Tuesday, December 26, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி - பாகம் 1

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி  - பாகம் 1


ஆண்கள் பொதுவாகவே கொஞ்சம் முரட்டுத் தனம் உள்ளவர்கள். காடுகளில் சென்று வேட்டையாடி, எதிரிகளோடு சண்டை போட்டு, வெள்ளம் தீ என்று இவற்றோடு முட்டி மோதி அவர்கள் குணமே போர் குணமாகி விட்டது. வேட்டையாடுதல், போர் எல்லாம் குறைந்து விட்டாலும், இரத்தத்தில் ஊறிய அந்த சண்டைக் குணம், ஒரு வேகம், ஒரு முரட்டுத் தனம் உள்ளே உறங்கியே கிடக்கிறது. எப்போது அது விழிக்கும் என்று அவனுக்கே தெரியாது.

முரட்டு ஆண்களை மென்மை படுத்துவது பெண்கள்தான். ஒரு பெண் வாழ்வில் வந்து விட்டால் போதும் , ஆணின் மனம் மென்மை அடையத் தொடங்குகிறது. கல்லும் கனியாகும்.

இரணியனை கொல்வதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள் , அவனை கொன்ற பின்னும் , கோபம் தணியாமல் இருந்தார். நரசிம்மத்தின் கோபத்தை யார் தணிக்க முடியும்.

தேவர்கள் இலக்குமியை வேண்டினார்கள். அவள் வந்து, நரசிம்மத்தின் வலது தொடையில் அமர்ந்தாள். இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் பண்ணிக் கொண்டார். அவர் கோபம் மறைந்து விட்டது. திருவை (இலக்குமியை) ஆலிங்கனம் பண்ணிக் கொண்டதால் , இந்த இடம் திரு+ஆலி  , திருவாலி என்று அழைக்கப் படுகிறது.


மூச்சை அடக்கி, காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, பூஜை, புனஸ்காரம் என்று அலைந்து திரியாமல் கடைத்தேற வழி வேண்டுமா, திருவாலியில் கோவில் கொண்டுள்ள அந்த பெருமானை சென்று சேருங்கள். நான் அப்படித்தான் உய்ந்தேன் என்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார். 

பாடல் 


கழன்றுபோம்வாயுவினைக்கட்டாமறீர்த்த
முழன்றுபோயாடாமலுய்ந்தே - னழன்று
பொருவாலிகாலன்பரகாலன்போற்றுந்
திருவாலிமாயனையேசேர்ந்து.

சீர் பிரித்த பின்

கழன்று போகும் வாயுவினை கட்டாமல் தீர்த்த 
உழன்று போய் ஆடாமலும் உய்ந்தேன் - அழன்று 
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும் 
திருவாலி மாயனையே சேர்ந்து.

பொருள்


கழன்று போகும் = உடலை விட்டு கழண்டு போகும்

வாயுவினை = மூச்சு காற்றை

கட்டாமல் = மூச்சை அடக்கி தியானம் செய்யாமல்

தீர்த்த  = தீர்த்தங்களை

உழன்று போய் = கஷ்டப்பட்டுப் போய்

ஆடாமலும் = நீராடாமலும்

உய்ந்தேன்  = உய்வடைந்தேன்

அழன்று = கோபம் கொண்டு

பொரு = போர் செய்த

வாலி  = வாலிக்கு

காலன் = எமனை போன்றவன்

பரகாலன் = திருமங்கை ஆழவார்

போற்றும் = போற்றும், வணங்கும்

திருவாலி = திருவாலி என்ற திருத் தலத்தில் உள்ள

மாயனையே சேர்ந்து = மாயவனான விஷ்ணுவைச் தேர்ந்து

இந்தத் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டது.

அவை என்ன ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/1_26.html



Monday, December 25, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்பேர்நகர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்பேர்நகர்



நமக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவோ வேலை. காலை எழும் போதே இன்று என்னென்ன பிரச்சனைகளை சமாளிக்க  வேண்டும் என்ற எண்ணத்தோடேயே எழுந்திருக்கிறோம். பிள்ளைகள், அலுவலகம், சமையல் , , பயணம், நெருக்கடி, என்று ஒவ்வொரு நாளும் ஒரு சின்ன போராட்டமாகவே கழிகிறது.

இதற்கு நடுவில் இறைவனை பற்றி சிந்திக்க நேரம் எங்கே இருக்கிறது.

பிள்ளை பெருமாள் ஐயங்கார்  சொல்கிறார்...காலையில் எழுந்தவுடன் இறைவனைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஒரு துன்பமும் வராது என்கிறார். இன்னும் சொல்லப் போனால், எழுந்தவுடன் கூட அல்ல, எழும் போதே , இறைவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே எழ வேண்டுமாம்.

தெய்வம் தொழாள், கொழுநன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை என்பார் வள்ளுவர்.

கணவனை எழுந்து தொழுவாள் என்று  சொல்லவில்லை. தொழுது எழுவாள். முதலில் தொழுவாள், பின் எழுவாள் என்று சொல்கிறார்.

அது போல "இறைவனை சிந்தித்து எழுந்திருப்போர்க்கு உண்டோ இடர் " என்கிறார்.

பாடல்

போமானையெய்துபொருமானைக்கொம்புபறித்
தாமானைமேய்த்துவந்தவம்மானைத் - தாமச்
செழுந்திருப்பேரானைச் சிறுகாலைச்சிந்தித்
தெழுந்திருப்பேற்குண்டோவிடர்.

சீர்பொ பிரித்த பின்

போமானை எய்து பெரும் ஆனை கொம்பு பறித்து 
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை - தாம 
செழு திரு பேரானை சிறுகாலை சிந்தித்து 
எழுந்திருப்போர்க்கு உண்டோ இடர் 

பொருள்


போமானை   = போ + மானை = போகின்ற மானை. மாரீசன் என்ற மானை
எய்து = அம்பால் எய்து
பெரும் ஆனை = குவாலய பீடம் என்ற பெரிய யானையை
கொம்பு = தந்தத்தை
பறித்து = உடைத்து
ஆம் ஆனை = பசு கூட்டங்களை
மேய்த்து = மேய்த்து
உவந்த = மகிழ்ச்சி கொண்ட

அம்மானை = அம்மானை

தாம = இடம், தலம்

செழு திரு பேரானை = செழுமையான திருப்பேர் என்ற தலத்தில் எழுதருளி இருக்கும் பெருமானை

சிறுகாலை = அதி காலை

சிந்தித்து = சிந்தித்து

எழுந்திருப்போர்க்கு = எழுந்திருப்போர்க்கு

உண்டோ இடர் = துன்பம் உண்டா ? (இல்லை)


சிறுகாலை ...அதிகாலை, ஐந்து நாழிகைக்கு முற்பட்ட நேரம். சாத்வீக குணம் மிகுந்து இருக்கும் நேரம் என்று சொல்கிறார்கள்.

சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவிப்போம் என்கிறாள் ஆண்டாள்.


சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


முதலில் அதி காலை எழ வேண்டும். 

இரண்டாவது, எழுந்திருக்கும் போதே இறைவனை சிந்தித்து எழ வேண்டும் .


இந்தக் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா ?

திருச்சிக்கு பக்கத்தில், லால்குடிக்கு அருகில் , 10 km தொலைவில் உள்ளது. டவுன் பஸ்ஸில்  போய் விடலாம். கோவில் வாசலில் பேருந்து நிற்கும். 

பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே (3745)

என்று நம்மாழவாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். 

ஒரு முறை உபமன்யு என்ற அரசன் துர்வாச முனிவரின் சாபத்தால் பலம் குன்றி இருந்தான். இலட்சம் பேருக்கு அன்ன தானம் அளித்தால் சாப விமோச்சனம் கிடைக்கும்  என்பதால், இந்தத் தலத்தில் வந்து தினமும் பலருக்கு அன்ன தானம் வழங்கி வந்தான். 

அப்படி இருக்கும் போது ஒரு நாள், பெருமாள் ஒரு கிழ அந்தணர் வடிவில் அன்ன தானம்  பெற வந்தார். ஒரே ஆள் அனைத்து அன்னத்தையும் உண்டு விட்டார்.  அதைக் கண்டு வியந்த மன்னன், "தங்களுக்கு மேலும் என்ன வேண்டும் " என்று கேட்டான். பெருமாள், ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டதாகவும் , ஒரு குடம் அப்பம் உண்ட பின், பசி அடங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. 

இங்குள்ள பெருமாளின் பெயர் அப்ப குடத்தான்.

கையில் அப்ப குடத்துடன் காட்சி தருகிறார். 

திருச்சி பக்கம் போனால், சென்று வாருங்கள். லால்குடி, கல்லணைக்கு பக்கம்.  கோவிலடி என்று இந்த தலத்துக்கு இன்னொரு பெயரும் உண்டு. 


Saturday, December 23, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 2


முந்தைய பிளாகில் திருபுள்ளக்குடி பற்றி பார்த்தோம். இது அதன் தொடர்ச்சி.

பாடல் 

விரும்பினவையெய்தும் வினையனைத்துந்தீரு
மரும்பரவீடுமடைவீர் - பெரும்பொறிகொள்
கள்ளம்பூதங்குடிகொள்காயமுடையீ ரடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

சீர் பிரித்த பின் 

விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  - பெரும் பொறிகொள்
கள்ள பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள் 
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

பொருள் 

விரும்பினவை = ஆசைப் பட்டவை  அனைத்தும் 

எய்தும் = அடைவீர்கள் 

வினை அனைத்தும் தீரும் = வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  = அடைவதற்கு அரிதான பரம பதம் அடைவீர்கள்

பெரும் = பெரிய

பொறிகொள் = பொறிகளை கொண்ட

கள்ள பூதம் குடி கொள்  = கள்ளத்தனமான பூதங்கள் குடி கொண்டுள்ள

காயமுடையீர் = உடம்பை  உடைய

அடிகள் = அடியவர்களே

புள்ளம்பூதங்குடி யிற்போம் = புள்ள பூதக்குடி என்ற திரு தலத்துக்கு போங்கள்


இந்த ஊர் எங்கிருக்கிறது ? இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது ? இந்த பெயருக்கு என்ன அர்த்தம் ?

கும்பகோணத்துக்கு பக்கத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து டவுன் பஸ்ஸில் போய் விடலாம். சுவாமி மலைக்கு ரொம்ப பக்கம். 

புள் என்றால் பறவை. 


குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.


என்பார் வள்ளுவர். 

தான் இருந்த கூட்டை விட்டு எப்படி பறவை பறந்து போய் விடுகிறதோ, அது போலத் தான், இந்த உடல் என்ற கூட்டை விட்டு உயிர் பறந்து போய் விடும் என்பது கருத்து. 

தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும் 
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையுமிடம் 
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

என்பார் திருஞானசம்பந்தர். மெய் சொல்லாத இராவணனை தோற்று புறம் காணச் செய்த ஜடாயு (என்ற பறவை, புள்) வுக்கு முக்தி தந்த இடம் என்ற பொருளில்  புள் இருக்கும் வேளூர் என்ற பெயர் பெற்றது வைத்தீஸ்வரன் கோவில். (திரு புள்ளபூதக் குடி அல்ல).

புள்ளம்பூதக்குடி யை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

பாடல் 

அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம்,
நறிய மலர்மேல் சுரும்பார்க்க  எழிலார் மஞ்ஞை நடமாட,
பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே! (1348)

பொருள் 

அறிவது அறியாது அனைத்து உலகும் உடையாய் என்னை ஆளும் உடையான் 
குறிய மாண உருவாய கூத்தன் மன்னி அமரும் இடம் 
நறிய மலர் மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம் பூதக் குடிதானே 

சீதையை பிரிந்து , இராமன் காட்டில் அலைந்த போது , ஜடாயுவை சந்தித்து, ஜடாயுவுக்கு முக்தி  கொடுத்த இடம் என்பதால் இது புள்ளபூதக்குடி என்று பெயர் பெற்றது. இங்குள்ள இராமருக்கு அருகில் சீதை இல்லை. 

நமது இன்றைய வாழ்க்கை, என்றோ நடந்ததாக கூறப் படும் புராண சம்பவங்கள் என்று இரண்டையும் இணைக்கும் பாலங்களாக விளங்குவது இந்த திருக்கோவில்கள்.

ஒவ்வொரு கோவிலும் ஒரு கால இயந்திரம் (time machine ). உங்களை ஒரு நொடியில் புராண காலத்துக்கு கொண்டு செல்லும் அமைப்புகள். 

இந்த கோவிலில்  நிற்கும் போது , இங்கு தான் இராமர் இருந்தார், இங்குதான் சீதையை  தேடி அலைந்தார், ஜடாயுவுக்கு முக்தி தந்தார் என்று நினைக்கும் போது உடல் சிலிர்க்காதா ?


இம்மை நலன்கள், அத்தனை வினையும் போகும், மறுமை பலனும் கிடைக்கும். 

தஞ்சாவூர் , கும்பகோணம் பக்கம் போனால், புள்ள பூதக்குடிக்கும் போய் வாருங்கள். 



Friday, December 22, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1 


விலங்குகளை பறவைகளை சிறை பிடிக்க விரும்பும் வேடர்கள் , அவற்றிற்கு பொறி வைத்து பிடிப்பார்கள். உதாரணமாக , புலியை பிடிக்க வேண்டும் என்றால், ஒரு கூண்டு செய்து, அதில் ஒரு மானை கட்டி வைத்து விடுவார்கள். மானின் வாசனையை கொண்டு புலி அதை பிடிக்க பாயும். கூண்டின் கதவு மூடிக் கொள்ளும். புலி மாட்டிக் கொண்டு வாழ் நாள் எல்லாம் அவதிப் படும். 

வீட்டில் கூட எலியை எலி பொறி வைத்து பிடிப்பதை நாம் அறிவோம். 

ஒரு கணம் , அந்த பொறியில் உள்ள வடை துண்டுக்கோ, தேங்காய் சில்லுக்கோ ஆசைப் பட்டு எலி உயிரை விடும். 

அந்த எலியைப் பார்த்தால் நமக்கு சிரிப்பாய் வரும். பாவமாய் இருக்கும். 

நாம் அந்த எலியை விட பெரிய ஆள் இல்லை. 

இந்த ஐந்து புலன்களும் , ஐந்து பொறியைப் போல. ஒரு நிமிடம் ஆசைப் பட்டு நம்மை மீளாத துயரில் ஆட்படுத்தி விடும். 

விலங்குகளுக்கு , பொறி இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும். நமக்குத் தெரியும். இருந்தும் நாம் மாட்டிக் கொள்கிறோம். ஏன் ? 

ஏன் என்றால், இந்த பொறிகள் நமக்கு நல்லது செய்வதாக கூறி, வஞ்சகமாக இழுத்துக் கொண்டு போய் மாட்டி விட்டு விடும். 

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும் , அனுபவம் இருந்தாலும், ஒரு நொடியில் வீழ்த்தி விடும்.  

எனவே அது பெரிய பொறி.

வஞ்சகமாக நம்மை மாட்டி விட்டு விடுவதால் அது கள்ளப் பொறி.

இந்த வஞ்சக பொறிகளை வைத்துக் கொண்டு நாம் அல்லாடுகிறோம். 

இந்த புலன்கள் ஆசைப்படும் அனைத்தும் வேண்டும், அப்படி புலன் இன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வரும் நல் வினை , தீ வினை பலன்கள் நம்மை தொடரக் கூடாது, அதாவது வினையினால் மறு பிறப்பு வரக் கூடாது, மேலும், அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பின் ,  இறைவனடி சேர வேண்டும். 

நடக்கிற காரியமா இது ?

முடியும் என்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார். 

"விரும்பியவை அடைவீர்கள், வினை அனைத்தும் தீரும், பரம பதம் அடைவீர்கள்" என்கிறார்.

அடைவது யார் தெரியுமா ?

"பெரும் பொறி, கள்ளப் பூதங்களான புலன்களை கொண்ட உடலை உடைய நாம் " என்கிறார்.

எப்படி அடைவது ?

திரு புள்ளக் குடி என்ற திரு தலத்துக்கு சென்றால் போதுமாம். 

பாடல் 

விரும்பினவையெய்தும் வினையனைத்துந்தீரு
மரும்பரவீடுமடைவீர் - பெரும்பொறிகொள்
கள்ளம்பூதங்குடிகொள்காயமுடையீ ரடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

சீர் பிரித்த பின் 

விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  - பெரும் பொறிகொள்
கள்ள பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள் 
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

பொருள் 

விரும்பினவை = ஆசைப் பட்டவை  அனைத்தும் 

எய்தும் = அடைவீர்கள் 

வினை அனைத்தும் தீரும் = வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  = அடைவதற்கு அரிதான பரம பதம் அடைவீர்கள்

பெரும் = பெரிய

பொறிகொள் = பொறிகளை கொண்ட

கள்ள பூதம் குடி கொள்  = கள்ளத்தனமான பூதங்கள் குடி கொண்டுள்ள

காயமுடையீர் = உடம்பை  உடைய

அடிகள் = அடியவர்களே

புள்ளம்பூதங்குடி யிற்போம் = புள்ள பூதக்குடி என்ற திரு தலத்துக்கு போங்கள்


ஒருவர் இறந்து விட்டால், "இன்னாருடைய பூத உடல் இந்த இடத்தில், இன்ன நேரத்தில் அடக்கம் செய்யப் படும் " என்று அறிவிப்பதை கேட்டிருப்பீர்கள். அது என்ன பூத   உடல் ? பூதம் போல பெரிதாக இருக்குமா ?

இல்லை.

பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உடம்பு. எனவே பூத உடல்.

இந்த உடலில் உள்ள புலன்கள் இருக்கின்றனவே, அவை கள்ள பெரும் பூதங்கள்.

வெறும் பூதம் என்றாலே பயம். இதில் கள்ள பெரும் பூதம் என்றால் எப்படி இருக்கும்.  கட்டாயம், நம்மை தின்று விடும் அல்லவா ?

அப்படி பயப்பட வேண்டும் இந்த புலன்களுக்கு.

அப்படிப்பட்ட புலன்களை கொண்ட அடியவர்களே, உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்லது வேண்டும் என்றால், புள்ளபூதக் குடிக்கு போங்கள்.

நீங்க போனா மட்டும் போதும்.

சரி, இந்த புள்ள பூத குடிக்கு இந்த பெயர் எப்படி வந்தது ? இந்த ஊர் எங்கே இருக்கிறது ? இங்கு வேறு என்ன விஷேசம் ?

மேலும் சிந்திப்போம்.

(பயணம் தொடரும்)

Thursday, December 21, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருக்கரம்பனூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருக்கரம்பனூர்


வயதாக வயதாக ஆசார பற்று அதிகம் ஆகும் என்று சொல்வார்கள்.

காரணம் பலவாக இருக்கலாம். இருக்கப் போவது இன்னும் கொஞ்ச நாள் தான். அந்த கொஞ்ச காலத்தில் பூஜை புனஸ்காரம் செய்து போகும் வழிக்கு புண்ணியம் தேடுவோம் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.

அல்லது, பிள்ளைகள் எல்லாம் வேலை, திருமணம் என்று போன பின், பொழுது நிறைய இருக்கும். அதை பூஜை, ஆன்மீக புத்தகங்களை படிப்பது என்று செலவிடலாம்.

அல்லது, ஆசாரங்களை கடை பிடிப்பது சமூகத்தில் ஒரு மதிப்பை தருவதால் இருக்கலாம். அவர் அந்த மலைக்கு 18 வருடம் விடாமல் போய் இருக்கிறார்,  இவர் ஒவ்வொரு  வருடமும், ஒரு குறிப்பிட்ட தினத்தில் இந்த கோவிலுக்கு போய் விடுவார் , என்று ஆசாரங்களை கடை பிடிப்பதால் வரும் சமூக அந்தஸ்து காரணமாக இருக்கலாம்.

இப்படி விரதம், கோவில், பூஜை, தத்துவ விசாரங்கள் , என்று அலைவதால் பயனில்லை என்று நான் சொன்னால் அது எப்படி என்று கேட்கலாம். சொல்வது பிள்ளை பெருமாள் ஐயங்கார். ஆன்மீகத்தில் தோய்ந்த, அறிஞர். இவை எல்லாம் ஒரு பயனையும் தராது. இறைவன் நாமத்தை கல் என்கிறார்.


பாடல்


சிலமாதவஞ்செய்துந் தீவேள்விவேட்டும்
பலமாநதியிற்படிந்து - முலகிற்
பரம்பநூல்கற்றும் பயனில்லை நெஞ்சே
கரம்பனூருத்தமன்பேர்கல்.

சீர் பிரித்த பின்

சில மாதவம் செய்தும்  தீ வேள்வி வேட்டும்
பல மா நதியிற் படிந்தும்   - உலகில்
பரம்ப நூல்கற்றும் பயனில்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல்.

பொருள் 

சில மாதவம் = சில பெரிய தவங்களை

செய்தும் = செய்தும்

தீ வேள்வி வேட்டும் = யாகம், ஓமம், போன்ற பூஜைகள் செய்தும்

பல மா நதியிற் படிந்தும் = பல நதிகளில் நீராடியும்

 உலகில் = உலகில்

பரம்ப நூல்கற்றும் = பரந்து பட்ட பல நூல்களை கற்றும்

பயனில்லை = பயன் எதுவும் இல்லை

நெஞ்சே = நெஞ்சே

கரம்பனூர் = திருக்கரம்பனூர் என்ற தலத்தில் கோவில் கொண்டுள்ள

உத்தமன் = உத்தமன் என்ற பெயர் கொண்ட பெருமாளின்

பேர் கல் = பெயரை கற்றுக் கொள்

பெயரை சொல் என்று சொல்லவில்லை. சில மந்திரங்களை, பெயர்களை ஏதோ tape recorder போட்டால் ஓடுவது போல மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்கள். அப்படி அல்ல. இறைவன் திருநாமத்தை கற்க வேண்டும். கற்றல் என்றால் அதில் ஏதோ புரியாத ஒன்று இருக்கிறது. அதை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

புலன்களை வருத்தி, விரதம் இருந்து, உடலும் மனமும் வாடும் படி செய்யும் பூஜைகளால் ஒரு பலனும் இல்லை என்று திருமங்கை ஆழ்வாரும் சாதிக்கிறார்.

பாடல்

ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

(பொருள் எழுத வேண்டுமா ? பாடலை வாசித்துப் பாருங்கள்...நாக்கில் துள்ளும் பாடல். வாசிக்கும் போதே ஒரு சுவை தெரிகிறது அல்லவா. பத உரை வேண்டும் என்றால் சொல்லுங்கள், தனியாக எழுதுகிறேன்).


இந்த திருக்கரம்பூர் எங்கு இருக்கிறது தெரியுமா ?

திருச்சியில் இருந்து 4 km தொலைவில். திருவரங்கம் போனால், அங்கிருந்து பக்கம் தான். 

பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே,

என்பார் திருமங்கையாழ்வார். 

கரம்பனூர் உத்தமனை கண்டது தென் அரங்கத்தே என்கிறார். ரொம்ப பக்கம். நடந்து போயிரலாம். இப்பவும் கூட, அந்த பழைமை மாறாமல் அப்படியே இருக்கிறது. 


இந்த கடல் ஏழும் , மலை ஏழும் , உலகு ஏழும் உண்டு உமிழ்ந்ததைப் பற்றி பல முறை சிந்தித்து இருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது, எப்படி இதே போல நவீன விஞ்ஞானத்திலும் சில விஷயங்கள் இருக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப் பட்டது என்று சொல்ல மாட்டேன். நவீன விஞ்ஞானம் ஆழ்வர்களுக்கு முன்பே தெரியும் என்று சொல்ல மாட்டேன். ஆனால், சிந்தனைகள் மிக ஆச்சரியமான ஒன்று. என்ன என்பதை இன்னொரு பிளாகில் சிந்திப்போம். சரியா ?



பெருமாள் பெயர் உத்தமன். வட மொழியில் புருஷோத்தமன் என்று பெயர். 

ஒரு காலத்தில் இங்கு நிறைய கடம்ப மரங்கள் இருந்ததாம். பிரம்மா இந்த தளத்தில் விஷ்ணுவை வழிபட்டு வந்தாராம். அப்படி இருக்கும் போது ஒரு நாள் ப்ரம்மாவின் பக்தியை சோதிக்க எண்ணி பெருமாள் கடம்ப மரமாய் நின்றாராம். பல கடம்ப மரங்கள் உள்ள அந்த வனத்தில் பெருமாள் கடம்ப மரமாய் நின்ற அந்த மரத்தை ப்ரம்மா கண்டு கொண்டு பூஜை செய்தாராம். அதனால் மனம் மகிழ்ந்த பெருமாள், பிரம்மாவுக்கு அங்கு சிலை வடிவில் ஆராதனை நடக்க அருள் புரிந்தாராம். 

இந்த தலத்தில் பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் கோவில் உள்ளது. 

பிரம்மாவுக்கு கோயில் உள்ள மிக அரிதான இடங்களில் இதுவும் ஒன்று. 

1000 பழமையான பழைமையான கோவில். நம்ப முடிகிறதா ?

1000 ஆண்டு பழமையான கோவில். 700 அல்லது 800 ஆண்டுகள் பழைமையான பாடல்கள். இன்று நம் கண் முன்னே. கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

அடுத்த முறை திருச்சி சென்றால், உத்தமனூரை எட்டிப் பார்த்து விட்டு வாருங்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_21.html


Wednesday, December 20, 2017

முத்தொள்ளாயிரம் - பெண்ணின் நாணம் கலந்த காதல்

முத்தொள்ளாயிரம் - பெண்ணின் நாணம் கலந்த காதல் 


பெண்கள் , தங்கள் உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிப் படுத்துவது இல்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஆண்கள் மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள்.

பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டக் கூடாது என்று இல்லை. ஏதோ ஒரு நாணம், வெட்கம் அவர்களை தடுக்கிறது. அதையும் மீறி அவர்கள் தங்கள் காதல் மற்றும் காமத்தை வெளிப் படுத்தும் போது அது மிக அழகாக இருக்கிறது.

வெட்கம் கலந்த காதல் ஒரு அழகு தான்.

ஆணைப் போல அவளும் முரட்டுத் தனமாய் இருந்தால் , நல்லாவா இருக்கும் ?

ஆணுக்கு எல்லாம் வெட்டு ஒன்றும் துண்டு இரண்டுதான். பெண்ணிடம் தயக்கம் இருக்கும், பயம் இருக்கும், கூச்சம் இருக்கும், நாணம் இருக்கும், வெட்கம் இருக்கும்....இவற்றிற்கு நடுவில் அவர்கள் தங்கள் காதலையும் சொல்லியாக வேண்டும்.

இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல....தொன்று தொட்டு வருகிறது.

பாண்டிய மன்னன் விதி உலா போகிறான். அவள் ஒரு சாதாரண குடும்பப் பெண். பாண்டியன் மேல் காதல். சொல்லவா முடியும் ? அவனை கொஞ்சம் பார்கவாவது செய்யலாம் என்றால் அவனை சுமந்து வரும் அந்த பட்டத்து பெண்  யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது.


யானையிடம் தலைவி சொல்கிறாள்..."ஏய் யானை, கொஞ்சம் மெதுவா தான் போயேன்...என்ன அவசரம் .." என்று சொல்ல வேண்டும்.  யானை கேட்குமே , "ஏன் என்னை மெதுவாக போகச் சொல்கிறாய் " என்று . பாண்டிய மன்னனை சைட் அடிக்கணும் என்று சொல்லவா முடியும் ?

அவள் அந்த பட்டத்து பெண் யானையிடம் சொல்கிறாள் " நீ இப்படி தங்கு தங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல் , ஒரு பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள். எனவே , மெல்லமா போ " என்கிறாள். என்னவோ , அந்த யானை மேல் ரொம்ப கரிசனம் உள்ளவள் போல.

பாடல்

எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான்
புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால்
பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை
ஐயப் படுவது உடைத்து

பொருள்

எலா = ஏய் என்று அழைப்பதைப் போன்ற ஒரு விளிச் சொல்

அ = அந்த

மடப் பிடியே = பெண் யானையே

எங்கூடல்க் கோமான் = எங்கள் கூடல் நகரத்து கோமான்

புலா அல்  = எதிரிகளின் புலால் இருக்கும்

நெடு நல் வேல்  = நீண்ட நல்ல வேலைக் கொண்ட

மாறன் = பாண்டிய மன்னன்

உலாங்கால் = உலா வரும் போது

பைய நடக்கவும் = மெல்ல நடக்கவும்

தேற்றாயால் = தெளிந்து செய்யவில்லை என்றால்

நின் பெண்மை = உன்னுடைய பெண் தன்மை

ஐயப் படுவது உடைத்து = சந்தேகத்துக்கு இடமாகும்

பைய நடந்து போ என்று சொல்கிறாள். அவ்வளவு நேரம் அவனை பார்க்கலாமே என்ற ஏக்கம்.

பேருந்து நிலையத்திலும் , டீ கடையிலும் காதலிக்காக மணிக் கணக்கில் காத்து கிடைக்கும்  காதலர்களுக்குத் தெரியும்...அந்த வேதனை. அவள் வருவாள். வந்த நேரம் இருக்காது, நடந்து போய் விடுவாள்.

அது போல, இவள் வீட்டில், கதவுக்குப் பின்னே காத்து கிடக்கிறாள். அவன் வருகிறான். வந்த நேரம் இல்லை, போய் விட்டான்.

ஏய் , யானையே, கொஞ்சம் மெல்ல போனால் என்ன ?

எவ்வளவு நளினமாக, மென்மையாக, விரசம் கலக்காமல் தன் காதலை வெளிப் படுத்துகிறாள்.

நடுவே,இழையோடும் நகைச்சுவை வேறு....

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_20.html

Saturday, December 9, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - அன்பில்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - அன்பில் 


பிள்ளைகள் வளர்ந்து அது அது வேறு வேறு ஊர்களுக்குப் போய் விடுகின்றன. சில சமயம் அயல் நாடுகளுக்குக் கூட போய் விடுகின்றன. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். பிள்ளைகளுக்கும் பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். இருந்தாலும் , கிட்டத்திலா இருக்கு ஒரு எட்டு போய் விட்டு வரலாம் என்றால்.  நேரம், பண விரயம், உடல் உழைப்பு என்று ஆயிரம் சங்கடங்கள் வருகின்றன. வருடத்துக்கு ஒரு முறை வருவதே கடினமாக இருக்கிறது.

ஒரு வழி இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் வந்து விட்டால், அடிக்கடி சென்று பார்த்து கொள்ளலாம் அல்லவா ?

இங்கிருக்கும் ஊருக்கே இந்த பாடு என்றால், வைகுந்தத்துக்கு ?


ஒரு நடை போயிட்டு வர முடியுமா ?

ஆண்டவனுக்கும் அவன் பிள்ளைகளை பார்க்க ஆசை தான். பிள்ளைகளுக்கும் இறைவனை தரிசிக்க ஆசை தான். முடியுமா ?


எனவே தான், பெருமாள், பக்தர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்து இருந்து கோவில் கொள்கிறாராம். பக்தனுக்கு சிரமம் வேண்டாம். நாம் அவன் பக்கத்தில் வந்து விட்டால், அடிக்கடி வந்து நம்மை பார்ப்பான். நாமும் அவனை பார்த்துக் கொள்ளலாம் என்று. 


கோவிலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இறுதியில் அவன் மனதியிலேயே இடம் பிடித்துக் கொள்ளலாம் என்று ஆண்டவன் நினைத்துக் கொண்டிருப்பானாம். 

நான் சொல்லவில்லை, திருமழிசை ஆழ்வார் கூறுகிறார். 

பாடல் 

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத் தனா வான்.

பொருள்

நாகத் தணைக் = ஆதி சேஷனை படுக்கையாக கொண்ட (இடங்கள்)

குடந்தை = திருக்குடந்தை

வெஃகா = திரு வெஃகா

திருவெவ்வுள் = திருவெள்ளுர்

நாகத் தணையரங்கம் = நாகத்தை அணையாகக் கொண்ட திருவரங்கம்

பேர் =  திருப்பேரூர்

அன்பில் = அன்பில்

நாகத்தணைப்பாற் கடல் = பாம்பணையில் உள்ள பாற்கடல்

கிடக்கும் = சயனித்து இருக்கும்

ஆதி = மூலப் பொருளான

நெடுமால் = நெடிய மால்

அணைப்பார் = அணைத்துக் கொள்ளும் அன்பர்கள்

கருத்தன் = கருத்தில், மனதில்

ஆவான்த = இருப்பான்

அவனுக்கு இருக்க ஆசை உள்ள இடம் அன்பர்கள் மனம்தான். அங்கு வருவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து , பாற்கடலில் இருந்து எழுந்து வந்து பக்தன் இருக்கும் இடத்துக்கு அருகில் கோவில் கொண்டிருக்கிறானாம்.

அப்படி அவன் சயனம் கொண்ட இடங்கள் ஏழு

திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுளுர், தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் என்ற இந்த ஐந்து இடங்களில் பள்ளி கொண்டிருக்கின்றானாம்.

அப்படி அவன் சயனம் கொண்ட ஏழு இடங்களில் ஒன்றான இடம் அன்பில்.

அது தான் நாம் இன்று பார்க்க இருக்கின்ற இடம்.


நமக்கு வாழ்வில் எவ்வளவோ துன்பங்கள் வருகின்றன. பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உடல் நலக்  குறைவு, உறவுகளில் சிக்கல், என்று எவ்வளவோ துன்பங்கள் வருகின்றன.

இந்த ஆண்டவன் நினைத்தால் நமக்கு இந்த துன்பங்களை எல்லாம் நீக்கி எப்போதும் இன்பமாக இருக்க வழி செய்ய முடியாதா ? எதற்கு இவ்வளவு சோதனை என்று நாம் மனம் நொந்து கொள்வோம்.


தாயின் அன்பும், தந்தையின் அன்பும் வெளிப்படும் விதம் வேறு வேறாக இருக்கும்.

பிள்ளை கீழே விழுந்து விட்டால் , தாய் பதறி ஓடிப் போய் தூக்குவாள் . தந்தையோ பார்த்துக் கொண்டிருப்பார். அவனே எழுந்திரிக்கட்டும். வலி தாங்கட்டும் . அவன் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டி இருக்கிறது. எத்தனையோ தரம் விழுவான். அவனே எழுந்து நிற்கப் பழக வேண்டும் என்று நினைத்து பேசாமல் இருப்பார்.

நான் இப்போது தூக்கி விட்டால், பின் அவன் தானே எழுந்திருப்பது எப்படி என்று அறியாமலேயே போய் விடுவான். வலிக்கும் தான், ஆனால் , ஒரு முறை எழ பழக்கிக் கொண்டால், பின் அவன் தன்னைத் தானே பார்த்துக் கொள்வான் என்று தந்தை நினைப்பர்.

பிள்ளை நினைக்கலாம், "என்ன தகப்பன் இவன். நான் இவ்வளவு துன்பப் படுகிறேன். பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்கிறானே. இவனுக்கு என் மேல் அன்பே இல்லையா " என்று. அன்பு இருப்பதால்தான் சும்மா இருக்கிறார் என்பது பிள்ளைக்குத் தெரியாது.

அது மட்டும் அல்ல, பல சமயங்களில் பிள்ளைகள் தந்தையை நினைப்பது கூட கிடையாது. அவர்களுக்கு அவர்கள் வேலை, குடும்பம், பிள்ளைகள் என்று நாள் ஓடிக் கொண்டிருக்கிறது. பெற்றோரை நினைக்க நேரம் இல்லை. அதற்காக பெற்றோர் பிள்ளைகளை நினைக்காமல் இருப்பதில்லை.

பிள்ளை பெருமாள் அய்யங்கார் , பெருமாளை , "தந்தையே" என்று அழைக்கிறார்.

நான் உன்னை நினைக்கவிட்டாலும், நீ எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பாய் என்று கூறுவதைப் போல.

அது மட்டும் அல்ல, இந்த பிறவிக்கு ஒரு தந்தை இருக்கிறார், எத்தனையோ பிறவிகள். என்னவெல்லாமாகப் பிறந்தோமோ ? பிறக்க இருக்கிறோமோ ? அங்கெல்லாம் யார் தந்தை ? ஆண்டவன் தான் எப்போதும் தந்தையாக இருப்பவன் என்று கூறுகிறார். அவன் தான் ஆதி முதலே தந்தை.

அவனை தந்தை என்று அழைப்பதன் மூலம், அவனுடைய குடும்பத்தில் தானும்  ஒருவன் என்று நிலை நிறுத்திக் கொள்கிறார்.

அவனுடைய திருவடிகள் மேல் அன்பு செலுத்துவதைத் தவிர காசு, பணம், அதிகாரம் என்று சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு பயனும் இல்லை என்கிறார்.


பாடல்


போற்றிசெயவோர்குடைக்கீழ்ப்பொன்னாடுமிந்நாடு
நாற்றிசையுமாண்டாலுநன்கில்லை - தோற்றமிலா
வெந்தையன்பிலாதியிணைத்தாமரையடிக்கே
சிந்தையன்பிலாதார்சிலர்.

சீர்பொ பிரித்த பின்

போற்றி செய ஓர் குடைக் கீழ் பொன்னாடும் இந்நாடும் 
நான்கு திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை - தோற்றமிலா
எந்தை அன்பில் ஆதி இணை தாமரை அடிக்கே 
சிந்தை அன்பில்லாதார் சிலர் 

பொருள்


போற்றி செய = எல்லோரும் போற்றும் படி

ஓர் குடைக் கீழ் = ஒரே பெரிய அரசாக, சாம்ராஜ்யமாக

பொன்னாடும் = மேல் உலகும்

இந்நாடும் = பூவுலகம் ஆன இந்த பூமியையும்

நான்கு திசையும் = நான்கு திசையும் சூழ்ந்த நிலப் பரப்பை

ஆண்டாலும் = ஆட்சி செய்யும் அதிகாரம் இருந்தாலும்

நன்கு இல்லை  = நன்மை இல்லை

தோற்றமிலா = தோற்றம் என்பது இல்லாத

எந்தை = என் தந்தை என்பதன் மரூஉ

அன்பில் = திரு அன்பில் என்ற தலத்தில் பள்ளி கொண்டிருக்கும்

ஆதி = அனைத்துக்கும் ஆதியான அவனின்

இணை = இணையான இரண்டு

தாமரை = தாமரை போன்ற

அடிக்கே = அடிகளுக்கே

சிந்தை = மனதில் கொள்ளாத

அன்பில்லாதார் சிலர் = அன்பில்லாதர் சிலர்

இறைவனை யார் நினைக்க மாட்டார்கள் என்றால், மனதில் அன்பு இல்லாதவர்கள் நினைக்க மாட்டார்களாம். இறைவனை நினைக்க படிக்க வேண்டாம்,  ஞானம் வேண்டாம், அன்பு இருந்தால் போதும்.

அன்பு இருந்தால் அவனை நினைவு வரும். அவனை நினைக்கிறீர்கள் என்றால் என்ன  அர்த்தம், அவன் உங்கள் மனதில் இருக்கிறான் என்று தானே அர்த்தம். அதுக்குத்தானே  அவன் இந்த பாடு படுகிறான்.

அன்பு கொள்ளுங்கள். ஆண்டவன் உங்களைத் தேடி வருவான்.

(மன்னிக்கவும், இந்த பிளாக் சற்று நீண்டு விட்டது. எழுத எழுத இன்னும் கொஞ்சம் விரித்து எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்து விரித்து எழுதி  விட்டேன். இனி வரும் ப்ளாகுகளில் நீளத்தை குறைக்க முயற்சி செய்வேன் )

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_9.html