Friday, April 2, 2021

கம்ப இராமாயணம் - பாலை நில வருணனை - வேகாதது எது ?

 கம்ப இராமாயணம் - பாலை நில வருணனை - வேகாதது எது ?


மலையை, சோலையை, அருவியை,  கடலை, வர்ணிப்பது எளிது. அது இயற்கைலேயே அழகாக இருக்கிறது. 


ஒரு அழகும் இல்லாத ஒன்றை வர்ணித்து சுவைபட கூறுவது என்பது எவ்வளவு கடினம்?


பாலை நிலத்தை கம்பன் வர்ணிக்கிறான். அதைக் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் பாடல்கள். 


கம்பன் சொல்வது இருக்கட்டும். 


கற்பனை செய்து பாருங்கள் ஒரு பாலை நிலம் எப்படி இருக்கும் என்று. ஒரே மணல் வெளி, பொறுக்க முடியாத சூடு, பசுமை என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. மழை என்பதே பார்த்து அறியா நிலம். மேகம் கூட இல்லை. 


இந்த நிலத்தை வர்ணிக்க வேண்டும். நினைத்துப் பாருங்கள். என்னதான் சொல்ல முடியும் என்று. 


பாடல் 


படியின்மேல் வெம்மையைப்

   பகரினும். பகரும் நா

முடிய வேம்; முடிய மூடு இருளும்

   வான் முகடும் வேம்;

விடியுமேல். வெயிலும் வேம்; மழையும்

   வேம்; மின்னினோடு

இடியும் வேம்; என்னில்.

   வேறு யாவை வேவாதவே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_2.html


( please click the above link to continue reading)


படியின்மேல் = உள்ள படி இந்த நிலத்தின் 


வெம்மையைப் = சூட்டினை 

பகரினும் = சொன்னாலும் 


பகரும் நா = சொல்லக் கூடிய நாக்கு 

முடிய வேம் = முற்றுமாக வெந்து போகும் 


முடிய மூடு இருளும் = முடிந்து போகும் படியான இரவும் 


வான் முகடும் = வானத்தின் உச்சியும் 


வேம் = வெந்து போகும் 


விடியுமேல் = பொழுது விடிந்தால் 


வெயிலும் வேம் = அடிக்கிற வெயில் கூட வெந்து போகும் 


மழையும் = மழை ஒரு வேளை பெய்தால்


வேம் = வெந்து போகும் 


மின்னினோடு = மின்னலோடு 


இடியும் வேம் = இடியும் வெந்து போகும் 


என்னில் = என்று சொன்னால் 


வேறு யாவை வேவாதவே? = வேறு எதுதான் வேகாது ?


அந்த பாலை நிலத்தைப் பற்றிச் சொன்னாலே, நாக்கு வெந்து போய் விடுமாம். 


என்னதான் சூடு இருந்தாலும், இரவில் கொஞ்சம் சூடு தணிந்து மட்டுப் படும். ஆனால், இந்த பாலை நிலத்தில் இரவும் சூடாக இருக்குமாம். இரவே சூடாக இருந்தால், பகல் எப்படி இருக்கும். 


இடி, மின்னல், மழை எல்லாம் வெந்து போகுமாம். 


இவை எல்லாம் வேகும் என்றால், பின் எதுதான் வேகாது என்கிறார் கம்பர். 


பாலை நில வர்ணனையிலும் ஒரு கவித்வம்.  அது தான் கம்பன். 


2 comments:

  1. தாங்க முடியாத வேதனையை சிலர் விரத்தியால் மெல்லிய நகையோடு விவரிப்பது போல் இருக்கிறது.
    கம்பரிடம் தான் கற்றுகொண்டோமோ போல. அந்த பாலையின்வெம்மையை வேறு விதமாக ஒரு ரசனையுடன் விவரிக்க இயலாது.

    ReplyDelete
  2. பாலையின் வெம்மையை வருணிக்கக் கம்பரால் மட்டுமே முடியும்!

    ReplyDelete