திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய்
நாம் ஒரு வழியில் , ஏதோ ஒரு வேலையாகச் சென்று கொண்டிருப்போம். போகிற வழியில் ஏதோ ஒரு கடையில் நல்ல உணவு சமைக்கும் வாசம் வரும். "அடடா , ஏதாவது சாப்பிட்டு விட்டு போனால் என்ன " என்று தோன்றும் நமக்கு.
போகிற வழியில் , ஒரு குளிர் பானத்தின் விளம்பரம் கண்டால், தாகம் எடுப்பது போலத் தோன்றும்.
அழகான பெண்ணை கண்டால், ஏதேதோ எண்ணம். இப்படி நம் புலன்கள், நம்மை , நாம் செல்ல நினைத்த இடத்துக்கு செல்ல விடாமல் அது வேண்டும்,இது வேண்டும் என்று இழுத்து அலைக் கழிக்கின்றன.
ஆசைப் படுவது தப்பா என்ன ? ஒரு சுவையான, உருசியான பண்டத்தைப் பார்த்தால் அதை சுவைக்க ஆசைப் படுவது என்ன பாவமா என்றால் இல்லை தான்.
சிக்கல் சுவைப்பதோடு முடிவது இல்லை.
ஒன்றை சுவைத்தால் , இன்னொன்று தேடும். இதே போல வேறு என்ன என்ன இருக்கிறது என்று மனம் தாவும். நிறைய உண்டால் நோய் வரும். அதற்கு மருந்து. அந்த மருந்தின் பக்க விளைவு. இப்படி வாழ்க்கை எங்கோ தொடங்கி எங்கோ போய் விடும்.
மனைவிதான், அன்புதான், இனிமைதான் என்று திருமணம் செய்து கொள்கிறான். அதோடு நிற்கிறதா ? பிள்ளைகள், பொறுப்பு என்று ஆயிரம் சிக்கல் கூடவே வருகின்றன.
முதலில் ஏதோ நமக்கு இன்பம் தருவது போல இழுத்துக் கொண்டு போய் , பின்னால் பெரிய சிக்கலில் மாட்டி விடுபவை இந்த புலன்கள்.
சரி, புலன் இன்பங்கள் முதலில் இன்பம் போல் இருந்தாலும், பின்னால் சிக்கல் நிறைய இருக்கிறது என்று புரிகிறது.
அதற்காக இன்பமே வேண்டாம் என்று இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும், அது ஒரு வாழ்க்கையா ? அதற்கு இந்த வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று நாம் நினைக்கலாம்.
மணி வாசகர் சொல்கிறார், இன்பங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று புறத்தே , வெளியே இருக்கும் இன்பம். புலன்கள் மூலம் பெரும் இன்பம்.
இன்னொரு இன்பம் இருக்கிறது. அது உள்ளுக்குள் இருந்து வரும் இன்பம். அதற்கு புலன்கள் வேண்டாம். வெளி உலக பொருள்களோ , மாற்றார்களோ வேண்டாம். உள்ளே இருந்து ஊற்றெடுக்கும் இன்பம் ஒன்று இருக்கிறது. அது வற்றாத இன்பம். திகட்டாத இன்பம்.
அதை நாம் அவ்வப்போது அனுபவித்து இருக்கிறோம். நமக்கு அது கோடி காட்டி விட்டுப் போகிறது.
ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு நல்ல இசையை கேட்கிறீர்கள். உங்களை அறியாமலேயே உங்கள் கண்கள் மூடும். ஏன் ? காதுதானே கேட்கிறது. கண் ஏன் மூடுகிறது ? சிந்தித்துப் பார்த்தால் தெரியும், அந்த இனிய இசையின் இன்பம், உங்களுக்குள் இருக்கிறது.
இல்லை, அந்த இசையில் தான் இருக்கிறது என்றால், எப்போதும் அது இன்பம் தர வேண்டும் அல்லவா ? எல்லோருக்கும் இன்பம் தர வேண்டும் அல்லவா ?
ஒரு துண்டு லட்டை வாயில் போடுங்கள்....உங்களை அறியாமலேயே கண்கள் மூடும், அந்த இன்பத்தை நீங்கள் உள்ளுக்குள் அனுபவிப்பீர்கள்.
ஆனால், அந்த இன்பம் லட்டு கரைந்து தொண்டையை தாண்டும் வரை தான்.
வெளியில் இருந்து வரும் இன்பங்கள்....சீக்கிரம் மறைந்து விடும்.
ஆனால், உள்ளுக்குள் இருக்கும் இன்பம், மறையவே மறையாது.
நீங்கள் அந்த இன்பத்தை கண்டு விட்டால், அனுபவித்து விட்டால், அதற்குப் பிறகு வெளியில் உள்ளவைகளும் உங்களுக்கு நீங்காத இன்பத்தைத் தரும்.
உள்ளும் வெளியும் ஒன்றாகக் கலந்து , ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
மாணிக்க வாசகர் சொல்கிறார்,
மாறி நின்று, வஞ்சகம் செய்து என்னை சிக்கலில் ஆழ்த்தும் ஐந்து புலன்களின் வழியை அடைத்து, என்னுள்ளே தோன்றும் இன்பமே , சிவனே, நீ என் அன்பானவன் என்று.
பாடல்
மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!
பொருள்
மாறி நின்று = என் எண்ணங்களுக்கு, என் நோக்கங்களுக்கு , என் குறிக்கோளுக்கு மாறி நின்று
என்னை மயக்கிடும் = என்னை மயக்கம் செய்யும்
வஞ்சப் = வஞ்சகமான
புலன் = புலன்கள்
ஐந்தின் = ஐந்து புலன்களின்
வழி அடைத்து = வழியை அடைத்து
அமுதே ஊறி நின்று; = எனக்குள் அமுதமாக ஊறி நின்று
என் உள் எழு பரஞ்சோதி! = எனக்குள்ளே எழும் உயர்ந்த ஜோதியே
உள்ளவா = உள்ளவனே
காண வந்தருளாய் ன்= நான் உன்னை வெளியே காணும்படி வந்து அருள்வாய்
தேறலின் தெளிவே! = தேனின் தெளிவே
சிவபெருமானே! = சிவ பெருமானே
திருப்பெருந்துறை உறை சிவனே! = திருப்பெருந்துறை என்ற தலத்தில் வசிப்பவனே
ஈறு இலாப் = இறுதி இல்லாத
பதங்கள் = நிலைகள்
யாவையும் = எல்லாவறையும்
கடந்த இன்பமே! = கடந்த இன்பமே
என்னுடை அன்பே! = என்னுடைய அன்பே
எத்தனையோ பட்டங்கள். ஒவ்வொரு பட்டத்திலும் ஒரு இன்பம்.
மகள், கன்னிப் பெண், மனைவி, தாய், பாட்டி
மகன், பையன், வாலிபன், கணவன், தந்தை, தாத்தா
என்று ஒவ்வொரு கட்டமாக வாழ்வில் பல பட்டங்கள். பதங்கள் . ஒவ்வொன்றிலும் ஒரு இன்பம். இவை அனைத்தையும் கடந்த இன்பம் இறைவன் தருவது.
இறைவன் என்பவன் ஏதோ ஒரு ஆள் அல்ல. அவன் அன்பின் மொத்த குறியீடு. அன்பு என்னவெல்லாம் செய்யுமோ அதுவே இறைவன் செயல்பாடு.
வெளி உலக இன்பங்கள் மறையும் போது , உள்ளே ஊறும் அமுத ஊற்று போன்றவன் அவன்.
ஆனந்தமாய் , என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் என்பார் அபிராமி பட்டர்
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே
தித்தித்தது இருக்கும் அமுது கண்டேன்....இந்த உலகையே மூழ்க வைக்கும் பரம ஆனந்த சாகரம் என்பார் அருணகிரிநாதர்
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.
அந்த இன்பத்தை அறிந்து கொண்டால், பின் உலக இன்பங்கள் ஒன்றும் பெரிதாக இருக்காது.
இனிப்பான ஒரு பலகாரத்தை தின்றபின் காப்பி குடித்தால் அது கசக்கும் அல்லவா ? அது போல அந்த உள்ளுறை இன்பத்தை அறிந்து கொண்டால் இந்த உலக இன்பங்கள் , இன்பங்கள் போலவே தோன்றாது. துன்பம் போல இருக்கும்.
அந்த பரம ஆனந்தத்தை சுவைத்து விட்டால் கரும்பு துவர்க்கும் , செந்தேன் புளிக்கும் என்கிறார் அருணகிரிநாதர்
பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!
உள்ளுக்குள் இருக்கும் ஆனந்தத்தை அறிந்து கொண்டார் மணிவாசகர்.
இந்த உலகை என்ன செய்வது. இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள் இவற்றோடு எவ்வாறு ஒன்றுவது. இந்த உலகில் எப்படி செயல்படுவது ? எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி விடுவதா ?
இல்லை, இந்த இன்பத்தை எனக்கும் வெளியிலும் காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார்.
"உள்ளவா காண வந்தருளாய்"
வெளியிலும், மற்ற உயிரிகளிலும் உன்னை காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார்.
இந்த உரையை மறந்து விடுங்கள்.
பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.