Thursday, December 7, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - தஞ்சாவூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - தஞ்சாவூர்


பெரும்பாலான சமயங்களில் நமக்கு மனம் ஒரு பக்கம் போகிறது, உடல் இன்னொரு பக்கம் போகிறது.

மனம் சொல்கிறது, இருந்து படி என்று. உடல் சொல்கிறது, "போதும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் " என்று.

சில சமயம் உடல் துடிதுடிப்பாக இருக்கும் , மனம் சோர்ந்து போய் இருக்கும்.

சில பேரை பார்த்தால் கோபமும் , எரிச்சலும் வரும். நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கலாம் போல இருக்கும். மனம் சொல்லும் , திட்டச் சொல்லி. உடல் மறுக்கும். மேலதிகாரியாக இருப்பார். அசடு வழிந்து விட்டு வர வேண்டி இருக்கும்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

என்று வேண்டுவார் வள்ளலார்.

மனதும் உடலும் ஒத்து போவது என்பது எப்போதும் நிகழ்வதும் இல்லை.

There is a constant fight between head and heart என்று சொல்லுவார்கள்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்லுகிறார்....

"நெஞ்சே நான் சொல்வதைக் கேள். தஞ்சையில் உள்ள பெருமாளை போற்று.
அது உனக்கு நல்லது. எனக்கும் நல்லது " என்கிறார்.

பாடல்


ஓதக்கேணெஞ்சே யுனக்குமிதுநன் றெனக்கு
மேதக்கநன்மையினிவேறில்லை - போதப்
பெருந்தஞ்சைமாமணியைப் பேணிவடிவம்
பொருந்தஞ்சைமாமணியைப் போற்று.


சீர் பிரித்த பின்

ஓதக் கேள் நெஞ்சே உனக்கும் இது நன்று எனக்கும்
மேதக்க நன்மை இனி வேறில்லை  - போதப்
பெருந் த ஞ்சை மா மணியைப் பேணி வடிவம்
பொருந்திய அஞ்சை மா மணியைப் போற்று.

பொருள்


ஓதக் கேள் நெஞ்சே = சொல்லுவதை கேள் நெஞ்சே

உனக்கும் = உனக்கும்

இது நன்று = இது நல்லது

எனக்கும் = எனக்கும்

மேதக்க  = மேன்மை தரத் தக்க

நன்மை = நல்லது தரக் கூடியது

இனி வேறில்லை = இனிமேல் வேறு இல்லை

போதப் = சிறந்த

பெருந் த ஞ்சை = பெரிய தஞ்சையில்

மா மணியைப் = பெரிய மணியை

பேணி = போற்றி

வடிவம் = வடிவம்

பொருந்திய = பொருத்தமாக அம்மனித

அஞ்சை = ஐந்தை

மா = பெரிய , உயரிய

மணியைப் போற்று= மணியைப் போற்று


தஞ்சை மாமணி என்பது தஞ்சாவூரில் உள்ள பெருமாளின் நாமம்.

பொருந்திய அஞ்சை என்பதற்கு என்ன அர்த்தம்  ? எது பொருந்தியது ? எதில் பொருந்தியது ?

இதற்கு இரண்டு விதமாக பொருள் கூறலாம்.

ஒன்று பெருமாளின் ஐந்து பொருள்கள்

- சுதர்சன சக்கரம்
- பாஞ்ச சன்யம் என்ற சங்கு
- கௌமோதகீ என்ற கதாயுதம்
- நந்தகம் என்ற வாள்
- சார்ங்கம் என்ற வில்

இந்த ஐந்தும் பொருந்திய என்று கூறலாம்.

வேறொரு வகையில்

பரத்வம், வ்யூஹம், விபவம் அந்தர்யாமித்வம், அர்ச்சை என்பன.

பரத்வம்ப என்பது பரம பதத்தில் உள்ள நிலை

வ்யூஹம் என்பது  திருப்பாற்கடலில் எழுந்து அருளிய நிலை

விபவமாவது - இராமர், கிருஷ்ணர் என்ற அவதாரங்கள்

அந்தர்யாமித்வமாவது - உலகில் உள்ள அணைத்து பொருள்களிலும் நிறைந்து இருப்பது. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று பிரகலாதன் கூறிய நிலை

அர்ச்சை என்பது விக்கிரஹ வடிவில் இருப்பது

சைவத்திலும் சரி வைணவத்தில் சரி, ஆன்மாக்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப இறைவன் தோற்றம் அளிக்கிறான் என்று சொல்கிறார்கள்.

விறகில் தீயினன் , பால் படு நெய் போல மறைய நின்றுளன், மாமணி சோதியன்

என்பார் திருநாவுக்கரசர்.

சிலருக்கு விறகில் உள்ள தீ போல , உரசினால் பற்றிக் கொண்டு வெளியே வரும்.

சிலருக்கு பாலில் உள்ள நெய் போல , உறை விட்டு, தயிராக்கி, கடைந்து எடுத்தால் தான் வெண்ணெய் , நெய் எல்லாம் வரும்.

சிலருக்கு மணியில் உள்ள ஒளியைப் போல, லேசாக துடைத்தால் போதும் மணியில் இருந்து ஒளி வெளிப்படும்.

ஒரு இடத்துக்கு போக ஒருவர் வழி கேட்டால், அவர் எங்கு இருக்கிறாரோ அங்கிருந்து தான்  வழி சொல்ல வேண்டும்.

போய் சேர வேண்டிய இடத்துக்கு பக்கத்தில் இருப்பவருக்கு ஒரு மாதிரி வழி சொல்லலாம். ஊரை விட்டு ரொம்ப தள்ளி இருப்பவருக்கு வேறு மாதிரி வழி சொல்ல   வேண்டும். இரண்டு பேருக்கும் எப்படி ஒரே வழியைச் சொல்வது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று வைகை ஆற்றுக்கு பக்கத்தில் இருந்து கேட்டால் ஒரு மாதிரி வழி சொல்லலாம். மேலூரில் நிண்டு கேட்டால், வேறு மாதிரி வழி, சென்னையில் இருந்து  கேட்டால் இன்னொரு மாதிரி வழி, லண்டனில் இருந்து கேட்டால் வேறு வழி.

எல்லோருக்கும் ஒரே வழி என்பது சரிப்படாது.


போய் சேரும் இடம் ஒன்று தான். புறப்படும் இடம் வேறு.

அது போல, இறைவன் இருக்கும் இடம் ஒன்றுதான், ஒவ்வொருவர் இருக்கும் இடம் வேறு வேறு.

எனவே ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறான்.

ஒரு பெண் , அவளின் தந்தையிடம் ஒரு மாதிரி இருக்கிறாள், கணவனிடம் வேறு மாதிரி  இருக்கிறாள், பிள்ளையிடம் வேறு மாதிரி இருக்கிறாள்.

வீட்டு பெண்ணுக்கே இத்தனை வேடம் வேண்டி இருக்கிறது.

ஆண்டவனுக்கு எவ்வளவு வேண்டும்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த மனம் இருக்கிறதே, அது பாட்டுக்கு அலைந்து கொண்டே இருக்கும். அதை பிடித்து கட்டி போட முடியாது.

அப்படி ஓடும் மனதை, இறைவன் பால் திருப்பினால் , அதுக்கும் நல்லது நமக்கும் நல்லது என்கிறார் பிள்ளை பெருமாள் அய்யங்கார்.

மனம் ஓடும் இயல்பு உடையது.

எனவே, அவர் சொல்கிறார், பார், அங்கே சக்கரம், இங்கே கதை, அந்த பக்கம் வாள் , இந்தப் பக்கம் வில் என்று அவன் மேனியையே நீ எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கிறது என்று.

இரசித்து, அனுபவித்து படிக்க வேண்டிய பாடல்கள்.

நேரம் ஒதுக்கி அனுபவித்து படியுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_7.html



Sunday, December 3, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவுறையூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவுறையூர்


எவ்வளவோ படிக்கிறோம். எவ்வளவோ கேட்கிறோம். நேரில் கேப்பது அல்லாமால் இப்போது youtube என்று வசதி வேறு வந்து விட்டது. தரவிறக்கம் செய்து வேண்டும் போது கேட்டுக் கொள்கிறோம்.

இருந்தாலும், வாழ்க்கை என்னவோ அப்படியேதான் ஓடிக் கொண்டிருக்கிறது. எத்தனை படித்தாலும், கேட்டாலும் நடை முறை வாழ்க்கையில் அதை எல்லாம் மறந்து விட்டு , நமக்கு எது சௌகரியமோ , எது பிடித்து இருக்கிறதோ அதைச் செய்கிறோம். கேட்டால், அது எல்லாம் படிக்க , கேட்க நல்லா இருக்கும், நடை முறைக்கு ஒத்து வருமா என்று மேதாவி மாதிரி கேட்டு விட்டு , வேலையைப் பார்க்கப் போய் விடுகிறோம்.

இந்த சிக்கல் நமக்கு மட்டும் அல்ல, பிள்ளை பெருமாள் ஐயங்காருக்கும் இருந்திருக்கிறது.

பெருமாளே, நீ சிறப்பான பல திருப்பதிகளில் இருப்பவன். நானோ, மறதி உடையவன், நாயைப் போல கீழானவன். என் மனதில் வந்து எப்படி வந்து இருந்தாய். அதைச் சொல் , என்று பெருமாளிடம் வியந்து கேட்கிறார்.


பாடல்


சிறப்புடையசெல்வத்திருப்பதிகள்போல
மறப்புடையநாயேன்மனத்து - ளுறப்போந்
தறந்தையாநின்றவரங்கா திருவா
ழுறந்தையா யிங்குறைந்த தோது.


சீர் பிரித்த பின்


சிறப்பு உடைய செல்வ திருப்பதிகள் போல 
மறப்பு உடைய நாயேன் மனத்து - உறப் போந்து 
அறம் தையா நின்ற அரங்கா - திரு வாழ் 
உறந்தாய் இங்கு உறைந்தது ஓது 

பொருள்


சிறப்பு உடைய = பல சிறப்புகளை உடைய

செல்வ = செல்வம் தரும்

திருப்பதிகள் போல = திவ்ய தேசங்களைப் போல

மறப்பு உடைய நாயேன்  = மறதி உள்ள நாய் போன்ற கீழான

மனத்து = மனதினில்

உறப் போந்து = நன்றாக புகுந்து

அறம் தையா நின்ற = தர்மம் வழுவாமல் நின்ற

அரங்கா = அரங்கனே

திரு வாழ் = இலட்சுமி வாழும்

உறந்தாய் = திரு உறந்தை என்ற திவ்ய தேசத்தில் வசிப்பவனே

இங்கு உறைந்தது ஓது = என் மனதில் வந்து இருந்தது எப்படி என்று சொல்


நாய் நல்ல பிராணி தான். நன்றி உள்ளது. பல நல்ல குணங்கள் உள்ளது. இருந்தும், எவ்வளவுதான் சொன்னாலும், பழக்கினாலும், யாரும் இல்லாத சமயத்தில் , அது தெருவில் சென்று எதையாவது தின்று விடும். 

மனித மனமும் அப்படித்தான். எத்தனை படித்தாலும், கேட்டாலும், அதன் படி நடப்பது இல்லை. வாலை குழைத்துக் கொண்டு எங்கோதான் செல்லும்.

அது ஒரு புறம் இருக்கட்டும். 

வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார் என்றால் , நாம் வீட்டை இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருப்போம் அல்லவா ? சாமான்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி, புது துவாலை, சோப்பு என்று வைத்து , எப்போதும் வைத்திருப்பதை விட கொஞ்சம் அதிகம் கவனம் எடுத்து சரி செய்து வைப்போம் அல்லவா. 

வரும் விருந்து பெரிய விருந்தாக இருந்தால் ? ஒரு வேளை பெண் பார்க்க வருகிறார்கள், சம்பந்தம் பேச வருகிறார்கள் என்றால், இன்னும் முனைப்பாக வீட்டை  அழகு செய்வோம் அல்லவா.

வருபவர் ஆண்டவனாக இருந்தால் , அவன் இருக்கும் மன வீட்டை எப்படி வைத்திருக்க வேண்டும் ?

அவன் எப்போது வருவான் என்று சொல்ல முடியாது. 

எனவே எப்போதும், மனதை செம்மையாக வைத்திருக்க வேண்டும். 

என்ன ? சரிதானே ?


Friday, December 1, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவரங்கம்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவரங்கம் 



ஆச்சாரியார்களுக்கு வணக்கம் செய்த பின், நூலுக்குள் செல்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

முதல் திவ்ய தேசம், திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.

முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது மாதிரி முதல் பாடல் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் , "திருமாலின் நாபிக் கமலத்தில் வந்த பிரமனைத் தவிர , பற்றறவர்களை பற்றும் அந்த திருமால் கோவில் கொண்ட திருவரங்கத்தின் பெருமையை யாரால் சொல்லமுடியும் ? அதுவும் என் போன்ற சொல்லில் சோர்வு கொண்ட ஒருத்தனால் சொல்ல முடியுமா ?" என்று கேட்கிறார்.

பாடல்

சீர்வந்தவுந்தித்திசைமுகனாலல்லாதென்
சோர்வந்தசொல்லிற்சுருங்குமோ - வார்வ
மொருவரங்கங்கோயிலுகந்தவரையாள்வான்
றிருவரங்கங்கோயிற்சிறப்பு.

நேரடியாக படித்தால் கொஞ்சம் சிக்கலாகத் தெரியும். கொஞ்சம் சீர் பிரிப்போம். சீர் பிரித்த பின் , மிக எளிய தமிழ் தான் என்று விளங்கும்.


சீர் வந்த உந்தி திசை முகன் அல்லாது என் 
சோர்வு வந்த சொல்லில் சுருங்குமோ ? ஆர்வ 
ஒருவர் அங்கு ஓயில் உகந்து அவரை ஆள்வான் 
திருவரங்க கோயில் சிறப்பு 


பொருள்


சீர் வந்த உந்தி = சிறப்பு உந்தியில் வந்த

திசை முகன் = ப்ரம்மா

அல்லாது என் = அல்லாது மாற்று ஒருவர் எவ்வாறு

சோர்வு வந்த சொல்லில் = குற்றம் உள்ள சொல்லில்

சுருங்குமோ ? = சுருக்கி கூற முடியுமோ ?

ஆர்வம் = ஆசை

ஒருவர் = ஒருவற்கு

அங்கு ஓயில் = அங்கு ஓய்ந்து போன பின்

உகந்து = மகிழ்ந்து

அவரை ஆள்வான் = அவரை ஆட் கொள்வான்

திருவரங்க கோயில் சிறப்பு  = திருவரங்கத்தில் உள்ள கோவிலின் சிறப்பு


மேலெழுந்த வாரியாக பார்த்தால் சாதாரண பாடல் போலத் தெரியும். 

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடல். 

எதைத் தொடங்கினாலும் ஒரு மங்கல சொல்லோடு தொடங்க வேண்டும் என்பது தமிழ் மரபு. 

"சீர்" என்றால் சிறப்பு என்று பொருள். சிறந்த , உயர்ந்த என்ற மங்கலச் சொல்லோடு பாடலை தொடங்குகிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார். 

எதைச் செய்தாலும், பேசினாலும், தொடங்கினாலும் நல்லதையே நினைத்து தொடங்க வேண்டும். 

அடுத்தது அவை அடக்கம் என்று தனியாக பாடுவார்கள் . அது ஒரு நூல் மரபு. 

தன்னை தாழ்த்தி , பாடும் பொருளை, கருவை , படிக்கும் மற்றவர்களை உயர்த்திப் பாடுவது   அவை அடக்கம். 

பல மேலை நாட்டு உளவியல் அறிஞர்கள் அது ஒரு வித தாழ்வு மனப்பான்மை என்று கூறுகிறார்கள். தமிழர்கள் எப்போதும் தங்களை , தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். அது ஒரு வித மன நோய் என்று குறிப்பிடுகிறார்கள். (Inferiority complex). அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். 

அவை அடக்கம் பாடுவது , தன் திறமையை குறைத்து கூறுவதற்கு அல்ல. அறிவின், கல்வியின், ஆழம் தெரிந்ததால் வரும் அடக்கம். கல்வி எவ்வளவு பெரிய கடல். அதில் நாம் ஒரு ஆள் எவ்வளவு தெரிந்து கொள்ள முடியும் என்ற அறிவு முதிர்ச்சியால் வரும் உணர்வு அது. 

பிள்ளை பெருமாள் ஐயங்கார் தனியாக அவை அடக்கம் பாடவில்லை. முதல் பாடலிலேயே அதை சேர்த்து விடுகிறார். 

'சோர்வு வந்த என் சொல்லால் எப்படி பாட முடியும் " என்று அவை அடக்கம் கூறுகிறார். 

எதை தன்னால் பாட முடியாது என்று கூறுகிறார் ?

பெருமாளின் பெருமையையா ? இல்லை இல்லை. அவர் அவ்வளவு தூரம் எல்லாம் போகவில்லை . அந்த பெருமாள் கோவில் கொண்டிருக்கும் திருவரங்கத்தின் சிறப்பை தன்னால் பாட முடியாது என்கிறார். அப்படி என்றால், திருமாலின் பெருமையை நீங்களே அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவதைப் போல. 

அவை அடக்கத்திலும், மற்றொரு செய்தியை எப்படி வைக்கிறார் பாருங்கள். 

இன்னொரு மிக மிக முக்கியமான விஷயத்தை இங்கே கூறுகிறார். 


இறைவனை அடைய வேண்டும் அனைத்து அடியவர்களும் விரும்புவார்கள். சரி, எப்படி அவனை அடைவது ? நாமோ அவனை முன்னே பின்னே பார்த்தது கிடையாது.  ஒரு வேளை நாளை பெருமாள் நேரில் வந்து நின்றால், நம்மால் அவரை அடையாளம் காண முடியுமா ? நாம் பார்த்த படங்கள், சிற்பங்கள், சிலைகள் இவை போல இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருப்போம். அவர் வேறு விதமாக இருந்தால் ? குழம்பிப் போய் விடுவோம். 

சரி, அவன் இங்கே வந்தால்  நமக்கு அடையாளம் தெரியாது. நாம் அங்கே போனால் ? 

அங்கே எப்படி போவது ? விலாசம் இல்லையே ? விலாசம் இருந்தாலும், போகும் வழி தெரியாதே. பின் எப்படி போவது ?

இந்த சிக்கலில் இருந்து விடுபட ஒரு வழி சொல்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

நமக்கு அவனைத் தெரியாது. அவனுக்கு நம்மைத் தெரியும் தானே. அவனே வந்து நம்மை கூட்டிக் கொண்டு செல்லும் படி செய்தால் ? 

அது ஒரு நல்ல வழியாக தெரிகிறது அல்லவா ? நாம் அலையவே வேண்டாம். அவனே வந்து கூட்டிக் கொண்டு போவான் ?

எப்படி ?


"ஆர்வ  ஒருவர் அங்கு ஓயில் உகந்து அவரை ஆள்வான்"


ஆர்வம் ஓய்ந்தால் , அப்படிப்பட்டவரை அவனே வந்து ஆள்வான். 

ஆசை ஓய்ந்தால் , பற்று அற்று விட்டால் , அவனே வருவான். 

அதுவும் எப்படி வருவான், "உகந்து அவரை ஆள்வான்"...சந்தோஷமாக அவர்களை ஏற்றுக் கொள்ளவான். 


பற்றறவர்களை நோக்கி பகவான் ஆர்வத்துடன் வந்து ஏற்றுக் கொள்வான் என்கிறார். 

பற்றை விடுங்கள், அவன் உங்களைப் பற்றிக் கொள்வான். 

அப்படிப் பட்ட திருமால் இருக்கும் கோவிலின் சிறப்பை, ஒரு வேளை நான்முகனால் சொல்ல முடியலாம். என்னால் முடியாது என்கிறார். 

திருவரங்கம் கோவில் பல வரலாற்றுச் சிக்கல்கள் நிறைந்தது. அந்நிய படை எடுப்பில் பாதிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் தாண்டி இந்த கோவிலுக்கு ஒரு சிறப்பு என்று வைணவர்கள் கொண்டாடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. 

(நான் பாடலை விட்டு வெளியே செல்கிறேன் என்று எனக்குத் தெரிகிறது. இருந்தும், தொடர்பு கருதி அதைச் செய்கிறேன். மன்னிக்க).

திருமாலுக்கு ஐந்து நிலைகளை கூறப் படுகிறது 

அவை 

- பரத்துவம் 
- வியூகம் 

இவை இரண்டும் தவிர்த்து மற்றவை "அர்ச்சை " என்ற வகையை சார்ந்தவை. 

அந்த அர்ச்சை என்பது 

மாநுஷம் 
ஆர்ஷம் 
தைவம் 
ஸ்வயம்வ்யக்தம்

என்று நான்கு வகைப்படும் 

மானுஷம் என்பது சாதாரண மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்யப்படுபவை. 

ஆர்ஷம் என்பது  பெரிய மக ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை 
செய்யப்படுபவை. 

தைவம் என்பது தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்யப்படுபவை.

ஸ்வயம்வ்யக்தம் என்பது இதற்கும் ஒரு படி மேலே போய் இறைவனே சுயமாக உண்டாகி பின் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்யப்படுபவை. 

இராமாயணத்தில் , இராமன் மீண்டும் அயோத்தி திரும்பி , முடி சூட்டிக் கொண்டு எல்லோருக்கும் பரிசுகள் வழங்கி அவர் அவர்களை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பினான். அப்போது விபீஷணனுக்கு தான் பூஜை செய்த  விஷ்ணுவின் சிலையை வழங்கினார். 

விபீஷணன் இலங்கை செல்லும் வழியில் அந்த சிலையை கொள்ளிடக் கரையில் வைத்து பூஜை செய்தான். திருமாலுக்கு அந்த இடம் பிடித்துப் போய் விட்டது. அங்கேயே இருந்து விட்டார். 

திருவரங்கத்தில் உள்ள சிலை, திருமால் தானே செய்து, பூஜித்த சிலை.  

அப்படி திருமாலே உண்டாக்கிய சிலைகள் உள்ள இடங்கள் மொத்தம் எட்டு. 

அவை  

ஸ்ரீரங்கம், 
ஸ்ரீமுஷ்ணம், 
பதரிகாச்சிரமம், 
புஷ்கரம், 
திருவேங்கடம், 
வானமாமலை, 
நைமிசாரணியம், 
சாளக்கிராமம் 

என்பவையாகும்.

இவற்றில் சிறப்பானதாக கொண்டாடப் படுவது திருவரங்கம். 


அரங்கம் என்றால் கூடம், மண்டபம், அவை என்று சொல்லலாம். 

விளையாட்டு அரங்கம், திரை அரங்கம், நாடக அரங்கம் என்றெல்லாம் இருக்கிறது. 

அரங்கத்தில் இருப்பவர்கள் அரங்கத்தின் நடுவில் நடப்பதை காண முடியும். ஆனால் , அரங்கத்தில் உள்ள மற்றவர்களை சரியாக காண முடியாது. 

ஆனால், அரங்கத்தின் மையத்தில் இருப்பவர்கள் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஒரே சமயத்தில் கானம் முடியும். 

இந்த பிரபஞ்சம் என்ற அரங்கத்தின் மையத்தில் ஆண்டவன் இருக்கிறான். அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சொல்லவே  திருவரங்கம் என்று பெயர் சூட்டப் பட்டது. 

அந்த அரங்கன் உள்ளும், புறமும் எங்கும் நிறைந்து , அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

ஒரு பாடலுக்கு இவ்வளவு, எனக்குத் தோன்றியது. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ ? இப்படி 108 பாடல்கள். 

தேடிப் பிடித்து படியுங்கள். 

அத்தனையும் ஆழ்ந்த பொருள் கொண்ட அழகான இனிய பாடல்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post.html




Thursday, November 30, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி


108 திவ்ய தேசங்களை பற்றி பாடுவதற்கு முன்னால் , ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

முந்தைய பிளாகில் அவர் இராமானுஜருக்கு வணக்கம் செய்ததை பார்த்தோம்.

அடுத்த பாடலில் கூரத்தாழ்வானுக்கு வணக்கம் சொல்கிறார்.


நாம் ஒரு புது இடத்துக்குப் போகிறோம். அங்கே முன்னே பின்னே போனதில்லை. போகும் இடத்துக்கு ஒரு வரைபடமும் (map ) இல்லை. பின் எப்படி போய்ச் சேர்வது.

தமிழில் ஒரு பழ மொழி உண்டு.

"வழி வாயில " என்று.

கேட்டு கேட்டு போக வேண்டியதுதான்.

யாரிடம் கேட்பது ? அந்த இடம் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.

உள்ளூரிலேயே இந்தப் பாடு என்றால், வைகுந்தம் எப்படி போவது ? யாரிடம் கேட்பது ?

ஆச்சாரியர்களிடம் கேட்க வேண்டும்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், "கூரத்தாழ்வான் அடியை கூடுவதற்கு காத்திருக்கிறேன் " என்று. அவன் திருவடிகளை பற்றிக் கொண்டால், வைகுந்தம் போய் விடலாம் என்கிறார்.


பாடல்

முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்
தெக்காலஞ்செல்வானிருக்கின்றேன் - தக்காரெண்
கூரத்தாழ்வானடியைக்கூடுதற்கு நாயடியேன்
போரத்தாழ்வான சடம்போட்டு


கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முக் காலமும் இல்லா முகில் வண்ணன் வைகுந்தத்துக்கு
எக் காலம் செல்வான் இருக்கின்றேன் - தக்கார் எண்
கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு நாய் அடியேன்
போர தாழ்வான சடம் போட்டு

பொருள்

முக் காலமும் = மூன்று காலமும்

இல்லா = இல்லாத

முகில் = மேகம் போன்ற

வண்ணன் = நிறம் கொண்ட

வைகுந்தத்துக்கு = வைகுண்டத்துக்கு

எக் காலம் = எந்த காலத்தில்

செல்வான் = செல்லுவது என்று

இருக்கின்றேன் = இருக்கிறேன்

தக்கார் = தகுதி உடையவர்கள்

எண் = எண்ணும்

கூரத்தாழ்வான் = கூரத்தாழ்வான்

அடியை = திருவடிகளை

கூடுதற்கு = சேர்வதற்கு

நாய் அடியேன் = நாய் போன்ற கீழ்மையான அடியேன்

போர = மிகவும்

தாழ்வான = கீழான

சடம் = இந்த உடலை

போட்டு = போட்டு விட்டு

வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.

வைகுண்டம் ....வைகுண்டம் என்றால் என்ன ?

குண்டம் என்றால் குழி. யாக குண்டம் என்றால் யாகத்தில் வேள்வி செய்ய தோண்டப்பட்ட குழி.

சாலை ஒரே குண்டும் குழியும் இருக்கிறது என்று சொல்வதில்லையா.

உள்ளத்திலே பெரிய குழி எது ? நரகக் குழி.

"வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்"

என்பார் அபிராமி பட்டர்.


விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே

பாவம் செய்பவர்கள் சென்று அடையும் இடம் நரகக் குழி.

சரி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

வி என்றால் இல்லை என்று அர்த்தம்.

நாயகன் என்றால் தலைவன்.

தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.

பாவம் செய்பவர்கள் செல்லும் இடம் குண்டம்.

பாவம் செய்யாதவர்கள் செல்லும் இடம் வி-குண்டம். வைகுண்டம். வி-குண்டம் என்பது வைகுண்டம் என்று ஆனது.

புண்ணியம் செய்தவர்கள், பாவம் இல்லாதவர்கள் இருக்கும் இடம் வைகுண்டம். 

வைகுண்டம் எப்படி இருக்கும் தெரியுமா ?

பாற்கடல்,

அரம்பை, திலோத்தமை, ஊர்வசி போன்ற நடன மாந்தர்களின் நாட்டியம்,

பஜனை பாடல்கள்

என்று இதெல்லாம் இருக்குமா ?

பிள்ளை பெருமாள் ஐயங்கார் முக்கியமான ஒன்றை கூறுகிறார்.

அங்கே காலம் என்பது கிடையாது.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பது கிடையாது.

"முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்" என்கிறார்.

காலம் இல்லை என்றால் வினை கிடையாது. நேற்று செய்ததன் பலன் இன்று வந்தது என்ற பேச்சு கிடையாது.

கால தத்துவத்தை தாண்டி நிற்கும் இடம் அது.

வயது ஆகாது.

பிறப்பு இறப்பு மூப்பு என்பபது கிடையாது.

காலத்தை வென்று இருப்பார் என்பார் அருணகிரிநாதர்.

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே

காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

காலம் என்பது இல்லாத ஒன்றை நம்மால் சிந்திக்க முடியுமா ?

காலம் இல்லாத இடம் வைகுண்டம். சிந்தித்துப் பாருங்கள். காலம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று. 

ஆனால், இந்த பூமியில் காலம் என்ற சிறையில் நாம் அகப்பட்டு இருக்கிறோம். 

"எக் காலம் செல்வான் இருக்கின்றேன் "

இந்த காலச் சிறையை விட்டு எப்போது செல்வது என்று இருக்கின்றேன் என்கிறார்.

இந்த உலகை விட்டு விட்டு வைகுண்டம் போக வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார்.

வைகுண்டம் போக வேண்டும் என்றால் கூரத்தாழ்வான் திருவடியை பற்ற வேண்டும்.

அப்படி என்று யார் சொன்னது ?

"தக்கார் எண் கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு "

தக்கார் என்றால் தகுதியானவர், பெரியவர், சிறந்தவர் என்று பொருள்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

என்பது குறள்.

பெரியவர்கள் எல்லோரும் எண்ணும் கூரத்தாழ்வான்.

குரு வணக்கம் முடிந்தது. நூலுக்குள் போவோம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_30.html

Wednesday, November 29, 2017

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர்

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர் 


108 திவ்ய தேசங்களை பற்றி பிள்ளை பெருமாள் ஐயங்கார் அந்தாதி முறையில் பாடி அருளி இருக்கிறார்.

இறைவனைப் பாடலாம், அவன் பெருமைகளை பாடலாம். அவன் அடியார்களைப்  பாடலாம்.  அவன் கோவில் கொண்ட இடங்களைப் பற்றி பாட என்ன இருக்கிறது என்று நினைக்கலாம் ? எல்லா இடமும் ஒன்றுதானே.

ஒரு ஊரு, ஒரு கோவில், பக்கத்தில் ஒரு திருக்குளம் ....இதில் பாடுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைப்போம் .

பிள்ளை பெருமாள் ஐயங்கார் உருகி உருகி பாடி இருக்கிறார்.

அவ்வளவு அழகான எளிமையான பாடல்கள்.

இவற்றை படித்து அறிவதால் நமக்கு என்ன பலன் என்று கேட்டால் எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை ?

இவற்றில் ஏதோ ஒரு அழகு, ஒரு வசீகரம், ஒரு ஊடாடும் இலயம் இருக்கிறது.

ரோஜா இதழின் மேல் இருக்கும் ஒரு பனித்துளியைப் போல, விரல் பிடிக்கும் குழந்தையின் ஸ்பரிசம் போல,  தனிமையில் நடக்கும் போது எங்கோ ஒலிக்கும் அந்த இனிய பழைய பாடல் போல...இந்த அந்தாதி மனதை வருடத்தான் செய்கிறது.

படித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.


அந்தாதியை தொடங்குமுன், ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

நான்கு ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

அதில் , உடையவர் என்று போற்றப் படும் இராமானுஜர் மேல் பாடிய பாடலைப் பார்ப்போம்.


தித்திக்கும் பாடல்




வீட்டில் , பையன் வேகமாக ஓடி வருவான். வந்த வேகத்தில் நிலை தடுக்கி கீழே விழுவான்.

அம்மா "ஏம்பா பாத்து வரக் கூடாதா ? போன வாரம் தான இந்த மாதிரி ஓடி வந்து தடுக்கி விழுந்த...சரி சரி கால உதறு ...இனிமேலாவது பாத்து வா " என்று அன்போடு கூறுவதை கேட்டிருக்கிறோம் அல்லவா ?


அந்த அன்போடு பிள்ளை பெருமாள் ஐயங்கார் நம்மிடம்  கூறுகிறார்.

இதற்கு முன் எத்தனை பிறவிகள் எடுத்து , பிறந்து இறந்து , பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறீர்கள். அதெல்லாம் ஞாபகம் இல்லையா ? இனிமேலும் பிறவிகள் வேண்டாம் என்றால், ஒரு எளிய வழி இருக்கிறது.

எதிராஜன் என்ற இராமானுஜன் நாமத்தைச் சொல் என்கிறார்.



பாடல்

முன்னே பிறந்திறந்து மூதுலகிற் பட்டவெல்லாம்
என்னே மறந்தனையோ வென்னெஞ்சே!- சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி


பொருள் 


முன்னே = முன்பு

பிறந்திறந்து = பிறந்து இறந்து

மூதுலகிற் = மூதுலகில் , மூத்த இந்த உலகில், பழமையான இந்த உலகில்

பட்டவெல்லாம் = பட்ட துன்பமெல்லாம்

என்னே = எத்தனை எத்தனையோ

மறந்தனையோ = அவை அனைத்தையும் மறந்து விட்டாயா

வென்னெஞ்சே!- = என் நெஞ்சே. என் மனமே

சொன்னேன் = சொன்னேன்

இனி = இனிமேல் , இன்றிலிருந்து

எதிரா சன்மங்கள் = பிறவிகள் இனி மேல் வராது

ளின்றுமுதற் = இன்று முதல்

 பூதூர் = திருப்பூதுர்

முனியெதிரா சன் =முனி எதிராசன்

பேர் மொழி = பேரைச் சொல்


அதெப்படி, எதிராஜன் பேரைச் சொன்னால் பிறவி வராமல் போய் விடுமா ? என்று கேட்கலாம். 


கடலிலே போய் கொண்டிருக்கிறீர்கள். போகின்ற கப்பல் பாறையில் மோதி உடைந்து போகிறது. உங்களுக்கோ நீச்சல் தெரியாது. என்ன செய்வீர்கள் ?

அங்கே மிதக்கும் கட்டையை பிடித்துக் கொள்வீர்கள் அல்லவா ? அந்த கட்டை மிதந்து மிதந்து சென்று கரை சேரும் என்றால் , அதோடு சேர்ந்து நீங்களும் கரை சேர முடியும் அல்லவா ? நீச்சல் தெரியாவிட்டாலும், கட்டையை பிடித்துக் கொண்டால், கரை சேர்ந்து விடலாம். 

பிறவி என்ற பெருங்கடலை நம்மால் நீந்தி கடக்க முடியாது. 

பெரியவர்களின் வழி காட்டுதலாகிய தெப்பமே நம்மை கரை சேர்க்கும். 

எதிராஜன் பேரை மொழி என்றால், அவர் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் போதாது. அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். அதுவே பிறவி பெருங்கடலை கடக்க வழி. 

அடடா, இது தெரியாமல் இத்தனை நாள் வீணே பொழுதை கழித்து விட்டேனே என்று  வருத்தப் படாதீர்கள். 

பிள்ளை பெருமாள் சொல்கிறார், "இன்று முதல் எதிராஜன் பெயரை மொழி".

இத்தனை நாள் எப்படியோ போய்விட்டுப் போகட்டும். இன்றிலிருந்து தொடங்கு  என்கிறார். 

இன்னைக்கு விட்டுட்டு நாளை முதல் தொடங்கலாமா என்றால். இல்லை. இன்றிலிருந்து  தொடங்கினால், "ஜன்மங்கள் இனி எதிரில் வராது"

பிறவி பெரிய பிணி. இதை மற்றவர்கள் சொல்ல வேண்டாம். "நீயே எத்தனை முறை பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறாய் ...பட்ட பின்பும் அறிவு வரவில்லையா " என்று தன் மனதிடம் கேட்பதைப் போல நம்மிடம் சொல்கிறார். 


"சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி"

இப்போது தானே சொல்கிறார் , சொன்னேன் என்று இறந்த காலத்தை குறிக்கும் சொல்லால் கூறுகிறாரே என்றால், "நான் இப்போது மட்டும் சொல்லவில்லை, முன்பும் பல முறை கூறி இருக்கிறேன். நீ தான் கேட்காமல்  பல  பிறவிகள் எடுத்து துன்பப் படுகிறாய். இப்போதாவது கேள் " என்று கூறுவதைப் போல "சொன்னேன்" என்றார்.

இதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில் எதிராஜனின் பேரைச் சொல். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறியும் ஆவல் வரும், பின் அவர் என்ன சொன்னார் என்று அறியும் ஆவல் வரும், பின் அவற்றை கடைபிடித்தால் என்ன என்று தோன்றும், கடை பிடிப்பாய் , உன் பிறவிப் பிணி போகும் ...எனவே எதிராஜன் பெயரைச் சொல்லி ஆரம்பி.

மற்றதெல்லாம் தானே நடக்கும்.


நமக்கு மறதி அதிகம். நடந்ததெல்லாம் மறந்து போய் விடுகிறது.  உள்ளுணர்வு கூர்மையாக இருந்தால் ஞாபகம் இருக்கும்.

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் "

என்பார் மணிவாசகர்.

சடையவனே , தளர்ந்தேன் ,எம்பெருமான் என்னைத் தாங்கிக்கொள்ளே என்று கெஞ்சுவார் மணிவாசகர்.

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.


பிடித்திருந்தால் சொல்லுங்கள், மேலும் எழுத ஆசை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_29.html


Thursday, November 9, 2017

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்



மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

இது என்ன காலம் இல்லாத காலத்தில் திருப்பாவை ? இது என்ன மார்கழி மாதமா ?

இல்லையில்லை.

ஆண்டாள் பாசுரங்களில் பல இடங்களில் "பறை" என்ற சொல் வருகிறது.

மேலே உள்ள பாடலில்

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

என்று வருகிறது.

இப்படி பறை என்ற சொல்லை பல இடங்களில் ஆண்டாள் பயன் படுத்தி இருக்கிறாள்.

உரை எழுதிய பல பெரியவர்கள் பறை என்பதை ஒரு வாத்தியம் என்றே கொண்டு எழுதி இருக்கிறார்கள்.

"நாராயணன் பறை தருவான் "  என்றே குறிப்பிடுகிறார்கள்.

மேலும் சிலர்  எத்தனை வகையான பறைகள் உண்டு என்று ஆராய்ச்சியில்  இறங்குகிறார்கள்.

நாராயணன் ஏன் ஆயர் பாடி பெண்களுக்கு பறை என்ற வாத்தியத்தைத் தர வேண்டும் ?

பெண்கள் பறை அடிப்பார்களா ? அப்படி வேறு எங்கும் இல்லையே ...

இது கொஞ்சம் நெருடலாகவே இருந்து வந்தது எனக்கு.

தமிழில் பல சொற்கள் காலப் போக்கில் பொருள் மாறி விட்டன. ஒரு சொல்லுக்கு பல  பொருள் இருந்தால் ,  அவற்றில்  சில வழக்கத்தில் இருந்து  போய் விட்டன

அப்படி போனாலும், தமிழில் இருந்து மற்ற மொழிக்கு சென்ற சில சொற்கள் அப்படியே இருக்கின்றன.

நாம் அவற்றில் இருந்து சில வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை கண்டு கொள்ளலாம்.

உதாரணமாக மலையாளத்தில் பறை என்றால் "சொல்" என்று அர்த்தம்.

நீ பற என்றால் நீ சொல்லு என்று அர்த்தம்

நீ எந்து பறையுன்னது என்று சொன்னால் நீ என்ன சொல்கிறாய் என்று அர்த்தம்.

நிங்கள் பறையுன்னது மனசில ஆகில்லா என்றால் நீங்கள் சொல்வது மனதில்  புரியவில்லை என்று அர்த்தம்.

எனவே, பறை என்ற சொல்லுக்கு "சொல்", "வாக்கு", "பேச்சு" என்று அர்த்தம்.

இந்தச் சொல் தமிழில் இருந்து மலையாளத்துக்கு சென்று அங்கு நிலைத்து விட்டது. இங்கே மறைந்து விட்டது.

இப்போது, அந்த அர்த்தத்தில் இந்த வரியைப் பார்ப்போம்.

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

நாராயணன் நமக்கு வாக்கு தருவான். நமக்கு ஒரு உறுதியான , நம்பிக்கையான சொல்லைத்த தருவான்.

இறைவனோடு பேசுகிறாள் ஆண்டாள். நாராயணனோடு அவ்வளவு அன்யோன்யம். அவன் இவளிடம் ஏதோ சொல்கிறான். அவன் சொன்னதை தனக்கு மட்டும் என்று  வைத்துக் கொள்ளாமல் "நம் எல்லோருக்கும் அவன் வாக்கு தருவான் " என்று தனக்கு கிடைத்த அந்த இறை அருளை எல்லோருக்கும் கிடைக்கும் படி சொல்லுகிறாள் ஆண்டாள்.


கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கண அறிவு இலக்கியத்தை மேலும் சுவைக்க உதவும். சொற்களின் ஆழத்தை, அதன் வீரியத்தை அறிய உதவும்.

நாராயணனே நமக்கே பறை தருவான்


என்று சொல்லும் போது , ஆண்டாள் இரண்டு இடத்தில் ஏகாரத்தை பயன் படுத்துகிறாள். 

நாராயணனே
நமக்கே

ஏன் ?

இதற்கு உயர்வு சிறப்பு ஏகாரம் என்று  பெயர்.

நாராயணன்  நமக்கு  பறை தருவான்

என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

நாராயணன் நமக்கு பறை தருவான் என்று சொன்னால், நாராயணன் தந்தான், அவனுக்கு மேலும் வேறு யாரும் தர  .வாய்ப்பு இருக்கிறது. அது இதை விட  உயர்ந்த வாக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும் அல்லவா.

சுப்ரீம் கோர்ட் சொன்னது என்றால், வேறு ஏதாவது கோர்ட் அதை விட உயர்வாக சொல்லலாம்.

சுப்ரீம் கோர்டே சொல்லியாச்சு என்றால் அதுக்கு மேல அப்பீல் கிடையாது.

நாராயணனே என்று சொல்லிவிட்டால் அதுக்கு மேல ஒன்றும் இல்லை. 

தலைவர் வந்து விட்டார். கூட்டத்தை ஆரம்பிக்கில்லாம் என்றும் சொல்லலாம்.

தலைவரே வந்து விட்டார்...என்று சொன்னால் , இனிமேல் வேறு யாருக்கும் காத்திருக்க  தேவையில்லை என்பது புலனாகும்.


நமக்கே தருவான் ....நமக்கு மட்டும் தான தருவான். எனக்கே எனக்கா என்று கூறுவது போல. நமக்கு கொஞ்சம் தந்து விட்டு மற்றவர்களுக்கு மீதியை தருவான் என்று  இல்லாமல், அனைத்தையும் நமக்கே தருவான்  என்கிறாள்.நமக்கே தருவான், வேறு யாருக்கும் தர மாட்டான். எனக்கே தருவான் என்று சொல்லவில்லை. நமக்கே தருவான் என்று தன்னோடு உள்ள அனைவரையும் சேர்த்துக் கொள்கிறாள்.

ஆண்டாளின் திருப்பாவையில் பத்து இடங்களில் இந்த பறை என்ற சொல் வருகிறது.

அது ஒரு வாத்தியம் என்று வைத்துப் பார்த்தால் சற்று நெருடத்தான்  செய்யும். அதை "சொல்" "வாக்கு " என்று வைத்துப்  பாருங்கள்.

மிக அழகான அர்த்தம் கிடைக்கும்.

பறை என்ற சொல் வரும் பாசுரத் தொகுப்பு கீழே உள்ளது.



 1. பறை தருவான்  (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
4. அறை பறை –  (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30)


மற்றவற்றையும் எழுத ஆசைதான்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_9.html


Monday, November 6, 2017

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ


இராமன், இலக்குவன், மற்றும் சீதை கானகத்தில் செல்லும் போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிச் சென்று விடுகிறான். விராதனை தடுத்து இராமனும், இலக்குவனும் போர் புரிகிறார்கள். கடைசியில் இராமன் காலால் உதைக்க, விராதன் தோற்று கீழே விழுகிறான். விழுந்தவன், சாப விமோச்சனம் பெற்று மீண்டும் கந்தர்வனாகிறான்.


 வானுலகம் செல்வதன் முன் சிலச் சொல்லி விட்டு செல்லுகிறான்.

பாடல்

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற
     நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு
     உடைய பெற்றிதனினும்,
அறிவு வந்து உதவ, நம்பனை
     அறிந்து, பகர்வான்.

பொருள்


பொறியின் ஒன்றி = பொறி என்றால் கருவி. பொறி வைத்து பிடிப்பது என்று சொல்லுவார்கள் அல்லவா. நாம் அறிவை இந்த பொறிகளால் பெறுகிறோம். பொறி என்றால் புலன்கள். கண், காது , மூக்கு போன்ற புலன்கள். இந்த புலன்களில் அறிவு ஒன்றி.


அயல்சென்று = வெளியில் சென்று

திரி = திரிந்து

புந்தி உணரா = புத்தி உணராமல்


நெறியின் ஒன்றி = நல்ல வழியில் ஒன்று பட்டு

நிலை நின்ற = நிலை பெற்ற

நினைவு உண்டதனினும் = நினைவு இருந்தாலும்

பிறிவு இல் அன்பு = பிரிதல் இல்லாத அன்பு , பக்தி

நனி  = மிகுந்த

பண்டு  = பழைய

உடைய பெற்றிதனினும் = உடமையாக பெற்றிருந்ததாலும்

அறிவு வந்து உதவ = அறிவும் வந்து உதவ

நம்பனை = தலைவனான இராமனை

அறிந்து = அறிந்து

பகர்வான் = சொல்லுவான்

அவனுக்கு முன்பு செய்த அன்பினாலும் (பக்தியாலும்), பழைய ஒழுக்கத்தாலும்  (நெறியின் ஒன்றி நிலை நின்ற ) அவனுக்கு அறிவு உதவி செய்தததால்  இராமனை அவன் அறிந்தான் என்கிறான் கம்பன்.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் ....

முதலாவது, மிக மிக மோசமானவன் என்று நாம் நினைப்பவனுக்கு பின்னால் மிக உயர்ந்த  குணமுள்ளவன் ஒருவன் இருக்கிறான். சாப விமோசனம் அடைவதற்கு முன்னால் பெரிய கொடூர அரக்கனாக இருந்தவன் பின்னால் உயர்ந்த தேவனாக மாறுகிறான்.  யாருக்குத் தெரியும் , யாருக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று ? இது விராதனுக்கு மட்டும் அல்ல , எல்லா கொடியவனுக்கு பின்னாலும் ஏதோ நல்லவன் மறைந்து கிடக்கிறான்.


இரண்டாவது, கெட்டவர்கள், கொடியவர்கள் "இனி நமக்கு விதித்தது இதுதான் போலும் என்று எண்ணி மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த கொடியவனுக்கும் ஒரு சாப விமோச்சனம் இருக்கும். அந்த நம்பிக்கை வேண்டும். சாப விமோசனத்தை தேடி செல்ல வேண்டுமே அல்லால், மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த பாவிக்கும் ஒரு கடைந்தேற்றுதல் உண்டு .

மூன்றாவது, கெட்டவர்களுக்கும் சில சமயம் நல்லவர்கள் சாவகாசம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது அதை பெற்றுக் கொண்டு , பாவங்களில் இருந்து விடு பட முயற்சி செய்ய வேண்டும் . அதை விட்டு விட்டு அந்த  நல்லவர்களுக்கும் தீமை செய்ய முயற்சி செய்யக் கூடாது.

நான்காவது, மிக முக்கியமானது, இராமன் திருவடி பட்டதால் அவனுக்கு அறிவு உதவி  செய்ய அவன் சாப விமோச்சனம் பெற்றான். அதற்கு முக்கிய காரணம்  முன்பு செய்த இடையறாத அன்பும், நல்ல ஒழுக்கமும். யாருக்குத் தெரியும் பின்னாளில் நாம் என்னவாக ஆவோம் என்று. இப்போதே நல்ல ஒழுக்கத்தை கடை பிடித்தால் , பின்னாளில் ஏதோ ஒரு சமயத்தில் இது கை கொடுக்கும்.

ஐந்தாவது, அரக்கன் என்பவன் யார் ? புலன்கள் பின்னால் அறிவை செலுத்துபவன்.

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,

அறிவின் பின்னால் புலன்கள் சென்றால் அவன் மனிதன், தேவன். புலன்கள் பின்னால் அறிவு சென்றால் அவன் அரக்கன். அவ்வளவுதான்.

பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது, சாப்பிட்டு விடுவது.

அழகான பெண்ணைக் கண்டால், உடனே தவறாக நினைப்பது, தவறான  செயல்களில் ஈடுபடுவது.

இதெல்லாம் அரக்க குணம்.

நாம் அரக்க குணங்களில் இருந்து மாறுபட வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார் கூறிய மாதிரி, முடியும் போதெல்லாம் நல்லது செய்து வைப்போம் . என்றேனும் உதவும்.

விராதன் வதைப் படலத்தில் இப்படி பல ஆழ்ந்த கருத்துகள் உள்ள பாடல்கள் உள்ளன.

நேரம் இருப்பின், மூலத்தை படித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post.html