Wednesday, April 28, 2021

கம்ப இராமாயணம் - யுத்தப் படலம் - பிரம்மாஸ்திரம்

 கம்ப இராமாயணம் - யுத்தப் படலம் - பிரம்மாஸ்திரம் 


அரசியல், இயற்கை, மனித மனங்களில் எழும் உணர்சிகளின் போராட்டம் இவற்றை யாரும் கற்பனை செய்ய முடியும். அதை எப்படி எழுத்தில் வடிக்கிறார்கள் என்பது அவரவர் திறமையை பொறுத்தது. 


ஆனால், போர் பற்றி எழுத முடியுமா?  போர் எப்படி நடக்கும், போர்க்களத்தில் என்ன நிகழும், அங்கு இருப்பவர் மன நிலை எப்படி இருக்கும் என்பதெல்லாம் நடை முறை வாழக்கையில் நாம் காணும் காட்சிகள் அன்று. அதை எப்படி கற்பனையில் எழுதுவது?  


இராமனுக்கும், இராவணனுக்கும் பெரிய போர் நடந்தது. முடிவில் இராமன் வென்றான் என்று சொல்லிவிட்டுப் போய் விடலாம். கம்பன் மிக விரிவாக யுத்த காண்டம் எழுதுகிறான். 


கதையோ தெரிந்த கதை. யார் இதை படிக்கப் போகிறார்கள்?  யுத்த காண்டம் பற்றி பெரிய இலக்கிய அரங்ககளோ, பட்டி மன்றமோ நடந்ததாய், நடப்பதாய் தெரியவில்லை. 


இருப்பினும், அதில் கம்பன் காட்டும் நுணுக்கங்கள், உணர்ச்சி போராட்டங்கள், போரின் உக்ரத்தை அவன் காட்டும் விதம், எல்லாம் அந்த போரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. 


கம்பன் காட்டும் போர்க் களங்கள் என்று தனியே ஒரு புத்தகம் எழுதலாம். அவ்வளவு விடயம் இருக்கிறது. 


இலக்குவன் மயங்கி விழுந்து கிடக்கிறான், இராமனைக் காணவில்லை, அந்த சமயத்தில் சீதையை போர் களத்துக்கு கொண்டு வந்து காண்பிக்கிறான் இராவணன். இனியாவது என் ஆசைக்கு இணங்கு. உன்னை காப்பாற்ற யாரும் இல்லை என்று. 

அது எப்படி நடந்தது, இராமன் எங்கே போனான், அனுமன் என்ன ஆனான், சுக்ரீவன், வீடணன் போன்றோர் என்ன ஆனார்கள், சீதை அந்த போர்க் களத்தை கண்டு என்ன ஆனாள் என்று ஆயிரம் கேள்விகளுக்கு பதிலை உள்ளடக்கியது யுத்த காண்டம். 


இங்கே, இந்திரசித்து கண்ட போர்க்களம் பற்றி காணலாம். 


இந்திரசித்து பிரம்மாஸ்திரத்தை இலக்குவன் மேல் விடுகிறான். மாலை வேளையில், இரை தேடிப் போன பறவைகள் எல்லாம் மலையின் மேல் உள்ள தங்கள் கூட்டுக்கு மொத்தமாக வருவது போல, அந்த அஸ்திரம் இலக்குவன் மேனியை பற்றியது


பாடல் 


இன்ன காலையின் இலக்குவன்

    மேனிமேல் எய்தான்,

முன்னை நான்முகன் படைக்கலம்;

    இமைப்பதன் முன்னம்

பொன்னின் மால்வரைக் குரீஇ

    இனம் மொய்ப்பது போல,

பன்னல் ஆம் தரம் அல்லன

    சுடர்க்கணை பாய்ந்த.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_65.html


(click the above link to continue reading)


இன்ன காலையின் = அந்த நேரத்தில் (அது என்ன நேரம் என்றால் இன்னும் பல பாடல்கள் பின்னால் போக வேண்டி இருக்கும்.) 


இலக்குவன் = இலக்குவன் 


மேனிமேல் எய்தான், = உடம்பின் மேல் எய்தான் (யார் ? இந்திரசித்து)


முன்னை = முன்பு, ஆதி, பழம் பெருமை வாய்ந்த 


நான்முகன் படைக்கலம்; = பிரம்மாஸ்திரம் 


இமைப்பதன் முன்னம் = கண் இமைப்பதற்குள் 


பொன்னின் மால்வரைக் = பொன் போல ஒளி விடும் மலையின் மேல் 


குரீஇ  இனம் = பறவை இனங்கள் 


மொய்ப்பது போல, = மொய்ப்பது போல 


பன்னல் ஆம் தரம் அல்லன = சொல்லக் கூடிய தரத்தில் அல்ல 


சுடர்க்கணை பாய்ந்த. = சுடர் விடும் அந்த கணைகள் பாய்ந்த விதம் 


பிரம்மாஸ்த்திரத்துக்கு மேல் ஒரு அஸ்திரம் கிடையாது. அதை வெல்லும் படை எதுவும் இல்லை. 


அப்படி என்றால் என்ன ஆயிற்று? இலக்குவன் இறந்து போனானா? அவனோடு சென்ற படைகள் என்ன ஆயிற்று?


அந்த போர்களத்தை உங்கள் மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அது எப்படி மேலும் மேலும் விரிகிறது என்று கம்பன் காட்ட காட்ட உங்கள் கற்பனையும் அதனூடே விரியும். அற்புதமான ஒரு அனுபவம்.



1 comment: