Wednesday, April 14, 2021

திருக்குறள் - தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

திருக்குறள் - தாள்சேர்ந்தார்க்கு அல்லால்


ஒரு நூலுக்கு பொருள் சொல்லும் போது அல்லது உரை எழுதும் போது அந்த மூல நூல் ஆசிரியன் என்ன நினைத்து சொன்னான் என்று அறிந்து உரை செய்ய வேண்டும். மாறாக, உரை செய்பவன் தன் கருத்தை மூல நூலின் கருத்தின் மேல் திணிக்கக் கூடாது. அது மூல நூல் ஆசிரியனுக்கும், வாசகனுக்கும் செய்யும் துரோகம் என்றே நான் கருதுகிறேன். 


பின்னாளில் வந்த, சமயம் சார்ந்த நூல் ஆசிரியர்கள் திருவள்ளுவர் தங்கள் சமயக் கருத்துக்களைத் தான் சொல்கிறார் என்று தங்கள் கருத்துகளை வலிந்து திணிக்கிறார்கள். குறளில் உள்ள சொற்களுக்கும், அவர்கள் சொல்லும் உரைக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. 


தங்கள் சமயத்தை வளர்க வேண்டி, உயர்ந்த நூல்களின் கருத்தை சிதைத்து பாவம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது. 


இதற்கு மத்தியில் மிக மிக நடு நிலையாக நின்று, உரை செய்கிறார் பரிமேலழகர். அவரையும் அந்தணர் என்று கூறி அவரின் உரைக்கும் ஜாதி சாயம் பூசுபவர்களும் இருக்கிறார்கள். 


பரிமேலழகரின் நேர்மையான உரைக்கு இந்த குறளுக்கு அவர் உரை செய்த விதம் ஒரு சான்று. 


பாடல் 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_14.html


(click the above link to continue reading)


அறவாழி = அறமாகிய கடல்/சக்கரம் 

அந்தணன் = அந்தணன் 

தாள் = திருவடிகளை 

சேர்ந்தார்க்கு = சேர்ந்தவர்களுக்கு 

 அல்லால் = அல்லது , அதாவது சேராதவர்களுக்கு 

பிறவாழி = பிற கடல்/சக்கரம் 

நீந்தல் அரிது = நீங்குவது கடினம் 


இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த பிறவிக் கடலை கடப்பது கடினம்.


இது தான் பொதுவாக சொல்லப்படும் உரை. 


இனி பரிமேலழகரின் ஆழ்ந்த உரையை பார்ப்போம். 


உரை: அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது


உரைக் குறிப்பு: அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)


ஆழி என்ற சொல்லுக்கு கடல் என்றும் சக்கரம் என்று பொருள் உண்டு. இவர் கடல் என்று பொருள் கொள்கிறார். 


அறவாழி = அறக்கடலாகிய 


அறத்துக்கு பல கூறுகள் உண்டு. அதன் ஆழம் காண முடியாது. எனவே, கடவுளை அறக் கடல் என்கிறார்.


சரி, அப்படி என்றால் "பிறவாழி" என்பதற்கு என்ன அர்த்தம்?


மொத்தமே மூன்று தான் உண்டு. அறம், பொருள், இன்பம். அறவாழி என்று அறத்தைக் கூறி விட்டதால், "பிற" என்பது பொருள் மற்றும் இன்பத்தைக் குறிக்கும் என்கிறார். 


அதாவது, இறைவனின் திருவடியை சேராவிட்டால், பொருளும் இன்பமுமாகிய கடல்களையும் கடக்க முடியாது என்கிறார். 


பொருளுக்கும் இன்பத்துக்கும் அறம் தான் அடிப்படை. 


யோசித்துப் பார்ப்போம். நம் நடைமுறை, நம் சட்ட திட்டங்கள் எல்லாம் இதன் அடிப்படையில் தான் அமைந்து இருக்கின்றன. 


பொருள் தானே முக்கியம் என்றால் களவின் மூலம் பொருள் செய்தால் என்ன? கொள்ளை அடித்தால் என்ன. பிறரை ஏமாற்றி பொருள் பறித்தால் என்ன? தவறு என்று தெரிகிறது அல்லவா? சட்டமும் அதைத்தான் சொல்கிறது. சட்டம் தெரியாவிட்டால் கூட, அது தவறு என்று நமக்குத் தெரிகிறது அல்லவா?  அது அறம் பிழைத்த செயல். 


இன்பம் தானே முக்கியம்.  அது யாரிடம் இருந்து வந்தால் என்ன? ஏன் மனைவி/கணவன் உறவை பெரிது படுத்த வேண்டும். எனக்கு வேண்டியது இன்பம். அதை நான் யாரிடமும் அனுபவிப்பேன் என்று கூற முடியாது அல்லவா. 


எனவே, பொருளுக்கும் , இன்பத்துக்கும் அறம் தான் அடிப்படை. அதை புரிந்து கொள்ள வேண்டும். 


அறவழியில் நிற்காவிட்டால், பொருளும் இன்பமும் கூட அனுபவிக்க முடியாது. 


அறத்தின் மூலம் இறைவன்.  முந்தைய குறளில் படித்தோம் அல்லவா "ஐந்தவித்தானது குறை தீர் ஒழுக்க நெறி" என்று. 


ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், மீதியை அடுத்து வரும் ப்ளாகுகளில் காண்போம். 



No comments:

Post a Comment