பெரிய புராணம் - மனு நீதி சோழன் - மெய் நடுங்குற்று வீழும்
மனு நீதி சோழனின் மகன், பட்டத்து இளவரசன், தேரில் சென்று கொண்டு இருக்கிறான். அப்போது யாரும் காண்பதற்குள் ஒரு இளம் கன்று துள்ளி ஓடி வந்தது என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.
அப்படி துள்ளி வந்த கன்று, தெரியாமல் தேர் செல்லும் வழியில் குறுக்கே வந்தது. அதனால், அந்தத் தேரின் பொன்னால் ஆன சக்கரம் அந்த கன்றின் மேல் ஏறியது. கன்று இறந்து போனது. இறந்த கன்றைக் கண்டு தாய் பசு வருத்தியது.
பாடல்
அம்புனிற் றாவின் கன்றோ ரபாயத்தி னூடுபோகிச்
செம்பொனின் றேர்க்கான் மீது விசையினாற் செல்லப்பட்டே
உம்பரி னடையக் கண்டங் குருகுதா யலமந்தோடி
வெம்பிடு மலறுங் சோரு மொய்ந்நடுக் குற்று வீழும்.
சீர் பிரித்த பின்
அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி
செம்பொனின் தேர் கால் மீது மீது விசையினால் செல்லப்பட்டே
உம்பரின் அடைய கண்டு அங்கு உருகும் தாய் அலமந்து ஓடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுங்குற்று வீழும்
பொருள்
அம்அ =அந்த
புனிற்று = அப்போது தான் பிறந்த
ஆவின் = பசுவின்
கன்று = கன்று
ஓர் = ஒரு
அபாயத்தின் = அபாயத்தின்
ஊடு போகி = இடையே சென்று
செம்பொனின் = செம்மையான பொன்னால் செய்யப்பட்ட
தேர் கால் மீது = தேரின் சக்கரத்தின் மீது
விசையினால் = வேகமாக
செல்லப்பட்டே = செலுத்தப்பட்டே
உம்பரின் = தேவர் உலகை
அடைய கண்டு = அடையக் கண்டு
அங்கு = அந்த இடத்தில்
உருகும் = மனம் இறுகும்
தாய் = தாய் பசு
அலமந்து ஓடி = எ அங்கும் இங்கும் திசை தெரியாமல் ஓடி
வெம்பிடும் = மனம் வருந்திடும்
அலறும் = வாய் விட்டு அலறும்
சோரும் = சோர்ந்து இருக்கும்
மெய் = உடல்
நடுங்குற்று = நடுக்கம் கொண்டு
வீழும் = கீழே விழும்
ஒரு பசுவின் சோகத்தை சொல்ல எத்தனை வார்த்தைகளை உபயோகப் படுத்துகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.
உருகும் - அலமந்து - ஓடும் - வெம்பும் - அலறும் - சோரும் - மெய் நடுங்குறும் - வீழும்.
அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை
என்பார் பேராசான் வள்ளுவர்.
பசுதானே, விலங்கு தானே என்று விட்டு விடவில்லை. புதிதாக கன்றை ஈன்ற பசு , தன் கன்றை நாவால் நக்கிக் கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்காது.
"கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே" என்பார் மணிவாசகர்.
(கற்றா = கன்றை ஈன்ற பசு )
விலங்குகளை வேட்டையாடுவதும், அவற்றை கொன்று தின்பதும் நிறைந்த இந்தக் காலத்தில், உயிர்கள் மேல் அருள் செலுத்தும் இது போன்ற நூல்கள் கட்டாயம் தேவை.
மனிதன் உணர்வுகள் நாளாக நாளாக மழுங்கி கொண்டே போகிறது. விலங்கை கொல்வது சரி , அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நினைக்கத் தொடங்கும் போது , நாளடைவில் மனிதர்கள் கொல்லப் படுவதும் பெரிய விஷயம் இல்லை என்று ஆகி விடும்.
"அந்த விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் ?"
"ஒரு நாலஞ்சு பேர் இருக்கும் "
"ஓ..அவ்வளவுதானா "
என்று கேட்டு விட்டு மேலே போய் கொண்டே இருக்கும் காலம் வந்து விட்டது.
மனித மனதில் ஈரத்தை கொண்டு வர, மனித மனதில் அன்பையும், அருளையும் கொண்டு வர இது போன்ற உயரிய நூலகளை படிக்க வேண்டும்.
பொழுது போகாமல் அல்ல, ஒரு கன்னுக்குட்டி இறந்ததை பாட்டாக பாடி வைத்தது.
ஒன்றிப் படித்தால்,நம் விழி ஓரம் ஈரம் கசியலாம்.
அது அருள். அந்த அருள் வீடு பேற்றை நோக்கி நம்மை செலுத்தும்.
இன்னொரு முறை பாடலை வாசித்துப் பாருங்கள்.
மனம் இலேசாக அதிர்ந்தால் , உங்களுக்குள்ளும் அன்பும், அருளும் இருக்கிறது என்று அர்த்தம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.
http://interestingtamilpoems.blogspot.com/2017/07/blog-post_22.html