நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவுறையூர்
எவ்வளவோ படிக்கிறோம். எவ்வளவோ கேட்கிறோம். நேரில் கேப்பது அல்லாமால் இப்போது youtube என்று வசதி வேறு வந்து விட்டது. தரவிறக்கம் செய்து வேண்டும் போது கேட்டுக் கொள்கிறோம்.
இருந்தாலும், வாழ்க்கை என்னவோ அப்படியேதான் ஓடிக் கொண்டிருக்கிறது. எத்தனை படித்தாலும், கேட்டாலும் நடை முறை வாழ்க்கையில் அதை எல்லாம் மறந்து விட்டு , நமக்கு எது சௌகரியமோ , எது பிடித்து இருக்கிறதோ அதைச் செய்கிறோம். கேட்டால், அது எல்லாம் படிக்க , கேட்க நல்லா இருக்கும், நடை முறைக்கு ஒத்து வருமா என்று மேதாவி மாதிரி கேட்டு விட்டு , வேலையைப் பார்க்கப் போய் விடுகிறோம்.
இந்த சிக்கல் நமக்கு மட்டும் அல்ல, பிள்ளை பெருமாள் ஐயங்காருக்கும் இருந்திருக்கிறது.
பெருமாளே, நீ சிறப்பான பல திருப்பதிகளில் இருப்பவன். நானோ, மறதி உடையவன், நாயைப் போல கீழானவன். என் மனதில் வந்து எப்படி வந்து இருந்தாய். அதைச் சொல் , என்று பெருமாளிடம் வியந்து கேட்கிறார்.
பாடல்
சிறப்புடையசெல்வத்திருப்பதிகள்போல
மறப்புடையநாயேன்மனத்து - ளுறப்போந்
தறந்தையாநின்றவரங்கா திருவா
ழுறந்தையா யிங்குறைந்த தோது.
சீர் பிரித்த பின்
சிறப்பு உடைய செல்வ திருப்பதிகள் போல
மறப்பு உடைய நாயேன் மனத்து - உறப் போந்து
அறம் தையா நின்ற அரங்கா - திரு வாழ்
உறந்தாய் இங்கு உறைந்தது ஓது
பொருள்
சிறப்பு உடைய = பல சிறப்புகளை உடைய
செல்வ = செல்வம் தரும்
திருப்பதிகள் போல = திவ்ய தேசங்களைப் போல
மறப்பு உடைய நாயேன் = மறதி உள்ள நாய் போன்ற கீழான
மனத்து = மனதினில்
உறப் போந்து = நன்றாக புகுந்து
அறம் தையா நின்ற = தர்மம் வழுவாமல் நின்ற
அரங்கா = அரங்கனே
திரு வாழ் = இலட்சுமி வாழும்
உறந்தாய் = திரு உறந்தை என்ற திவ்ய தேசத்தில் வசிப்பவனே
இங்கு உறைந்தது ஓது = என் மனதில் வந்து இருந்தது எப்படி என்று சொல்
நாய் நல்ல பிராணி தான். நன்றி உள்ளது. பல நல்ல குணங்கள் உள்ளது. இருந்தும், எவ்வளவுதான் சொன்னாலும், பழக்கினாலும், யாரும் இல்லாத சமயத்தில் , அது தெருவில் சென்று எதையாவது தின்று விடும்.
மனித மனமும் அப்படித்தான். எத்தனை படித்தாலும், கேட்டாலும், அதன் படி நடப்பது இல்லை. வாலை குழைத்துக் கொண்டு எங்கோதான் செல்லும்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார் என்றால் , நாம் வீட்டை இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருப்போம் அல்லவா ? சாமான்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி, புது துவாலை, சோப்பு என்று வைத்து , எப்போதும் வைத்திருப்பதை விட கொஞ்சம் அதிகம் கவனம் எடுத்து சரி செய்து வைப்போம் அல்லவா.
வரும் விருந்து பெரிய விருந்தாக இருந்தால் ? ஒரு வேளை பெண் பார்க்க வருகிறார்கள், சம்பந்தம் பேச வருகிறார்கள் என்றால், இன்னும் முனைப்பாக வீட்டை அழகு செய்வோம் அல்லவா.
வருபவர் ஆண்டவனாக இருந்தால் , அவன் இருக்கும் மன வீட்டை எப்படி வைத்திருக்க வேண்டும் ?
அவன் எப்போது வருவான் என்று சொல்ல முடியாது.
எனவே எப்போதும், மனதை செம்மையாக வைத்திருக்க வேண்டும்.
என்ன ? சரிதானே ?
எப்படி என் மனதில் உறைந்தது ஓது என்று சுலபமாக கேட்டுவிட்டார் பெருமாள் அய்யங்கார்.அவர் மனம் அப்படி அப்பழுக்கில்லாமல் செம்மையாக எந்நேரமும் இருந்தது. எவ்வளவு ஆர்வமாக இருந்தாலும் அது நமக்கு சாத்தியமா என்கிற சந்தேகம் நீங்கள் சொன்னபடி வரத்தான் செய்கிறது. முயற்சியை தவிர வேறு வழி புலப்படவில்லை.
ReplyDeleteஅருமையான உரை. இறவன் வரும்படி நம் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி சரியானதுதான்!
ReplyDelete