Friday, April 9, 2021

திருக்குறள் - இருவினையும் சேரா

திருக்குறள் - இருவினையும் சேரா 


பாடல் 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


பொருள் 


இருள்சேர்= மயக்கத்தைப் பற்றி வரும் 

இருவினையும்  = நல் வினை, தீ வினை என்ற இரண்டு வினைகளும் 

சேரா = சேராது 

இறைவன் = இறைவன் 

பொருள்சேர் புகழ்  = பொருள் சேர்ந்த புகழை 

புரிந்தார் மாட்டு = விரும்பியவர்களிடம் 


இது ஒரு சிக்கலான குறள். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_9.html

click the above link to continue reading



மயக்கத்தை பற்றி வரும் இரு வினையும் சேராது என்கிறார். தீ வினை சேராது என்றால் சரி.  ஏன் நல் வினையும் சேராது என்கிறார்? அப்படி என்றால் இறைவன் அடியவர்கள், நல்லது ஒன்றும் செய்ய மாட்டார்களா? அல்லது நல்லது செய்தால் அதன் பலன் அவர்களுக்குக் கிடைக்காதா? 


"இருள் சேர் இருவினை" :நாம் பல காரியங்கள் செய்கிறோம். எது நல்லது, எது கெட்டது என்று நமக்கு உறுதியாகத் தெரியுமா ? 


இருள் இருக்கிறதே, அது பொருள்களை அறிய விடாது. வீட்டுக்குள் நுழைகிறோம். மின்சாரம் போய் விடுகிறது. எது எங்கே இருக்கிறது என்று தெர்யுமா? முட்டி மோதிக் கொள்வோம் அல்லவா? எது பாதை, எது தூண், எது நாற்காலி என்று தெரியாது. பாதை என்று நினைத்துப் போய் சுவற்றில் முட்டிக் கொள்வோம்.


அது போல, அறியாமை என்ற இருள் சேர்ந்து விட்டால்,எது நல்லது , எது கெட்டது என்று தெரியாது. 


இது ஒரு பொருள். 


கெட்டது செய்யக் கூடாது சரி. நல்லது செய்யலாம் தானே என்று கேட்டால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 


கெட்டது செய்தால், பாவம் பெருகி அதை அனுபவிக்க மீண்டும் பிறந்து துன்பம் அனுபவிக்க வேண்டும். 


நல்லது செய்தால், புண்ணியம் சேர்ந்து அதை அனுபவிக்க மீண்டும் பிறந்து இன்பம் அனுபவிக்க வேண்டும். 


நல்லது செய்தாலும் பிறவி உண்டு. கெட்டது  செய்தாலும் பிறவி உண்டு. பிறவி என்று வந்து விட்டால், அதில் உள்ள பிறவித் துயர்கள் உண்டு. 


பிறவித் துயர்களாவன , தன்னால் வரும் துன்பம், இயற்கையால் வரும் துன்பம், இறைவனால் வரும் துன்பம் என்றுர் முன் சிந்தித்தோம். 


மீண்டும் மீண்டும் நம்மை பிறவித் துயரில் ஆழ்துவதால் அதை இருள் சேர் இருவினை என்றார். 


"அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர். 



சரி, இதில் இருந்து எப்படி விடுபடுவது?


இந்த இரண்டு வினைகளும் சேராது. யாரைச் சேராது என்றால் 


"பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு" 


பொருள் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்று ஒரு பொருளும் உண்டு. 


அந்தப் பாடல் வரிக்கு பொருள் என்ன என்று கேட்கலாம். 

அந்தப் பாடல் வரிக்கு அர்த்தம் என்ன என்றும் கேட்கலாம். 


உலகியலில், சில மனிதர்களை அர்த்தம் இல்லாமல் புகழ்ந்து கொண்டு இருப்பார்கள். "நீங்க தான் கடவுள், நீங்க தெய்வம், அறிஞர், புலவர், கவிஞர் " என்றெல்லாம் புகழ்வார்கள். அவை எல்லாம் பொருள் இல்லாத புகழ். அர்த்தம் இல்லாத வெறும் ஆராவாரச் சொற்கள். 


பொருள் உள்ள புகழ் என்றால் அது ஆண்டவனின் புகழ் ஒன்றையே குறிக்கும். 


அப்படி, அந்த ஆண்டவனின் புகழை விரும்புவார்க்கு, 


புரிதல் என்றால் இடை விடாது சொல்லுதல் என்று உரை செய்கிறார் பரிமேலழகர்.


முந்தைய இரண்டு குறள்களில் மனதால் வழிபாடு செய்வது பற்றிக் கூறினார். 


இங்கே, வாக்கால் வழிபடுவது பற்றிக் கூறுகிறார். 


"புகழ் புரிந்தார் மாட்டு" என்பதில் புரிந்தார் என்பதற்கு "இடைவிடாது சொல்லுதல்" என்று அர்த்தம் எழுதுகிறார்.


இறைவன் புகழை இடைவிடாமல் சொல்லிக் கொண்டு இருந்தால், மயக்கத்தை தரும் இரு வினைகளும் நம்மை அண்டாது.


பிறப்பு அறு பட்டால், வீடு பேறு தான். 









4 comments:

  1. அருமை ...ஐயா ...
    வணக்கம் வாழ்க...

    ReplyDelete
  2. தெளிவான விளக்கத்தால் தான் புரிந்தது. மிக்க நன்றி

    ReplyDelete
  3. 1. "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்" என்பது எப்படிப்படட இறைவன் என்று விளக்குகிறது என்று கொள்ளலாமோ? அதாவது, "நல்லவை-தீயவை இரண்டுமே சேராதவன் இறைவன்" என்று கொள்ளலாமோ?

    2. அப்படிப்பட்ட இறந்தவன், "நல்ல பொருள் பொதிந்த புகழ் தரும் செயல்களை செய்பவரிடம் இருப்பான்" என்று கொள்ளலாமோ?

    ReplyDelete
  4. சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து

    தீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்,

    ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மேல் அளவிறந்து,

    நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே.

    என்று இருவினை அறுப்பதை நம்மாழ்வார் திருவாய்மொழியில் குறிப்பிடுகிறார்.

    ReplyDelete