின் தோள்களே அமிழ்தம் போன்றது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான், பேதைக்கு
அமிழ்தின் இயன்றன, தோள்.

பொருள்

உறுதோறு = உறு + தோறும் = சேரும் போது எல்லாம்

உயிர்  = உயிரானது

தளிர்ப்பத் = தளிர்க, துளிர்க்க

தீண்டலான் = தீண்டுவதால்

பேதைக்கு = எங்கே பெண்ணுக்கு , மனைவிக்கு

அமிழ்தின் = அமிழ்தில்

இயன்றன = செய்யப்பட்ட

தோள் = தோள்


காமத்துப் பால் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை சொல்ல வந்த பகுதி. ஒரு எல்லைக்கு மேல் விவரித்தால் விரசத்தின்  எல்லைக்குள் போய் விடும்.  அதற்காக சொல்லாமலும் விட முடியாது. கத்தி மேல் நடப்பது போன்ற காரியம்.

வள்ளுவரின் காமத்துப் பாலை ஒரு தந்தையும் மகளும் ஒன்றாகப் படிக்கலாம். தாயும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்லித் தரலாம்.

படிக்கும் போது இன்பம் தரும். ஆனால், விரசம் என்பது ஒரு துளியும் இருக்காது.

"தளிர்ப்ப" என்ற ஒரு சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தங்களை வைக்கிறார் வள்ளுவர் என்று பார்ப்போம்.

செடி வாடும். நீர் வார்த்தால் தளிர்க்கும். அதற்காக இருக்கிற நீரை எல்லாம் ஒரே நாளில்  ஊற்றி விட்டு, நீ பார்த்து வளர்ந்து கொள் என்று சொல்ல முடியாது. நிதமும் கொஞ்சம் கொஞ்சம் நீர் வார்க்க வேண்டும். மனைவியின் அன்பும் அப்படித்தான். ஏதோ ஒரு நாள் சந்தோஷமாக இருந்தால் போதாது. நாளும் நீர் வார்ப்பது போல அது எப்போதும் வேண்டும்.

தளிர்த்தல் என்றால் புத்துணர்ச்சி பெறுதல் மட்டும் அல்ல. நீர் வார்த்தால், வேரின் மூலம் சத்துகளை உறிஞ்சி அந்த செடியை உரம் கொள்ளச் செய்யும். வலிமை கொள்ளச் செய்யும். செடி வளர்ந்து , மரமாகி, நிழல் தரும், காய் கனிகளை தரும். அது போல, மனைவியின் அன்பானது கணவன் வலிமை பெற உதவும். அவன் உயர்ந்து வீட்டையும், நாட்டையும் காக்க பயன் படுவான்.

நீரை வேருக்கு மட்டும் ஊற்றினால் போதும். ஆனால், செடியின் இலையின் மேல் தெளித்தால்  அது சிலிர்த்து புத்துணர்ச்சி பெரும். அது போல அன்பு என்பது ஏதோ கடைமைக்கு இருக்கக் கூடாது. செலுத்தும் அன்பினால் கணவன் முகம் மலர வேண்டும்.

உறு தோறும் என்கிறார் வள்ளுவர். ஒவ்வொரு முறை அணைக்கும் போதும் புத்துணர்ச்சி தருமாம். தவிர்க்க வைக்குமாம்.

மனைவி என்பவை அமுதுக்கு ஒப்பானவள் என்று கணவன் நினைக்க வேண்டும்.

அமுதம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க மனைவியும் முயற்சி செய்ய வேண்டும். அமிலம் போல, சுடு நீர் போல இருக்கக் கூடாது. சுடு நீரில் செடி தளைக்குமா ?


அமிழ்து என்பது உயிரையும் உடலையும் இணைப்பது. எப்போதும் இளமையோடு வைப்பது. மனைவியின் தோள்கள்  அமுதத்தால் செய்யப்பட்டது என்கிறார் வள்ளுவர்.

சரி, அது என்ன "தோள் " என்று சொல்கிறார். தோள்கள் என்றல்லவா இருந்திருக்க வேண்டும். ஒரு தோள் மட்டும் எப்படி அமுதில் செய்யப்பட்டதாக இருக்கும் ?

இங்கு கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று தமிழ் இலக்கணத்தில் ஒன்று உண்டு.

என்ன இது ஏதோ வேற்று மொழிப் பெயர் மாதிரி இருக்கிறதா ?

தமிழில் பெயர் சொற்களை உயர் திணை , அஃறிணை என்று இரண்டாக பிரிப்பார்கள்.

பெயர் சொல்லின் இறுதி (விகுதி) பொதுவாக பால் எது என்று காட்டும்.

அவன் என்றால் அதில் உள்ள இறுதிச் சொல் 'ன்' அது அது ஆண் பால் ஒருமை என்று காட்டும்.

அவள் என்றால் பெண்பால் ஒருமை

ஒருமையா பன்மையா, ஆண்பாலா பெண்பாலா எ ன்று உயர் திணையில் அறிய வாய்ப்பு உள்ளது.

ஆனால், அஃறிணையில் அப்படி இல்லை.

அஃறிணை சொற்கள் பால் எது என்று காட்டாது.

பாலை பகராத சொற்கள் அவை.

உதாரணமாக

ஆடு வந்தது என்றால் ஒருமை
ஆடு வந்தன என்றால் பன்மை

அது ஆடு என்றால் ஒருமை
அவை ஆடு என்றால் பன்மை

வினை மற்றும் அதற்கு தொடர்புடைய சொல்லால் அவற்றின் பாலை (ஒன்றன் பாலா, பலவின் பாலா ) என்று அறிந்து கொள்ள முடியும்.

அது போல, தோள் என்பது பால் பகா அஃறிணை சொல். ஒரு தோளை மட்டும் அணைக்க முடியாது அல்லவா, அதனால் அவை தோள்கள் என்று அறியப் படும்.


















இராமாயணம் - மீண்டு அரசு செய்க

இராமாயணம் - மீண்டு அரசு செய்க 


கானகத்தில் உள்ள இராமனை காண வந்த பரதன், தயரதன் இறந்த செய்தியை கூறுகிறான். பின், "நீ வந்து ஆட்சியை ஏற்றுக் கொள் " என்று இராமனிடம் கூறுகிறான்.

"உன் தந்தையான தசரதன் செய்த தீமையும், தாயாகிய கைகேயி செய்த தீமையும் நீங்க , என் தந்தை போன்றவனே , நீ மீண்டு வந்து ஆட்சி செய் " என்று கூறுகிறான்.


பாடல்

‘உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்
எந்தை! நீங்க மீண்டு அரசு செய்க ‘எனாச்
சிந்தை யாவதும் தெரியக் கூறினான்.

பொருள்

‘உந்தை = உன் தந்தை (தயரதன்)

தீமையும் = செய்த தீமையும்

உலகு உறாத நோய் =உலகு இது வரை பெறாத நோய்

தந்த = தந்த

தீவினைத் = தீய வினை

தாய் செய் தீமையும் =தாயாகிய கைகேயி செய்த தீமையும்

எந்தை! = என் தந்தை போன்றவனே

நீங்க  = அந்த துன்பங்கள் நீங்க

மீண்டு அரசு செய்க = இந்த கானகத்தில் இருந்து மீண்டு வந்து அரசை ஏற்று நடத்து

‘எனாச் = என்று

சிந்தை யாவதும் = சிந்தை முழுவதும்

தெரியக் கூறினான் = அறியும்படி கூறினான்


தயரதனை , "உன் தந்தை என்கிறான்" .  ஏன் என்றால், தயரதன் பரதனை தன் மகன் அல்ல என்று சொல்லி விட்டு இறந்தான். எனவே, தயரதனை தன் தந்தை என்று பரதன்  கூறவில்லை.

இராமனை , தந்தை இடத்தில் வைத்துப் பார்க்கிறான்.

தந்தையும் , தாயும் செய்தது தீமை, தீவினை என்கிறான்.

இங்கு நாம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று,  பெரியவர்கள் சொன்னால் அப்படியே  கேட்க வேண்டியது என்று ஒரு முறை வைத்திருக்கிறோம்.  

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

என்று பெற்றோர் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பது என்று ஒரு கொள்கை  வைத்து இருக்கிறோம்.

இராமன் அந்தப் பாதையில் தான் செல்கிறான்.

ஆனால், பரதன் அதில் இருந்து விலகுகிறான் .

அறம் அல்லாத ஒன்றை யார் செய்தாலும் அது தவறுதான் என்பது அவன் கொள்கை.

அறத்தின் முன், தாய், தந்தை, என்று யாரும் கிடையாது.

"உந்தை தீமையும்...தாய் செய் தீமையும்"  என்று அவர்கள் இருவரும் செய்தது பெரிய தீமை என்கிறான்.

இராமா, நீ அரசை ஏற்றுக் கொள்ளா விட்டால், அந்த தீமை தொடரும் என்ற குறிப்பில், "தாய் செய் தீமை" என்கிறான்.

செய் தீமை - வினைத் தொகை. செய்த தீமை, செய்கின்ற தீமை , செய்யும் தீமை.

அந்தத் தீமை விலக வேண்டும் என்றால், நீ மீண்டு வந்து ஆட்சி செய் என்று இராமனை அழைக்கிறான்.

யார் செய்வது சரி ?

பெற்றோர் பேச்சை கேட்ட இராமன் செய்வதா ?

யார் சொன்னால் என்ன, அறம் தான் முக்கியம் என்று செயல்படும் பரதன் செயலா ?

யோசித்துக் கொண்டிருங்கள். கம்பன் கடைசியில் தீர்வு தருகிறான்.

அது என்ன என்று வரும் நாட்களில் பார்ப்போம். 

Wednesday, May 24, 2017

திருக்குறள் - அகர முதல் எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல் எழுத்து எல்லாம் 



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

முதற்றே உலகு என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்து எப்படி பொருள் தந்தது என்று நேற்றைய பிளாகில் பார்த்தோம்.

ஆதி பகவன் என்றால் என்ன என்று இன்று சிந்திப்போம்.

அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.

முதலில் ஒலி வடிவம்.

பின் ஒலியைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள்.

முதலில் எழுத்து.

எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.

சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.

மற்றவற்றை  விடுவோம். சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாவதைப் பற்றி சிந்திப்போம்.

இரண்டு சொற்களை சேர்க்க சில விதி முறைகள், இலக்கணங்கள் உண்டு.

வீடு காட்டும் போது இரண்டு செங்கலை வைத்தால் அவை தானாக ஒட்டிக் கொள்ளாது. அதை சேர்த்து வைக்க சிமெண்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு கலவை வேண்டும். அப்போது தான் அது விழுந்து விடாமல் உறுதியாக இருக்கும்.

அது போல

இரண்டு வார்த்தைகளை சேர்க்கும் சிமென்டுக்கு தொகைமொழி என்று பெயர்.

தொகுக்கும் மொழி தொகை மொழி.

புரிகிறது அல்லவா ?

தமிழிலே ஆறு வகையான தொகை மொழிகள் இருக்கின்றன.

1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை

இதில் நாம் பண்புத் தொகையை மட்டும் பார்ப்போம் .

ஒரு பொருளை அல்லது செயலை மேலும் விளக்கி கூறுவது பண்புத் தொகை.

உதாரணமாக

பச்சை இலை  என்றால் இலையின் நிறம் பச்சை என்று இலையைப் பற்றி மேலும் விலக்கிக் கூறுகிறது.

உயர்ந்த மரம்

கரிய மலை

இவை எல்லாம் பண்புத் தொகைகள்.

இதில் உள்ள பச்சை, உயர்ந்த, கருப்பு என்பவை பண்புப் பெயர்கள்.

சில சமயம் பண்புப் பெயருக்கு பதிலாக இன்னோர் பெயர்ச் சொல் வரும்.

தாமரைப் பூ
தென்னை மரம்
நாகப் பாம்பு

என்பனவற்றில் தாமரை என்ற சொல் பூவைப் பற்றி மேலும் விளக்குகிறது.

வெறும் மரம் என்று சொன்னால் என்ன மரம் என்ற கேள்வி வரும். அதை விளக்குவது தென்னை என்ற சொல். இங்கே தென்னை என்ற சொல் மரத்தின் பண்பை குறிக்கிறது. தென்னை என்பது பண்புப் பெயர் அல்ல. இருந்தும் அது பண்புப் பெயரின் வேலையைச் செய்கிறது அல்லவா.

இதற்கு இரு பெயரொட்டு பண்புத் தொகை என்று பெயர்.

இரண்டு பெயர்கள் சேர்ந்து வந்து, அதில் ஒன்று மற்றொன்றின் பண்பைக் குறிப்பது.

இருபெயரொட்டு பண்புத் தொகையை பிரிக்கக் கூடாது. அவற்றை சேர்த்தே படிக்க வேண்டும்.

சரி, அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?

ஆதி பகவன் என்ற சொல்லில், பகவன் என்றாலே ஆதியில் இருந்து இருப்பவன் தான். ஆதி என்றாலே அது இறைவனைத் தான் குறிக்கும்.

ஆதி மூலமே  என்ற அந்த யானை அழைத்தது நினைவு இருக்கிறது அல்லவா.

ஆதி பகவன் என்பது இரு பெயரொட்டு பண்புத் தொகை.

இரண்டும் ஒன்றையே குறிப்பது.

பகவன் என்றால் வேறு ய யாரையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. பலப் பல சமயங்கள் பின் நாளில் தோன்றலாம். ஒவ்வொரு சமயமும் புதுப் புது கடவுள்களை பற்றிக் கூறலாம்.

அவையெல்லாம் கருத்தில் கொள்ளக் கூடாது.

ஆதி பகவன் எவனோ அவனே உலகுக்கு முதல்.

இரு பெயரொட்டு பண்புத் தொகை பற்றி அறிந்தால் இந்த குறளை மேலும் நாம் இரசிக்க முடியும்.

இலக்கியத்தை ஆழ்ந்து அறிய இலக்கணம் அவசியம். 

Tuesday, May 23, 2017

திருக்குறள் - அகர முதல எழுத்தெல்லாம்

திருக்குறள் - அகர முதல எழுத்தெல்லாம் 


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

என்ற குறளில் , எப்படி அகரம் மொழிக்கெல்லாம் முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்று நேற்றைய பிளாகில் (blog ) பார்த்தோம்.

இறைவன் முதல் என்றால் யார் அவனை முதலாக நியமித்தது ? அவன் மட்டும் தான் முதல்வனா அல்லது இந்த உலகம் தோன்ற மற்ற காரணங்களும் உண்டா ? இறைவனும் முதல் , அவன் கூட மற்ற ஏதாவது முதலாக இருக்குமா ? சொல்லும் போது தெளிவாக சொல்ல வேண்டும் அல்லவா ?

இருப்பதோ ஏழே வார்த்தைகள். விரித்தும் சொல்ல முடியாது. அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.

வள்ளுவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.

அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.

தமிழ் இலக்கணத்தில் இடைச் சொல் ஒன்று உண்டு.

தனித்து நின்று பொருள் தராது. இரண்டு சொற்களுக்கு இடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு, அல்லது அர்த்தத் தெளிவை தரும்.

இடை எனப்படுவ
பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே

என்பது தொல்காப்பியம்.

இடை எனப்படுவது பெயரோடும் (பெயர் சொல்லோடும் ), வினையோடும் (வினைச் சொல்லோடும் ) சேர்ந்து வரும். தனக்கென்று தனி இயல்பு இல்லாதது என்பது தொல்காப்பியம் தரும் இலக்கணம். 


நிறைய இடைச் சொற்கள் இருக்கின்றன.

அதில் ஏகார (ஏ ) இடைச் சொல்லை மட்டும் பார்ப்போம்.

இந்த ஏகார இடைச் சொல் பல 7 விதமாக வரும்.

ஏகார வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும் ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத்தரும்.

எப்படி என்று பார்ப்போமா ?

1. தேற்றம் என்றால் உறுதி, தெளிவு.

நான் நேற்று வந்தேன் என்று சொல்லலாம்

நான் நேற்றே வந்தேன் என்றும் சொல்லலாம்.

இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? நேற்றே வந்தேன் என்பது நேற்று வந்தேன் என்பதே அழுத்தமாக , உறுதியாகச் சொல்கிறது.

நான் இதைச் செய்தேன்
நானே இதைச் செய்தேன்

நான் செய்தேன் என்றால் வேறு யாரோ கூட என்னோடு சேர்ந்து செய்திருக்கலாம்.

நானே செய்தேன் என்பது நான் செய்தேன் என்பதே தெளிவாக்குகிறது அல்லவா.

2. வினா

வீட்டுக்குப் போகிறாய்
வீட்டுக்குத் தானே போகிறாய் ?

முதலில் உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போவதை குறிக்கிறது.
இரண்டாவது உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போகிறாயா அல்லது வேறு எங்காவது போகிறாயா என்ற வினாவை எழுப்புகிறது. "தானே" வில் உள்ள ஏகாரம் அந்த வாக்கியத்தை வினாவாக மாற்றுகிறது.

3. எண்

வீடு, நிலம், நகை
வீடே, நிலமே, நகையே

இரண்டாவது உள்ள வாக்கியம் வீடு, நிலம் , நகை என்ற மூன்று இருக்கிறது என்று எண்ணிக்கையை சொல்ல வருகிறது.

வீடே , நிலமே, நகையே என்று சொல்லும் போது நம்மை அறியாமலேயே நாம் அவற்றை எண்ணத் தொடங்கி விடுகிறோம். சொல்லிப் பாருங்கள்.


4. பிரிநிலை

அனைத்து மாணவர்களில் அவனே சிறந்த மாணவன்

இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.

இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.

பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.


5. எதிர்மறை

நீயே கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கிறது.

6. இசை நிறை

’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’


இதை இவள் ஒருத்தி என்று ஆரம்பித்து இருக்கலாம். ஏயே என்று ஆரம்பித்தது  இசை நயம் கருதி.

7. ஈற்று அசை

அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு  சேர்க்கப்படும் சொற்கள்.  Filler , buffer , மாதிரி.

 என்றுமேத்தித் தொழுவோ மியாமே

 என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி இருக்கலாம். யாமே என்பதில் உள்ள  ஏ காரம் அர்த்தம் ஏதும் இன்றி நின்றது. அசைச் சொல்.

சரி, இவ்வளவு பெரிய இலக்கணம் எதற்கு ?

அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?

"ஆதி பகவன் முதற்றே உலகு "  என்ற வரியில் முதற்றே என்ற சொல்லை கவனியுங்கள்.

ஆதி பகவான் முதற்று உலகு என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

அப்படி சொல்லி இருந்தால், உலகுக்கு இறைவன் முதல் என்று அர்த்தம் வரும். அவன் மட்டும் தான் முதல் என்ற அர்த்தம் வராது.

முதற்றே என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. அதாவது உறுதிப் பொருளில் வந்தது.

அவன் மட்டுமே முதல். வேறு யாரும் கிடையாது. மிக உறுதியாக சொல்கிறார் வள்ளுவர்.  அது மட்டும் அல்ல, அவன் மட்டுமே  என்று சொல்லும் போது அவனுக்கு முன்னால் யாரும் கிடையாது. எனவே அவனை  யாரும் முதல்வனாக நியமிக்கவில்லை.

ஒரே ஒரு ஏகாரம், பொருள் எப்படி மாறுகிறது ?

இலக்கணம் தெரியாவிட்டால் இவற்றை சுவைக்க முடியாது அல்லவா.


சரி, அது என்ன ஆதி பகவன் ? அது யார் ? ஆதி பகவன் என்றால் இப்போது latest பகவன் என்று  யாராவது இருக்கிறார்களா ?

அதற்கு , அடுத்த இலக்கணம் படிக்க வேண்டும்.  படிப்போமா ? 

Monday, May 22, 2017

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் 


இலக்கியம் அறிய இலக்கணம் அவசியமா ?

மற்ற மொழிகளில் எப்படியோ, தமிழ் மொழியில் , இலக்கணம் அறிந்தால்தான் இலக்கியத்தின் ஆழத்தை , நுண்மையை அறிய முடியும்.

எடுத்துக்காட்டாக


அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

என்ற குறளை எடுத்துக் கொள்வோம்.

எல்லோருக்கும் தெரிந்த குறள்தான். எவ்வாறு "அ" என்ற எழுத்து மொழிகளுக்கு எல்லாம் முதலாக இருக்கிறதோ, அது போல உலகுக்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பது குறளின் சாரம்.

இதில் இலக்கணம் எங்கிருந்து வந்தது ?

சிந்திப்போம்.

முதலில் எடுத்துக்காட்டு உவமை அணி என்றால் என்ன என்று பார்ப்போம்.

அணி என்றால் அணிகலன். மோதிரம், வளையல், சங்கிலி போன்ற அணிகலன்கள். இவை நமக்கு அழகு செய்பவை. அது போல, பாடலுக்கு அழகு செய்பவை அணி எனப்படும்.

உவமை அணி என்றால், ஒன்றைச் சொல்லி மற்றதை விளங்க வைப்பது.

நிலவு போன்ற முகம், தாமரை போன்ற பாதம் என்று சொல்லும் போது முகத்தை நிலவுக்கு உவமையாக்கி சொல்கிறோம்.

இதில் இரண்டு வகை உண்டு.

உவமை அணி

எடுத்துக்காட்டு உவமை அணி என்று.

நிலவு போல முகம் என்றால் உவமை அணி.

நிலவு முகம் என்றால் எடுத்துக்காட்டு உவமை அணி. இதில் "போல" என்ற உவம உருபு இல்லை. அதை நாம் தான் எடுத்துக் காட்ட வேண்டும்.

மதி முகம் என்றால் மதி போன்ற முகம்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

என்ற குறளில் 

அகர முதல எழுத்து எல்லாம் 
ஆதி பகவான் முதற்றே உலகு 

என்ற இரண்டு வரிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ?

நடுவில் "போல" என்ற உவம உருபு இல்லை. அகரம் மொழிக்கு முதலாக இருப்பது போல, இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்று பொருள் கொள்ள வேண்டும். 

இப்போது ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டு உவமை அணி என்று ஒன்று இல்லாவிட்டால், இந்த இரண்டு வரியும் ஒன்றுக்கொன்று எப்படி சம்பந்தப்படும் ? தனித்தனியான இரண்டு வரிகள் இருக்கும். ஒரு பொருளும் இருக்காது. 

போல என்ற அந்த ஒரு சொல்  இந்த குறள் என்ன சொல்ல வந்ததோ அதை நமக்கு  உணர்த்துகிறது அல்லவா ?


உவமைக்கு இரண்டு வேலை இருக்கிறது. ஒன்று ஒன்றை உயர்வு படுத்திச் சொல்வது. இரண்டாவது, தெரிந்ததை வைத்து தெரியாதை விளங்கச் செய்வது. 

உதாரணமாக,

அவளுடைய முகம் நிலவு போல இருந்தது என்றால் முகமும் தெரியும், நிலவும் தெரியும். எனவே , இங்கே உவமை முகத்தின் அழகை உயர்த்திச் சொல்ல வந்தது. 

புலி இருக்கிறதே அது ஒரு பெரிய பூனை போல இருக்கும் என்று சொல்லும்போது பூனை ஒன்றும் புலியை விட உயர்ந்தது அல்ல. ஆனால் நாம் பூனையை பார்த்து இருப்போம். வீட்டிலேயே இருக்கும். புலியை பாத்து இருக்க மாட்டோம். எனவே, தெரிந்த பூனையை வைத்து தெரியாத புலியை புரிய வைக்க உவமை பயன்படுகிறது. 

இது ஒரு புறம் இருக்கட்டும். 

உவமை சொல்லும் போது , ஒரு படி உவமை என்று ஒன்று உண்டு. அதாவது உவமை சொல்லப்பட்ட பொருளின் ஒரே ஒரு குணம் தான் பொருந்தும். எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகும். 

உதாரணமாக,

நிலவு போன்ற முகம் என்றால், குளிர்ந்த ஒளி பொருந்திய முகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  நிலவில் இருப்பது போல அவளின் முகத்தில் பள்ளம் மேடு இருக்குமா ? அவளும் நிலவு போல வளர்ந்து வளர்ந்து தேய்வாளா என்று கேட்கக்  கூடாது.நிலவின் குளிர்ச்சி மட்டும் தான் இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இறைவனைப் பற்றி சொல்ல வருகிறார் வள்ளுவர். 

இறைவனை எதற்கு உதாரணமாகச் சொல்லலாம் ? இறைவனை விட உயர்ந்தது எதுவும் இல்லை. எனவே, உயர்ந்ததைச் சொல்லி இறைவன் அது போல இருப்பான் என்று சொல்ல முடியாது. 

இறைவன் அறிய முடியாதவன். எனவே, அறிந்த ஒன்றை வைத்து அறியாத இறைவனை விளங்கச் செய்ய வேண்டும். 

எனவே, அகரத்தை எடுக்கிறார் வள்ளுவர். 

இங்கே,அகரத்துக்கும் இறைவனுக்கும் எதில் சம்பந்தம் ?

"தலைமை பண்பு பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை " என்கிறார் பரிமேலழகர். 

எப்படி அகரம் எழுத்துக்கு முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான்.

சரி, ஒருவன் தலைவன் என்றால் அவனை யாரோ தேர்ந்து எடுத்து இருக்க வேண்டும் அல்லவா ? முதல்வரோ, பிரதமந்திரியோ மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு தலைவராக வருகிறார்கள். 

அப்படி என்றால் இறைவனை மக்கள் தேர்ந்து எடுத்தார்களா ?

எப்படி இறைவன் முதல்வனான் ?

இலக்கணம் அதையும் விளக்குகிறது.

எப்படி என்று மேலும் சிந்திப்போம். 









Friday, May 19, 2017

தேவாரம் - பாழுக்கே நீர் இறைத்தேன்

தேவாரம் - பாழுக்கே நீர் இறைத்தேன்


வாழ் நாள் எல்லாம் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறோம். படிப்பு, வேலை, திருமணம், பிள்ளை வளர்ப்பு, ஆட்டம், பாட்டம், என்று நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

எதற்கு ?

எதை சாதிக்க ? எதை அடைய ? நமக்கு முன்னால் இப்படி ஆடி ஓடி அலைந்தவர்கள் தாங்கள் தேடியதை அடைந்து விட்டார்களா ?

நெல்லுக்கு நீர் இறைத்தால் , ஒரு காலத்தில் நெல் விளையும். ஒன்றும் முளைக்காத கட்டாந்தரைக்கு நீர் வார்த்தால் , எவ்வளவு தான் நீர் வார்த்தாலும் ஒன்றும் வராது.

அது மட்டும் அல்ல,  வாழ்வில்  நல்லது  எதன் மீதும் பற்று கிடையாது.இருந்தாலும் கொஞ்ச நாள் இருக்கும். அப்புறம் மனம் மற்றவற்றை தேடி ஓடும்.

எவ்வளவோ பெரியவர்கள், எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டார்கள். படித்து விட்டு "ஹா...இதெல்லாம் ரொம்ப கஷ்டம்...நடை முறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி வைத்து விட்டு , நமக்கு பிடித்ததை செய்ய போய் விடுகிறோம். பின்னால் வருந்தி என்ன பயன்? அறிவுள்ளவர்கள் , படித்தும் கேட்டும் அறிந்து கொள்வார்கள். அந்த அறிவு இல்லாதவர்கள், பட்டுத் தெளிந்தால் தான் உண்டு. அவர்களாகவே சென்று முட்டி மோதி கடினமான வழியில் தான்  அறிவை அடைவார்கள்.

அதுக்கு முன்னால் என்ன சொன்னாலும், "அதெல்லாம் சரி, ஆனால் ரொம்ப கஷ்டம் " என்று ஒன்றும் செய்யமாட்டார்கள்.

இப்படி வாழ்ந்து, கடைசி காலத்தில் என்ன செய்வது, எப்படி செய்வது என்று ஒரு வழியும் அறியாமல் தவிப்பார்கள். நானும் அப்படி ஆகி விட்டேனே என்று சொல்கிறார் நாவுக்கரசு சுவாமிகள்.


பாடல்

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.


சீர் பிரித்த பின்

பற்று இல்லா  வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்
உற்று அல்லால்  கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்
எற்று உள்ளேன் என் செய்கேன் நான் இடும்பையால்  ஞானம் ஏதும்
கற்றிலேன் களை கண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.


பொருள்

பற்று இல்லா = பற்று இல்லாத

வாழ்க்கை வாழ்ந்து = வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே = பயனில்லாத இடத்துக்கு

நீர் இறைத்தேன் = நீர் வார்த்தேன்

உற்று அல்லால் = பட்டால் அல்லால்

கயவர் தேறார் = கயவர்கள் அறிய மாட்டார்கள்

என்னும் = என்ற

கட்டுரையோடு = சொல்லுக்கு

ஒத்தேன் = ஏற்றவாறு வாழ்ந்தேன்

எற்று உள்ளேன் = எதற்க்காக இருக்கிறேன்

என் செய்கேன் = என்ன செய்வேன்

நான் = நான்

இடும்பையால் = துன்பத்தால்

ஞானம் ஏதும் = அறிவு எதுவும் இல்லாமல்

கற்றிலேன் = எதையும் கற்காமல் இருக்கிறேன்

களை கண்காணேன் = இந்த துன்பங்களை களைந்து , இதிலிலிருந்து மீள வழி காண மாட்டேன் 

கடவூர்வீ ரட்டனீரே. = திருக் கடவூர் என்ற திருத்தலத்தில் இருப்பவரே


எதற்காக இருக்கிறேன் ? என்ன செய்யப் போகிறேன் என்று தவிக்கிறார்.

நாமும் சிந்திப்போம். என்ன செய்கிறோம். எதற்காக செய்கிறோம்.

நெல்லுக்கு நீர் இறைக்கிறோமா ? பாழுக்கு நீர் இறைக்கிறோமா என்று அறிந்து நீர்  இறைப்போம்.

வாழ்வின் அர்த்தத்தை கண்டு பிடிப்போம்.


Wednesday, May 17, 2017

திருவருட்பா - பதைத்தேன்

திருவருட்பா - பதைத்தேன் 


நாளும் பல கொடிய செய்திகள் நம்மை வந்து சேர்கின்றன. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் காதிலும் கண்ணிலும் விழுந்து கொண்டே இருக்கின்றன.

தொலைக் காட்சிகளில் , எங்கே நாம் மறந்து விடுவோமோ என்று காண்பித்த செய்திகளை மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதன் விளைவுகள் என்ன என்றால்,

ஒன்று, கொடிய செய்திகளை கேட்டு கேட்டு மனம் மரத்துப் போகும். இது தான் தினம் நடக்கிறதே. வழக்கமான ஒன்று தான் என்று நினைக்கத் தொடங்கி விடுவோம்.

இரண்டாவது, தீய செயல்களில் நம்மை அறியாமலேயே ஒரு சுவை வந்து விடும். நல்லவன் கூட , அட இப்படி செய்யலாமா ? நாமும் செய்து பார்த்தால் என்ன ? என்று ஒரு ஆர்வத்தை தூண்டி விடும்.

தீமைகளை கண்டு உள்ளம் பதை பதைத்தால் தான் அதை செய்யாமல் இருப்போம். செய்பவர்களை விட்டு விலகி நிற்போம். தீயவைகள் சாதாரணமானவை , எப்போதும் நடக்கும் ஒன்று தான் நினைத்து விட்டால், தீமைகளை தட்டிக் கேட்கும் மனம் போய்விடும். நாமும் செய்யலாம் என்றும் நினைக்கத் தொடங்கி விடுவோம்.

வள்ளலார் கடற்கரையில் நடந்து செல்கிறார். அங்கு மீன் பிடிக்கும் வலை, தூண்டில் எல்லாம் வெயிலில் காய வைத்து இருக்கிறார்கள். நாமாக இருந்தால் என்ன நினைப்போம் ? ஏதோ வலை, தூண்டில் எல்லாம் கிடக்கிறது என்று நினைப்போம்.

ஆனால், வள்ளலார் அவற்றைக் கண்டு மனம் பதைக்கிறார். ஐயோ, இந்த கொலை கருவிகளைக் கொண்டு எவ்வளவு மீன்களைப் பிடிப்பார்கள். அவற்றை கொல்வார்கள் . அப்போது அந்த மீன்கள் எவ்வளவு துடிக்கும். தூண்டிலில் சிக்கிய மீன்  எப்படி தவிக்கும் , தொண்டையில் முள் குத்தினால் எவ்வளவு வலிக்கும் என்று நினைத்து பதறுகிறார்.

கொடியவர்கள் மற்றவர்களை கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். மற்ற உயிர்கள் பதைக்கும் போதெல்லாம் நானும் பயந்தேன்.  வலையையும் , தூண்டிலையும் கண்டபோதெல்லாம் உள்ளம் நடுங்கினேன்  என்கிறார் வள்ளலார்

பாடல்

துண்ணெனக் கொடியோர் பிற வுயிர்  கொல்லத் தொடங்கிய பேதெல்லாம் பயந்தேன் 
கண்ணினால் ஐயோ பிற வுயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம் 
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திரு உள்ளம் அறியும் 


பொருள்

துண்ணெனக் = துணுக்குறும் படி

கொடியோர் = கொடியவர்கள்

பிற வுயிர் = பிற உயிர்களை

கொல்லத் தொடங்கிய = கொல்லத் தொடங்கிய

போதெல்லாம் பயந்தேன் = போதெல்லாம் பயம் கொண்டேன்

கண்ணினால் = கண்ணால்

ஐயோ = ஐயோ

பிற வுயிர் = மற்ற உயிர்கள்

பதைக்கக் கண்ட காலத்திலும் = பதைக்கின்ற காலத்திலும்

பதைத்தேன் = பதைப்பு அடைந்தேன்

மண்ணினில் = பூமியில்

வலையும் = (மீன் பிடிக்கும்) வலையும்

தூண்டிலும் = தூண்டிலும்

கண்ணி வகைகளும் = பறைவைகளைப் பிடிக்கும் கண்ணி வகைகளை

கண்ட போதெல்லாம் = பார்கின்றபோதெல்லாம்

எண்ணி = அவற்றை எண்ணி

என் உள்ளம் = எனது மனம்

நடுங்கிய நடுக்கம் = நடுங்கிய நடுக்கம்

எந்தை = என் தந்தையாகிய

நின் = உன்

திரு உள்ளம் = திரு உள்ளம்

அறியும் = அறியும்

துப்பாக்கியை கண்டால் மனம் பதற வேண்டும்.  கறி வெட்டும் கத்தியைக் கண்டால் மனம்  பதைக்க வேண்டும்.

உயிர்கள் துன்பப் படும் போது மட்டும் அல்ல, இனி துன்பப் படுமே என்று நினைத்து வருந்துகிறார் வள்ளுவர்.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

மற்ற உயிர்களை நம் உயிர் போல் நினைக்க வேண்டும்.

அருளின், கருணையின் உச்சம் இது.

அந்த உயர்ந்த அன்பு நம் மனத்திலும் சுரக்கட்டும்.



Monday, May 15, 2017

திருக்குறள் - நல்லது செய்றது தப்பா ?

திருக்குறள் - நல்லது செய்றது தப்பா ?


நல்லது செய்வதில் தவறு உண்டா என்று கேட்டால் உண்டு என்கிறார் வள்ளுவர்.

அதெப்படி நல்லது செய்வது தவறாக முடியும் ?

நிறைய வீடுகளில் பிள்ளைகள் கெட்டு போவதற்கு காரணம் பெற்றோர்கள் அந்த பிள்ளைகள் மேல் வைக்கும் அதீத பாசம் தான். பிள்ளை கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பார்கள். பின் அவன் சதா சர்வ காலமும் whatsapp லும் facebook லும் பொழுதை போக்குகிறான். படிப்பதே இல்லை என்று நொந்து கொள்ளவார்கள். அவனுக்கு விலை உயர்ந்த செல் போன் வாங்கி கொடுத்தது யார் ?

அதே போல், பிள்ளைகள் துன்பப் படுவார்களே என்று அவர்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுக்க வேண்டியது. பின்னாளில் அவர்களுக்கு சொந்தமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. மலங்க மலங்க முழிப்பார்கள்.

பிள்ளைகளுக்கு நல்லது நினைத்துதான் செய்திருப்பார்கள் பெற்றோர்கள். ஆனால், அதுவே தவறாக முடிந்து விடும்.

ஆயிரம் உதாரணம் சொல்லலாம். பிள்ளைகள் கையில் தாராளமாக பணம் தருவது. அளவுக்கு அதிகாமாக அவர்களை புகழ்வது என்று.

பிள்ளைகள் என்று மட்டும் அல்ல.

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு தரா தரம் பார்க்காமல் உதவி செய்வது பின்னாளில் துன்பத்தில் கொண்டு போய் முடியும்.

நல்லவன் என்று நினைத்து ஒட்டுப் போட்டு , தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்து  கஷ்டப் படுபவர்களுக்கு உண்டு.

ஓட்டு போடுவது தவறா என்றால் இல்லை. யாருக்கு போடுவது என்பதில் தான் சிக்கல்.


நல்லது செய்வதிலும் தவறு உண்டு, யாருக்கு செய்கிறோம் என்று அறிந்து செய்யாவிட்டால் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் 
பண்பறிந்து ஆற்றாக் கடை 

பொருள்

நன்றாற்றல் = நன்று + ஆற்றல் = நல்லது ஆற்றுவது. நல்லது செய்வது

உள்ளும் = அதிலும்

தவறுண்டு = தவறு உண்டு

அவரவர் = அவர்களின் (யாருக்கு நல்லது செய்கிறோமோ )

பண்பறிந்து = பண்பு அறிந்து

ஆற்றாக் கடை = செய்யாவிட்டால்


யாருக்கு நல்லது செய்கிறோம் ? எவ்வளவு செய்கிறோம் ? எப்போது செய்கிறோம்  என்று அறிந்து செய்ய வேண்டும். 

அறிவை புகட்டுவதாக இருந்தால் கூட யாருக்குச் சொல்லித் தர வேண்டும் என்று  வரையறை வைத்து இருந்தார்கள். கெட்டவனுக்கு தரும் அறிவு கெட்ட வழியில்  மேலும் செல்லவே பயன்படும். 

அடுத்த முறை ஏதாவது நல்லது செய்வதாக இருந்தால் , சிந்தித்து செய்யுங்கள். யாருக்கு , எவ்வளவு, எப்போது என்று சிந்தித்து செயல்படுங்கள். 

நல்லதுதானே செய்கிறோம் என்று கண்ணை மூடிக் கொண்டு செய்யாதீர்கள். 

நல்லாற்றல் உள்ளும் தவறு உண்டு ....

வினை செயல் வகை என்ற அதிகாரத்தில் பத்து குறள் எழுதி இருக்கிறார் வள்ளுவர். அதில் ஒன்று இது. மேலும் இருக்கிறது. திருக்குறளை படித்துப் பாருங்கள். 

Sunday, May 14, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - வாளின் கொன்று அறம் தின்றான்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - வாளின் கொன்று அறம் தின்றான் 


பதவி ஆசை இன்று எவ்வளவு பெரிதாகப் போய் விட்டது. எப்படியாவது, எதை செய்தாவது பதைவியை அடையவேண்டும் என்று தவிக்கிறார்கள். பணம் கொடுத்து ஓட்டு வாங்கி, ஒவ்வாத கருத்து உள்ளவர்களிடம் கூட்டு வைத்து , எப்படியாவது பதவியை அடைய ஆசைப் படுகிறார்கள்.

அற வழியில் அல்லாத அரச பதவி தவறு என்று எண்ணி , அப்படி வந்த பதவியை இராமனிடம் திருப்பித் தர வந்திருக்கிறான் பரதன்.

"நீ ஏன் தவக் கோலம் கொண்டு இருக்கிறாய்" என்று கேட்ட பரதனிடம் , பரதன் சொல்கிறான்

"வழி வழியாக வந்த அரச பதவியை துறந்து நீ (இராமன்) தவக் கோலம் கொண்டு காடு வந்து இருக்கிறாய். அப்படி இருக்கும் போது , நான் மட்டும் எப்படி , மரபை மறந்து, நீதியில் இருந்து விலகி, அறத்தினை வாளால் கொன்று தின்று அரசை ஆள முடியும் "

என்றான்.

மிக மிக கடுமையான வார்த்தைகள். அறத்தை வாளால் கொன்று தின்ற என்று சொல்கிறான்.

பாடல்

‘பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம்
துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால்,
மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று
அறம் தின்றான் என, அரசுஅது ஆள்வெனோ?


பொருள்


‘பிறந்து = மூத்த மகனாக பிறந்து

நீயுடைப் = உனக்கு உடைய

பிரிவு இல் = உன்னை விட்டு பிரியாத

தொல் பதம் = பழைய முறைமையான அரசு

துறந்து, =துறந்து

மா தவம் = பெரிய தவம்

தொடங்குவாய் என்றால் = தொடங்குவாய் என்றால்

மறந்து = மறந்தும் கூட

நீதியின் திறம்பி = நீதியை விட்டு விலகி

வாளின் கொன்று = வாளால் கொன்று

அறம் தின்றான் = அறத்தினை தின்றான்

என = என்று

அரசுஅது ஆள்வெனோ? = அரசை ஆள்வேனோ ?


அரச பதவியை விட, அது தரும் சுகத்தை விட அறமே உயர்ந்தது என்று இருந்தான் பரதன்.

எப்படி ஒரு பாரம்பரியம் இருந்திருக்கிறது ? எந்த ஒரு உன்னத நிலையில் இருந்திருக்கிறோம்.

எங்கிருந்து , எங்கே வந்து விட்டோம்.

அற வழியில் வராத எதுவும் நல்லது இல்லை. அது அரச பதவியாக இருந்தாலும் சரி, வேறு எந்த பதவியாக இருந்தாலும் சரி.

Friday, May 12, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - சீதையின் துயரம்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - சீதையின் துயரம் 


தயரதன் இறந்த செய்தியை பரதன் சொல்லக் கேட்ட இராமன் துக்கத்தால் மயங்கி விழுகிறான். பின் மயக்கம் தெளிந்து எழுகிறான். அவனைத் தேற்றி, அவனுக்குப் பல அற உரைகள் கூறுகிறார் வசிட்டர். பின், தயாராதனுக்கு நீர் கடன் செய்கிறான் இராமன்.

பின், பர்ண சாலையை அடைந்து சீதையிடம் தயரதன் இறந்ததைப் பற்றி கூறுகிறான். அதைக் கேட்ட சீதை துக்கம் அடைகிறாள். கண்ணீர் விடுகிறாள்.

பாடல்

துண்ணெனும் நெஞ்சினாள் ; துளங்கினாள்; துணைக்
கண் எனும் கடல் நெடுங் கலுழி கான்றிட,
மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள், 
பண் எனும் கிளவியால் பன்னி, ஏங்கினாள்.

பொருள்

துண்ணெனும் நெஞ்சினாள் = மனதில் துணுக்குற்று

துளங்கினாள் = துவண்டாள்

துணைக் = துணை உடைய (இரண்டு)

கண் =கண்கள்

எனும் = என்ற

கடல் = கடல்

நெடுங் =பெரிய

கலுழி = கலங்கிய நீர்

கான்றிட = அருவி போல் பொழிந்திட

மண் எனும் = மண் என்ற

செவிலிமேல் = செவிலித் தாய் மேல்

வைத்த கையினாள் = கையை வைத்து , தன்னைத்தானே தாங்கிக் கொண்டு


பண் எனும் கிளவியால் = இனிய குரலில்

பன்னி,= புலம்பி

ஏங்கினாள் = ஏங்கினாள்


மாமனார் இறந்த செய்தியைக் கேட்ட மருமகள் வருந்தினாள். இதுதான் செய்தி.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். இதைப் போய்  பெரிய செய்தி என்று கம்பன் வேலை மெனக்கெட்டு ஒரு பாடல் போடுகிறானே என்று நாம் நினைக்கக் கூடும்.

காரணம் இருக்கிறது.


சீதை அரச குமாரி. செல்லமாக வளர்ந்தவள். காடு என்றால் என்ன என்று கூடத் தெரியாது.

வந்த இடத்தில் ஏதோ குடும்பப் பிரச்சனை. கைகேயி ஏதோ வரம் கேட்டாள். இராமனுக்கு வர வேண்டிய அரசு போனது. அவனை காட்டுக்கும் அனுப்பி விட்டாள் . இராமன் கூடவே சீதையும் கிளம்பி வந்து விட்டாள் .

ஒரு நிமிடம் சீதையின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

அரச வாழ்வை துறந்து, மர உரி உடுத்து கானகம் வந்தவளின் மன நிலை எப்படி இருக்கும் ? தயரதன் மேலும், கைகேயி மேலும், பரதன் மேலும் கோபம் வருமா வராதா ? எல்லோரும் சேர்ந்து தன்னையும் தன் கணவனான இராமனையும் இப்படி செய்து விட்டார்களே என்று தோன்றுமா இல்லையா ?

கோபம் இல்லாவிட்டால் கூட, "எனக்கு செய்த துன்பங்களுக்கு ஆண்டவன் தயரதனுக்கு தண்டனை கொடுத்தான் " என்று மனதுக்குள் நினைக்கலாம் அல்லவா ?

ஒரு சாதாரண பெண் என்றால் அப்படித்தான் நினைத்து இருப்பாள். நினைத்தால் அதை   தவறு என்று சொல்ல முடியாது.

திருமணம், பண்டிகை போன்ற நாட்களில் வீட்டில் சில பெண்கள் இருந்தால், ஒருத்திக்கு கொஞ்சம் உயர்ந்த விலையில் ஒரு பட்டுச் சேலையும் இன்னொரு பெண்ணுக்கு கொஞ்சம் விலை குறைந்த பட்டுச் சேலையும் எடுத்தால் , விலை குறைந்த சேலை பெற்ற பெண்ணின் மனம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும்.

பட்டுச் சேலை தான். கொஞ்சம் விலை வித்தியாசம் அவ்வளவுதான். இருந்தும் மனம் அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.


ஆனால், சீதை அப்படி நினைக்கக் கூட இல்லை. பண்பின் உச்சம் தொடுகிறாள்.

இறந்து போன தயரதனுக்காக வருந்தி அழுகிறாள்.

குடும்பத்தில் பிரச்சனைகள் வரும்.

ஒருவருக்கு கூட வரும். இன்னொருவருக்கு குறைச்சல் வரும். பெண்கள் அனுசரித்துப் போக வேண்டும். வித்தியாசங்களை ஊதி ஊதி பெரிசாக்கி குடும்பத்தில் பிளவை உண்டு பண்ணி விடக் கூடாது.

இராமனுக்கு வர வேண்டிய அரசை பரதனுக்கு கொடுத்தான் தயரதன். இராமன் அதை ஏற்றுக் கொண்டான். இராமன் ஏற்றுக் கொண்டதால் சீதையும் அதை முழு மான்தோடு ஏற்றுக் கொண்டாள்.

கணவன் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதற்கு துணை போக வேண்டும். "நீ வேணும்னா காட்டுக்குப் போ, என்னால் வந்து அங்கு கஷ்டப் பட முடியாது " என்று சொல்லி  இருக்கலாம். சொல்லவில்லை.

தயரதன் இறந்த செய்தி கேட்டு , அப்பாடா சிக்கல் தீர்ந்தது. பரதன் அரசை தர வந்திருக்கிறான் என்று நினைத்து இராமனை தனியாக அழைத்து "பேசாமல் அரசை ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் அயோத்தி போகலாம் ..." என்று சொல்லவில்லை.

இறந்த தயராதனுக்காக அழுகிறாள்.

பெண்களுக்கு பாடம் சொல்லித் தருகிறான் கம்பன். குடும்பத்தை எப்படி மேலே எடுத்துச் செல்ல வேண்டும் என்று.

பெண்கள் மனது வைக்காமல் குடும்பம் ஒரு அடி கூட மேலே போக முடியாது. மாமியார் கொடுமைக் காரியாக இருக்கலாம். கைகேயி போல. மாமியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாமனார் ஆடலாம். தயரதன் போல. அப்பா அம்மா சொல்லை கேட்டு, மறு பேச்சு கேட்காமல் கணவன் இருக்கலாம். இராமனைப் போல.

மனைவி என்ன செய்ய வேண்டும் என்று சீதையின் வாயிலாக கம்பன் காட்டுகிறான்.

பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.

சீதை மட்டும் கொஞ்சம் முரண்டி இருந்தால் , இராமனுக்கு ஒரு துளி பெருமையும் வந்திருக்காது.

அது இராமாயணம் அல்ல. சீதாயணம் என்பதே பொருத்தமான பெயர்.







Tuesday, May 9, 2017

இராமாயணம் - மரணம் பற்றிய பயம் போக

இராமாயணம் - மரணம் பற்றிய பயம் போக


தயரதன் இறந்தான் என்ற செய்தியை கேட்ட இராமன் மயங்கி விழுகிறான். பின் மயக்கம் தெளிந்த அவனுக்கு வசிட்டன் மரணத்தின் தன்மை பற்றி கூறுகிறான்.

கருத்தாழம் மிக்க பாடல்கள்.

"இன்ப துன்பம் என்ற அனுபவங்களால் பிறக்கும் இந்த பிறவிகள் பல கோடிகள் என்று நூல்கள் கூறுகின்றன.  அதை அறிந்த நீ எமனிடம் அருளை எதிர் பார்க்கலாகுமா ?"

என்று கேட்கிறான்.

பாடல்

உண்மை இல் பிறவிகள்,
     உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில்
     தழுவின எனும்
வண்மையை நோக்கிய,
     அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக் 
     கருதல் ஆகுமோ?

பொருள்

உண்மை இல் = உண்மை இல்லாத. நிலை இல்லாத

பிறவிகள் = இந்த பிறவிகள், உயிர்கள்

உலப்பு இல் கோடிகள் = கணக்கில் அடங்காத கோடிக் கணக்கானவை

தண்மையில் = இன்பத்தில்

வெம்மையில் = துன்பத்தில்

தழுவின” = சேர்ந்தன அல்லது பிறந்தன

எனும் = என்ற

வண்மையை = உயர்ந்த செய்தியை

நோக்கிய = அறிந்த பின்

அரிய கூற்றின்பால் = எமனிடம்

கண்மையும் = அருள் (கண்ணின் மை . கண்ணின் தண்மை அருள் நோக்கு)

உளது எனக் = உண்டு என்று

கருதல் ஆகுமோ? = நினைக்கலாமா ?


வாழ்க்கை இருக்கிறது. வாழ்கிறோம். ஒரு நாள் அது முடிந்து போகிறது. நம் வாழ்க்கை முடிந்தாலும், மற்றவர்கள் வாழ்க்கை முடிந்தாலும் துக்கம் வருகிறது. சோகம் நம்மை பிடித்துக் கொள்கிறது. நம் வாழ்க்கை முடிந்து விடுமே என்ற பயம், சோகம் இருக்கிறது. மரணத்தை கண்டு கலங்காதவர் யார். இறப்பதற்கு யாருக்குத் தான் விருப்பம் இருக்கும்.

ஏன் இந்த துக்கம் வருகிறது ? ஏன் மரணம் இவ்வளவு துன்பகரமாக இருக்கிறது ? அந்த துன்பத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று வசிட்டன் சொல்லுகிறான் ?

மரணம் துன்பமாக இருக்கிறது ஏன் என்றால் நாம் அனுபவங்கள் தடை பட்டுப் போகும்.  அனுபவங்கள் தொடராது.

எந்த மாதிரி அனுபவங்கள் ?

இன்பமான அனுபவங்கள் ... நல்ல உணவு, உடை, இசை, நாம் வாசிக்கும் புத்தகங்கள், பார்க்கும் சினிமா, டிவி, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு கலந்து பழகும் இனிமையான நேரங்கள் போன்றவற்றை அனுபவிக்க முடியாது.

நடுவில் சில துன்பங்கள் வரலாம். நாம் அதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு. நல்லதோ கெட்டதோ , இரண்டு அனுபவங்களின் தொகுப்பு தான் வாழ்க்கை. அதைத் தாண்டி ஒன்றும் இல்லை.

சரி. இந்த அனுபவங்களை விட்டு சற்று விலகி நின்றால் ? அனுபவங்களை சேர்த்துக் கொண்டே போகாமல் இருந்தால் ? நடப்பவைகளை ஏதோ யாருக்கோ நடக்கிறது என்று ஒரு மூன்றாம் மனிதரைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் மரணம் வலிக்காது.

நாம் அனுபவிக்கிறோம். சுகமான அனுபவங்கள் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். நீண்ட நாள் அவை வேண்டும் என்று விரும்புகிறோம். அது மரணத்தின் மூலம் தடை படும் போது எமனை திட்டுகிறோம்.

தவறு யாரு மேல் ?

துன்பம் எமனிடம் இருந்து வரவில்லை.

நம் ஆசையினால். நமது அனுபவங்களின் மேல் கொண்ட பற்றினால் , அவை தொடர வேண்டும் என்ற விருப்பத்தால் ...மரணம் நமக்கு துன்பமாகத் தெரிகின்றது.

இதை அறிந்து கொண்டால் மரணம் பற்றை பயமோ , வலியோ இருக்காது.

ஆழமான அர்த்தம் கொண்ட பாடல். தனிமையில் இருந்து சிந்தியுங்கள்.

திரை விலகலாம். உண்மையின் தரிசனம் கிடைக்கலாம்.





Monday, May 8, 2017

திருக்குறள் - அறிவுடையோர் குணம்

திருக்குறள் - அறிவுடையோர் குணம் 


அறிவு என்றால் என்ன ?

புத்தக அறிவா ? அனுபவ அறிவா ? கேள்வி அறிவா ? பட்டங்களா ? இசை, விளையாட்டு, நடனம் போன்றவை அறிவு சார்ந்த துறைகள் இல்லையா ? வீட்டை பராமரிப்பது, சமைப்பது இது அறிவின் பால் சேராதா ?

பின் இதுதான் அறிவு ?

வள்ளுவர் சொல்கிறார் - அறிவு உள்ளவர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. அது என்ன என்றால், அவர்கள் வருவதை முன்பே அறிந்து கொள்வார்கள். அது மட்டும் அல்ல, அப்படி அறிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிர்ச்சி அடையும்படி ஒரு துன்பம் வராது.

வரும் துன்பத்தை முன்பே அறிந்து கொண்டு அதில் இருந்து தங்களை காத்துக் கொள்பவர்களே அறிவுள்ளவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

பொருள்

எதிரதாக் = எதிர்த்து + ஆ = எதிர் காலத்தில் ஆகும்

காக்கும் = காத்துக் கொள்ளும்

அறிவினார்க்கு = அறிவுடையவர்களுக்கு

இல்லை =இல்லை

அதிர = அதிர்ச்சி தரும்படி

வருவதோர் = வருகின்ற ஒரு

நோய் = நோய் , துன்பம்


சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

பெரும்பாலோனோர் துன்பம் வந்த பின் , ஐயோ துன்பம் வந்து விட்டதே, என்ன செய்வது, எப்படி இதை சமாளிப்பது என்று அங்கும் இங்கும் அலைவார்கள். யாரிடம் உதவி கேட்கலாம், என்ன செய்யலாம் , எப்படி செய்யலாம் என்று பதறுவார்கள். எல்லோர் மேலும் எரிந்து விழுவார்கள். தேவை இல்லாமல் கோபம் கொள்வார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது  என்று தன்னிரக்கத்தில் தத்தளிப்பார்கள்.

இது துன்பம் வந்தபின் அதை சமாளிக்கும் வழி.

அறிவுள்ளவர்கள் செய்யும் செயல் அல்ல.

அறிவுள்ளவர்கள், துன்பம் வருவதற்கு முன்னே அதைப் எதிர்பார்த்து, அது வராமல் இருக்கும்  வழிகளை மேற்கொள்வார்கள்.

எப்படி ?

சில உதாரணங்களை பார்ப்போம்.

மாணவப் பருவத்தில் சரியாக படிக்காமல் இருந்தால் பின்னால் துன்பம் வரும் என்று அறிந்து கொண்டு சரியாகப் படித்தால் ஏழ்மை என்ற துன்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.

உண்ணும் உணவில் கட்டுப்பாடு இல்லை என்றால் பின்னால் சர்க்கரை நோய் வரும், உடல் பருமன் சார்ந்த நோய்கள் வரும். இதை அறிந்து கொண்டு கட்டுப்பாட்டோடு இருந்தால் அந்த நோய்களால் வரும் துன்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அளவுக்கு மீறி கடன் வாங்கினால் வட்டி கட்ட வேண்டும், முதலை திருப்ப வேண்டும் , அந்த சமயத்தில் கையில் காசு இல்லை என்றால் சங்கடம்தான். கடன் வாங்கும்போது பின்னால் வருவதை யோசிக்க வேண்டும்.

இது தனி மனிதனுக்கு மட்டும் அல்ல. வியாபார நிறுவனங்களுக்கு, அரசாங்கத்துக்கு எல்லாம் பொருந்தும்.

பெரு மழை வந்தால் வெள்ளம் வரும். வெள்ளம் வந்தால் மக்கள் துன்பப் படுவார்கள். பொருள் சேதம் , உயிர் சேதம் வரும் என்று அறிந்து, ஏரி , கம்மாய்களை  தூர் எடுத்து, வெள்ளம் வடிய வாய்க்கால் வெட்டி வைத்தால் வெள்ள நீரை சேமித்து  அதன் மூலம் பயன் பெறலாம்.

மழை பொய்த்தும் போகும். வறட்சி வரும். நீரை தேக்கி வைத்தால் , வறட்சியை சமாளிக்க முடியும். வறட்சி வரும்முன் செய்ய வேண்டிய வேலை அது. அப்படி செய்தால், வறட்சியால் வரும் துன்பத்தை குறைக்க முடியும்.

பெரிய நிறுவனங்கள் பட்ஜெட் போடுவார்கள் எதற்கு ? என்ன நடக்கப் போகிறது என்று அறிந்து கொள்ள. ஒரு வேளை விற்பனை குறைந்து விட்டால் ? செலவு அதிகமாகி விட்டால் என்ன செய்வது என்று அறிந்து கொள்ள.

வரம் துன்பத்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அதில் இருந்து காத்துக் கொள்ளும் வழிகளை அறிந்து செயல் பட வேண்டும். துன்பத்தில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். அது தான் அறிவுள்ளவர் செயல்.

இந்த குறளை படித்தபின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்றால் , உங்களுக்கு என்ன எல்லாம் துன்பம் வரக் கூடும் என்று ஒரு பட்டியல் போடுங்கள்.  ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் எப்படி காத்துக் கொள்ளலாம் என்றும்  வழி காணுங்கள்.

வள்ளுவர் சொல்லுவதை கூர்ந்து கவனியுங்கள்.

என்னதான் வரும் துன்பத்தை பற்றி கனக்குப் போட்டு , அதை சமாளிக்க வழி தேடினாலும், துன்பம் வராமல் போகுமா ?

"அதிர வருவதோர் நோய் " என்றார்.

நோய் அல்லது துன்பம் வரும். அதனால் பெரிய அதிர்ச்சி இருக்காது. அதிர்ச்சி தரும் துன்பம் இருக்காது. ஏன் என்றால் அந்த துன்பம் வரும் வரும் என்று நீங்கள் மனதுக்குள் எதிர்பார்த்து இருப்பதால், அது உண்மையிலேயே வரும் போது ஒரு அதிர்ச்சி இருக்காது.  உங்கள் மனம் அதை எதி கொள்ளத் தயாராக இருக்கும். துன்பம் ஒரு அதிர்ச்சியைத் தராது.

அதிர்ச்சி இல்லை என்றால், தெளிவாக, பதற்றம் இல்லாமல் அந்த துன்பத்தை கையாள முடியும்.

முழு உடல் பரிசோதனை செய்யுங்கள். என்ன நோய் வர வழி இருக்கிறது என்று கண்டு கொள்ளுங்கள். அதற்கு தகுந்த மருந்து, மாத்திரை சிகிச்சைகளை மேற் கொள்ளுங்கள்.

உங்கள் நிதி நிலவரத்தை ஆராயுங்கள். என்ன பெரிய செலவு வரும் , அதை எப்படி சமாளிப்பது என்று திட்டம் போடுங்கள்.

காப்பீடு (insurance ) இல்லை என்றால் உடனே எடுங்கள்.

எதிர் காலத்தில் வரும் துன்பத்தில் இருந்து தப்பிக்க இப்போதே வழி தேடுங்கள்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்.










Sunday, May 7, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எது துணை

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எது துணை 


கானகம் சென்ற இராமனை கண்டு அவனிடம் அரசை மீண்டும் தர வந்தான் பரதன். வந்த இடத்தில் தயரதன் இறந்த செய்தியை சொல்கிறான் பரதன். அதை கேட்ட இராமன் மயங்கி விழுகிறான். அவனை மயக்கம் தெளிவித்து அவனுக்கு எல்லோரும் தேறுதல் கூறுகிறார்கள்.

மரணத்தின் தன்மை பற்றி வசிட்டன் கூறத் தொடங்குகிறான். ஆழ்ந்த கருத்து உடைய ஏழு பாடல்கள்.

அதில் முதல் பாடல்.

"மறை நூல்களின் எல்லை கண்ட நீ (இராமா), இறப்பும் பிறப்பும் உயிர்களுக்கு இயற்கையானது என்பதை எப்படி மறந்தாய் ? மனிதனுக்கு இல்லறம் , துறவறம் தவிர வேறு ஒரு துணையும் இல்லை "

என்றான்.

பாடல்

துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்
     வரம்பு கண்ட நீ?


பொருள்


துறத்தலும் = துறவறமும்

நல் அறத் துறையும் = நல்ல அறத்தின் துறையும்

அல்லது = அல்லாமல்

புறத்து = வெளியே

ஒரு துணை இலை = ஒரு துணையும் இல்லை

பொருந்தும் = பொருந்திய

மன்னுயிர்க்கு =நிலைத்த உயிர்களுக்கு

“இறத்தலும் = இறப்பதும்

பிறத்தலும் = பிறப்பதும்

இயற்கை” என்பதை =இயற்கையானது என்பதை

மறத்தியோ, = மறந்து விட்டாயா ?

மறைகளின் = மறை நூல்களின்

வரம்பு கண்ட நீ? = எல்லையை கண்ட நீ


இறப்பதும் பிறப்பதும் இயற்கைதான். நாம் தினமும் காண்கிறோம். இருந்தும் நெருங்கிய ஒருவர் இறந்து போனால் துக்கம் வருகிறது. ஆனானப்பட்ட இராமனே மயங்கி  விழுகிறான். புலம்புகிறான்.

மறைகளின் எல்லை கண்டவனுக்கே அப்படி என்றால் நாம் எம்மாத்திரம் ?

துன்பம் ஏன் வருகிறது ? பற்றினால் துன்பம் வருகிறது.

அப்படி என்றால் பற்று இல்லாமல் இருக்க முடியுமா ? பற்றற்று இருக்க நாம் எல்லாம் என்ன துறவிகளா ? சாமியார்களா ? எல்லோரும் துறவியாக முடியுமா ?

வசிட்டன் சொல்லவந்தது அது அல்ல.

நாம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துகிறோம். அப்படி யார் மேல் அன்பு செலுத்துகிறோமோ அவர்கள் இறந்து போனால் நமக்கு துன்பம் வருகிறது.

சற்று யோசிப்போமா ?

நாம் அன்பு செலுத்துபவர் இறந்து போனால் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்த முடியாதா ? ஏன் அந்த ஒருவர் மேல் மட்டும் அன்பு செலுத்த வேண்டும் ? மற்றவர்கள் மேல் அன்பு செலுத்த முடியாதா ?

உண்மை என்ன என்றால் , நாம் அன்பு செலுத்துவதில் இல்லை சிக்கல். அன்பை பெறுவதில். யார் இறந்து போனாரரோ அவரிடம் இருந்து அன்பு நமக்கு கிடைக்காது. அவர் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் நமக்கு துணையாக இருந்து இருக்கிறார். அந்த துணை இப்போது போய் விட்டது.

நாம் அன்பு செலுத்தவும், நாம் அன்பை பெறவும், வேறு ஏதோ ஒரு விதத்திலும் அவர் நமக்கு துணையாக இருந்திருக்கிறார். அந்த துணை போய் விட்டதால் துக்கம்.

வசிட்டர் சொல்கிறார், மனிதனுக்கு இரண்டே துணைகள்தான் உண்டு.

ஒன்று , அற வழியில் செல்லுதல். பின்னால் துறவறம் என்று சொல்லுவதால், முதலில் உள்ள அறத்தை இல்லறம் என்று கொள்ளலாம். 

இன்னொன்று, துறவறம்.

இல்லறம், துறவறம் இது இரண்டும்தான் துணை.

இல்லறம் என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள் இது தானே. அப்படி என்றால் அவர்கள் துணை தானே. அவர்கள் இல்லாமல் போனால் துன்பம் வராதா ?

இல்லறம் என்றால் இல்லம் + அறம். இல்லத்தில் இருந்து செய்யும் அறம்.

அதையும் காலத்தில் விட்டு விட்டு துறவறம் மேற் கொள்ள வேண்டும். துறவு + அறம்.

அறம் ஒன்றுதான் துணை. வேறு எதுவும் துணை இல்லை.



"துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது"

அது என்ன "நல் அறத் துறை"

ஆறு போய் கொண்டே இருக்கும். அங்கங்கே படிகள் அமைத்து மக்கள் ஆற்றில் இறங்கி நீராடுவார்கள். அதற்கு படித்துறை என்று பெயர்.

அறம் என்ற ஆறு ஓடிக் கொண்டே இருக்குறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இறங்கி அந்த அறத்தை அறிகிறார்கள். படித்துறை போல அது அறத்துறை.

அது மதமாக இருக்கலாம், கொள்கையாக இருக்கலாம், அவரவர் விரும்பும் தர்மமாக இருக்கலாம், செய்யும் வேலையாக இருக்கலாம்...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அறத்தின் ஏதோ ஒரு கூறு. (துறை என்றால் department என்று இப்போது வைத்து இருக்கிறார்கள்.)

சைவத் துறை விளங்க என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

வேத நெறி தழைத்து ஓங்க, மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.

சைவம் ஒரு துறை. வைணவம் ஒரு துறை. கிறித்துவம் ஒரு துறை.

அறத்தின் ஏதோ ஒரு துறையைப் பற்றிக் கொள்ள வேண்டும். அது தான் நமக்குத் துணை.

நாம் எதை துணை என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். 

Wednesday, May 3, 2017

பழமொழி - தாம் தர வாரா நோய்

பழமொழி - தாம் தர வாரா நோய் 


பழமொழி என்பது அனுபவத்தின் சாரம். பட்டு , தெளிந்து சொன்னது. பழைய மொழிதானே , இந்த காலத்துக்கு ஒத்து வருமா என்று நினைத்து ஒதுக்கி விடக் கூடாது. ஆராய்ந்து பார்த்து அதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை அல்லவா.

ஏதாவது துன்பம் வந்தால், எனக்கு மட்டும் ஏன் இப்படி துன்பம் வருகிறது, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கே இந்த மாதிரி துன்பங்கள் ஏன் வருகிறது என்று நொந்து கொள்பவர்கள் பலர்.

ஏதோ தாங்கள் ஏதோ தவறே செய்யாதவர்கள் போல.


"தாஅம் தரவாரா நோய்." என்கிறது பழமொழி.

அப்படினா என்ன ?

நாமே  நமக்கு துன்பம் செய்து கொள்வது அல்லாமல் வேறு யாரும் நமக்கு துன்பம் செய்வது இல்லை

என்று அர்த்தம்.

அது சரியா என்று யோசித்துப் பார்ப்போம்.

பெரியவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்க மாட்டோம். எனக்குத் தெரியாதா என்று மனம் போன வழியில் சென்றிருப்போம். அது எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போய் , இறுதியில் துன்பத்தில் தள்ளி விடும்.

தவறான வழியில் செல்பவர்கள் தங்களுக்கு தாங்களே துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

"வந்திருப்பவன் சாதாரணமான ஆள் இல்லை. அவன் கேட்கும் மூன்றடி நிலத்தை தானமாக கொடுக்காதே " என்று குருவான சுக்கிராச்சாரியார் கூறினார். "நான் எவ்வளவு பெரிய அரசன். எனக்குத் தெரியாத " என்று குரு வார்த்தையை மீறி மூன்றடி நிலம் தானம் கொடுக்க ஒத்துக் கொண்டான் மாவலி சக்ரவர்த்தி. இருந்த சொத்தெல்லாம் இழந்து, பாதாளத்தில் அழுந்தினான் .

பெரியவர் சொல் கேளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கில் சென்றதனால் தேடிக் கொண்ட வினை அது.

பாடல்

ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
தாஅம் தரவாரா நோய்.

பொருள்

ஆஅம் = ஆம்

எனக்கெளி தென்றுலகம் = எனக்கு எளிது என்று உலகம்

ஆண்டவன் = ஆண்டவன் (மாவலி)

மேஎந் துணையறியான் = மேவும் துணை அறியான்

மிக்குநீர் = மிகுந்த நீர்

பெய்திழந்தான் = பெய்து இழந்தான்

தோஓ முடைய = குற்றம் உள்ள காரியங்களை

தொடங்குவார்க் கில்லையே = தொடங்குவார்க்கு இல்லையே

தாஅம் = தாமே

தர = தருவதைத் தவிர

வாரா நோய் = (வேறு) நோய் வராது  . (நோய் = துன்பம்)


நல்லவர்களை, படித்தவர்களை , அனுபவம் உள்ளவர்களை துணையாகக் கொள்ள வேண்டும்.

அவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கு துன்பத்தில் முடியும்.

பழைய மொழி தான். சிந்தித்துப் பார்ப்போம். சரி என்றால் எடுத்துக் கொள்வோம்.




Monday, May 1, 2017

திருக்குறள் - எதை கேட்க வேண்டும்

திருக்குறள் - எதை கேட்க வேண்டும் 


எதை கேட்பது ?

செய்திகளும் , சேதிகளும் நம் காதுகளில் அருவி போல் கொட்டிக் கொண்டே இருக்கின்றன.

எதை எடுப்பது, எதை விடுவது என்று புரியாமல் எல்லாவற்றையும் நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அந்த செய்திகள் நமக்குள் விளைவிக்கும் விளைவுகளை அறியாமல் எல்லாவற்றையும் உள்ளே வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

வள்ளுவர் சொல்கிறார் எதை கேட்க வேண்டும், எவ்வளவு கேட்க வேண்டும்.

அவர் சொல்வதை கேப்டப்போமா ?

பாடல்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.

பொருள்

எனைத்தானும் = எவ்வளவு சிரியதாயினும்

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க

அனைத்தானும் = கேட்ட அளவுக்கு

ஆன்ற = நிறைந்த

பெருமை தரும் = பெருமை தரும்


நல்லவற்றை கேட்டால் பெருமை தரும். அவ்வளவுதானே ? இது என்ன பெரிய பெரிய விஷயம். இது தான் எல்லோருக்கும் தெரியுமே என்று நினைக்கலாம்.

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் அதில் உள் அடங்கி இருக்கும் பொருள் விளங்கும்.

எனைத்தானும் = எவ்வளவு சிறிதாயினும். சிறியது என்பது கேட்கும் பொருளாக இருக்கலாம், கேட்கும் கால அளவாக இருக்கலாம்.

ஒவ்வொரு நாளும், 5 நிமிடம், 10 நிமிடம் கூட போதும். நல்லதை கேட்க வேண்டும்.

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க வேண்டும். அது தான் சிக்கல். எது நல்லது ? எப்படி கண்டு பிடிப்பது ? டிவி செய்திகள், யார் யாரை கொலை செய்தார்கள், யாரை யார் ஏமாற்றினார்கள், சீரியல்கள், ஒன்றுக்கும் உதவாத திரைப்படங்கள், நகைச்சுவை என்ற பெயரில் கொட்டப்படும் குப்பைகள்...இவை எல்லாம் நல்லவையா ?

நல்லது என்பதற்கு இரண்டு பரீட்சை உண்டு. அதில் தேறினால் அது நல்லது.

அது, ஒரு செய்தி நமக்கு இம்மைக்காவது அல்லது மறுமைக்காவது அல்லது இரண்டுக்கும் பயனுள்ளதாக இருக்குமா ?

ஒன்றை கேட்பதனால் இந்தப் பிறவியில் ,இந்த வாழ்க்கையில் ஏதாவது பயன் இருக்குமா ? பிறவி முடிந்த பின் , மறு உலகில் நன்மை பயக்குமா ? என்று அறிய வேண்டும்.

மறு பிறப்பு, சொர்கம் இவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. இந்த வாழ்க்கைக்கு நன்மை பயக்குமா ? நன்மை என்றால் எந்த விதத்தில் நன்மை என்று அறிந்து கொண்டு கேட்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 5 நிமிடம் நல்ல விஷயங்களை கேட்டால் என்ன பெரிய பலன் வந்து விடும் என்று நாம் நினைக்கலாம்.

சிறு சிறு மழைத் துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாய் மாறி பலன் தருவது போல , சின்ன சின்ன நல்ல விஷயங்கள் பின்னாளில் பெரிய நனமை பயக்கும்.


ஆன்ற = ஆன்ற என்றால் அகன்ற , பெரிய என்று பொருள். ஆன்றோர். கொஞ்சம் கொஞ்சம் கேட்டால் கூட, கேட்ட அளவுக்கு  மிகுந்த பெருமை தரும் என்கிறார்.

இதில் மறைந்து கிடைக்கும் பொருள் எது என்ன என்றால், நல்லதை கேட்டால் ஆன்ற பெருமை தரும் என்றால், தீயதை கேட்டால் ?

தீயனவற்றை கேட்டால்  பெரிய தீமை வந்து சேரும் என்பது உணர பட வேண்டிய ஒன்று.

நல்லது எல்லாவற்றை கொஞ்சம் கேட்டாலும் அந்த அளவுக்கு ஆன்ற தீமையை தரும்.

நல்லது அல்லாதவற்றை கேட்கவே கூடாது.

சரி வள்ளுவர் கேட்பதை மட்டும்தானே சொல்லி இருக்கிறார் ? பார்ப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. படிப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. தீயதை படிக்கலாமா ?

பார்ப்பதை தவிர்க்க இமை இருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டால் பார்க்காமல் இருந்து விடலாம்.

படிப்பதை எளிதாக நிறுத்தி விடலாம்.

காதுக்கு ஒரு மூடி இல்லை. காதில் விழுவதை நம்மால் தடுக்க முடியாது.

எங்கிருந்து தீய சொற்கள் வருகின்றனவோ, அங்கிருந்து விலகி விடவேண்டும். அங்கேயே இருந்தால் அவை காதில் விழுந்து கொண்டே இருக்கும். தடுக்க முடியாது. தீயவர்கள் இருக்கும் இடம் விட்டு உடனே விலகி விட வேண்டும். டீவியை உடனே நிறுத்தி விட வேண்டும். மாறாக அதிக சப்தம்  வைத்து கேட்டுக் கொக்ண்டிருக்க கூடாது.

நல்லதைக் கேளுங்கள். எவ்வளவு கொஞ்சமாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் ஒரு சுவை வந்து விட்டால், மேலும் மேலும் கேட்கத் தூண்டும்.

நல்லதை, கேட்க கேட்க நல்லதுதான்.