Thursday, April 15, 2021

திருக்குறள் - தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - பாகம் 2

 

திருக்குறள் - தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - பாகம் 2 



பாடல் 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/2_15.html

(click the above link to continue reading)


அறவாழி = அறமாகிய கடல்/சக்கரம் 

அந்தணன் = அந்தணன் 

தாள் = திருவடிகளை 

சேர்ந்தார்க்கு = சேர்ந்தவர்களுக்கு 

 அல்லால் = அல்லது , அதாவது சேராதவர்களுக்கு 

பிறவாழி = பிற கடல்/சக்கரம் 

நீந்தல் அரிது = நீங்குவது கடினம் 


இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த பிறவிக் கடலை கடப்பது கடினம்.


இது தான் பொதுவாக சொல்லப்படும் உரை. 


இனி பரிமேலழகரின் ஆழ்ந்த உரையை பார்ப்போம். 


உரை: அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது


உரைக் குறிப்பு: அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)


"பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார்."


இறைவனுக்கு வடிவம் உண்டா? அப்படி என்றால் என்ன வடிவம்?


அறமே இறைவனின் வடிவம் என்கிறார் பரிமேலழகர். வடிவம் என்றால் உடல். இறைவனின் உடல், அல்லது வடிவம் என்பது அறத்தால் ஆனது. 


அப்படி என்றால் ஒருவன் அறத்தோடு மோதுகிறான் என்றால் அவன் இறைவனோடு மோதுகிறான் என்று பொருள். 


நாம் பல புராணங்கள் படித்து இருக்கிறோம். அரக்கர்கள் தவம் செய்து பல வரங்களைப் பெற்று பாவங்கள் பல செய்வார்கள். இறைவன் வந்து அவர்களை அழிப்பான்? காரணம், அறத்தின் மேல் ஒருவன் போர் தொடுக்கிறான் என்றால் அது இறைவனோடு மோதுவதற்குச் சமம். முடிவு நமக்குத் தெரியும். ஒருவன் கூட தப்பிப் பிழைத்தது இல்லை. 

அறக் கடல் = கடவுள். 

பிற ஆழி என்றால் பொருள், இன்பம் என்ற கடல்கள். 


இங்கேதான் ஒரு சிக்கல் வருகிறது.   


ஆழி என்ற சொல்லுக்கு சக்கரம் என்று ஒரு பொருள் உண்டு. அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு, வள்ளுவர் சொன்னது சக்கரம் கையில் உள்ள எங்க சாமியைத்தான். எனவே வள்ளுவர் எங்க ஜாதி என்று ஒரு சிலர் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். 


"'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். "


என்று பரிமேலழகர் உரைக் குறிப்பு எழுதுகிறார்.  அப்படி பொருள் சொன்னால் தவறு என்று பரிமேலழகர் சொல்லவில்லை. அது அவர் நேர்மையை காட்டுகிறது. அப்படியும் பொருள் சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்று கூறி விட்டுப் போகிறார்.  அதை அவர் சொல்லாமல் விட்டிருக்கலாம். அவர் அப்படி உரை சொல்லவில்லை. இருந்தும், நான் இப்படிச் சொல்கிறேன். இது மட்டும் தான் என்று இல்லை. இதற்கு இன்னொரு விளக்கமும் இருக்கிறது. இப்படியும் பொருள் சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போகிறார். 


நான் சொன்னதே சரி என்று அவர் அடம் பிடிக்கவில்லை. 


சரி. அடுத்து. 


"அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்"


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது


என்ற குறளில் இறைவனை கடல் என்று குறிப்பிடுகிறார்.  பிற ஆழி என்று பொருளையும் இன்பத்தையும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். இதில், இறைவனின் திருவடியை "புணை" என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார். அப்படி குறளில் இல்லை.  எப்படி பரிமேலழகர் இல்லாத ஒன்றை எழுதலாம் என்ற கேள்விக்கு அவர் ஒரு இலக்கணம் சொல்கிறார். 


"இஃது ஏகதேச உருவகம்" 


ஏகதேச உருவகம் என்றால் என்ன. 


ஏகம் என்றால் ஒன்று. தேசம் என்றால் இடம். 


அதாவது இரண்டுக்கு மேற்பட்ட பொருள்களுக்கு உவமை சொல்லும் போது ஒன்றுக்கு சொல்லி, மற்றதுக்கு சொல்லாமல் விட்டால் அதற்கு ஏக தேசம் உவமை என்று பெயர். 

உதாரணம்.


யானை போன்ற தயரதன் இராமனை கட்டித் தழுவினான். 


இதில் தயரதன், இராமன் என்ற இரண்டு பாத்திரங்கள் இருக்கின்றன. அதில் தயரதனுக்கு யானையை உதாரணம் சொல்லிவிட்டு, இராமனுக்கு ஒரு உவமையும் சொல்லவில்லை. 


யானை போன்ற தயரதன் புலி போன்ற இராமனை கட்டித் தழுவினான் என்று சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லாமல் விட்டதால், அது ஏக தேசம் உவமை. 


உவமை அணி, உருவக அணி என்று இரண்டு உண்டு. 


அதைப் பற்றியும் கொஞ்சம் புரிந்து கொள்வோம். 


நிலவு போன்ற முகம் 


என்று சொல்லும் போது, 


நிலவு உவமை 

முகம் என்பது உவமிக்கப் படும் பொருள் 

போன்ற என்பது உவம உருபு. 


இதற்கு உவமை அணி என்று பெயர். 


இதில் "போன்ற" என்ற உவம உருபை எடுத்துவிட்டால் 


நிலவு முகம் என்று வரும். 


அதற்கு எடுத்துக்காட்டு உவமை அணி என்று பெயர். "போன்ற" என்ற உவம உருபை எடுத்துக் காட்ட வேண்டி இருப்பதால்,  அது எடுத்துக்காட்டு உவமை அணி என்று பெயர்.


இதில் உவமையை, உவமேயத்தின் மேல் ஏற்றிச் சொன்னால் அது உருவகம். 


முக நிலவு என்றால் அதற்கு உருவகம் என்று பெயர். 


மூன்று விஷயங்கள் 


உவமை அணி  - நிலவு போன்ற முகம் 

எடுத்துக்காட்டு  உவமை அணி   - நிலவு முகம் 

உருவக அணி - முக நிலவு 


இங்கே, அறம் , பொருள், இன்பத்தை கடலுக்கு உவமானம் சொல்லி விட்டு, இறைவனின் திருவடியை "புணை" அல்லது "தெப்பம்" என்று சொல்லாமல் விட்டதால் அது ஏக தேச உருவகம். 


கடலை கடக்க முடியாது என்று கூறியதால், இறைவனின் தாள் "புணை" அல்லது "தெப்பம்" என்பது வருவிக்கப் பட்டது. 


இலக்கியம் படிக்க இலக்கணம் எவ்வளவு இன்றியமையாதது என்பது புரிகிறது அல்லவா?
















6 comments:

  1. நன்றாக புரிகிறது. நன்றி

    ReplyDelete
  2. அப்பப்பா ...அருமை அருமை ...
    வணங்கி மகிழ்கிறேன் ...

    ReplyDelete
  3. இது வரை மனதை பிரமிக்க வைக்கும் பரிமேலழகர் உரை.

    ஒரே ஒரு கேள்வி: "அந்தணன்" என்ற சொல்லை ஏன் வள்ளுவர் கையாண்டார்? அந்தச் சொல்லுக்கு "பிராமணன்" என்ற இந்தக் காலத்தில் பொருள் கூறுகிறோம். ஆனால், வள்ளுவர் எந்தப் பொருளில் சொன்னார்?

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கேள்விக்கான பதிலை இன்னொரு கட்டுரையில் தயவுசெய்து எழுத முடியுமா?

      Delete
    2. அந்தணன் என்போன் அறவோன், மற்று எவ் உயிர்க்கும் செந்தன்மை பூண்டு ஒழுகலான் என்று பின்னொரு ஒரு குறளில் கூறுவார்.



      அந்தணன் என்பது காரணப் பெயர். அவன் அறவோனாக இருப்பதால் அவன் அந்தணன்.



      அந்தணன் என்பவன் அந்தணனுக்கு பிறந்தவன் என்று சொல்லவில்லை.



      அற வழியில் நிற்பவன். மற்ற உயிர்களுக்கு துன்பம் தராதவன்.



      அந்தக் குறள் வரும் போது அதன் ஆழமான அர்த்தத்தை காண்போம்.

      Delete