Monday, April 5, 2021

திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார் - பாகம் 4

  

திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார்  - பாகம் 4


பாடல் 

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)


சீர் பிரித்த பின் 


மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலம் மிசை நீடு வாழ்வார்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/4.html

(click the above link to continue reading)


மலர் மிசை = மலரின் கண் 


ஏகினான் = சென்று அடைந்தவனது 


மாண் = மாட்சிமை பொருந்திய 


அடி சேர்ந்தார் = திருவடிகளை சேர்ந்தவனது 


நிலம் மிசை = நிலத்தின் கண் 


நீடு வாழ்வார்  = நீண்ட நாள் வாழ்வார் 


மலர், ஏகினான் என்ற சொற்களின் ஆழ்ந்த அர்த்தங்களை முந்தைய ப்ளாகுகளில் சிந்தித்தோம். 


"நிலமிசை நீடு வாழ்வார்"    


இதில், "மிசை" என்பது அசைச் சொல். அதை விட்டு விடலாம். 


"நிலத்தில் நீடு வாழ்வார்".


எந்த நிலத்தில்? எவ்வளவு நாள் ? நீடு என்றால் நீண்டு என்று பொருள். எவ்வளவு காலம்  அது?


பரிமேலழகர் இல்லை என்றால் இதற்கெல்லாம் நமக்கு பொருள் புரியவே புரியாது. 


"  (எல்லா உலகிற்கும்) மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்."


எல்லா உலகத்துக்கும் மேலான வீட்டு உலகின் கண் அழிவின்றி வாழ்வார் என்று பொருள் சொல்கிறார். 


குறளுக்கும், இவர் சொல்லும் உரைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அவர் பாட்டுக்கு ஏதோ சொல்லிக் கொண்டு போவது போலத் தெரியும். 


அப்படி அல்ல. 


மிக மிக ஆழ்ந்து சிந்தித்து, வள்ளுவரின் நிலைக்கு சென்று பொருள் சொல்கிறார். 


இந்த பூமி, சூரியன், சந்திரன் எல்லாம் என்றோ ஒரு நாள் தோன்றியது. பெரு வெடிப்பு அல்லது big bang என்று சொல்கிறார்கள். அதில் இருந்து தோன்றியதுதான் இந்த உலகம். சூரியன், பூமி, லட்சோப இலட்சம் நட்சத்திரங்கள், அண்ட வெளி, பால் வெளி எல்லாம் அதில் இருந்து தோன்றியது. 

தோன்றியது என்றால், இவை எல்லாம் இல்லாமல் இருந்த காலம் என்று ஒன்று உண்டு. தோன்றிய அனைத்தும் அழியும் என்பதில் சந்தேகமே இல்லை. 


இந்த உலகம் அழியும் சரி. 


நம் வாழ்வோ? மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு என்பது அல்லது நூறு வருடம் இருப்போம். 


நாம் வாழும் இந்த உலகமும் கொஞ்ச நாள் தான் இருக்கும். அதில் வாழும் நாமும் மிக மிக சொற்ப நாட்களே இருக்கப் போகிறோம். 

அப்படி என்றால் அழியாத நிலம் ஒன்று வேண்டும் அப்போது தான் நீடு வாழ முடியும். முதலில் இருக்கும் இடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் அல்லவா? 


சரி, இடம் நிரந்தரமாக இருக்கிறது.  நம் வாழ்வு? அதுவும் நீடித்து இருக்க வேண்டுமே?


அப்போதுதான் நீடு வாழ முடியும். 


எனவே, வள்ளுவர் "நிலமிசை நீடு வாழ்வார்" என்று சொல்லியதற்கு அர்த்தம்


"(எல்லா உலகிற்கும்) மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்." என்று பரிமேலழகர் குறிப்பிடுகிறார். 


வீடு பேறு அடைந்தால் அந்த இடமும் அழியாது, நாமும் அழியாத வாழ்வு பெறுவோம். 


வீடு பேறு என்பது எல்லா உலகத்தையும் விட உயர்வானது தானே ?


நிலம் நிரந்தரம் 

வாழ்வு நிரந்தரம்


எனவே "நிலமிசை நீடு வாழ்வார்"


எவ்வளவு தூரம் யோசித்து இருக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. 


இப்படி ஆழ்ந்து சிந்தித்தவர்கள் சொல்வது தவறாக இருக்குமா? அவர்கள சொல்வதில் தவறு கண்டுபிடிக்க நமக்கு அறிவு போதுமா? 


அதையும் சிந்திப்போம். 


இனி அடுத்த குறளுக்குப் போவோம். 



Sunday, April 4, 2021

கம்ப இராமாயணம் - நன் மனைக்கு உரிய பூவையை

கம்ப இராமாயணம் - நன் மனைக்கு உரிய பூவையை 


துணையை பிரிந்து இருப்பது என்பது மிகவும் துக்ககரமான ஒன்றுதான். 


இருக்கும் போது துணையின் மதிப்பு தெரிவது இல்லை. பிரிந்த பின் அந்த சோகம் பிடித்துக் கொள்கிறது. 


சீதையை பிரிந்து இருக்கும் இராமன், சுக்ரீவனை சந்திக்கிறான். அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. சுக்ரீவன், இராமனை விருந்துக்கு அழைக்கிறான். விருந்து பரிமாறும் போது, சுக்ரீவனின் மனைவி இல்லாததை கண்டு இராமன் மனம் வருந்துகிறான். 


"பொருந்திய நல்ல வீட்டுக்கு உரிய பெண்ணை (மனைவியை) நீயும் பிரிந்து இருக்கிறாய் போல இருக்கிறது" 


என்று இராமன் கூறுகிறான். "நீயும்" என்ற சொல்லில், நான் பிரிந்து இருக்கிறேன். அது போல் நீயும் பிரிந்து இருக்கிறாய் போல என்று கூறினான். 


பாடல் 


விருந்தும் ஆகி, அம்மெய்ம்மை அன்பினோடு 

இருந்து, நோக்கி, நொந்து,  இறைவன், சிந்தியா,

'பொருந்து நன் மனைக்கு  உரிய பூவையைப்

பிரிந்துளாய்கொலோ நீயும்  பின்?' என்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_4.html


(click the above link to continue reading)


விருந்தும் ஆகி =  விருந்தினனாகி 


அம்மெய்ம்மை அன்பினோடு  = அந்த உண்மையான அன்போடு 


இருந்து = அங்கே இருந்து 


நோக்கி = சுக்ரீவனை நோக்கி 


நொந்து = மனம் வருந்தி 


இறைவன் = இறைவனாகிய இராமன் 


சிந்தியா = சிந்தித்து 


'பொருந்து = பொருந்தும் 


நன் மனைக்கு = நல்ல மனைக்கு 


உரிய பூவையைப் = உரிய பூவையை (மனைவியை) 


பிரிந்துளாய்கொலோ = பிரிந்து இருக்கிறாய் போல இருக்கிறது 


நீயும்  பின்?' = நீயும் 


என்றான். = என்றான் 


"மனைக்கு உரிய பூவையை" - மனைவி தான் மனைக்கு உரியவள். அவள் இல்லாமல் மனை சிறக்காது என்பது நம் பண்பாடு.   இல்லை, இந்த வீட்டை பார்த்துக் கொள்வது என் வேலை இல்லை என்று பெண்கள் நினைக்கும் ஒரு கால கட்டத்துக்கு நாம் வந்து விட்டோம். 


அதில் தவறு இல்லை.  கால மாற்றம்.   அனைத்து அறங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதையும் போது, இல்லறம் மட்டும் அதற்கு விதி விலக்காக இருக்க முடியாது. 


இராமன் வாழ்ந்த காலம் என்று ஒன்று இருந்தது. சக்கரவர்த்தி திருமகனான இராமன் சொல்கிறான் "என் வீட்டுக்குத் உரியவள் என் மனைவிதான். நான் இல்லை" என்றான். 

திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார் - பாகம் 3

 

திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார்  - பாகம் 3 


பாடல் 

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)


சீர் பிரித்த பின் 


மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலம் மிசை நீடு வாழ்வார்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/3.html

(click the above link to continue reading)


மலர் மிசை = மலரின் கண் 


ஏகினான் = சென்று அடைந்தவனது 


மாண் = மாட்சிமை பொருந்திய 


அடி சேர்ந்தார் = திருவடிகளை சேர்ந்தவனது 


நிலம் மிசை = நிலத்தின் கண் 


நீடு வாழ்வார்  = நீண்ட நாள் வாழ்வார் 


ஏகினான் என்ற சொல்லுக்கு பொருளை முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அடுத்தது,


"அடி சேர்ந்தார்" என்று கூறுகிறார். 


சேர்ந்தார், அல்லது சேர்தல் என்றால் என்ன பொருள்?


அதற்கு பின் வருவோம் 


நாம் எந்த ஒரு செயலைச் செய்வதானாலும் அதை மூன்று வழிகளில் செய்யலாம். 


மனம் அல்லது மொழி அல்லது உடம்பால் செய்வது. 


மனதில் நினைக்காத ஒன்றை மொழியோ அல்லது உடம்போ செய்யாது. முதலில் மனதில் ஒரு எண்ணம் எழ வேண்டும். அப்படி எழுந்த பின் அது சொல்லாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படும். 


அறம் செய்ய விரும்பு என்றால் ஔவை.  அறம் செய் என்று சொல்லி இருக்கலாமே? விரும்புதல் மனதின் செயல். மனதில் ஒரு இரக்கம் எழ வேண்டும், உதவி செய்யும் அன்பு/கருணை பிறக்க வேண்டும். பின் அறம் தானாக நிகழும். 


நமது வழிபாடுகளில், பெரும்பாலானவை முடியும் போது சாந்தி, சாந்தி, சாந்தி என்று முடிப்பார்கள். ஏன் மூன்று முறை சொல்லவேண்டும்? 


மனமும், மொழியும், உடலும் சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக மும்முறை சொல்கிறார்கள். 


அது போல, இறைவனையும் மன மொழி மெய்களால் வழி பட வேண்டும். 


இங்கே "சேர்ந்தார்"என்ற சொல்லுக்கு பரிமேலழகர் உரை செய்யும் போது எப்படி எழுதுகிறார் என்று கவனிப்போம். 


"அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண்"


சேர்தல்- இடைவிடாது நினைத்தல்.


சேர்தல் என்றால் இடை விடாது நினைத்தல் என்று பொருள் கொள்கிறார். 


அது எப்படி இடை விடாமல் நினைக்க முடியும். வேறு வேலை இல்லையா? இல்லறக் கடமைகள் இல்லையா?


மணிவாசகர் கூட "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார். அது எப்படி சாத்தியம் ஆகும்? 


நீங்கள் கார் அல்லது பைக் அல்லது சைக்கிள் ஓட்டி இருகிறீர்களா? இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, ஓட்டுபவர்கள் பக்கத்தில் அமர்ந்து இருப்பீர்கள்தானே.


முதன் முதலாக பயிற்சி செய்யும் போது ரொம்ப பதற்றமாக இருக்கும். 


Steerring, clutch, brake, accelerator, horn, indicator, revivew mirror mirror, side view mirror, gear shifting, traffic signal, traffic around you...


இப்படி பல விஷயங்களை ஒரே சமயத்தில் கண்காணித்து வண்டி ஓட்ட வேண்டும். தளர்ந்து போவோம்.


அதுவே கொஞ்ச நாள் பழகி விட்டால், வண்டி பாட்டுக்கு ஓடும், நீங்கள் கைபேசியில் பேசுவீர்கள், பாட்டை மாற்றுவீர்கள், அருகில் இருப்பவரிடம் பேசிக் கொண்டு இருப்பீர்கள்....இது ஒரு பக்கம் நடக்க, கால் accelerator ஐ அழுத்தும், கை கியரை மாற்றும், இன்னொரு கை horn அடிக்கும், கண் முன்னாலும் பின்னாலும் வரும் போக்குவரத்து நெரிசலை கவனிக்கும். 


எப்படி முடிகிறது ? 


பழக்கம். பழகி விட்டால், "இடையாறது நினைக்க முடியும்". "இமைப் பொழுதும் மறக்காமல் நினைக்க முடியும்".


"தாவி விளையாடி இரு கை வீசி நடந்தாலும் தாதி மனம் நீர் குடத்தே தான்"


என்பார் பட்டினத்தார். பெண்கள் பானையில் நீர் எடுத்து தலையின் மேல் வைத்துக் கொண்டு நடந்து வருவார்கள்.  கால் நடக்கும், கை வீசி நடப்பார்கள், வாய் பேசிக் கொண்டிருக்கும் இருந்தாலும் மனம் தலையின் மேல் உள்ள பானையை மறக்காது. 


பக்தி என்றால் காலையில் ஒரு பத்து நிமிடம், சாயங்காலம் ஒரு பத்து நிமிடம், நாள் கிழமை என்றால் இன்னும் கொஞ்ச நேரம், வருடத்துக்கு ஓரிரண்டு தடவைகள் பெரிய புண்ணிய தலங்களுக்குப் போய் வருவது என்பது அல்ல. 


இடையறாது நினைத்தல் தான் பக்தி. 


"சொல்லும் நா நமச்சிவாயவே" என்பார் சுந்தர மூர்த்தி நாயனார். 


பழக்கப் படுத்தி விட்டால், நாம் சொல்லாவிட்டாலும், நாக்கு பாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும். 


மன வழிபாடு பற்றி கூறுகிறார். 


இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. அதை நாளை பார்ப்போமா?




Saturday, April 3, 2021

திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார் - பாகம் 2

 திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார்  - பாகம் 2 


பாடல் 

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)


சீர் பிரித்த பின் 


மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலம் மிசை நீடு வாழ்வார்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/2.html


(pl click the above link to continue reading)


மலர் மிசை = மலரின் கண் 


ஏகினான் = சென்று அடைந்தவனது 


மாண் = மாட்சிமை பொருந்திய 


அடி சேர்ந்தார் = திருவடிகளை சேர்ந்தவனது 


நிலம் மிசை = நிலத்தின் கண் 


நீடு வாழ்வார்  = நீண்ட நாள் வாழ்வார் 


இதில் மலர் என்பதற்கு "அன்பான் நினைவாரது இதயக் கமலத்தில்" என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அது மட்டும் அல்ல, "விரைவின் சென்று அடைதலால்". அதாவது தன்னை நினைக்கும் அன்பர்கள் மனதில் இறைவன் விரைவில் சென்று அடைவான் என்கிறார் பரிமேலழகர். 


ஆனால், அப்படி ஒன்றும் வள்ளுவர் சொல்லவில்லை. 


குறளில் எங்கே இருக்கிறது "விரைவில் சென்று அடைவான்" என்று. பரிமேலழகர் தன் இஷ்டத்துக்கு ஏதாவது உரை சொல்லலாமா ?  குறளில் இல்லாத ஒன்றை எப்படி உரையில் சொல்லலாம்?


பரிமேலழகர் அதற்கும் விளக்கம் கூறுகிறார். 




அடுத்தது, 


"ஏகினான்" = சென்று அடைந்தான். 


ஏகினான் என்பது இறந்த காலம். ஏற்கனவே சென்று அடைந்து விட்டான் என்று அர்த்தம். அப்படி என்றால் எதற்கு அவன் திருவடிகளை தொழ வேண்டும்? அவன் தான் ஏற்கனவே பக்தர்கள் மனதில் சென்று குடி ஏறி விட்டானே? என்ற கேள்வி வரும். ஏகுவான் என்று போட்டு இருக்கலாம். ஏகினான் என்று இறந்த காலத்தில் ஏன் கூறினார்? 


வெளியே போக வேண்டும். இதோ இரண்டு நிமிடத்தில் வருகிறேன் என்று உடை மாற்றி, make up செய்து கொள்ள சென்ற மனைவி ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை.  கணவனுக்கு பொறுமை போய் அற்றுப் போய் விட்டது. 


"இப்ப நீ வர்றியா இல்லையா" என்று கேட்கிறான். 


"இதோ வந்துட்டேங்க"  என்று குரல் வருகிறது.


ஆள் வரவில்லை. ஆனால், வந்து விட்டேன் என்று இறந்த காலத்தில் குறிப்பிடுகிறாள். 


நண்பன் வெளியே பைக்கில் இருக்கிறான். "மச்சான், ரெடியா, போலாமா " என்று கேட்கிறான். "ஒரு நிமிஷம், வந்துட்டேன்டா" என்று பதில் வருகிறது. 


வரல. ஆனால், வந்துட்டேன் என்று சொல்கிறான். 


அவசரம் கருதி, எதிர் காலத்தில் நிகழ வேண்டிய ஒன்றை ஏற்கனவே நிகழ்ந்து விட்டது போல கூறுவது இயல்பு. 


இதற்கு ஒரு இலக்கணமே இருக்கிறது. 


"வாராக் காலத்து நிகழுங்காலத்து

மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி

யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்

விரைந்த பொருள வென்மனார் புலவர்"1 


(தொல்காப்பியம்)


அதாவது


"வாராக் காலத்து = எதிர் காலம். அதற்கு வாரா காலம் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். அழகாக இருக்கிறது இல்ல. வாராக் காலம். 


நிகழுங்காலத்து = நிகழும் காலம் 


மோராங்கு வரூஉம் = அங்கே வரும் 


வினைச்சொற் கிளவி = வினைச் சொல் 


யிறந்த காலத்துக்  = இறந்த காலத்து 


குறிப்பொடு கிளத்தல் = குறிப்போடு சேருதல் 


விரைந்த பொருள = விரைவாக நிகழ இருக்கும் ஒன்றை குறிப்பிடுவதற்காக 


வென்மனார் புலவர்"  = என்று புலவர்க்கள் சொல்லுவார்கள் 


என்கிறார் தொல்காப்பியர். 



"ஏகினான்" என்ற சொல்லைப் போட்டதன் மூலம், இறைவன் விரைவாக வந்து சேருவான் என்பது பெறப் பட்டது என்கிறார் உரை ஆசிரியர். 



Friday, April 2, 2021

கம்ப இராமாயணம் - பாலை நில வருணனை - வேகாதது எது ?

 கம்ப இராமாயணம் - பாலை நில வருணனை - வேகாதது எது ?


மலையை, சோலையை, அருவியை,  கடலை, வர்ணிப்பது எளிது. அது இயற்கைலேயே அழகாக இருக்கிறது. 


ஒரு அழகும் இல்லாத ஒன்றை வர்ணித்து சுவைபட கூறுவது என்பது எவ்வளவு கடினம்?


பாலை நிலத்தை கம்பன் வர்ணிக்கிறான். அதைக் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் பாடல்கள். 


கம்பன் சொல்வது இருக்கட்டும். 


கற்பனை செய்து பாருங்கள் ஒரு பாலை நிலம் எப்படி இருக்கும் என்று. ஒரே மணல் வெளி, பொறுக்க முடியாத சூடு, பசுமை என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. மழை என்பதே பார்த்து அறியா நிலம். மேகம் கூட இல்லை. 


இந்த நிலத்தை வர்ணிக்க வேண்டும். நினைத்துப் பாருங்கள். என்னதான் சொல்ல முடியும் என்று. 


பாடல் 


படியின்மேல் வெம்மையைப்

   பகரினும். பகரும் நா

முடிய வேம்; முடிய மூடு இருளும்

   வான் முகடும் வேம்;

விடியுமேல். வெயிலும் வேம்; மழையும்

   வேம்; மின்னினோடு

இடியும் வேம்; என்னில்.

   வேறு யாவை வேவாதவே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_2.html


( please click the above link to continue reading)


படியின்மேல் = உள்ள படி இந்த நிலத்தின் 


வெம்மையைப் = சூட்டினை 

பகரினும் = சொன்னாலும் 


பகரும் நா = சொல்லக் கூடிய நாக்கு 

முடிய வேம் = முற்றுமாக வெந்து போகும் 


முடிய மூடு இருளும் = முடிந்து போகும் படியான இரவும் 


வான் முகடும் = வானத்தின் உச்சியும் 


வேம் = வெந்து போகும் 


விடியுமேல் = பொழுது விடிந்தால் 


வெயிலும் வேம் = அடிக்கிற வெயில் கூட வெந்து போகும் 


மழையும் = மழை ஒரு வேளை பெய்தால்


வேம் = வெந்து போகும் 


மின்னினோடு = மின்னலோடு 


இடியும் வேம் = இடியும் வெந்து போகும் 


என்னில் = என்று சொன்னால் 


வேறு யாவை வேவாதவே? = வேறு எதுதான் வேகாது ?


அந்த பாலை நிலத்தைப் பற்றிச் சொன்னாலே, நாக்கு வெந்து போய் விடுமாம். 


என்னதான் சூடு இருந்தாலும், இரவில் கொஞ்சம் சூடு தணிந்து மட்டுப் படும். ஆனால், இந்த பாலை நிலத்தில் இரவும் சூடாக இருக்குமாம். இரவே சூடாக இருந்தால், பகல் எப்படி இருக்கும். 


இடி, மின்னல், மழை எல்லாம் வெந்து போகுமாம். 


இவை எல்லாம் வேகும் என்றால், பின் எதுதான் வேகாது என்கிறார் கம்பர். 


பாலை நில வர்ணனையிலும் ஒரு கவித்வம்.  அது தான் கம்பன். 


திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார் - பாகம் 1

 திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார்  - பாகம் 1 


பாடல் 

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)


சீர் பிரித்த பின் 


மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலம் மிசை நீடு வாழ்வார்.


பொருள் 


மலர் மிசை = மலரின் கண் 


ஏகினான் = சென்று அடைந்தவனது 


மாண் = மாட்சிமை பொருந்திய 


அடி சேர்ந்தார் = திருவடிகளை சேர்ந்தவனது 


நிலம் மிசை = நிலத்தின் கண் 


நீடு வாழ்வார்  = நீண்ட நாள் வாழ்வார் 


பரிமேல் அழகர் இல்லாமல் இந்த குறளின் உரையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.


இதில் என்ன இருக்கிறது என்று நினைப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/1.html


(click the above link to continue reading)



"மலர் மிசை "  = இதில் மிசை என்பது ஒரு அசைச் சொல். அதை விட்டு விடலாம். மலரின் கண்.  எந்த மலர்? தாமரை, அல்லி , மல்லிகை என்று ஏதாவது ஒரு மலரா என்றால் பரிமேல் அழகர் உரை எடுக்கிறார் பாருங்கள். பிரமிக்க வைக்கும் உரை.  


ஒரு கட்சித் தலைவர், ஒரு நிறுவனத்தின் மேலாளார் வருகிறார் என்றால் அவரை வரவேற்று ஒரு நல்ல இடத்தில் அவருக்கு வசதி செய்து கொடுப்பது தானே வழக்கம்.  ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் ஒரு சின்ன ரூமில் போய் தங்குவாரா? ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தானே தங்குவார். 


உலகம் அனைத்துக்கும் தலைவரரான இறைவவன் தங்குவது என்றால் எங்கே தங்குவான்?


"அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் " என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


அதாவது, மலர் என்றால் சாதாரண மலர் அல்ல. உள்ளக் கமலம் என்கிறார். அதுவும் எல்லோர் உள்ளமும் அல்ல. அன்பால் ஆண்டவனை நினைப்பவரது உள்ளம் என்ற மலரின் கண் என்கிறார். 


நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா?


சரி. அன்பால் நினைக்கலாம். நாம் நினைக்கும்படி இறைவன் இருப்பானா?  அவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியாது. தெரியாத ஒன்றை எப்படி நினைப்பது?  நினைக்காத போது எப்படி இறைவன் நம் உள்ளக் கமலத்தில் வருவான்? நம்மால் நினைக்கும் படி இருந்தால் இறைவன் நம் அறிவுக்கு உட்பட்டவனாகி விடுவானே? 


என்ற கேள்விகளுக்கு அவர் உரை செய்கிறார். 


"அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு"


நமக்கு இறைவன் எப்படி இருப்பான் என்று தெரியாது.  நாம் எப்படி நினைத்தாலும் அவன் அப்படியே வருவான். 


பிள்ளையாராக நினைத்தால் பிள்ளையாராக. ஏசுவாக நினைத்தால் ஏசுவாக, ஜோதியாக நினைத்தால் ஜோதியாக, எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள். நினைத்த வடிவில் வருவான். 


கல்லாக நினைத்தால் கல்லாகவே வருவான். மரம், செடி, கொடி ,  பூ, பழம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். 


எழுத்து தெய்வம், இந்த எழுது கோலும் தெய்வம் என்பான் பாரதி. 


உலகம் முழுவதும் இறைவன் படைப்பு என்றால், அவனின் அம்சம் எல்லாவற்றிலும் இருக்கும் தானே. அதனால், அன்பர்கள் எந்த வடிவில் நினைக்கிறார்களோ அந்த வடிவில் வருவான். 


சரி, நான் இப்போது நினைக்கிறேன்.  அவன் எப்போது வருவான்? இன்றே வருவானா ? கொஞ்ச நாள் ஆகுமா? ஆகும் என்றால் எவ்வளவு நாள் ஆகும்?  


"அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், "


விரைந்து வருவான் என்கிறார். 


"மலர் மிசை" என்ற ஒரு சொல்லுக்கு இவ்வளவு விவரம். 


இன்னும் இருக்கிறது. 

Thursday, April 1, 2021

திருக்குறள் - கற்றதனால் என்ன பயன்

 திருக்குறள் - கற்றதனால் என்ன பயன் 


திருக்குறளின் முதல் இயல் பாயிரவியல். அதாவது முன்னுரை. அதில் நான்கு அதிகாரங்களை வைக்கிறார் வள்ளுவர். 


கடவுள் வாழ்த்து


வான் சிறப்பு 


நீத்தார் பெருமை 


அறன் வலியுறுத்தல் 


என்பன அந்த அதிகாரங்கள். 


அதில் கடவுள் வாழ்த்தில் இரண்டாவது குறள் கீழே உள்ள குறள் 


பாடல் 

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ

னற்றா டொழா ரெனின்.


கொஞ்சம் சீர் பிரிப்போம் 


கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன்

நல் தாள் தொழாஅர் எனின்.


இதற்கு ஒவ்வொரு சீருக்கும் பொருள் கூறத் தொடங்கினால் பிழை வர வாய்ப்பு இருக்கிறது. 


எனவே, விரிவாக நேரே பார்த்து விடுவோம். 


பொதுவான கருத்து "இறைவன் திருவடியை தொழா விட்டால், படித்ததனால் உண்டாகும் பயன் என்ன? "


என்று கேட்கிறார். 


உள்ளே நுழைவோம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post.html

(click the above link to continue reading)



கற்றதனால் =  எதைக் கற்றதனால்? வேதம், தேவாரம், திருவாசகம், பைபிள், குரான் போன்ற சமயம் சார்ந்த நூல்களை கற்றதனாலா? 


இல்லை என்கிறார். 


"எல்லா நூல்களையும் கற்றவர்க்கு"  


எந்த நூலை கற்றாலும். நீங்கள் எதை வேண்டுமானாலும் படியுங்கள். கணிதம், மருத்துவம், வேதியியல், உயிரியல், தமிழ்,  கணணி, வரலாறு, சமையல் கலை, சிற்பம்  என்று  எதைக் கற்றாலும். 


அனைத்து அறிவின் முடிவிலும் அவன் தான் நிற்பான். 



"ஆய பயன்"


இதில் ஆய என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம். 


ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் என்று சொல்வார்கள். அழகிய கலைகள், நுணுக்கமான கலைகள் என்று பொருள் வரும். 


இதை ஆபயன் என்று கொண்டால் ஆகின்ற பயன் என்று பொருள் விரியும். 


அதாவது கற்றதனால் விளையும் பயன் 


"என் கொல்" இதில் கொல் என்பது அசைச் சொல்.  அசைச் சொல் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் கிடையாது என்று அர்த்தம். அதை விட்டு விட வேண்டும். 


"கற்றதனால் ஆய பயன் என்" = படித்ததால் வரும் பயன் என்ன ? என்ற கேள்வியை அவரே எழுப்பிக் கொண்டு பதிலும் தருகிறார். 


வாலறிவன் = இதற்கு பரிமேல் அழகர் எழதும் உரை "மெய்யுணர்வினை உடையானது". இறைவனின் அறிவு தான் மெய்யான அறிவு. நாம் பெற்றது எல்லாம் இரவல் அறிவு. யார் யாரோ சொல்லி நமக்கு வந்தது.  


இறைவன் அறிவினை யாரிடம இருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. அது அவனிடமே இருக்கிறது. எனவே "உடையானது" என்று கூறினார். 


"நல் தாள்" = நல்ல திருவடிகளை. தாள் என்பதற்கு பாதம் என்று ஒரு பொருள் இருக்கிறது. இலை என்று ஒரு பொருளும் இருக்கிறது. "பிறவிப்பிணிக்கு மருந்தாதலின் 'நற்றாள்' என்றார்." என்று உரை எழதுகிறார். எப்படி பச்சிலை நோயைப் போக்குமோ, அது போல, இறைவனின் தாள் பிறவிப் பிணி என்ற நோயைப் போக்கும்.


எல்லா அறிவு சார்ந்த துறைகளும் ஏதோ ஒரு உண்மையைத் தேடித்தான் செல்கின்றன. இயற்கையின் உள்ளே பொதிந்து கிடக்கும் இரகசியங்களை, பொருளை, உண்மையை ஒவ்வொரு அறிவும் ஒவ்வொரு விதமாகத் தேடுகின்றன. கடைசியில் அவை யாவும் தரிசிப்பது ஏதோ ஒரு உண்மையைத்தான். ஒவ்வொரு உண்மையும் இறைவனின் வெளிப்பாடே என்பதால், அறிவின் நோக்கம் இறுதியில் இறைவனை அடைவது தான். 



Spinoza என்ற அறிஞர் கடவுளைப் பற்றி கூறும் போது 


Spinoza believed that God is “the sum of the natural and physical laws of the universe"


இவ்வாறு குறிப்பிடுகிறார். 


அனைத்து விதிகளின் தொகுதிதான் கடவுள் என்கிறார். அந்த விதிகள் என்னென்ன என்று காண்பது தான் அறிவின் வேலை. அறிவு விதிகளை காணும். விதிகள் இறைவனின் கூறு. எனவே, அறிவு இறைவனின் ஒரு பகுதியை காணும். 



"I believe in Spinoza's God, who reveals himself in the harmony of all that exists


என்று ஐன்ஸ்டீன் குறிப்பிடுகிறார்.



மேலும் சிந்திப்போம்.