Tuesday, March 16, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2 

முதல் பாகத்திலே, கீழ்கண்ட பத்தியின் உரையை பார்த்தோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.


இனி மேலே தொடருவோம்....


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2.html


click the above link to continue reading



சரி, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்பதை சொல்லியோ, சிந்தித்தோ அறிந்து கொள்ள முடியாது என்பதால், அதை காரண வகையால் அன்றி இலக்கண வகையால் அறிய முடியாது என்பதால், முதல் மூன்றை எடுத்துக் கொள்கிறார். 


அதில் 


அறம் என்றால் என்ன என்று சிந்திக்கத் தலைப்படுகிறார் பரிமேலழகர். 


தர்மம், நியதி, அறம், ஒழுங்கு, சட்டம் என்பதற்கு யாராலாவது சரியான விளக்கம் கூற முடியுமா?  


இதுதான் அறம் என்று சுட்டி கூற முடியுமா?


கீழ்க் கோர்டில் சொன்னதை மேல் கோர்ட் மறுக்கிறது. எது அறம் என்பதில் எவ்வளவு குழப்பம் இருக்கிறது. 


மது அருந்தலாமா? அது அறம் இல்லை என்றால், இன்னொரு மதத்ததில், அந்த மதத்தின் இறைவனே மக்களுக்கு மதுவும் மீனும் கொடுத்ததார் என்று வருகிறது. அவர்கள் எல்லோரும் அறம் வழுவியவர்களா?


மாமிசம் உண்ணலாமா கூடாதா? 


பலதார மணம் சரியா தவறா? 


விவாகரத்து சரியா தவறா? 


அறம் என்பதை எப்படி அறுதியிட்டு கூறுவது?


ஒரே வரியில் சொல்லி விட்டுப் போகிறார் பரிமேலழகர். அவருடைய அறிவின் ஆழத்துக்கு இந்த ஒரு வரி போதும். 


"அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். "


அறம் என்றால், மனு முதலிய நூல்களில் சொல்லப் பட்டவற்றை கடை பிடிப்பதும், அவை செய்யக் கூடாது என்று சொல்லியவற்றை செய்யாமல் இருப்பதும் என்கிறார். 


முக்கியமாக கவனிக்க வேண்டியது "முதலிய" என்ற சொல்லை. முதலிய என்றால் அது போன்ற உயர்ந்த நூல்களில் எது செய், அல்லது செய்யாதே என்று சொல்லி இருக்கிறதோ, அதை செய்வதும், செய்யாமல் விடுவதும் அறம் ஆகும். 


எனவே, அற வழியில் நடக்க வேண்டும் என்றால், முதலில் உயர்ந்த நூல்களை படிக்க வேண்டும். அவற்றுள் செய்யச் சொன்னவற்றை செய்ய வேண்டும். செய்யக் கூடாது என்று சொன்னவற்றை செய்யாமல் விட வேண்டும். 


மனு சாஸ்திரம் எல்லாம் காலத்துக்கு ஒவ்வாது. அதை எப்படி இப்போது கடை பிடிப்பது என்ற கேள்வி வரும். 


முதலில் அதை படிக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். பின், அதற்கு பின் வந்த நூல்கள் அந்த அறத்தை எப்படி மாற்றி இருக்கின்றன என்று புரிந்து கொண்டு காலத்துக்கு ஏற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 


கால மாற்றங்கள் வரும். நம் நூல்கள் அவற்றை அனுமதிக்கும். 


நீண்ட நாள் உள்ள ஒரு  பழக்கத்தை, ஒரு ஒழுக்கத்தை மாற்றலாமா என்றால் மாற்றலாம். ஆனால், யார் மாற்றுவது ?


கற்றறிந்த அறிஞ்ர்கள், ஒழுக்கத்தில் உயர்ந்த ஆன்றோர், முற்றும் துறந்த துறவோர் அவற்றை மாற்றலாம். அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. 


ஆனால், இப்போது என்ன நடக்கிறது, நமக்கு கீழே உள்ளவன் , நம்மை விட குறைவாக படித்தவன், ஒழுக்கக் குறைவு உள்ளவன் செய்வதைப் பார்த்து, அது தான் சரி என்று  நாம் பின்பற்றத் தொடங்கி விடுகிறோம்.  

 

உங்களை விட உயர்வானவர்களை நோக்குங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். 


அறத்துக்கு இரண்டு கூறு சொல்கிறார். 


ஒன்று செய்வது, இன்னொன்று செய்யாமல் விடுவது. 


செய்வது கடினம். செய்யாமல் இருப்பதில் என்ன கஷ்டம்?


கள்ளுண்ணாதே , திருடாதே, பொய் பேசாதே என்கிறார். 


பேசாமல் இருந்தால் போதும், பாதி அறம் வந்து விடும். பேசினால்தானே மெய்,பொய் என்று வரும். பேசாமல் இருந்து விட்டால் ? 

திருட்டு,பிறன் மனை விழைதல், கள் உண்ணுதல் என்ற அறப் பிழையும் வராது. 


மனு முதலிய நூல்களில் உள்ளது என்று சொல்லுவது எளிது. எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? அதை எல்லாம் படித்து அதன் படி நடப்பது என்பது முடிகிற காரியமா?


முடியாது தான். அதனால் தான் வள்ளுவர், அவற்றை எல்லாம் தொகுத்து ஒரே புத்தகத்தில் தருகிறார். இதைப் படித்து அதன் படி நடந்தால் போதும். 


அறம் என்றால் என்ன என்று தேடி அலைய வேண்டாம். திருக்குறளில் எல்லா அறமும் இருக்கிறது. 


இதை மட்டும் பின் பற்றினால் போதும். 


எவ்வளவு பெரிய வேலையை செய்திருக்கிறார் வள்ளுவர்!


வாருங்கள் மேலும் படிப்போம். 




Monday, March 15, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 1

 திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 1 


நமக்கு வாழ்வில் சில குறிக்கோள் இருக்கும்.  அந்த இலக்கை அடைந்தால் நாம் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் மனதுக்குள் குறித்துக் கொண்டு அந்த குறிக்கோளை நோக்கி நகர்வோம். 


பல குறிக்கோள்களை அடைந்தும் இருப்போம். நிம்மதியாக, மகிழ்வாக இருக்கிறோமா? 


"பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டால், அப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியா அக்கடான்னு இருக்கலாம்" நு நினைப்போம். அப்படி நினைத்த எத்தனை பேர் நிம்மதியாக இருக்கிறார்கள் ?



பெண்ணுக்கு திருமணம் ஆன சில நாட்கள், மாதங்கள் சந்தோஷமாக இருக்கும். அப்புறம் ஏதாவது பூதம் கிளம்பும். 


எந்த ஒரு பொருளையோ, அனுபவத்தையோ நாம் அடைந்தால் சந்தோஷம் வரும் என்று நினைத்து அதை அடையும் தருவாயில், நம் நோக்கம் மாறிப் போய் விடுகிறது. 


மனம், அதை விட்டு விட்டு வேறொன்றின் பின் செல்லத் தலைப் படுகிறது. 


சரி, இப்படியே போய்க் கொண்டிருந்தால், அதற்கு என்னதான் முடிவு என்று ஆராய்ந்து, அதற்கு ஒரு விடையும் கண்டு பிடித்து விட்டார்கள். 


அது தான் வீடு பேறு அல்லது இறைவனின் திருவடி. அதை அடைந்த பின், அதற்கு மேல் ஒன்று இல்லை. 


அதற்கு கீழான அனைத்து இன்பங்களும் முடியக் கூடிய இன்பங்கள். தொடங்கியதில் இருந்து முடியாமல் இருந்து கொண்டே இருக்கும் இன்பம் என்று ஒன்று இருக்கிறதா? 


சரி, வீடு பேறு என்று சொல்லப்படும் அதை எப்படி அடைவது? 


ஒன்று இருக்கிறது என்று சொன்னால், அதை எப்படி அடைவது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா?


அதை அடைய நம் சான்றோர் வகுத்த வழி நான்கு


அதாவது - அறம்  பொருள், இன்பம், வீடு என்பன. 


இதைத்தான் வள்ளுவர் தொகுத்துக் கூறுகிறார். 


ஆனால், வீடு பற்றி சொல்லவில்லையே. அறம், பொருள், இன்பம் மூன்று தானே இருக்கிறது என்று கேட்டால், வீடு என்பது நம் சொல்லும் சிந்தனையும் செல்லாத  இடம் என்பதால், அதை நேரே சொல்ல முடியாது, அதற்கு வழி தான் காட்ட முடியம் என்பதால், வழி சொல்வதோடு வள்ளுவர் நிறுத்திக் கொள்கிறார். நீங்கள் அந்த வழியே போனால், "வீடு பேறு" வரும். 


இதை பரிமேலழகர் உரைப்பாயிரத்தில் எப்படி சொல்கிறார் என்று பாருங்கள். 


உரைப்பாயிரம் 

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html

click the above link to continue reading



அந்தக் கால தமிழ நடை. சற்று அடர்த்தியாக இருக்கும். 


ஒவ்வொரு பாகமாக படிப்போம். 


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்" = எவ்வளவு பெரிய செல்வம், பதவி, அதிகாரம் எதுவாக இருந்தாலும். இந்திர பதவியை விட பெரிய பதவி இருக்குமா? பஞ்ச பூதங்களும் இந்திரனின் ஆட்சிக்கு கட்டுப் பட்டவை.


"அந்தமில் இன்பத்து" = முடிவில்லாத இன்பம். எது முடிவில்லாது? ஸ்வர்கம், இந்திரப் பதவி போன்றவை என்றோ ஒரு நாள் முடியும். முடிந்த பின், மீண்டும் மனிதனாகவோ, விலங்காகவோ பிறக்க வேண்டும். முடிவில்லாத இன்பம் அடையவும்....


அழிவில் வீடும்  = அழிவற்ற வீடு பேறு. முதலில் இந்திரன் போன்ற தேவ பதவிகள், பின் அந்தம் இல்லாத இன்பம், பின் வீடு பேறு 


இந்த மூன்றையும் அடைய 


நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு = நெறி என்றால் வழி. எந்த வழியில், முறையில் சென்றால் அதை அடைய முடியுமோ. லாட்டரி சீட்டு அடித்தால் பணம் வரும். ஆனால் எல்லோருக்கும் அது அடிக்குமா? எனவே அது வழி அல்ல. குருட்டு அதிர்ஷ்டம். 


 உறுதியென = நிச்சயமானதென்று 


உயர்ந்தோரான் = பெரியவர்களால் 


எடுக்கப்பட்ட பொருள் நான்கு = சொல்லப் பட்ட பொருள்கள் நான்கு. 


அவை = அவையாவன 


 அறம், பொருள், இன்பம், வீடு என்பன. = அறம், பொருள், இன்பம் வீடு என்ற நான்குமாகும். 


அவற்றுள் = அந்த நான்கில் 


வீடென்பது = வீடு பேறு என்பது 


சிந்தையும் மொழியும் = நம் அறிவும், சொல்லும் 


செல்லா நிலைமைத்து ஆகலின் = செல்லாது என்று இருப்பதால் 


துறவறமாகிய = துறவறம் என்ற 


காரணவகையாற் = காரண வகை.  அது என்ன காரண வகை? நீங்கள் புதிதாக ஒரு இடத்துக்குப் போகிறீர்கள். விலாசம் இருக்கிறது. ஆனால் வழி தெரியவில்லை. அங்குள்ள ஒரு ஆளிடம் அந்த விலாசத்தை காட்டி, வழி கேட்கிறீர்கள். அவர், வழி சொல்கிறார். "இப்படியே நேரே போய், வலது புறம் திரும்பி...." என்று அடையாளங்கள் சொல்கிறார். 


நீங்கள், "அதெல்லாம் நம்ப முடியாது. அந்த விலாசம் உள்ள வீட்டை இங்கே கொண்டு வந்து காட்டு. அப்போதுதான் நம்புவேன்" என்று சொன்னால் எப்படி இருக்கும். 


அவர் சொன்ன வழியில் சென்று பார்க்க வேண்டும். அவர் சொல்வதை நம்ப வேண்டும். வேறு வழி இருக்கிறதா? உங்களுக்கோ தெரியாது. தெரிந்தவர் சொல்கிறார். அவர் சொல்வதை கேட்டு நடந்தால், நீங்கள் தேடிய இடம் வரும். 


அதைத்தான் "காரண வகை" என்று கூறினார். மத்தபடி நேரில் காட்ட முடியாது. 


கூறப்படுவதல்லது = அதைத் தவிர் வேறு வழியில் கூற முடியாது 


இலக்கணவகையாற் கூறப்படாமையின் = விளக்கிக் கூற முடியாது என்பதால் 


நூல்களாற் கூறப்படுவன = அனைத்து நூல்களிலும் கூறப் படுவது 


ஏனை மூன்றுமேயாம். = மற்ற மூன்றும் தான். அதாவது, அறம், பொருள் இன்பம் என்ற மூன்று மட்டுமே. 


வீடு பேறு பற்றிக் எந்த நூலாவது கூறினால், அது சரி அல்ல என்று புரிந்து கொள்ள முடியும். 


எனவே, வீடு பேறு அடைய, அறம், பொருள் , இன்பம் என்ற இந்த மூன்று மட்டும்தான் (வேறு எதுவம் கிடையாது) . எனவே, அந்த  மூன்றை வள்ளுவர் எடுத்துக் கொள்கிறார் என்கிறார் பரிமேலழகர். 


இப்போது மீண்டும் ஒரு முறை உரைப்பாயிரத்தின் முதல் பத்தியை படித்துப் பாருங்கள். 


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், 


அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், 


நெறியறிந்து 


எய்துதற்குரிய மாந்தர்க்கு 


உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. 


அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. 


அவற்றுள்


 வீடென்பது


 சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், 


துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது 


இலக்கணவகையாற் கூறப்படாமையின், 


நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்."


வள்ளுவர் இந்த மூன்றையும் சொன்னதினால், அவர் வீடு பேறு பற்றியும் சொல்லி இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இப்போது புரிகிறதா 


எதற்கு திருக்குறள் படிக்க வேண்டும் (வீடு பேறு அடைய) 

ஏன் அறம் , பொருள் இன்பம் என்று மட்டும் சொன்னார் 

என்பதெல்லாம் புரிந்து விட்டதா ?


மேலே படிப்போமா? அல்லது இவ்வளவே போதுமா ?


Friday, March 12, 2021

திருக்குறள் - உரைப்பாயிரம் - ஒரு முன்னோடம்.

 திருக்குறள் - உரைப்பாயிரம் - ஒரு முன்னோடம். 


உலகிலே ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன.  எவராலும் அனைத்து நூல்களையும் படித்து விட முடியாது. எனவே நூல்களை தெரிந்து எடுத்துப் படிக்க வேண்டும். 


இந்த நூல் எது பற்றியது, இதை எழுதியவர் யார், யாருக்காக எழுதப் பட்டது, எதைப் பற்றி எழுதப் பட்டது  என்றெல்லாம் தெரிந்து கொண்டு இது நமக்குச் சரியான நூல் தானா என்று அறிந்து கொண்டு பின் படிக்க வேண்டும். 


இருக்கும் காலம் கொஞ்சம். படிக்க வேண்டியதோ மலை [போல இருக்கிறது. நூல்களை தேர்வு செய்வதில் கவனம் இல்லை என்றால், தேவை இல்லாதவற்றை படிப்பது மட்டும் அல்ல, தேவையானவற்றை படிக்காப் பிழையும் நிகழ்ந்து விடும். 


சரி, நூலை பற்றிய இவ்வளவு செய்திகளை எங்கிருந்து தெரிந்து கொள்வது ? 


இதற்குத்தான் அந்தக் காலத்தில் பாயிரம் என்று ஒன்று வைத்தார்கள். 


பாயிரம் என்றால் முகவுரை என்று வைத்துக் கொள்ளலாம். பாயிரத்தில் மேலே சொன்ன அனைத்து விடயங்களும் இருக்கும். அதைப் படித்தாலே அந்த நூலின் தன்மை தெரிந்து விடும். 


பாயிரம் பொதுச் சிறப்பு என இரு பாற்றே (நன்னூல் 2)


அந்தப் பாயிரம் பொது, சிறப்பு என்று இருவகைப் படும். 


இதில் பொதுப் பாயிரம் என்றால் என்ன என்று நன்னூல் கூறுகிறது. 


நூலே நுவல்வோன் நுவலும் திறனே

கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்

எல்லாநூற்கும் இவை பொதுப் பாயிரம்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_12.html

(click the above link to continue reading)


எப்படி சொற்களை சிக்கனம் பிடித்து எழுதி இருக்கிறார்கள் என்று பாருங்கள். 

முதல் அடியின் கடைசிச் சொல் "திறனே". திறனே என்றால் திறன், இயல்பு, பெருமை என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது பொருள் என்ன என்று சிந்திக்கலாம்.


நூலே  = நூலின் திறம். அந்தத் திறத்தை இங்கு வந்து பொருத்திக் கொள்ள வேண்டும். அதாவது நூலின் தன்மை. 

நுவல்வோன் = நுவல்வோன் திறம் = மீண்டும் அந்தத் திறன் என்ற வார்த்தையை இங்கே பொருத்த வேண்டும். அதாவது, நூல் ஆசிரியனின் தன்மை. 


நுவலும் திறனே = சொல்லும் திறன், இயல்பு, வழி. 


கொள்வோன் = கொள்வான் திறம். மீண்டும் அந்த திறம் என்ற வார்த்தையை இங்கே பொருத்த வேண்டும். கேட்கும் மாணவனின் தன்மை. முதலாம் வகுப்பு மாணவனா அல்லது முனைவர் பட்டம் படிப்பவனா என்று வாசகனின் இயல்பு 

கோடல் கூற்றாம் = மாணவன் நூல் பொருளை கேட்கும் இயல்பு 

ஐந்தும் = இந்த ஐந்தும் 

எல்லாநூற்கும் = எல்லா நூல்களுக்கும் 

இவை பொதுப் பாயிரம் = இது பொதுப் பாயிரமாக இருக்கும். 


அதாவது, நூலின் அடக்கம், அதில் என்ன சொல்லி இருக்கிறது, யார் எழுதினார்கள், யாருக்காக எழுதினார்கள், எப்படி படிக்க வேண்டும், என்ற ஐந்தும் எல்லா நூலுக்கும் பொதுவாக சொல்லப் பட வேண்டும். 

பரிமேலழகர் தன் நூலுக்கு உரைப்பாயிரம் செய்கிறார். 


அது என்ன என்பதை அடுத்த ப்ளாகில் காண இருக்கிறோம்.



Thursday, March 11, 2021

திருக்குறள் - ஒரு முன்னுரை

 திருக்குறள் - ஒரு முன்னுரை 


திருக்குறளை பள்ளியில் படித்து இருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குறள்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும். அதில் சில குறள்கள் மனப்பாடச் செய்யுள் பகுதியில் வரும். அதை மனப்பாடம் பண்ணி அப்படியே எழுத்து பிசகாமல் எழுத வேண்டும். 


மற்றபடி எத்தனை மதிப்பெண் உண்டோ, அதற்கு தகுந்தாற்  போல பதில் எழுதினால் போதும். இரண்டு மதிப்பெண் என்றால் நான்கு வரி எழுத வேண்டும். பத்து மதிப்பெண் என்றால் சற்று விரித்து எழுத வேண்டும். 


இடையிடையே இலக்கண குறிப்பு, சொல் இலக்கணம், அணி இலக்கணம், யாப்பு இலக்கணம் என்று சில கேள்விகள் வரும். 

மதிப்பெண் பெறுவது மட்டுமே நோக்கமாக இருந்தது. 

அதற்குப் பின், சில புத்தகங்களில் மேற்கோளாக சில பல குறள்கள் வந்திருக்கலாம். 


நமது குறள் பரிச்சியம் அவ்வளவுதான். 


"நல்லா சுருக்கமா அழகா எழுதி இருக்கிறார்" என்று சொல்லி விட்டு போய் விடுவோம். 


திருக்குறள் என்ற பிரமாண்டத்தை, அதன் விஸ்வரூபத்தை நாம் அறியவே இல்லை. 

சொன்னால்தானே தெரியும். 


இந்த ப்ளாகில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல குறள்களை நாம் பார்த்தோம்.    அது குறளுக்கு நான் செய்த தவறு. பிழை. 


திருக்குறளை அப்படி படித்து இருக்கக் கூடாது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_11.html

(click the above link to continue reading)


குறளில், முதலில் இருந்து கடைசி வரை ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு வரைமுறை இருக்கிறது. அதை, அதன் போக்கில் படித்தால்தான் முழுவதும் விளங்கும். 


அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தால், குருடர்கள் யானையை பார்த்த கதையாகி விடும். 


பரிமேல் அழகர் அடி பற்றி திருக்குறளை முதலில் இருந்து எழுத ஆசை. 


பரிமேலழகர் உரையும் மிகவும் இறுக்கமான உரை. ஆனால் மிக அழகானது. ஆழமானது. அவர் அளவுக்கு வேறு யாரும் உரை செய்து இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். 


இந்தத் திருக்குறள் என்ற நூல் என்னதான் சொல்ல வருகிறது? இதை ஏன் நாம் படிக்க வேண்டும்? படித்தால் என்ன பலன் ? இதை எழுதியதன் நோக்கம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு, அதற்கு பதில் தரும் முகமாக உரைப்பாயிரம் செய்கிறார் பரிமேலழகர். 


நாளை முதல் அவர் கை பிடித்து குறளுக்குள் செல்வோம். 



Tuesday, March 9, 2021

இராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான்

 இராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான் 


மனதில் தோன்றும் உணர்ச்சிகளை நம்மால் தயக்கம் இல்லாமல் வெளிப் படுத்த முடிகிறதா? மனதுக்குள்ளேயே வைத்து பூட்டி வைத்துக் கொள்கிறோம். 


அன்பை, காதலை, பாசத்தை வார்த்தைகளால் நாம் அதிகம் வெளிப் படுத்துவது இல்லை என்றே நினைக்கிறேன். 


கோபத்தை, எரிச்சலை, எளிதாக காட்டி விடுகிறோம். 


எத்தனை முறை மனைவியை/கணவனை புகழ்ந்து இருப்போம், உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லி இருப்போம்? "அதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமாக்கும்" என்று சொல்லாமலேயே விட்டு விடுகிறோம்.


பயிற்சி இல்லை. நம் பெற்றோர் அப்படி பேசி நாம் கேட்டது இல்லை. நாமும் அப்படி பேசிப் பழகவில்லை. 


சினிமாவில் பார்க்கும் போது உருகிப் போகிறோம். 


நம் இலக்கியங்கள் நமக்கு அதைச் சொல்லித் தருகின்றன. எப்படி மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்று. 


சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். 


இராவணன் அங்கே வருகிறான். தன் காதலை உருகி உருகி வெளிப் படுத்துகிறான்.


பாடல் 


அவ்விடத்து அருகு எய்தி அரக்கன் தான்

‘எவ்விடத்து எனக்கு இன் அருள் ஈவது

நொவ் விடக் குயிலே! நுவல்க ‘என்றனன்

வெவ் விடத்தை அமுது என வேண்டுவான்.


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post.html

pl click the above link to continue reading


அவ்விடத்து = அசோகவனத்துக்கு 

அருகு எய்தி = அருகில் வந்து 

அரக்கன் தான் = இராவணன் 

‘எவ்விடத்து = எந்த இடத்தில் 

எனக்கு = எனக்கு 

இன் அருள் ஈவது = உன் அருளைத் தருவது 

நொவ் விடக் குயிலே!  = வருந்தும் சிறிய இடையை கொண்ட குயிலே 

 நுவல்க ‘என்றனன் = சொல் என்றான் 

வெவ் விடத்தை  = வெம்மையான விஷத்தை 

அமுது என வேண்டுவான். = அமுதம் என்று நினைத்து அதை விரும்பும் இராவணன் 


மேலும் சில பாடல்கள் இருக்கின்றன. 


இராவணன் ஒரு அரக்கன். அவன் மாற்றான் மனைவியை வஞ்சகமாக கவர்ந்து வந்து விட்டான் என்பதெல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்து விடுங்கள். 


அவன் மனதில் தோன்றிய உணர்சிகளை எவ்வளவு அழகாக வார்த்தைகளில் வடிக்கிறான் என்று மட்டும் பாருங்கள். 


பேசப் படிப்போம். 

Saturday, February 27, 2021

திருக்குறள் - எப்படி பேச வேண்டும்

 திருக்குறள் - எப்படி பேச வேண்டும் 

அலுவலகத்தில், தொழில் செய்யும் இடத்தில், அல்லது வேறு எங்காவது ஏதாவது பதவி வகித்தால், அங்கே எப்படி பேச வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

இது மந்திரிகளுக்கு சொன்னது. இருந்தும், நாம் ஒருவருக்கு யோசனை சொல்லும் இடத்தில் இருந்தால், ஒருவருக்கு கீழே வேலை செய்தால்,  நாமும் மந்திரி மாதிரிதான். இது நமக்கும் பொருந்தும். 

நமக்கு மட்டும் அல்ல, நம் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் பொருந்தும். அவர்களுக்கும் சொல்லித் தாருங்கள். 


பாடல் 

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்


பொருள்

Click the following link to continue

https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_27.html

வேட்பன = (அரசன்/மேலதிகாரி ) விரும்பியவற்றை 

சொல்லி = சொல்லி 

வினையில = வினை இல்லாதவற்றை 

எஞ்ஞான்றும் = எப்போதும் 

கேட்பினும் = கேட்டால் கூட 

சொல்லா விடல் = சொல்லாமல் விட்டு விட வேண்டும் 


மேலதிகாரி விரும்பியதை சொல்லணும், விரும்பாததை சொல்லக் கூடாது...பொதுவா  ஜால்ரா அடிக்கணும் அப்படின்னு வள்ளுவர் சொல்லுகிறாரா?  இல்லை. 


இதெல்லாம் பரிமேலே அழகர் உரை இல்லாமல் நம்மால் சத்தியமாய் புரிந்து கொள்ள முடியாது. 


எப்படி பொருள் எடுக்கிறார் என்று பாருங்கள். 


வினையில என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறார்.  வினை என்றால் வேலை, தொழில், முயற்சி என்று பொருள். வினையால் விளைவது பலன், ஒரு நன்மை. வினையில என்றால் பலன் இல்லாத என்று பொருள் கொள்கிறார். பலன் இல்லாதவற்றை  பேசக் கூடாது. 


சரி.  


அடுத்தது, "கேட்பினும்" என்ற சொல்லை எடுக்கிறார். சில சமயம் மேல் அதிகாரி நம்மைக் கூப்பிட்டு சும்மா பேசுவார். டீ குடித்துக் கொண்டோ அல்லது மாலை வேளையில் வேறு ஏதாவது அருந்திக் கொண்டோ பேச்சு வரும். நம்மோடு பேச விரும்புவார். அவரே விரும்பினாலும்  பலன் இல்லாதவற்றைப் பற்றி பேசக் கூடாது.  மேல் அதிகாரி கேட்டால் கூட பலன் இல்லாதவற்றைப் பற்றி பேசக் கூடாது. 


அடுத்தது, "எஞ்ஞான்றும்": எப்பவாவது, கொஞ்சம் ஜாலியாக இருக்கும் போது அரட்டை அடிக்கலாமா என்றால் கூடவே கூடாது என்கிறார். ஒரு போதும் அப்படி பேசக் கூடாது என்கிறார். 


"கேட்பினும்"...கேட்டால் கூட பலன் தராதவற்றைப் பற்றி பேசக் கூடாது. அதற்கு எதிர் மறையாக, கேட்காவிட்டால் கூட பலன் தருபவற்றைப் பற்றி பேச வேண்டும். அரசனோ, அதிகாரியோ கேட்காவிட்டால் கூட, பலன் தரும் என்றால் அதைப் பற்றி பேச வேண்டும். சொல்ல வேண்டும். "என் கிட்ட கேட்டா சொல்லுவேன்..."என்று சும்மா இருக்கக் கூடாது. 


அதிகாரிகள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் பலன் உள்ளவற்றை அவர்களிடம் சொல்ல வேண்டும். 


அதிகாரிகள் கேட்டால் கூட, பலன் இல்லாதவற்றை சொல்லக் கூடாது. 


இதை எப்போதும் பழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 


தேவை இல்லாமல் அரட்டை அடிப்பது, கோள் சொல்லுவது, போட்டுக் கொடுப்பது, புரணி பேசுவது, இட்டு கட்டி சொல்லுவது , பொய் சொல்லுவது என்பனவற்றை  விட்டு விட வேண்டும். 


பலன் இருந்தால் பேசு. இல்லை என்றால் மௌனமே சிறந்தது. 



Friday, February 26, 2021

கம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன ?

கம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன ?


பெண்களுக்கு உரிய குணங்களில் மடம் என்று ஒரு குணம் உண்டு என்று சொல்கிறார்கள். அது என்ன ? 


மடம் என்றால் மடத்தனமா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. 


யோசித்துப் பார்த்ததில் எனக்குத் தோன்றியது என்ன என்றால், "தன் பெருமை, தன் அருமை, தன் வலிமை தான் அறியாமல் இருப்பது" தான் மடமை என்று தோன்றுகிறது. 


கம்ப இராமயணத்தில் ஒரு உதாரணம் பார்ப்போம். 


சீதையின் ஆற்றல் அளவற்றதாக இருக்கிறது.


இராமனின் ஆற்றலை விட பலப் பல மடங்கு பெரியது சீதையின் ஆற்றல் என்று தெரிகிறது. 


இலங்கைக்குப் போய், இராவனனனோடு சண்டையிட்டு, அவனை கொல்வதற்கு இராமன் படாத பாடு படுகிறான். வானரங்கள் துணை வேண்டி இருந்தது. கொஞ்சம் தேவர்களும் உதவி செய்தார்கள். 


இத்துனூண்டு இலங்கையை அழிக்க இந்தப் பாடு. 


சீதை சொல்கிறாள் "எல்லை நீத்த இந்த உலகங்கள் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்" என்கிறாள். இருந்த இடத்தில் இருந்து கொண்டே, அத்தனை உலகையும் என் சொல்லினால் சுடுவேன் என்கிறாள். 


அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் தருகிறாள். என்றும் இறவா வரம். எந்தக் கடவுளை வேண்டி எவ்வளவு தவம் செய்தாலும், இறவா வரம் மட்டும் தர மாட்டார்கள். சீதையோ, கேட்காமலேயே இந்த பிடி என்று சாகா வரம் தருகிறாள். 


அவ்வளவு ஆற்றல். 

அப்பேற்பட்ட ஆற்றல் உள்ள சீதை, துன்பம் தாளாமல் தூக்குப் போட்டு சாகப் போகிறாள்.  உலகை அழிக்கும் ஆற்றல் கொண்ட சீதை, இராவணனை அழித்து தன் துன்பத்தை போக்கிக் கொள்ள முடியாமல், தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறாள். 


என்ன என்று சொல்லுவது? 


தன் வலிமை தனக்குத் தெரியாமல் அடங்கிக் கிடப்பது தான் பெண்ணின் மடம் என்று சொல்கிறார்களோ ? 


சீதை தற்கொலைக்கு முயன்ற அந்தப் பாடல் 


பாடல் 


எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி ‘ஈங்கு

உய்திறம் இல்லை! ‘என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு

கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை

பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால்.


பொருள் 



click the above link to continue reading


எய்தினள் = சென்று அடைந்தாள் 

பின்னும் = மேலும் 

எண்ணாத எண்ணி  = பலவற்றையும் எண்ணி 

‘ஈங்கு = இங்கு 

உய்திறம் இல்லை!  = வாழ வேறு வழி இல்லை 

‘என்று = என்று 

 ஒருப்பட்டு  = முடிவு செய்து 

ஆங்கு ஒரு = அங்குள்ள ஒரு 

கொய்தளிர்க் = தளிர் விட்ட 

கொம்பிடைக் = கொம்பின் மேல் 

கொடி இட்டே= படர்ந்து கிடந்த ஒரு கொடியில் 

தலை பெய்திடும் =  தலையை சேர்த்திடும் 

ஏல்வையில் = நேரத்தில் 

 தவத்தின் பெற்றியால். = அவள் செய்த தவத்தின் காரணமாக 



சீதை உலகை என் சொல்லால் சுடுவேன் என்ற பாடல் 


அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.

பொருள் 

அல்லல் = துன்பம் (தரும்)

மாக்கள் = விலங்குகள் (மனிதப் பண்பு அற்றவர்கள்)

இலங்கை அது ஆகுமோ? = (நிறைந்த) இந்த இலங்கை மட்டும் என்ன

எல்லை நீத்த = எல்லையே இல்லாத

உலகங்கள் யாவும் = அனைத்து உலகங்களையும்

என் சொல்லினால் = என் சொல்லினால்

சுடுவேன்; = சுட்டு எரித்து விடுவேன்

அது = அப்படி செய்தால், அது

தூயவன் = இராமனின்

வில்லின் ஆற்றற்கு = வில்லின் ஆற்றலுக்கு

மாசு என்று வீசினேன். = குற்றம் என்று வீசினேன்


சீதை அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் அளித்த பாடல்  


பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த 

வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின், 
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் 
ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி' என்றாள். 



பொருள்

பாழிய = வீரம் பொருந்திய

பணைத் தோள் வீர! = பனை மரம் போல் உறுதியான தோள்களை கொண்ட வீரனே

துணை இலேன் = ஒரு துணையும் இல்லாமல் தவித்துக் கொண்டு  இருந்தேன்

பரிவு தீர்த்த = வருத்தம் தீர்த்த
 
வாழிய வள்ளலே! = வாழிய வள்ளலே (உயிர் கொடுத்த வள்ளல்)

யான் = நான்

மறு இலா மனத்தேன்என்னின் = கறை படியாத மனம் உள்ளவள் எனின் 
 
ஊழி = ஊழிக் காலம்

ஓர் பகலாய் ஓதும் = ஒரு பகலாய் இருக்கும்

யாண்டு எலாம் = இங்கு உள்ள எல்லாம்

உலகம் ஏழும் ஏழும் = ஏழேழு உலகமும்

வீவுற்ற ஞான்றும் = வீழுகின்ற போதும்

இன்று என இருத்தி' என்றாள் = இன்று போல் இருப்பாய் என்று வாழ்த்தினாள்

எழுபது என்பது வயது ஆகும் போது உடம்பிற்கு அத்தனை நோயும் வந்து விடுகிறது....கற்ப கோடி ஆண்டு வாழ்ந்தால் உடம்பு எப்படி இருக்கும்...பல் விழுந்து, தோல் சுருங்கி, கண் பார்வை இழந்து, ஞாபகம் அற்றுப் போய்...அது ஒரு வரமா ? எனவே சீதை "இன்று என இருத்தி" என்றாள்.  இன்று போல் ஆரோக்கியமாக இரு என்று வாழ்த்தினாள்.

அப்படித்தான் கண்ணகியும். 

மதுரையை எரித்த கண்ணகி, மாதவி பின்னால் போன கோவலனை தடுத்தாள் இல்லை. 

மென்மையான அந்த பெண்மைக்கு பின்னால் அபரிதமான ஆற்றல் இருக்கிறது. அது தெரியாமல் இருப்பது தான் பெண்மையின் மேன்மையோ ?