Tuesday, August 29, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொடும் பாசக் கையினர்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொடும் பாசக் கையினர் 


தன் மனைவியை வேடன் தான் கொன்று விட்டான் என்று ஒரு வேதியன் பாண்டிய மன்னனிடம் முறையிட்டான். வேடனோ, தான் கொல்லவில்லை என்கிறான். அமைச்சர்களும் , தங்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை என்று சொல்லி விட்டார்கள். அப்போது, அரசன், இறைவனிடம் முறையிட்டான்.  அப்போது, ïஇந்த ஊரில் , வணிகர் தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது. அங்கு , அந்த மறையவனையும் அழைத்துக் கொண்டு வா, உன் சந்தேகத்தை போக்குவோமென்று" அசரீரி கேட்டது.

அரசனும், அந்த வேதியனை அழைத்துக் கொண்டு, இரவில் அந்தத் திருமண வீட்டுக்குச் சென்றான். இருவரும் இருளில் மறைந்து இருந்து அங்கு நடப்பவற்றை கண்டனர்.

அப்போது, அங்கு இரண்டு எம தூதர்கள் வந்தார்கள். இறைவன் அருளால், அவர்கள் பேசுவது எல்லாம் அரசனுக்கும், அந்த மறையவனுக்கும் கேட்டது.

பாடல்

அன்று இறைவன் அருளால் அங்கவர் கேட்க அம்மனையின்
மன்றல் மகன் தனக்கு அளந்த நாள் உலப்ப மறலி  இருள்
குன்றம் இரண்டு என விடுத்த கொடும் பாசக் கையினர்  வாய்
மென்று வரும் சினத்தவரில் ஒருவன் இது வினவும்  ஆல்.


பொருள்

அன்று  = அன்று

இறைவன் அருளால் = இறைவன் அருளால்

அங்கவர் = அங்கு அவர்கள்

கேட்க  = கேட்கும்படி

அம்மனையின் = அந்த திருமண வீட்டில்

மன்றல் மகன் தனக்கு = மணமகன் தனக்கு

அளந்த நாள் = கொடுத்த நாட்கள்

 உலப்ப = முடிவதால்

மறலி = எமன்

இருள் = கரிய

குன்றம்  = குன்றுகள்

இரண்டு = இரண்டு

என = போல

விடுத்த = அனுப்பிய

கொடும் பாசக் கையினர் = கொடிய பாசக் கயிற்றினை கொண்டவர்கள்

வாய் மென்று  = வாயை மென்று கொண்டு (அதாவது உதட்டை கடித்துக் கொண்டு)

வரும் சினத்தவரில் = வருகின்ற சினத்தால்

ஒருவன் இது வினவும்  ஆல் = ஒருவன் இப்படி கேட்டான்


"மறலி  இருள் குன்றம் இரண்டு என விடுத்த"

மறலி என்றால் எமன்.

மறல் + இ = மறலி . மறத்தல் இல்லாதவன். யாரை எப்போது கொண்டு போக வேண்டும் என்று மறக்காமல்  அந்த நேரத்தில் கொண்டு போய் விடுவான். அந்த வேதியனின் மனைவியின் வாழ் நாள் முடிந்து விட்டது. எனவே, மறக்காமல் கொண்டு போய் விட்டான் என்ற உள் குறிப்பு.

மறலி என்றால் மாறுதல் இல்லாதவன். நல்லவர், கெட்டவர் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர் என்று எந்த மாறுதலும் இல்லாதவன். எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பவன்.

மறலி வந்து நம் உயிரை எடுத்துக் கொண்டு போவான் அல்லவா ? அவன் வரும் வழியை அடைத்து விட்டால் ? எப்படி வருவான் ?

அவன் வரும் வழியை அடைக்கும் வழியை அபிராமி பட்டர் கூறுகிறார்.

அபிராமியை மனதில் நினைத்துக் கொண்டால் போதும்.  அவன் வரும் வழி அடைந்து விடும்.

"மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி" என்பார் அபிராமி பட்டர்.

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே

என்பது அபிராமி அந்தாதி.

அந்த எம தூதர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் ?

கேட்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_29.html

No comments:

Post a Comment