Friday, November 13, 2020

கம்ப இராமாயணம் - பொன் மான்

 கம்ப இராமாயணம் - பொன் மான் 

சீதை பொன் மானைக் கண்டதும், அதைப் பற்றித் தருமாறு இராமனை வேண்டியதும், இராமன் போனதும் அந்தக் கதை எல்லாம் நமக்குத் தெரியும். 


உலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன் என்ற அளவுக்கு ஆற்றல் கொண்ட சீதை, பொன் மான் உண்மையானது அல்ல என்று அறிய மாட்டாளா? 

சரி, அவள் தான் பெண், ஏதோ ஆசைப் பட்டுவிட்டாள், இராமனுக்குத் தெரியாதா? பொன் மான் என்று ஒன்று கிடையாது என்று அவனுக்குத் தெரியாதா? வசிட்டரிடமும், விச்வாமித்ரரிடமும் படித்த கல்வி அதைச் சொல்லவில்லையா? இலக்குவனுக்குத் தெரிந்தது இராமனுக்குத் தெரியாதா? 


பின் ஏன் அது நிகழ்ந்தது?


அப்படி போனால், இராவணன் வந்து சீதையை தூக்கிக் கொண்டு போவான், அது தேவையான ஒன்று என்று அவர்கள் நினைத்து இருந்தால், அவர்கள் மேல் பரிதாபப் பட ஒன்றும் இல்லை. வேண்டும் என்றே செய்த ஒன்று. 


சரியான விளக்கமாகப் படவில்லையே. எப்படி போனாலும் இடிக்கிறதே. 

அது ஒரு புறம் இருக்கட்டும். 


பொன் மான் உண்மை அல்ல என்று தெரிந்தும் அதை விரட்டியது அறிவீனமான செயல் என்றால், நாம் எத்தனை பொன் மான்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம்?

கடைசி காலத்தில் பிள்ளை பார்த்துக் கொள்வான் என்று ஒரு பொன் மான். 

வயதான காலதத்தில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பார்கள் என்று ஒரு பொன் மான். 

சுவர்க்கம், நரகம், பரமபதம், கைலாசம் என்று சில பொன் மான்கள். 

நல்லது செய்தால் நல்லது நடக்கும், தீயது செய்தால் தீயது நடக்கும், கர்ம வினை,  என்று சில பொன் மான்கள். 


அதெப்படி, அதெல்லாம் இல்லை என்று சொல்ல முடியும்? நம் முன்னோர்கள் மூடர்களா என்று கேட்கலாம். அப்படித்தான் சீதை நினைத்தாள். அப்படித்தான் இராமன் நினைத்து அதன் பின் போனான். பட்ட துயரம் வராலாறு. 


இவை எல்லாம் உண்மையான மான்கள் என்று நினைப்பது அவரவர் உரிமை.  


வீடு வாங்கினால் நிம்மதியாக இருக்கலாம் என்று கணவனை அந்த வீடு என்ற பொன் மானை பிடித்துத் தரச் சொல்லி விரட்டும்  சீதைகள் எத்தனை. 


ஒவ்வொருவரும் சில பல பொன் மான்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம். 


இந்த பொன் மான்களின் பட்டியல் மிக நீண்டது. நமக்குத் தெரிவவதில்லை. 


நம் பெற்றோர், அவர்களின் பெற்றோர் என்று வழி வழியாக துரத்திக் கொண்டு இருக்கிறோம். 


இந்த பொன் மானை துரத்துவது நின்றால் தான் நிம்மதி, அமைதி பிறக்கும். 

எல்லா பொன் மானும், நிஜ மான் போலவே தெரிவதுதான் சிக்கல். 

பாடல் 

'ஆணிப் பொனின் ஆகியது;      ஆய் கதிரால்

சேணில் சுடர்கின்றது; திண்      செவி, கால்,

மாணிக்க மயத்து ஒரு      மான் உளதால்;

காணத் தகும்' என்றனள்,      கை தொழுவாள்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_13.html

(click the above link to continue reading)


'ஆணிப் பொனின் ஆகியது = ஆராய்ந்து எடுக்கப்பட்ட பொன்னால் ஆனது 

ஆய் கதிரால் = சூரிய ஒளியில் 

சேணில்  = தூரத்தில் இருந்து பார்க்கும் போது 

சுடர்கின்றது = ஒளி விடுகிறது 

 திண்  செவி, கால், = உறுதியான காது, மற்றும் கால்கள் 

மாணிக்க மயத்து  = மாணிக்கம் போல 

ஒரு  மான் உளதால்; = ஒரு மான் உள்ளது 

காணத் தகும்' என்றனள்,    = காணத் தகும் என்று 

கை தொழுவாள். = கை கூப்பி நின்றாள் 


பெண்ணின் ஜாலம். வேண்டும் என்று சொல்லவில்லை. "பாத்தா அப்படி நல்லா இருக்கு " என்று கூறி விட்டு கை கூப்பி நின்றாள். 


அதற்கு என்ன அர்த்தம் ? அதை எனக்கு பிடித்துத் தா என்பதுதான் அர்த்தம். 

அவ ஒண்ணும் அப்படிச் சொல்லவில்லை, இராமனாகத்தான் பிடிக்கப் போனான் என்று சொல்லும் முன் சற்று பொறுங்கள். முழுவதையும் படித்து விடுவோம். 


மாய மான்களை விரட்டிக் கொண்டு கையில் வலையோடு அலைந்து கொண்டு இருக்கிறோம்.  


ஒரு மானைப் பிடித்தால் புதிதாக நாலு மான்கள் வருகின்றன. 


இந்த மான் பிடி ஓட்டம் என்று நிற்கும்? 


Thursday, November 12, 2020

வில்லி பாரதம் - தரு வரம் எனக்கும் இரண்டு உள

 வில்லி பாரதம் - தரு வரம் எனக்கும் இரண்டு உள 


காப்பியங்களில் எவ்வளவோ அவலச் சுவையை நாம் பார்த்து இருக்கிறோம்.  கதா நாயகனும், கதா நாயகியும் படாத பாடு படுவார்கள்.  கடைசியில் வெற்றி பெறுவார்கள். 

நான் படித்த வரை, மிகவும் வருந்துதற்கு உரிய அவலமான நிலை கர்ணனின் நிலை. 


தன் தாயிடம் ஒரு பிள்ளை கேட்கும் வரம்...


"நான் இறந்த பிறகு எனக்கு நீ பாலூட்ட வேண்டும்" என்று ஒரு பிள்ளை தாயிடம் கேட்கும் அவலம், அவலத்தின் உச்சம். 


செத்த பிறகாவது தாயன்பு கிடைக்காதா என்று ஏங்கும் அவன் அன்பின் தாகம் எவ்வளவு இருக்க வேண்டும்?  

சிலருக்கு அப்படி ஒரு அவலம் நிகழ்து விடுகிறது. விதி. 


பாடல் 


பெரு வரம் இரண்டும் பெற்றபின், தன்னைப் பெற்ற

                தாயினைக் கரம் குவித்து,

'தரு வரம் எனக்கும் இரண்டு உள: உலகில் சராசரங்களுக்கு

                எலாம் தாயீர்!

வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது,

                அவனிபர் அறிய,

மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து, உம்தம் மகன்

                எனும் வாய்மையும் உரைப்பீர்.


பொருள் 


பெரு வரம் = பெரிய வரம் 

இரண்டும் பெற்றபின் = (குந்தி) இரண்டையும் பெற்ற பின் 

தன்னைப் பெற்ற = தன்னைப் பெற்ற 

தாயினைக் = தாயிடம் 

கரம் குவித்து, = கை கூப்பி 

'தரு வரம் = தரக்கூடிய வரம் 

எனக்கும் இரண்டு உள = எனக்கும் இரண்டு உள்ளது 

உலகில் சராசரங்களுக்கு = இந்த உலகுக்கு

எலாம் தாயீர்! = எல்லாம் தாய் போன்றவளே 

வெருவரும் அமரில்  =  அஞ்சத்தக்க போரில் 

பார்த்தனால் = அர்ஜுனனால் 

அடியேன் வீழ்ந்தபோது, = நான் வீழ்ந்த பின் 


அவனிபர் அறிய, = உலகில் உள்ள அனைவரும் அறிய 

மரு வரும் = மனம் மகிழ்ந்து 

முலைப்பால்  = உன் தாய் பாலை 

எனக்கு அளித்து = எனக்கு அளித்து 

உம்தம் மகன் = நான் உன் மகன் 

எனும்  = என்ற 

வாய்மையும் உரைப்பீர். = உண்மையை உரைப்பீர் 


குழந்தை பசித்து தாய் பாலுக்கு அழலாம். 


ஒரு வளர்ந்த பிள்ளை, தான் இறந்த பின், எனக்கு தாய் பால் தா என்று ஏங்கும் ஏக்கம் இருக்கிறதே ....




திருக்குறள் - நீர் இன்றி அமையாது உலகு

திருக்குறள் - நீர் இன்றி அமையாது உலகு 

நாம் எல்லாம் ஒழுக்கமானவர்கள். ஒரு தப்பு தண்டா செய்வது இல்லை. சட்டம், நீதி, நேர்மை, சமுதாய பண்பாடு இவற்றிற்கு பயப்படுபவர்கள்.  அதில் நமக்கு ஒரு பெருமையும் உண்டு. 


நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், நம் பண்பாடு, ஒழுக்கம், ஆசாரம் எல்லாம் நம் குலத்தில் இருந்து வந்தது, நம் பெற்றோர்கள் நமக்குத் தந்தது, நாம் படித்து உணர்ந்தது என்று. 

வள்ளுவர் சொல்கிறார், வானம் பொய்த்தால், இந்த உலகில் யாரும் ஒழுக்கமாக இருக்க முடியாது என்று. 


இந்த உலகில் ஒழுக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், மழை இடை விடாது பெய்ய வேண்டும். அது தன் விருப்பத்துக்குப் பெய்தால், அல்லது பெய்யாமல் இருந்தால், உலகில் ஒரு ஒழுக்கமும் இருக்காது. 

உண்ண உணவும், குடிக்க நீரும், உடுக்க உடையும் இல்லை என்றால் என்ன ஒழுக்கம் இருக்கும் ?


அனைத்து அறங்களும் , பூஜைகளும், ஆசார அனுஷ்டானங்களும், தர்மங்களும், நீதி, நேர்மை, வாய்மை போன்ற உயர் குணங்களும் மழையினால் நிலை பெற்று நிற்கின்றன. 


பசி வந்து விட்டால் என்ன தர்மம் நிற்கும். 


உலகுக்கு காயத்ரி மந்திரம் தந்த விச்வாமித்ரனை நாய் கறி தின்னத் தூண்டியது பசி. அப்படி என்றால், ஒழக்கம் எங்கே நிற்கிறது என்று புரிகிறதா?


பாடல் 


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_12.html

(click the above link to continue reading)



நீர்இன்று = நீர் இல்லாமல் 

அமையாது  = இருக்காது, இயங்காது 

உலகெனின் = உலகம் என்றால், என்று கூறினால் 

யார்யார்க்கும் = யாராக இருந்தாலும் 


வான்இன்று = வானம் இன்றி , மழை இன்றி 

அமையாது ஒழுக்கு = அமையாது ஒழுங்கு , அறம் 


நீர் இல்லாமல் உலகம் இல்லை. அது போல், மழை இல்லாமல் ஒழுக்கம் இல்லை. 


உயிர் வாழ மட்டும் அல்ல, ஒழுக்கத்தோடு, பண்போடு, அறத்தோடு வாழவும் மழை வேண்டும். 

மழை எவ்வளவு உயர்ந்தது என்று புரிந்து கொள்ள உதவும் பாடல். 

இவ்வாறாக, வான் சிறப்பு என்ற அதிகாரம் பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்தோம். 

இனி, மற்றுமொரு அதிகாரம் பற்றி சிந்திப்போமா ?


Tuesday, November 10, 2020

கம்ப இராமாயணம் - இல்லை ஆயினன் உன் மகன்

 கம்ப இராமாயணம் - இல்லை ஆயினன் உன் மகன் 


இந்திரஜித்து போர்க் களத்தில் இறந்து போகிறான். அதை இராவணனிடம் சொல்ல வேண்டும். 

உன்  பிள்ளை இறந்து விட்டான் என்று தக்கபனிடம் எப்படிச் சொல்வது? அதுவம் இராவணன் போன்ற பேரரசனிடம்? சொன்னவன் தலையை சீவி விட மாட்டானா?

அது ஒரு புறம் இருக்கட்டும். 


சில நாள் நம் பிள்ளை வீடு வந்து சேர நேரம் ஆனால், நமக்கு ஒரு லேசான பதற்றம் வரும் தானே.

அவன் நண்பர்கள் வீட்டுக்கு எல்லாம் தொடர்பு கொண்டு அவன் அங்க இருக்கானா, அங்க வந்தானா என்று கேட்போம் அல்லவா? 

அவன் அங்கு இல்லை என்றால், அவன் நண்பர்கள் என்ன சொல்லுவார்கள் ?

"அவன் இங்க இல்லையே" என்று சொல்லுவார்கள் அல்லவா?


ஒரு இடத்தில் இல்லாவிட்டால், இன்னொரு இடத்தில் இருக்கலாம். 


இந்திரஜித்து இறந்ததை கம்பன் சொல்லுவதைக் கேளுங்கள். 

"இன்று இல்லை" 

என்று சொல்கிறான். 

நேற்று இருந்தான், இன்று இல்லை. 

போர்க்களத்தில் இல்லை என்றால், அரண்மனையில் இருக்கலாம், அரண்மனையில் இல்லை என்றால் கோவிலில் இருக்கலாம்...எங்காவது இருக்கலாம், தேடுங்கள் என்று சொல்லலாம். 

"இன்று இல்லை" என்றால் என்ன செய்வது.

அவலத்தின் உச்சம். 

அதைச் சொல்ல, அந்த படை வீரர்கள் நடுநடுங்கி வருகிறார்கள். வந்து சொல்கிறார்கள். 


பாடல் 



பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்

நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார்

‘இல்லை ஆயினன்; உன்மகன் இன்று ‘எனச்

சொல்லினார் பயம் சுற்றத் துளங்குவார்.


பொருள் 


(click the above link to continue reading)

பல்லும் = பல்லு 

வாயும்  = வாய் 

மனமும் = மனம் 

தம் பாதமும் = அவர்கள் கால்கள் 

நல் உயிர்ப் = அவர்களின் உயிர் 

பொறையோடு = கனமாக உணர்ந்து 

நடுங்குவார் = நடுங்கினார்கள் 

‘இல்லை ஆயினன்; = இல்லை என்று ஆகி விட்டான்  

 உன்மகன் இன்று = உன் மகன் என்று 

‘எனச் சொல்லினார் = என்று சொல்லினார்கள் 

 பயம் சுற்றத் = பயம் அவர்களை சூழ்ந்து கொள்ள 

துளங்குவார். = நடுங்கினார்கள் 


பல்லு, காலு, மனம், உயிர் எல்லாம் தந்தி அடிக்கிறது. 


"இன்று உன் மகன் இல்லை" என்று சொனார்கள். 


இந்திரஜித்து இறந்த பின் மண்டோதரியும் இராவணனும் அழுத அழுகை இருக்கிறதே, கல் மனதையும் கரைக்கும். 


சீதை மேல் கொண்ட காமம் மகனின் மறைவோடு இராவணனுக்கு போய் விட்டது. 

இவ்வளவு பெரிய வலி வேண்டி இருந்திருக்கிறது, அந்தக்  காமம் போக. அப்படி என்றால் அது எவ்வளவு வலிமையாக இருந்திருக்கும் ? 


திருக்குறள் - தானம், தவம்

 திருக்குறள் - தானம், தவம் 


தமிழர் வாழ்கை முறையே அறம் சார்ந்ததுதான். எல்லாவற்றையும் அறத்தின் அடிப்படையிலே சிந்தித்தார்கள். அறம் என்றால் ஒரு ஒழுங்கு, இயற்கை, நியதி. 


வாழ்வை இரு பெரும் கூறாக பிரித்தார்கள் - இல்லறம், துறவறம் என்று. 

கூடி வாழ்வது, மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு, பொருள் சேர்த்தல், புகழ் சேர்த்தல் என்று பெருக்கிக் கொண்டே போவதும் அறம்தான். அது இல்லறம். 

ஒன்றும் வேண்டாம் என்று ஒவ்வொன்றாக துறப்பதும் அறம் தான். அது துறவறம். 

சேர்ப்பதும் அறம். விடுவதும் அறம். 


இல்லறம் பற்றி சில விதி முறைகள், துறவறம் பற்றி சில விதி முறைகள் என்று வகுத்து வைத்தார்கள். 


வாழ்கை ஒரு பயணம் என்றால் அது இல்லறத்தில் தொடங்கி, துறவறம் வழியாக வீடு பேற்றை அடைவது என்பதுதான். 


இல்லறத்தை ஒழுங்காகக் கடை பிடித்தால், அது நம்மை தானே துறவறத்தில் கொண்டு போய் நிறுத்தும். 


துறவறத்தை ஒழுங்காக கடை பிடித்தால் அது வீடு பேற்றில் கொண்டு போய் விட்டு விடும். 

சரி, அது எல்லாம் எதுக்கு இந்த வான் சிறப்பு என்ற அதிகாரத்தில்?


பாடல் 


தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_10.html

(pl click the above link to continue reading)

தானம் = தானம், கொடை 

தவம் = தவம் செய்வவது 

இரண்டும் = என்ற இரண்டும் 

தங்கா வியன்உலகம் =தங்காது இந்த விரிந்த உலகில் 

வானம் = வானம் 

வழங்கா தெனின் = வழங்கவில்லை என்றால் 


இதற்கு பரிமேல் அழகர் உரை எழுதி இருக்கிறார். 


தானம் என்றால் அறத்தின் வழி அடைந்த பொருளை தக்கவர்களுக்கு உவைகையுடன் கொடுத்தல் என்று. 


தவம் எனது, பொறி வழி செல்லும் புலன்களை கட்டுப் படுத்துதல் என்று பொருள்.


இதில் தானம் என்பது இல்லறத்துக்கு சொன்ன அறம். 

தவம் என்பது துறவறத்துக்கு சொன்ன அறம். 

மழை இல்லாவிட்டால் தானமும் தவமும் கெடும் என்றால் இல்லறமும், துறவறமும் கெடும் என்று அர்த்தம். அப்படி என்றால் மொத்த வாழ்க்கையே கெடும் என்று அர்த்தம். 


மழை, அறம், வாழ்கை என்று எப்படி பிணைந்து கிடக்கிறது.




Monday, November 9, 2020

திருக்குறள் - சிறப்பும் பூசனையும்

திருக்குறள் - சிறப்பும் பூசனையும் 

தேவர்கள், கடவுளர்கள் நமக்கு எல்லாம் தருகிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அப்படி இருந்தும், நாம் ஏன் கடவுளுக்கு படைக்கிறோம் ? 


கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல், வடை மாலை, என்று ஏன் கடவுளர்களுக்கு படைக்கிறோம்? நமக்கு இவ்வளவு தருபவர்களுக்கு இந்த சுண்டலும் பொங்கலும் தனக்குத் தானே செய்து கொள்ளத் தெரியாதா?

அது மட்டும் அல்ல, யாகம், ஹோமம் எல்லாம் செய்கிறோம். எதுக்கு? 

கடவுளர்கள், தேவர்கள் நமக்கு எல்லாம் தந்தாலும்,  அவர்களுக்கு வேண்டியதை நாம் தான் தர வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. 


அது எப்படி என்றால், ஒரு நாட்டின் பிரதம மந்திரி, முதல் மந்திரி, ஜனாதிபதி போன்றவர்கள் பெரிய அதிகாரம் படைத்தவர்கள். அவர்கள் நினைத்தால் பெரிய பெரிய விஷயங்கள் செய்ய முடியும். இருந்தும், அவர்களுக்கு உரிய சம்பளப் பணம், நாம் தரும் வரியில் இருந்து தான் போக வேண்டும். 

நாட்டின் தலைவர் தானே என்று அவரே கொஞ்சம் பணத்தை அச்சடித்துக் கொள்ள முடியாது. 

அது போல, அக்னி, வருணன், வாயு போன்ற தேவுக்களுக்கு நாம் தான்  பூஜை செய்து  யாகம் போன்றவற்றில் அவிர் பாகம் தர வேண்டும். 


இது உண்மையா, நாம் கொடுப்பது அவர்களுக்குப் போகிறதா, அதற்கு என்ன சாட்சி இருக்கிறது என்று கேட்டால், ஒன்றும் இல்லை. 


அப்படி நடப்பதாக ஒரு நம்பிக்கை. நாம் அவர்களை சார்ந்து இருக்கிறோம். அவர்கள் நம்மைச் சார்ந்து இருக்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கை. 


அப்படி நாம் செய்யும் பூஜைகள் இரண்டு வகைப்படும். 


ஒன்று நாள்தோறும் செய்யும் பூஜை. மற்றது ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் பூஜைகள். 


தினப் பூஜைக்கு நித்திய பூஜை என்று, ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் பூஜைக்கு நைமித்தியம் என்றும் பெயர். 

இதைத் தமிழில் பூசனை, சிறப்பு என்று சொல்லுவார்கள். 


ஆண்டுக்கு ஒரு முறை வெகு விமரிசையாக செய்வது, கொண்டாடுவது சிறப்பு என்று வழங்கப்படும். அன்றாடம் செய்யும் பூஜைக்கு பூசனை என்று பெயர். 


இப்போது குறளை பார்ப்போம். 


பாடல் 


 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_9.html

(pl click the above link to continue reading)


சிறப்பொடு = திருவிழா, பொங்கல், தீபாவளி போன்ற ஆண்டுக்கு ஒரு முறை வரும் வழிபாடுகளும் 

பூசனை = அன்றாடம் செய்யும் வழி பாடுகளும் 

செல்லாது = நடக்காது 

வானம் = வானம், மேகம் 

வறக்குமேல் = வறண்டு போகுமானால் 

வானோர்க்கும் = வானில் உள்ளை தேவர்களுக்கும் 

ஈண்டு = இன்று 


இதில் இன்னொரு குறிப்பு என்ன என்றால், அன்றாட வழிபாட்டில் சில குறைகள் நிகழ்ந்து விடலாம்.  அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஆண்டுக்கு ஒரு முறை, சிறப்பாக செய்வது என்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். 


தினம் தாம் சாமி கும்பிடுகிறோமே, பின் எதற்கு ஆண்டு பூஜை, திருவிழா, தேரோட்டம் என்றால் நாள் பூஜையில் நிகழ்ந்த குறைகளை சரி செய்ய. 


மழை பெய்யாவிட்டால், மனிதர்களுக்கு மட்டும் அல்ல, தேவர்கள் பாடும் திண்டாட்டம் தான். 



Sunday, November 8, 2020

பெரிய புராணம் - கேளாத ஒலி

பெரிய புராணம் - கேளாத ஒலி 


தன்னை பார்க்க விரும்புபவர்கள், அரண்மனைக்கு வெளியே இருக்கும் ஆராய்ச்சி மணியை அடிக்கலாம் என்று மனு நீதி சோழன் அறிவித்து இருந்தான். 

ஒரு நாளைக்கு எத்தனை முறை அந்த மணி அடித்து இருக்கும்? 

இப்ப நம்ம ஊர்ல அப்படி ஒரு மணி கட்டி இருந்தால், விடாமல் அடித்துக் கொண்டே இருக்கும் அல்லவா?

மனு நீதி சோழன் காலத்தில் , அந்த மணி அடிக்கப் படவே இல்லையாம். அந்த மணியின் சத்தம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அடித்தால் தானே? 

யாருக்கும் எந்த குறையும் இல்லை. இதுவரை. 

இன்று முதன் முதலாக அந்த மணி அடிக்கிறது. 


எல்லோருக்கும் தூக்கி வாரிப் போடுகிறது. 

"இது என்ன நம் மேல் பழி போடும் சத்தமா? நாம் செய்த பாவத்தின் எதிரொலியா? இளவரசனின் உயிரை எடுக்க வரும் எமனின் எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஒலியா? " என்று அனைவரும் திடுகிடு கிரார்கள். 

பாடல் 


 பழிப்பறை முழக்கோ? வார்க்கும் பாவத்தி னொலியோ? வேந்தன்

 வழித்திரு மைந்த னாவி கொளவரு மறலி யூர்திக்

கழுத்தணி மணியி னார்ப்போ? வென்னத்தன் கடைமுன் கேளாத்

தெழித்தெழு மோசை மன்னன் செவிப்புலம் புக்க போது.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_8.html

click the above link to continue reading


பழிப்பறை முழக்கோ?  = நாம் செய்த பழியினை அறிவிக்கும் முழக்கமோ?

வார்க்கும் பாவத்தி னொலியோ?  =  செய்த பாவத்தின் எதிரொலியோ?

வேந்தன் = அரசன் 

வழித் = வழியில் வந்த 

திரு மைந்த னாவி = திரு + மைந்தன் + ஆவி . இளவரசனின் ஆவியை 

கொளவரு = கொண்டு செல்ல வாவரும் 

 மறலி = எமன் 

 யூர்திக் = ஊர்த்தி, வாகனம், எருமை 

கழுத்தணி = கழுத்தில் அணிந்த 

மணியி னார்ப்போ?  = மணியின் ஆர்போ , மணியின் சத்தமோ 

வென்னத் = என்று 

தன் கடைமுன் கேளாத் = தன்னுடைய வாசலின் முன்பு எப்போதும் கேளாத 

தெழித்தெழு மோசை = பெரிதாக எழுந்த  ஓசையை 

மன்னன் செவிப்புலம் புக்க போது. = மன்னனின் காதில் விழுந்த போது 


எத்தனை மனு கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தக் காலம் எங்கே,  குறை சொல்ல ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்ததும் துடித்த  அரசாங்கம் இருந்த காலம் எங்கே. 


அப்படியும் அரசு நடத்த முடியும். 


அரசு மட்டும் அல்ல, எந்த நிறுவனத்தையும் அப்படி நடத்த வேண்டும்.