Wednesday, December 27, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி  - பாகம் 2


பாடல் 


கழன்றுபோம்வாயுவினைக்கட்டாமறீர்த்த
முழன்றுபோயாடாமலுய்ந்தே - னழன்று
பொருவாலிகாலன்பரகாலன்போற்றுந்
திருவாலிமாயனையேசேர்ந்து.

சீர் பிரித்த பின்

கழன்று போகும் வாயுவினை கட்டாமல் தீர்த்த 
உழன்று போய் ஆடாமலும் உய்ந்தேன் - அழன்று 
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும் 
திருவாலி மாயனையே சேர்ந்து.

பொருள்


கழன்று போகும் = உடலை விட்டு கழண்டு போகும்

வாயுவினை = மூச்சு காற்றை

கட்டாமல் = மூச்சை அடக்கி தியானம் செய்யாமல்

தீர்த்த  = தீர்த்தங்களை

உழன்று போய் = கஷ்டப்பட்டுப் போய்

ஆடாமலும் = நீராடாமலும்

உய்ந்தேன்  = உய்வடைந்தேன்

அழன்று = கோபம் கொண்டு

பொரு = போர் செய்த

வாலி  = வாலிக்கு

காலன் = எமனை போன்றவன்

பரகாலன் = திருமங்கை ஆழவார்

போற்றும் = போற்றும், வணங்கும்

திருவாலி = திருவாலி என்ற திருத் தலத்தில் உள்ள

மாயனையே சேர்ந்து = மாயவனான விஷ்ணுவைச் தேர்ந்து

இந்தத் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டது.

அவை என்ன ?

ஆணுக்குள்ள முரட்டுத் தனத்தை மென்மை படுத்தி , பண் படுத்தி எடுப்பதில்  பெண்ணின் பங்கு பெரியது. 

நரசிம்ம மூர்த்தியின் கோபத்தை தணிக்க இலக்குமி அவர் மடியில் அமர்ந்தாள். அவளை அணைத்தவுடன் , அவர் கோபம் தணிந்தது என்று பார்த்தோம். 

அது மட்டும் அல்ல. 

ஆணுக்குள் அடைந்து கிடக்கும் அன்பை, அருளை, கருணையை, ஒரு நெகிழ்வை  வெளி கொண்டுவரவும் பெண்ணின் அன்பு தேவைப் படுகிறது. 


உயிரைச் சுமந்து, உயிரை வளர்க்கும் பெண்ணில், அன்பும் கருணையும்  இயல்பாகவே அமைந்திருக்கிறது. 

அவளோடு சேரும் போது , ஆணுக்கும், அந்த குணங்கள் தானே வரும். 

திருமங்கை ஆழ்வார் , இறைவன் அன்பைத் தேடி தவித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருள் செய்ய வேண்டும் இலக்குமி , பெருமாளிடம் சொல்லிக் கொண்டே இருந்தாள் .  

இதை வைணவ சம்பிரதாயத்தில் புருஷார்த்தம் என்கிறாரகள்.  தந்தையின்  அருள் வேண்டும் என்றால், தாயின் மூலம் அதை எளிதாகப் பெறலாம்  என்பது அந்தத் தத்துவம். 

நம் வீட்டில் நடப்பது தானே. அப்பாவிடம் ஏதாவது என்றால் பிள்ளைகள்  அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொல்வது இல்லையா ? அது போலத் தான். 

திருமங்கை ஆழ்வாருக்கு அருள் செய்ய வேண்டும் என்று இலக்குமி சொன்னதும், சரி நீ போய்  திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்து இரு. நான் உன்னை அங்கே வந்து திருமணம் செய்து கொள்கிறேன். அந்த சமயத்தில் திருமங்கைக்கு அருள் செய்வோம் என்றார். 


அம்பாளை திருமணம் செய்து கொண்டு பெருமாள் வரும் வழியில், திருமங்கை மன்னன்  , அவர்கள் யார் என்று அறியாமல் , அவரக்ளை வழி மறித்து  பணம் பறிக்க முயன்றார். பெருமாள் அவரை தடுத்தாட்கொண்ட  அவருக்கு செவியில் மந்திர உபதேசம் செய்தார். 

உபதேசம் பெற்ற பின் திருமங்கை பாடிய பாடல் 

பிணியவிழு நறுநீல மலர்கிழியப் பெடையோடும்
அணிமலர் மேல் மது நுகரும் அறுகால சிறுவண்டே
பணிகெழுநீர் மருங்கலரும் வயலாளி மணவாளன்
பணியறியேன் நீ சென்றென் பயலை நோயுரையாயே



இன்றும்  , திருமங்கை உபதேசம் பெற்ற நிகழ்வு ஒரு வைபவமாக கொண்டாடப் படுகிறது இந்த கோவிலில். 

திருமங்கை ஆழ்வார் , வழிப்பறி செய்து கொண்டிருந்தார். அவரை ஒரு சமயப் பெரியாராக, ஆழ்வாராக ஸ்ரீ வைஷ்ணவம் கொண்டாடுகிறது. 

நரசிம்ம மூர்த்தி, திருமகளை ஆலிங்கனம் செய்து அமைதி பெற்றதால் இந்தத் தலம் திருவாலி என்று பெயர் பெற்றது என்று பார்த்தோம். 


இங்கு பெருமாள் நரசிம்ம வடிவில் திருமகளோடு எழுந்து அருளி இருக்கிறார். 

இதையும் சேர்த்து , இந்த இடத்தை சுற்றி ஐந்து நரசிம்ம தலங்கள் உள்ளன.

அவை 

திருவாலி         - லட்சுமி நரசிம்மன் 
குறையலூர்    - உக்கிர நரசிம்மன் 
திருநகரி          - யோக நரசிம்மன் 
திருநகரி          - ஹிரண்ய நரசிம்மன் 
மங்கை மடம்      - வீர நரசிம்மன் 


இந்த கோவிலுக்கு எப்படி போவது ?

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. 3 km தொலைவுதான். 

திருவாலிக்குப் போனால், ஐந்து நரசிம்ம மூர்த்தியையும், பக்கத்தில் உள்ள திருநகரியும்  சேர்த்து தரிசித்துவிட்டு வரலாம். 

கோபமே வடிவான நரசிம்மம். கருணையே வடிவான திருமகள். அவளை அணைத்தபடி  அவன். 

கோபமோ, வெறுப்போ, ஆங்காரமோ வந்தால் என்ன செய்ய வேண்டும் , தெரியும் தானே ? மனைவியை கட்டிப் பிடியுங்கள். எல்லாம் போய் விடும். சாந்தம் வரும். 

கணவன் கோபமாக இருக்கிறானா, முசுடா, முரடா...கவலையை விடுங்கள். அவன் மடியில் அமர்ந்து அவனை கட்டிப் பிடியுங்கள். ஆனானப் பட்ட நரசிம்ம மூர்த்தியே கோபம் தணிந்து குளிர்ந்தார். இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். 

சிலிர்க்கவில்லை ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/2_27.html


2 comments:

  1. அருமையாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  2. திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் புரியவில்லையே! உரை கொஞ்சம் எழுதியிந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete