Thursday, April 22, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - ஏரின் உழாஅர் உழவர்

 திருக்குறள் - வான் சிறப்பு - ஏரின் உழாஅர் உழவர் 


அறம் நிலைக்க வேண்டும் என்றால் உயிர்கள் நிலைக்க வேண்டும். அதுவும் பசி இன்றி இருக்க வேண்டும். அதற்கு மழை வேண்டும். 


மழை வளம் குன்றினால் உழவர்கள் உழவுத் தொழிலை செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.  


அதாவது, உலகில் உணவு உற்பத்தி நின்று போய் விடும் என்கிறார்.  இருக்கின்ற உணவை சிறிது காலம் உண்ணலாம். அதன் பின், பட்டினிதான். 


மழை இல்லாவிட்டால், உழவு இல்லை. உழவு இல்லாவிட்டால் உணவு இல்லை. 


பாடல் 


ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_22.html


(click the above link to continue reading)



ஏரின் = ஏரினால் 


உழாஅர் = நிலத்தை உழ மாட்டார்கள் 


உழவர் = உழவர்கள் 


புயலென்னும் = மழை என்ற 


வாரி = வருவாய் 


வளங்குன்றிக் கால் = வளம் குன்றிய பொழுது 


உழவர்கள் நிலத்தை உழலாம், அதை பண்  படுத்தலாம். விதை விதைக்கலாம். ஆனால், மழை இல்லாவிட்டால் இவை ஒன்றினாலும் பயன் இல்லை. பயிர் விளையாது. 


ஏன், மழை இல்லாவிட்டால், ஆற்றுப் பாசனம், ஊற்றுப் பாசனம், கண்மாய் பாசனம் போன்றவை இல்லையா என்றால் இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் நம்பி உழவு செய்ய முடியாது. ஆற்றுக்கு நீர் எங்கிருந்து வரும்? ஊற்று நீர் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? ஆற்றில் நீர் இல்லாவிட்டால் எரி , குளம் , குட்டை, கண்மாய் எல்லாம் எப்படி நிறையும். 


நீர் மேலாண்மைக்கு (water management) மழைதான் அடிப்படை. அது இல்லாவிட்டால், உழவர்கள் சோர்ந்து போவார்கள். 


ஏதோ ஓரிரண்டு தூறல் போட்டது என்று உழவர்கள் உழவு செய்யத் தொடங்க மாட்டார்கள். "புயல் எனும் வாரி". நல்லா அடிச்சுப் பெய்ய வேண்டும். காத்தும் மழையுமாக இருக்க வேண்டும். நீர் நிலைகள் எல்லாம் நிறைய வேண்டும். 


உழவுக்கு அடிப்படை மழை. 


ஒரு நாடு எவ்வளவுதான் பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தாலும், பணத்தை உண்ண முடியாது. உணவுப் பொருள் வேண்டும். அதற்கு மழை அவசியம் என்று மழையின் பெருமை கூறுகிறார். 

No comments:

Post a Comment