கம்ப இராமாயணம் - மாரீசன் - புலவியினும் வணங்கா முடி
https://interestingtamilpoems.blogspot.com/2025/08/blog-post.html
வில்லன் இல்லை என்றால் கதாநயாகன் இல்லை.
கதாநாயகனின் பெருமை எல்லாம் வில்லனைச் சேர்ந்தது.
இராவணன் சீதையைச் தூக்கிச் செல்லவில்லை என்றால், பதினாலு வருடம் இராமனும், சீதையும் காட்டில் இருந்து விட்டு பின் நாட்டுக்குப் போய் இருப்பார்கள். அதில் இராமனின் பெருமை என்ன இருக்கிறது ? அப்பா காட்டுக்குப் போகச் சொன்னார். போனான். பின் வந்தான் என்று கதை முடிந்து இருக்கும்.
இராமனின் ஆற்றலை காட்ட ஒரு இராவணன் வேண்டும்.
இராமன் தெருவோரம் போகும் ஒரு மெலிந்த ஒருவனை வென்றான் என்றால் அது ஒரு செய்தி கூட இல்லை. கொசுவை அடித்துக் கொல்வது என்ன பெரிய செய்தியா?
இராமனின் பெருமை உயர வேண்டும் என்றால் அவன் இராவணன் என்ற மிகப் பெரிய வீரனை, தவ வலிமை உடையவனை, பேரும் புகழும் கொண்டவனை வென்றான் என்ற சொல்ல வேண்டும்.
இராமன் வென்ற இராவணன் எப்பேற்பட்டவன் என்று கம்பன் விவரித்துக் கொண்டு போகிறான்.
எவ்வளவுக்கு எவ்வளவு இராவணனை தூக்கிப் பேசுகிறானோ, அதை விட ஒரு படி இராமன் புகழ் வரப் போகிறது என்று அர்த்தம். அப்பேற்பட்ட இராவணனை, இராமன் வென்றான் என்று வர வேண்டும்.
"சிவன், திருமால், பிரமன் ஆகிய மூவரும், இராவணனை வெல்ல முடியாது. மும்மூர்திகளாலும் வெல்ல முடியாதவன் என்றால் அவனை வேறு யாரால் வெல்ல முடியும்.
எப்பேற்பட்ட ஆள் ஆனாலும், வீட்டில், படுக்கை அறையில், மனைவியிடம் அல்லது காதலியிடம் இறங்கி வந்தே ஆக வேண்டும். அது தான் கலவியில் இன்பம். அதட்டி, மிரட்டி, இன்பம் அனுபவிக்க முடியுமா?
ஆனால், இராவணன், படுக்கை அறையிலும் வணங்கா முடி உள்ளவனாம். அப்படி என்றால் வேறு எங்கு வணங்கி இருப்பான்? "
பாடல்
புலியின் அதள் உடையானும், பொன்னாடை
புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு
யாவர், இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்
தோள், சேயரிக் கண், வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
மகுட நிரை வயங்க மன்னோ.
பொருள்
புலியின் = புலியின்
அதள் = தோலை
உடையானும் = உடையாகக் கொண்ட சிவனும்
பொன்னாடை = பட்டு , பீதாம்பரம்
புனைந்தானும் = உடுத்திய திருமாலும்
பூவினானும் = தாமரை பூவில் தோன்றிய பிரமனும்
நலியும் = (இராவணனை) வெல்லும்
வலத்தார் அல்லர் = வல்லமை உடையவர்கள் அல்ல
தேவரின் = அப்படி இருக்கும் போது, தேவர்களில்
இங்கு யாவர் = யார் இங்கு
இனி நாட்டல் ஆவார்? = இனி அவனை வெல்லப் போக்கிரார்கள்
மெலியும் இடை = மெலிந்து கொண்டே போகும் இடுப்பு
தடிக்கும் முலை = தடிக்கும் மார்பகங்கள்
வேய் = மூங்கில் போல்
இளந் தோள் = இளமையான தோள்கள்
சேயரிக் கண் = சிவந்த கண்கள்
வென்றி மாதர் = வெற்றி கொள்ளும் பெண்கள்
வலிய நெடும் புலவியினும் = நீண்ட கலவி நேரத்திலும்
வணங்காத = வணங்காத
மகுட நிரை வயங்க மன்னோ = மகுடங்களை கொண்டவன்
படுக்கை அறையில் கூட தலை வணங்காதவன்.
தனிமையில், மோகம் கொண்ட நேரம், ஆண், பெண்ணிடம் அடிமையாவது இயல்பு.
முருகன், வள்ளியிடம் "நீ எனக்கு என்ன ஆணை இடுகிறாயோ அதை செய்வேன் என்று வள்ளியின் பாதங்களை பிடித்துக் கொண்டு கேட்டானாம்".
"பணியா என வள்ளி பதம் பணியும்,
தணியா அதி மோக தயாபரனே"
என்பது அருணகிரி வாக்கு
அவள் காலடியில் பணிந்து நிற்பானாம்.
அதுதான் ஆண்மை. பெண்ணிடம் தோற்க வேண்டும். என் முன்னால் அவன் பணிந்து நிற்கிறான் என்று அவள் பெருமை கொள்ள வேண்டும். அது உயர்வு தாழ்வு அல்ல. அன்பின் வெளிப்பாடு.
இராவணனுக்கு அதெல்லாம் தெரியாது. அங்கும் கூட அவன் வணங்கா முடியன்.
அதுதான் அரக்க குணமோ ?