Saturday, April 24, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை - பாகம் 2

 

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை - பாகம் 2 



மழை சில பெய்யாமல் கெடுக்கும். பின் அதுவே பெய்து கொடுக்கும். அப்படி கெடுப்பதும், கொடுப்பதும் எல்லாம் மழைதான் இந்த உலகில் என்கிறார். 


பாடல் 


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/2_24.html


(click the above link to continue reading)


கெடுப்பதூஉம் = கெடுபதுவும் 


கெட்டார்க்குச் = கெட்டவர்களுக்கு 


சார்வாய்மற்று = உதவியாக மேலும் 


ஆங்கே = அங்கே 


எடுப்பதூஉம் = துணை செய்வதுவும் 


எல்லாம் மழை = எல்லாம் மழை 



இதன் முதல் பாகத்தை கீழே உள்ள லிங்க் இல் பார்க்கலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/1_23.html



தொடர்ச்சி 


"ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல்."


அது என்ன மறுதலை தொழில் உவமத்தின் கண் வந்த உவமச் சொல்? 



ஒரு வேலையைச் செய்கிறோம். அதை மாற்றிச் செய்தால் அது மறுதலையாக் செய்வது. 


உதாரணமாக,


ஒரு பொருளை கீழே வைக்கிறோம். அது ஒரு வேலை. 



வைத்த பொருளை எடுத்தால், அது மறுதலை. 



கொடுப்பது, வாங்குவது. 



இங்கே, மழை பெய்யாமல் கெடுக்கும். பின் அதுவே பெய்து கொடுக்கும் அல்லது வாழ வைக்கும்.  



கெடுப்பதும்,  கொடுப்பதும் மறுதலை என்பதால் இங்கே அந்த "ஆங்கு" என்ற சொல் மறுதலை தொழிலின் கண் வந்த உவமச் சொல் என்றார். 



சற்று யோசித்துப் பார்த்தால், இந்த குறளில் ஒரு சிக்கல் தெரியும். 



கெடுப்பது போல எடுப்பது என்கிறார். 



அது எப்படி சரியாக இருக்கும். 



பெய்யாமல் இருந்து கெடுத்தது. அதே போல் எடுக்கும் (கொடுக்கும்) என்றால் பெய்யாமல் இருந்து கொடுக்குமா? அது சரி இல்லையே.



நடை முறை வழக்கைப் பார்ப்போம்.



பையன் வீட்டில் இருந்து கடைக்கு சென்று விடுகிறான்.  அங்கிருந்து திரும்பி வர வழி தெரியவில்லை. அங்கிருந்து வீட்டுக்குப் போன் பண்ணி கேட்க்கிறான். அப்பா சொல்கிறார் "எப்படி போனியோ அப்படியே வா" என்று. அது எப்படி முடியும்? போன மாதிரியே எப்படி வர முடியும்?



இன்னும் தெளிவாக சொல்வதனால், பையன் மரத்தின் மேல் ஏறி விடுகிறான். இறங்கத் தெரியவில்லை. அப்பா சொல்கிறார், "எப்படி ஏறிணாயோ, அப்படியே இறங்கு" என்கிறார்.  அது சரியா. ஏறின மாதிரி செய்தால் இன்னும் மேலே தான் போக முடியும். எப்படி கீழே வர முடியும்?



அது தான் வினை மாற்று. செய்த வேலையை மாற்றிச் செய்வது. 



புரிகிறது அல்லவா?



அடுத்ததாக 



"கெட்டார்க்குச் சார்வாய்மற்று"


கெட்டார்க்கு என்று கூறும் போது அது மனிதர்களை மட்டும் தான் குறிக்கும். மழை பெய்யாவிட்டால் விலங்கினங்களும், செடி கொடிகளும் வாடும் அல்லவா? பின் ஏன் கெட்டார்க்கு என்று மனிதர்களை மட்டும் குறிப்பிடுகிறார்? "கெட்டவகைகளுக்கு" என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?



பரிமேலழகர் கூறுகிறார் 




"கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. "



கெடுதலும் ஆக்கமும் முயற்சி இன்மை மற்றும் முயற்சியால் வருவது. எனவே அது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் "கெட்டார்க்கு" என்றார். 



ஒரு சிங்கமோ, புலியோ முயற்சி செய்து ஒரு உயரிய நிலையை அடைய முயல்வது இல்லை. 



"எல்லாம் மழை"



குறளிலே எல்லாம் மழை என்று தான் இருக்கிறது. ஆனால், பரிமேலழகரோ "எல்லாம் வல்லது மழை" என்று சொல்கிறார்.  வல்லது என்ற வார்த்தை குறளில் இல்லை. இல்லாத ஒன்றை எவ்வாறு அவர் கூறலாம் என்ற கேள்விக்கு அவர் விடை தருகிறார். 



"'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது"



என்று. 



அது என்ன "அவாய்" ?



பேசும் பொழுதோ, எழுதும் பொழுதோ ஒரு சொல் இன்னொரு சொல்லை தானே கூட்டிக் கொண்டு வரும். 



உதாரணமாக...



"குதிரை வேகமாக...." என்று விட்டு விட்டால், நமக்கு என்ன தோன்றும் "ஓடும்" என்று நாமே அதை முடிக்கிறோம் அல்லவா?



"பக்தர்  இறைவனை ....."



என்று விட்டு விட்டால் "வழிபட்டார்" என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?



பக்தர் என்ற சொல், வழிபாடு என்ற செயலை கொண்டு வருகிறது 



அப்படி ஒரு சொல் இன்னொரு சொல்லைக் கூட்டிக் கொண்டு வந்தால் அதற்கு அவாய பலன் என்று பொருள். 



எல்லாம் மழை என்று கூறினால், எல்லாம் "வல்லது" மழை என்று நாம் உணர முடியும்.  வல்லது என்பது அவாய் நிலையான் வந்தது என்று உரை எழுதுகிறார். 



இவ்வளவு நீண்ட இலக்கணம் தேவை இல்லைதான். இவை இல்லாமலே குறள் புரிந்து விடும். 



இலக்கணம் புரிய புரிய குறளின் ஆழமும், நுணுக்கமும் புரியும். 



அது மட்டும் அல்ல, நாம் பேசும் போதும், எழுதும் போது நம்மை அறியாமலேயே நம் மொழித் திறன் உயரும். 



குறள் படிக்கும் போது நிறைய அறம், கொஞ்சம் தமிழ் கலாச்சாரம் , கொஞ்சம் தமிழ் இலக்கணம் இவற்றையும் நாம் கூடவே படிக்கலாம்....



3 comments:

  1. சார் மிக அருமை ....வணக்கம்.

    ReplyDelete
  2. அருமையான இலக்கண விளக்கம். இத்துடன் படித்ததால்தான் இன்னும் ஆழமாகப் புரிகிறது. நன்றி.


    ReplyDelete
  3. அருமையான இலக்கண விளக்கம்.மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    ReplyDelete