Thursday, April 8, 2021

கம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 3

கம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 3 


கடல் பார்த்து இருகிறீர்கள் தானே. எவ்வளவு தண்ணீர் இருக்கிறது அதில். யுகம் யுகமாக மழை பெய்கிறது. கடல் மேலும், நிலத்திலும் மழை பொழிகிறது. அந்த நீர் எல்லாம் கடலில் தான் போய் சேர்கிறது. இருந்தும், கடல் ஏன் நிரம்பி வழிவதில்ல? கடல் நிரம்பி ஊருக்குள் ஏன் வருவது இல்லை? இத்துனூண்டு கரையா அவ்வளவு பெரிய கடலை கட்டிக் காக்கிறது?


நம் புராணங்களில் இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். சரி தவறு அப்புறம் யோசியுங்கள். 


கடலுக்கு நடுவில், குதிரை முக வடிவில் ஒரு தீ இருக்கிறதாம். அந்த தீ-க்கு வடவாக்கினி என்று பெயர். அந்தத்  தீ, கடல் நீர்  அளவுக்கு அதிகமாக சேர்ந்து விட்டால், நீரை சூடாக்கி, ஆவி ஆக்கி விடுமாம். 


(அது போல நம் வயிற்ருக்குள்ளும் ஒரு தீ இருக்கிறதாம். நாம் போடும் உணவை அது தான் எரிக்கிறது என்று சொல்வார்கள்). 


"அந்தப் பாலைவனத்தில் கொடுமையான வெப்பம் தான் ஆட்சி செய்து கொண்டு இருந்தது. அந்த வெப்பத்தின் சூடு தாங்காமல் காகங்களும், யானைகளும் கரிந்து சாம்பலாகிப் போய் கிடந்தன. அது எப்படி இருக்கிறது என்றால், மேகம் எல்லாம் வெயிலில் கரிந்து எரிந்து சம்பாலகிப் போய் கிடப்பதை போல இருந்தது. அந்த வெப்பம் எங்கிருந்து வந்தது என்றால், கடல் நடுவே இருந்த வடவாக்கினியில் இருந்து வந்தது" 


என்கிறார் கம்பர். 


பாடல் 


ஏக வெங் கனல் அரசிருந்த. காட்டினில்

காகமும் கரிகளும் கரிந்து சாம்பின;-

மாக வெங்கதிர் எனும் வடவைத் தீச் சுட.

மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே.



பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/3_8.html


(click the above link to continue reading)



ஏக = வேறு எங்கும் காணமுடியாத, தனித் தன்மை கொண்ட 


வெங் கனல் = கொடுமையான கனல் , வெப்பம் 


அரசிருந்த. காட்டினில் = அரசு செய்து வரும் காட்டில் 


காகமும் = காகமும் 


கரிகளும் = யானைகளும் 


கரிந்து சாம்பின;- = கரிந்து சாம்பாலாகிப் போயின 


மாக வெங்கதிர்  எனும்  =  பபெரிய வெம்மையான கதிர் என்று சொல்லப் படக் கூடிய 


வடவைத் தீச் சுட. வடவை என்ற தீச் சுட 


மேகமும் கரிந்து = மேகல எல்லாம் கரிந்து 


 இடை வீழ்ந்த போலுமே. = இடையில் இங்கே கீழே விழுந்து கிடப்பதைப் போல இருக்கிறது 


காகம், யானை என்று சொன்னதன் மூலம் எல்லா பறவைகளும், எல்லா மிருகங்களும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 


தமிழ் இலக்கணத்தில் சாதி ஒருமை என்று ஒன்று உண்டு. 


பசு பால் தரும் என்றால் ஒரே ஒரு பசுதான் பால் தருமா? ஒரு பசுவைப் பற்றிச் சொன்னதால் அது எல்லா பசுக்களுக்கும் பொருந்தும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 


மாம்பழம் இனிக்கும் என்றால் எல்லா மாம்பழமும் இனிக்கும் என்று அர்த்தம். 


இதற்கு சாதி ஒருமை என்று பெயர். 


காகம் இறந்தது என்றால் காகம் போன்ற அனைத்து பறவைகளும் இறந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். 


பாலை நிலத்தையும் இரசித்து பாடல் எழுதி இருக்கிறான் கம்பன். இரசிக்கிற மனம் வந்து விட்டால் எதைத்தான் இரசிக்க முடியாது. 


நாம் நல்லவற்றைக் கூட இரசிப்பது இல்லை அல்லது குறைவு. 


இரசிக்க, அனுபவிக்க எவ்வளவு இருக்கிறது. 



1 comment:

  1. படிக்கும் போதே அந்தப் பாலையின் வெப்பத்தை உணர முடிகிறது.

    நன்றி.

    ReplyDelete