கம்ப இராமாயணம் - திரிசடை - இன்சொல்லி
https://interestingtamilpoems.blogspot.com/2026/01/blog-post.html
பின் வரும் ஒரு சூழ்நிலையை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பெரிய, திருத்தப்பட்ட வனம். சுற்றிலும் பயங்கர தோற்றம் கொண்ட அரக்கியர். இடையிடையே இராவணன் வேறு வந்து தொந்தரவு செய்கிறான். இராமன் எப்போது வருவானோ, வரமாட்டானோ என்ற ஐயம். பேச்சு துணைக்குக் கூட ஒரு ஆள் இல்லை. சீதையோ, செல்லமாக வளர்ந்த ஜனக மகாராஜனின் செல்லப் பிள்ளை. அவளுக்கு எப்படி இருக்கும் அந்த சிறை?
இராமன் அனுபவித்தது ஒரு துயர் என்றால், சீதை அனுபவித்தது அதனினும் பல மடங்கு.
அத்தகைய சூழ் நிலையில் மனதுக்கு ஆறுதலாக பேச ஒருவர் கிடைத்தால் எப்படி இருக்கும்? பாலைவனத்தின் நடுவில் ஒரு நீர் ஊற்றை கண்ட மாதிரி இருக்கும் அல்லவா.
வீடணனின் மகள் திரிசடை அப்படி வருகிறாள். சீதைக்கு ஆறுதல் சொல்கிறாள்.
அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தைகளை காண இருக்கிறோம்.
அதற்கு முன்,
நம்மைச் சுற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ கவலைகளில் இருக்கிறார்கள். நம்மிடம் எல்லாம் சொல்லி இருக்க மாட்டார்கள். சொல்லாத, சொல்ல முடியாத வேதனைகள் பல இருக்கும்.
எப்போதுமே, யாரிடம் பேசினாலும், அவர்களிடம் இனிமையாக பேசினால் என்ன. நம் வார்த்தை அவர்கள் கவலைக்கு ஒரு மருந்தாக இருக்கக் கூடும். மனதுக்கு ஒரு ஆறுதலாக இருக்கலாம்.
நம் வார்த்தைகள் ஆறுதல் தருவதாக, நம்பிக்கை ஊட்டுவதாக, இதம் தருவதாக இருக்கட்டும்.
திரிசடை மூலம் கம்பன் ஏதோ சொல்ல வருகிறான் என்றால், நான் இதைத்தான் சொல்வேன்.
கவலைப் படுபவர்களுக்கு உங்கள் வார்த்தை இனிமை சேர்க்கட்டும்.
நம்பிக்கை இழந்தவர்களுக்கு உங்கள் வார்த்தை தைரியத்தைத் தரட்டும்.
சோர்ந்தவர்களுக்கு, உங்கள் வார்த்தை உற்சாகத்தைத் தரட்டும்.
இனி, காப்பியத்துக்குள் நுழைவோம்.