Friday, November 29, 2019

திருக்குறள் - பல சொல்லக் காமுறுவர்

திருக்குறள் - பல சொல்லக் காமுறுவர் 


சிலருக்கு வள வள  என்று எதையாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும். "எதுக்கு போன் பண்ணினே?" என்று கேட்டால் "ஒண்ணும் இல்லை, சும்மாதான் போன் பண்ணினேன்" என்பார்கள்.

சின்ன விஷயத்தைக் கூட பெரிதாக நீட்டி முழக்கி சொல்லுவார்கள். "என்ன ஆச்சு தெரியுமா நேத்து" என்று ஏதோ மூன்றாம் உலகம் யுத்தம் வந்தது போல கதை சொல்லுவார்கள். ஒன்றும் இருக்காது.

ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

சிந்திக்காமல் பேசுவது. என்ன பேசப் போகிறோம், எப்படி பேசுவது. எப்படி சுருக்கமாக பேசுவது என்று சிந்தித்துப் பின் பேச வேண்டும்.

அப்படி சிந்தித்தாலே, பேச வேண்டிய அவசியமே இருக்காது. "இதில் என்ன இருக்கிறது போய் சொல்ல " என்று பேசாமல் இருந்து விடுவார்கள்.

வள்ளுவர் சொல்கிறார்,

"பெரிதாக நீட்டி பேச ஆசைப் படுவார்கள் யார் என்றால் எதையும் சுருக்கமாக சொல்லத் தெரியாதவர்கள்" என்று

பாடல்

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்


பொருள்

பலசொல்லக் = பல சொற்களை சொல்ல

காமுறுவர் = ஆசைப் படுவார்கள்

மன்ற = உறுதியாக

மாசு அற்ற = குற்றம் அற்ற

சிலசொல்லல் =சில சொற்களை சொல்லத்

தேற்றா தவர் = தெரியாதவர்கள்



தேறாதவர் என்றால் தெரியாதவர் என்று அர்த்தம். அது என்ன "தேற்றாதவர்"?


மற்றவர்களுக்கு சொல்லி அவர்களை தெளிய வைக்க, அறிய வைக்க முடியாதவர்  என்று பொருள் கொள்ளலாம்.

சில சொற்கள் கூறுகிறேன் பேர்வழி என்று புரியாமல், தவறாக பேசவும் கூடாது.

அதனால் தான் "மாசு அற்ற" என்று கூறுகிறார்.

குற்றமற்ற சில சொற்களில் சொல்லி புரிய வைக்க முடியாதவர்கள் தான் பல சொல் பேச ஆசைப் படுவார்கள்.

அடுத்த முறை பேச ஆரம்பிக்கும் முன், யோசியுங்கள். எப்படி சொல்ல வந்ததை சுருக்கமாக அழகாக சொல்லலாம் என்று.

சொல் வன்மை என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது.

அதில் உள்ள மற்ற குறள்களையும் படித்துப் பாருங்கள். எப்படி பேச வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_29.html

Wednesday, November 27, 2019

பட்டினத்தார் பாடல்கள் - எது எப்படி போனால் என்ன ?

பட்டினத்தார் பாடல்கள் -  எது எப்படி போனால் என்ன ?



சிலர், இந்த உலகமே தங்களால் தான் சுழல்கிறது என்று நினைத்துக் கொண்டு செயல் படுவார்கள். இந்த வீடு, பிள்ளைகள், கணவன்/மனைவி, அலுவலகம், மகன்/மருமகள், மகள்/மருமகன் என்று எல்லாம் தன்னையே சார்ந்து இருப்பதாய் நினைத்துக் கொள்வார்கள்.

"நான் மட்டும் இல்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா" என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்.

பின், "என்ன செய்து என்ன பலன்...என் அருமை யாருக்குத் தெரியுது " என்று அலுத்துக் கொள்ளவும் செய்வார்கள்.

உண்மையில், அவர்களை நம்பி யாரும் இல்லை. எதுவும் இல்லை. அவர்கள் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. "ஆ..அப்படியெல்லாம் இல்லை...யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் " என்று அவர்கள் குதிக்கலாம். என்ன சொன்னாலும், அவர்கள் இல்லை என்றால் ஒன்றும் நடந்து விடாது.

உலகம் மிகப் பெரியது. நம்மை நம்பி எதுவும் இல்லை. நமது தேவைகள் மிகக் குறைவு. என்னமோ நாம் தான் என்று பிரமித்து போக வேண்டாம்.

பட்டினத்தார், பெரிய பணக்காரர். அரசருக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இருந்தது. எத்தனை வேலைக் காரர்கள் இருந்திருப்பார்கள்? கொடுக்கல், வாங்கல், வரவு, செலவு, போட்டி, என்று எவ்வளவு இருந்திருக்கும் அவர் வாழ்வில்?

எல்லாவற்றையும் ஒரே நாளில் தூக்கி எறிந்து விட்டு, கட்டிய கோவணத்துடன்  இறங்கி விட்டார்.

நான் இந்த செல்வத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும். அதை பாது காக்க வேண்டும்,  முதலீடு செய்ய வேண்டும், எவனாவது கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுவானோ என்று பயப்பட வேண்டும்...இதுதான் எனக்கு வேலையா  என்று நடையை கட்டிவிட்டார்.

அவர் சொல்கிறார்,  நிலவின் பிறை வடக்கு பக்கம் உயர்ந்தால் என்ன, தெற்கு பக்கம் உயர்ந்தால் நமக்கு என்ன...என்று ஜாலியாக இருந்தார்.

அவர் சொல்வதைக் கேட்போம்....


பாடல்


உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங்கடைகாயிலையுண்டருந்தத்தண்ணீருண்டருந்துணைக்கேவிடையேறுமீசர்திருநாமமுண்டிந்தமேதினியில்வடகோடுயர்ந்தென்னதென்கோடுசாய்ந்தென்னவான்பிறைக்கே.



பொருள்


உடைகோவணமுண்டு  = உடை, கோவணம் உண்டு

உறங்கப் புறந் திண்ணை யுண்டு = உறங்குவதற்கு யார் வீட்டு திண்ணையாவது இருக்கும்

உணவிங் = உணவு இங்கு

கடைகாயிலையுண் = கடைக் காய் இல்லை உண்டு

அருந்தத் தண்ணீருண்டு = அருந்த தண்ணீர் உண்டு

அருந்துணைக்கே = அருமையான துணைக்கு

விடையேறுமீசர்திருநாமமுண்டு = எருதின் மேல் ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு


இந்த மேதினியில் = இந்த உலகில்

வட கோடுயர்ந்தென்ன = வட கோடு உயர்ந்து என்ன ?

தென் கோடு சாய்ந்தென்ன = தென் கோடு சாய்ந்து என்ன ?

வான்பிறைக்கே. = வான் பிறைக்கே

அவரைப் போல் நம்மால் இருக்கிறதை எல்லாம் உதறிவிட்டு தெருவில் இறங்க முடியாது என்பது  வாஸ்தவம்தான்.

ஆனாலும், எல்லாம் நான் தான், என்னை வைத்துத்தான் எல்லாம் நடக்கிறது, நான்  இல்லாவிட்டால் இந்த உலகம் நின்று விடும் அல்லது என் குடும்பம் நின்று விடும்  என்று நினைப்பதை குறைக்கலாம்.

அந்த எண்ணம் வரும்போது மனம் லேசாகும். படபடப்பு குறையும். வாழ்க்கை  மென்மையாக இருக்கும். ஓட்டம் குறையும். நிதானம் வரும். அழுகை குறையும். ஆதங்கம் குறையும்.

மனம் உள்நோக்கித் திரும்பும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_30.html

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம்



இறைவன் ஒருவனே. அவன் தான் உலகைப் படைத்தான். காக்கிறான்...என்று ஏறக்குறைய எல்லா மதமும் சொல்கிறது. அனைத்து பக்தர்களும் ஏற்றுக் கொள்ளகிறார்கள். இருந்தாலும், அந்தக் கடவுள் யார் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் வணங்கும் கடவுள் தான் அந்தக் கடவுள். நீ வணங்கும் கடவுள் உண்மையான கடவுள் அல்ல என்று.

கடவுள் ஒருவர் தான் என்றால் எப்படி பல கடவுள்கள் இருக்க முடியும். உன் கடவுள், என் கடவுள் என்ற பேதம் எப்படி வரும்?

மனிதனின் அகங்காரம். "நான்" வணங்கும் கடவுள்தான் உண்மையான கடவுள் என்பது மனிதனின் பயம் கலந்த அகங்காரம் அன்றி வேறு என்னவாக இருக்கும்.

உன் கடவுள், என் கடவுள், உன் ஆச்சாரம், என் ஆச்சாரம்,   ,ஜாதி, மதம், குலம் , கோத்திரம் என்று மனிதர்கள்  கடவுளின் பெயரால் வரம்பு கட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு  இருக்கிறார்கள். சண்டை என்றால் கத்தி , துப்பாக்கி ஏந்தி இரத்தம் சிந்தி சண்டை போட வேண்டும் என்று இல்லை. வெறுப்பு, உயர்ந்தவன்/தாழ்ந்தவன் என்ற எண்ணம், துவேஷம்,  கோபம், இவையும் சண்டை போல் வன்முறையை சார்ந்தவைதான்.

நம்மாழ்வார் கூறுகிறார் ,

"இந்த உடல் நிலத்தில் விழுவதற்கு முன், உங்கள் வேற்றுமைகளை மறந்து எங்களோடு வந்து சேர்ந்து, நாடும் நகரமும் நன்றாக அறிய உரத்த குரலில் "நமோ நாராயணா"  கூறி அவனுக்கு  பல்லாண்டு கூறுங்கள் " என்று.


பாடல்


ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்துகூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோநாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்றுபாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.



பொருள்


ஏடு = இந்த உடல் (அல்லது எமன் ஓலை)

நிலத்தில் இடுவதன்முன்னம் = நிலத்தில் விழுவதன் முன்

வந்து = வந்து

எங்கள் = எங்கள்

குழாம்புகுந்து = எங்கள் குழுவில் சேர்ந்து

கூடுமனமுடையீர்கள் = கூடுகின்ற மனம் உள்ளவர்களே

வரம்பொழி வந் = வரம்பு ஒழிந்து வந்து

ஒல்லைக் கூடுமினோ = சீக்கிரமாக வாருங்கள்

நாடு = நாடும்

நகரமும் = நகரமும்

நன்கறி ய = நன்கு அறிய

நமோ நாராய ணாயவென்று = நமோ நாராயனா என்று

பாடு = பாடும்

மனமுடைப்  = மனம் உடைய

பத்தருள் ளீர் = பக்தர்களுக்குள்

வந்து பல்லாண்டு கூறுமினே. = வந்து பல்லாண்டு கூறுகள்

எல்லோரும் வாருங்கள். நமக்குள் ஒரு பேதமும் இல்லை.  நாம் மட்டும் இரகசியமாக வைத்துக் கொள்வோம். நாம் மட்டும் சுவர்க்கம் போவோம் மற்றவன் எப்படியும் போகட்டும் என்று இல்லாமல்,  "எல்லோரும் வாருங்கள்" என்று அழைக்கிறார்.

"சேர வாரும்  ஜெகத்தீரே " என்று தாயுமானவர் அழைத்தது போல.

ஜாதி மத வரம்புகளைத் தாண்டி, எல்லோரும் வாருங்கள்.

பிரபந்தம், தேவாரம் போன்ற பாடல்களுக்குக் கூட சாதி, சமய சாயம் பூசி  விலக்கி வைத்து  விடுகிறார்கள்.

யார் சொல்வதையும் கேட்காதீர்கள். நீங்களே படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

இந்தப் பாடல்கள் உங்கள் மனதை விரிவடையச் செய்யும். குறுகிய வட்டத்தில் இருந்து வெளி வரச் செய்யும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_27.html

Tuesday, November 26, 2019

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர்

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர் 


எது சரி, எது தவறு என்று மக்கள் குழம்பும் போது, உண்மை அறிந்த ஞானியர்களை மக்கள் நாடினார்கள்.

அனைத்தும் துறந்த, சுயநலம் இல்லாத ஞானிகள் அவர்கள். அவர்கள் சொல்வதை மக்கள் சந்தேகம் கொள்ளாமல் ஏற்று நடந்தார்கள்.

புத்தர், இயேசு, சங்கரர், இராமானுஜர், வள்ளலார், வள்ளுவர் போன்றவர்கள் மக்களை வழி நடத்தினார்கள்.

ஆனால், இன்று அப்படி யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் கேட்பது?

யார் உண்மையானவர், யார் பொய்யானவர் என்று தெரியமால் மக்கள் குழப்புகிறார்கள்.

பட்டினத்தார், உண்மை ஞானம் கண்டு தெரிந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவர்களின் இலக்கணம் சொல்லுகிறார்.

நீங்கள் யார் பேச்சையாவது கேப்டதாய் இருந்தால், அவர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கேட்காதீர்கள்.


பாடல்

பேய்போற்றிரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லா
நாய்போலருந்திநரிபோலுழன்றுநன்மங்கையரைத்
தாய்போற்கருதித்தமர்போலனைவர்க்குந்தாழ்மைசொல்லிச்
சேய்போலிருப்பர்கண்டீருண்மைஞானந்தெளிந்தவரே.


பொருள்

பேய்போற்றிரிந்து= பேய் போல் திரிந்து

பிணம்போற்கிடந்து = பிணம் போல கிடந்து

இட்டபிச்சையெல்லா = இட்ட பிச்சை எல்லாம்

நாய்போலருந்தி = நாய் போல் அருந்தி

நரிபோலுழன்று = நரி போல் உழன்று

நன்மங்கையரைத் = நல்ல பெண்களை

தாய்போற்கருதித் = தாய் போல கருதி

தமர்போலனைவர்க்குந் = உறவினர் போல அனைவருக்கும்

தாழ்மைசொல்லிச் = பணிவாகப் பேசி

சேய்போலிருப்பர் = குழந்தையைப் போல இருப்பார்கள்

கண்டீர் = கண்டீர்

உண்மை ஞானந் தெளிந்தவரே. = உண்மையான ஞானம் தெளிந்தவரே


பேய் போல திரிந்து - பேய்க்கு ஒரு இருப்பிடம் கிடையாது.  அது பாட்டுக்கு காட்டில் அலையும்.  அதன் பேரில் ஒரு வீடு, பேங்க் அக்கௌன்ட் எல்லாம் கிடையாது.

பிணம் போல கிடந்து - பிணத்துக்கு உணர்ச்சி இருக்காது. நல்ல உணவு,  குளிர் சாதன அறை, பெரிய கார், பெண்கள், என்று உணர்ச்சிகளுக்கு அடிமையாக மாட்டார்கள்.

இட்ட பிச்சை எல்லாம் - அந்த உணவு வேண்டும், இந்த உணவு வேண்டும் என்று கேட்பது எல்லாம் கிடையாது. கிடைத்த பிச்சையை

நாய் போல் அருந்தி - தட்டு கூட கிடையாது

நன் மகளிரை தாய் போல் கருதி - பெண்களை தாயைப் போல கருதுவார்களாம்.

எல்லோரையும் உறவினர் போல நினைத்து பணிவாகப் பேசுவார்கள்.  என் ஜாதி,  என் மதம். இது பார்க்கும் நேரம். அதற்கு கட்டணம்.  யார் கிட்ட வரலாம், யார் தள்ளி நிற்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு கிடையாது.

சேய் போல் இருப்பர் - சின்ன பிள்ளை போல கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார்கள்.

முதலில், சாமியாருக்கு மடம் எதற்கு?  எல்லாவற்றையும் வேண்டாம் என்று தானே  துறவறம் பூண்டு சாமியாராக ஆனாய். பின் எதற்கு மடம் , அதில் ஏக்கர் கணக்கில்  நிலம், பணம், தங்கம், சொத்து, வருமானம், வரி என்றெல்லாம்.  இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?  மடத்தில் இருக்கும்  யாரும், பட்டினத்தார் பட்டியலில் வர மாட்டார்கள்.

சொத்து சேர்த்து, அதை காப்பாற்றி, அதை பெருக்கி, அதை நிர்வாகம் பண்ண ஆளை போட்டு, அவன் ஏமாற்றாமல் இருக்கிறானா என்று தெரிந்து  கொள்ள  ஒரு ஆடிட்டர் ஐ போட்டு...இதெல்லாம் ஞானம் அடைந்ததின் குறியீடா?

உண்மையான ஞானிகளை பார்க்க போக வேண்டும் என்றால் மடத்திற்குப் போகாதீர்கள்.

எந்த மதத்திலும், எந்த பிரிவிலும், எங்கே பணமும் சொத்தும் புரள்கிறதோ அங்கே ஞானம் இருக்காது. உங்களுக்கு பணம் வேண்டும், செல்வாக்கு வேண்டும், காரியம் நடக்க யாரையாவது பிடிக்க வேண்டும் என்றால் அங்கே போங்கள். ஞானம்?

ஞானிகள் தங்களை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஞானம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் தேடிப்  போக வேண்டும்.

அந்தத் தேடல் தான் உங்கள் ஞானத்தின் முதல் படி.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_26.html

Monday, November 25, 2019

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும்

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும் 


கர்ணன் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறான். அர்ஜுனன் எத்தனையோ அம்புகளை விடுகிறான். அவை கர்ணனை தீண்டவில்லை. கர்ணன் செய்த தர்மம் அவனை காத்து நின்றது.

பார்த்தான் கண்ணன். கர்ணன் செய்த தர்மம் அவனுக்கு பக்க பலமாக உள்ளவரை அவனை கொல்ல முடியாது என்று கருதி, கிழ வேதியர் வடிவம் தாங்கி, கர்ணனிடம் அவன் செய்த தவங்கள் யாவையும் தானமாகப் பெற்றான். (செய் தர்மம் - வினைத்தொகை). அதற்குப் பின், அர்ஜுனனிடம் "நீ இனி அம்பு விடு, அவன் இறந்து விடுவான்" என்று சொல்கிறான்.

அதே போல் அர்ஜுனனும், அம்பு விட்டு அவனை கொல்கிறான்.

நான் சொல்ல வந்தது இந்த கதை அல்ல.

அர்ஜுனன் விட்ட அம்பு குறி தவறாமல் கர்ணனின் மார்பை துளைத்தது என்பதற்கு ஒரு உவமை சொல்ல வேண்டும் என்று நினைத்த வில்லி புத்தூர் ஆழ் வார் ஒரு உவமையை தேர்வு செய்கிறார்.

"தகலுடையார் மொழி போல"

என்று சொல்கிறார்.

அதாவது தவம் செய்த பெரியவர்கள் சொன்ன சொல் எப்படி தவறாகாதோ , அது போல் தவறில்லாமல் அந்த அம்பு அதன் இலக்கை அடைந்தது என்கிறார்.

அந்த மாதிரி பெரியவர்கள் சபித்தாலும் சரி, ஆசீர்வாதம் செய்தாலும் சரி, அது பலிக்கும் என்று நம்மவர்கள் நம்பினார்கள்.

சொல்லுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. அது சொல்பவர்களைப் பொறுத்தது.

பாடல்

பகலவன்தன்மதலையைநீபகலோன்மேல்பாற்பவ்வத்திற்
                    படுவதன்முன்படுத்தியென்ன,
விகல்விசயனுறுதியுறவஞ்சரீக மெனுமம்பாலவ
                            னிதயமிலக்கமாக,
வகலுலகில்வீரரெலாமதிக்கவெய்தா னந்தவாசுக
                         முருவியப்பாலோடித்,
தகலுடையார்மொழிபோலத்தரணியூடு தப்பா
               மற்குளித்ததவன்றானும்வீழ்ந்தான்.


பொருள்

பகலவன்தன்மதலையை = பகலைத் தருகின்ற சூரியனின் மகனை (கர்ணனை)

நீ = நீ (அர்ஜுனா)

பகலோன் = சூரியன்

மேல்பாற் = மேற்கு திசையில்

பவ்வத்திற் = உள்ள கடலில்

படுவதன்முன் = மறைவதன் முன்

படுத்தியென்ன, = அம்புகளை விடுவாய் என்று  சொல்ல

விகல்விசயனும் = இகல் விஜயன் - வீரம் பொருந்திய அர்ஜுனன்

உறுதியுற = உறுதியாக,

அஞ்சரீக மெனும் அம்பால்  = அஞ்சீரகம் என்ற அந்த அம்பால்

அவனிதயமிலக்கமாக, = அவன் (கர்ணன்) இதயம் இலக்காக  (குறி வைத்து)

அகலுலகில் = அகன்ற உலகில்

வீரரெலாமதிக்க = வீரர் எல்லாம் மதிக்க

வெய்தா னந்த = எய்தான், அந்த

ஆசுகம் = அம்பு

முருவியப்பாலோடித், = உருவி அப்பால் ஓடி

தகலுடையார் = தவமுடையவர்

மொழிபோலத் = மொழி போல

தரணியூடு = உலகத்தின் வழி

தப்பாமற் = தப்பாமல்

குளித்ததது = விழுந்தது

வன்றானும்வீழ்ந்தான். = அவனும் (கர்ணனும்) வீழ்ந்தான்

வார்த்தைகள் வலிமை மிக்கவை. அவற்றை நாம் வீணடிக்கக் கூடாது.

பெரியவர்களின் ஆசி அப்படியே பலிக்கும்.

பெரியவர்கள் என்றால் வயதில் பெரியவர்கள் அல்ல. திருதராட்டிரன் கூட வயதில் பெரியவன் தான். அதற்காக அவன் சொன்னது எல்லாம் நடக்கும் என்று கொள்ளக் கூடாது. காட்டு எருமைக்கும், காண்டா மிருகத்துக்கும், கடல் ஆமைக்கும் கூடத்தான் வயதாகும். வயது ஒரு பொருட்டு அல்ல.

தவத்தால், ஒழுக்கத்தால் , அறிவால் பெரியவர்கள்.


அப்படிப் பட்டவர்கள் ஆசியைப் பெற வேண்டும்.

நாமும் அப்படிப்பட்டவர்களாக முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_25.html

Sunday, November 24, 2019

திருப்புகழ் - ஏது புத்தி

திருப்புகழ் - ஏது புத்தி 


கொஞ்சம் பெரிய பாடல் தான். படிக்கவும் சற்று கடினமான பாடல் தான். பொறுமையாகப் படித்தால் அவ்வளவு சுவை நிரம்பிய பாடல். சீர் பிரித்து பொருள் அறியலாம்.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை, திடீரென்று அருகில் அப்பா அம்மா யாரும் இல்லாததை கண்டு திகைக்கிறது. எங்கு போய் தேடுவது என்று தெரியாமல் குழம்புகிறது. பின், அதுவே நினைக்கிறது. எனக்கு என்ன புத்தியா இருக்கு அப்பா அம்மாவை தேடி கண்டுபிடிக்க என்று நினைத்து ஓ வென்று அழ ஆரம்பிக்கிறது. பிள்ளை அழுதால் அப்பா அல்லது அம்மா யாராவது ஓடி வருவார்கள் தானே. நாம் எதுக்கு போய் தேடணும். அழுதா போதுமே, அவங்களே வந்து தூக்கிக் கொள்வார்கள் அல்லவா என்ற அந்த பிள்ளையின் அறிவு கூட எனக்கு இல்லையே.

இத்தனை காலம் இந்த உலகில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்து விட்டேன். திடிரென்று உன் ஞாபகம் வந்தது முருகா. உன்னை எங்கே போய் தேடுவேன். எனவே, அழுகிறேன். அழுதால் உன் பிள்ளையான என்னை நீ வந்து தூக்கிக் கொள்வாய் அல்லவா ? எனக்கு வேறு யாரைத் தெரியும்?

நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். பிள்ளை அழும் போது அதை கவனிக்காவிட்டால் ஊரில் அதன் அப்பா அம்மாவைப் பற்றி என்ன சொல்லுவார்கள். பிள்ளையை கவனிக்காம அப்படி என்ன வேலையோ என்று பெற்றோரைத் தானே திட்டுவார்கள்.

முருகா, நீ என்னை கவனிக்காவிட்டால் ஊரில் உன்னைத் தான் எல்லோரும் திட்டுவார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். பெரிய கடவுளாம், பக்தன் அழும் போது வந்து  கவனிக்கக் கூட தெரியவில்லை என்று.  இது தேவையா உனக்கு?

என்று சொல்லிவிட்டு, முருகனை துதிக்கிறார்.

அற்புதமான பாடல். சந்தம் கருதி கொஞ்சம் வார்த்தைகளை அங்கே இங்கே பிரித்துப் போட்டு இருக்கிறார். நாம் அதை கொஞ்சம் சீர் பிரித்து வாசித்தால் அதன் அழகு தெரியும்.

பாடல்



ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.



பொருள்



ஏது புத்தி = ஏது புத்தி

ஐயா = ஐயா

எ னக்கு = எனக்கு

இனி = இனிமேல்

யாரை = யாரை

நத்திடுவேன் = நாடுவேன்

அவத்தினிலே = வீணாக

இறத்தல்கொ லோ = இறப்பதுதான்

எனக்கு = எனக்கு

நீ = நீ

தந்தைதாயென்று = தந்தை தாய் என்று


இருக்கவும் = இருக்கவும்

நானு மிப்படியே  = நானும் இப்படியே

தவித்திடவோ = தவித்திடவோ

சகத்தவர் = உலகில் உள்ளவர்கள்

ஏசலிற் படவோ = திட்டும் படியாக

நகைத்தவர் = என்னைப் பார்த்து சிரிப்பவர்கள்

கண்கள்காணப் = அவர்கள் கண்கள் என்னை காணும் படி

பாதம் வைத்திடை யா = உன் பாதங்களை வைத்திடு ஐயா

ஆதரித்து எனை = ஆதரித்து எனை

தாளில் வைக்க = உன் திருவடிகள் என் தலைமேல் வைக்க

நி யேம றுத்திடில் = நீயே மறுத்தால்

பார் நகைக்குமை யா  = பார் நகைக்கும் ஐயா

தகப்பன்முன் = தகப்பன் முன்

மைந்தனோடிப் = பிள்ளை ஓடி

பால்மொழி = குழந்தையின் பால் போன்ற மொழியில்

குர லோல மிட்டிடில் = குரல் ஓலம் இட்டிடில்

 யாரெடுப்பதென = யார் எடுப்பது என

நா வெறுத்தழ =நாக்கு வெறுத்து அழ

பார்வி டுப்பர்க ளோ = பாரில் (உலகில்) விட்டு விடுவார்களா

எனக்கிது = என்று இதை

சிந்தியாதோ =  சிந்திக்க மாட்டார்களா?


ஓத முற்றெழு = வெள்ளம் முழுவதுமாக எழுவது போல

பால்கொ தித்தது =பால் கொதித்தது

போல = போல

எட்டிகை = எட்டு திசையில் உள்ள

நீசமுட்டரை = நீசம்முற்ற அசுரர்களை

யோட வெட்டிய = ஓட வெட்டிய

பாநு  = சூரியனை போல் ஒளிவிடும்

சத்திகை = சக்தியான வேலைக் கொண்ட

யெங்கள்கோவே = எங்கள் அரசனே


ஓத மொய் = வெள்ளம் பெருகும்

சடை யாடவும்  = சடை ஆடவும்

உற்ற மான் மழு கரம் ஆட = மானும் மழுவும் கையில் ஆட

பொற்கழ லோசை  = பொன்னால் அணிந்த கழல் ஓசை

பெற்றிடவே நடித்தவர் = தோன்றும்படி நடனமாடியவர்

தந்தவாழ்வே = தந்த எங்கள் வாழ்வான முருகனே


மாதி னை = மாதினை

புன மீதி ருக்கு = புனை மீது இருக்கும்

மை = மை பூசிய

வாள்விழிக் = வாள் போன்ற விழிகளைக் கொண்ட

குற மாதினைத் = குற மாதினை

திருமார்ப ணைத்த = மார்போடு அனைத்துக் கொண்ட

மயூர = மயில் மேல் ஏறும்

அற்புத = அற்புதமான

 கந்தவேளே = கந்தக் கடவுளே

மாரன் வெற்றிகொள் = மன்மதனை வெற்றி கொள்ளும்

பூமு டிக்குழலார்  = பூக்கள் முடிந்த குழலை உடைய பெண்கள்

வியப்புற = வியக்கும்படி

நீடு மெய்த்தவர் = நீண்ட மெய் தவம் செய்பவர்

வாழ் = வாழும்

திருத்தணி  = திருத்தணியில்

மாமலைப் = பெரிய மலை

பதி  தம்பிரானே.= அதிபதியான தம்பிரானே

கொஞ்சம் பொறுமையாக பாடலை வாசித்துப் பாருங்கள். சந்தம் துள்ளும்.

அர்த்தம் தோய்ந்த இனிய பாடல்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_24.html

Friday, November 22, 2019

திருக்குறள் - பொதுநோக்கு நோக்குதல்

திருக்குறள் - பொதுநோக்கு நோக்குதல்



கல்லூரி நாட்களில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார காதலித்தார்கள். ஆனால், வெளியே காட்டிக் கொல்வதில்லை. எப்போதாவது பேசிக் கொள்வது. ஓடை நீர் பார்வை பரிமாற்றம் மட்டும்தான். கல்லூரி  முடிந்து ஆளுக்கு ஒரு பக்கமாய் போய் விட்டாலும், தொலை பேசியிலும், whatsapp லும் அவர்கள் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

அவர்களின் நண்பர்களுக்கு அரசல் புரசலாகத் தெரியும். இருந்தும் யாரும் அதை பெரிது படுத்தவில்லை. என்ன பெரிய விஷயம் என்று விட்டு விட்டார்கள்.

எப்போதாவது, ஆண்டுக்கு ஒரு முறை, அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நண்பர்கள் எல்லோரும் கூடுவார்கள். அல்லது நண்பர்கள் வீட்டில் ஏதாவது திருமணம் போன்ற விஷேசம் வந்தால் கூடுவார்கள்.

அவர்களும் வருவார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒன்றும் இல்லாதது போல பார்த்துக் கொள்வார்கள்.

அவளுடைய தோழிகளும், அவனுடைய தோழர்களும் அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். ம்ஹூம் ...ஒன்றும் தெரியாது.  யாரோ, எவரோ போல இருப்பார்கள்.

இரண்டும் சரியான கல்லுளி மங்கர்கள். அழுத்தமான ஆளுகள் தான்....


இது இன்று நடக்கும் ஏதோ சினிமாவோ அல்லது சீரியலோ அல்ல, திருவள்ளுவர்  காலத்தில் நடந்த நாடகம்...அவரே சொல்கிறார் பாருங்கள் ....


பாடல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

பொருள்

ஏதிலார் = ஒருவரை ஒருவர் அறியாதவர்

போலப் = போல

பொதுநோக்கு நோக்குதல் = பொதுப்படையாக நோக்குதல்

காதலார் =காதலர்கள்

கண்ணே உள = கண்ணில் மட்டும் தான் இருக்கும்

உள என்பது பன்மை. இரண்டு பேர் மனத்திலும் காதல் இருப்பதால் உள என்ற பன்மையை போடுகிறார் வள்ளுவர்.


நோக்குதல் என்பது ஒன்று தானே?  இரண்டு பேரும் ஒரே காரியத்தைத்தானே செய்கிறார்கள். பின் எதற்கு பன்மை போட வேண்டும்?

எல்லோரையும் நோக்குவது ஒரு தொழில். காதலியை (காதலனை) நோக்குவது இன்னொரு தொழில். அது வேறு பார்வை. இது வேறு பார்வை. பார்த்தால் ஒரே மாதிரிதான்   இருக்கும். இருந்தாலும், உள்ளுக்குள் வேறுபாடு உண்டு   என்பதால்,  "உள" என்ற பன்மையை கையாள்கிறார் வள்ளுவர்.


அவளுக்கு , அவன் மேல் காதல்.

அவனுக்கு, அவள் மேல் காதல்.

இருவரும் மனதுக்குள் அந்த காதலை நினைத்து மகிழ்கிறார்கள். அருகில் இருப்பது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.  இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஒன்றும் தெரியாதவர் போல பார்த்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் அந்த கண நேரத்தில் பட்டுத் தெறிக்கும் காதல். அதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்று மறைத்து வைக்கும் செயல் என்று   பல செயல்கள் நடப்பதால், "உள" என்றார்.

சரி, அது என்ன "காதலார்". காதலர் என்று தானே இருக்க வேண்டும். ஏன் 'லார்" என்று ஒரு பொருந்தாத சொல்லப் போடுகிறார் ?

அவர்கள் காதலிக்கிறார்கள். ஆனால், காதலை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அது ஒரு  முரண் தானே. அந்த முரணைக் பாட்டில் கொண்டு வருகிறார் வள்ளுவர்.

"காதலார்" என்று ஒரு நெருடலான சொல்லைப்  போடுகிறார்.

அந்த சூழ்நிலையில் அவர்கள் செயல் அப்படி பொருத்தம் இல்லாததாக இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார்.

எவ்வளவு சுவையாக இருக்கிறது.  படிக்கும் போதே ஒரு சுகம் தெரிகிறது அல்லவா? முகத்தில் ஒரு புன்னகை வருகிறது அல்லவா?

ஆண் பெண் உறவை அவ்வளவு இனிமையாக சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

படிக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_22.html