Monday, June 7, 2021

திருக்குறள் - ஆக்கமும் கேடும்

திருக்குறள் - ஆக்கமும் கேடும் 


அற வழியில் சென்றால் வீடு பேறு, சுவர்க்கம் இதெல்லாம் கிடைக்கும் என்று முந்தைய குறளில் சொன்னார்.  


அற வழியில் போனால் மட்டும் தான் கிடைக்குமா? வேற வழியில் போனால் கிடைக்காதா? 


ஒரு ஊருக்கு போக ஒரு வழிதான் இருக்குமா? எப்படி போனால் என்ன? ஊர் போய் சேர வேண்டும். அதுதானே கணக்கு. 


அது ஒரு கேள்வி. அது ஒரு புறம் இருக்கட்டும். 


எனக்கு இந்த சொர்கம், வீடு பேறு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. இல்லாத ஒன்றிற்கு ஏன் கிடந்து இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? இருக்குற வரை சந்தோஷமா இருப்போம்.  


சாப்பாடு, வேலை, தூக்கம், டிவி, மொபைல், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று சந்தோஷமாக இருந்து விட்டுப் போவோமே...போகாத ஊருக்கு வழி தேடுவானேன். 


வீடு பேறு விரும்புபவர்கள் அற வழியில் போகட்டும். நான் என் வழியில் போகிறேன். அதில் என்ன தவறு?


இது இரண்டாவது கேள்வி. 


விதண்டாவாதம் பண்ணுகிறவர்கள் இருப்பார்கள்தானே ? அவர்களுக்கும் பதில் சொல்லத்தான் வேண்டும்.


வள்ளுவர் சொல்கிறார். 


"அறத்தினால் பெரிய பெரிய ஆக்கங்கள் வரும். அறத்தை மறந்தால்? அதைப் போல (மறத்தலைப் போல) பெரிய தீங்கு வரவழைக்கும் செயல் வேறு இல்லை" என்கிறார். 


பாடல் 

 

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_7.html


(please click the above link to continue reading)




அறத்தின் = அறத்தை விட 


உங்கு = உயர்ந்த 


ஆக்கமும்  = பெருக்கம் 


இல்லை  = வேறு இல்லை 


அதனை = அந்த அறத்தை 


மறத்தலின் = மறத்தலைப் போல 


ஊங்கில்லை  = பெரியது ஒன்றும் இல்லை 


கேடு = கேடு விழைவிக்க 


எனக்கு வீடு பேறு , சுவர்க்கம் எல்லாம் வேண்டாம். நான் பொய், களவு, இலஞ்சம், கொலை, கொள்ளை என்று அறம் அல்லாத வழியில் போய்க் கொள்கிறேன் என்று சொன்னால், அதைப் போல பெரிய தீங்கு  வேறு எதுவும் இல்லை. 


அற வழியில் சென்றால் நல்லது நடக்கும். 

அற வழியில் செல்லவில்லை என்றால் பெரிய கேடு வந்து சேரும்.


எப்படி பார்த்தாலும், அற வழியில் செல்வதே சிறந்தது என்று வள்ளுவர் கூறுகிறார். 



Sunday, June 6, 2021

திருக்குறள் - சிறப்பும் செல்வமும் ஈனும்

 திருக்குறள் - சிறப்பும் செல்வமும் ஈனும் 


அறம் அறம் என்று சொல்கிறார்களே, அதை ஏன் கடை பிடிக்க வேண்டும்? கடை பிடித்தால் என்ன நன்மை? கடை பிடிக்காவிட்டால் என்ன நட்டம் வந்து விடும்? 


இந்த கேள்விகளுக்கு விடை தருவது இந்த அதிகாரம். 


பாடல் 


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_51.html


(please click the above link to continue reading)



சிறப்புஈனும் = சிறப்பு தரும் 

செல்வமும் ஈனும் = செல்வமும் தரும் 

அறத்தினூஉங்கு = அறத்தை விட 

ஆக்கம் = ஆக்கம் 

எவனோ உயிர்க்கு = எது உயிர்களுக்கு ?


சிறப்பையும், செல்வதையும் தரும் அறத்தை விட பெரிய உறுதி உயிர்களுக்கு இல்லை. 


இப்படித்தான் உரை எழுதிக் கொண்டு சென்று இருப்போம். பரிமேலழகர் இல்லை என்றால் இவற்றின் அர்த்தம் ஒன்றும் புரிந்து இருக்காது. 


சிறப்பு என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பதில் சொல்கிறார். 


சிறப்பு என்றால் படித்து வாங்கும் பட்டம், இரசிகர்கள் தரும் அடை மொழிகள், அரசாங்கம் தரும் விருதுகள் இவையா? 


இதெல்லாம் ஒரு சிறப்பு இல்லை. 


அனைத்திலும் பெரிய சிறப்பு, வீடு பேறு அடைவதுதான்.  அதைவிட பெரிய சிறப்பு என்ன இருக்க முடியும்.  எனவே, அறம் என்பது வீடு பேற்றினைத் தரும். 


சரி, செல்வமும் ஈனும் என்றால், என்ன செல்வம்? காசு, பணம், வீடு வாசல் போன்ற செல்வங்களா? 


இல்லை. செல்வம் என்றால் துறக்கம் முதலியன என்கிறார். துறக்கம் என்றால் ஸ்வர்கம். 


சொர்கத்தைத் தரும். அதற்கும் மேலே வீடு பேற்றையும் தரும். 


அது சரி பரிமேலழகர் தன் இஷ்டத்துக்கு உரை சொல்லலாமா? சிறப்பு என்றால் வீடு பேறு, செல்வம் என்றால் ஸ்வர்கம் என்று குறளில் எங்கே இருக்கிறது என்று கேள்வி கேட்கலாம்.  இப்படி ஆளாளுக்கு ஒரு உரை சொன்னால், வள்ளுவர் என்ன நினைத்து சொன்னார் என்று எப்படித் தெரியும்?


அதற்கும் பரிமேலழகர் விடை சொல்கிறார். 


"ஆக்கம் எவனோ உயிர்க்கு"


ஆக்கம் என்றால் மேலும் மேலும் பெருகுவது. மேலும் மேலும் உயர்ந்த நிலை அடைவது. 


அப்படி என்றால் ஒரு ரூபாய் சம்பாதித்தால், அதை விட மேலாக பத்து ரூபாய் சம்பாதிக்கலாம். அப்புறம் நூறு, ஆயிரம், கோடி என்று போய் கொண்டே இருக்கும். அதற்கு மேல்? 


எனவே, இப்படியே போனால், எதற்கு மேலாக ஒன்று இல்லையோ அது வரை போகலாம் இல்லையா? அது தான் வீடு பேறு. அதற்கு மேல் ஒன்றும் இல்லை. எனவே "ஆக்கம்" என்ற குறளின் சொல்லில் இருந்து சிறப்பு என்பதற்கு வீடு பேறு என்று பொருள் கொண்டார்.  அதைவிட ஒரு படி கீழே, சுவர்க்கம் முதலியன. 


செல்வமும் என்று ஒரு 'ம்' சேர்கிறார். அப்படி என்றால், சுவர்க்கம் மட்டும் அல்ல, மற்ற செல்வங்களையும் தரும் என்பதாம். 


எனவே, அற வழியில் நடந்தால்,  இவை அனைத்தும் கிடைக்கும் என்றார். 


எனவே என்ன செய்ய வேண்டும்?




நாலாயிர திவ்ய பிரபந்தம் - மறப்பனோ இனி யான்?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - மறப்பனோ இனி யான்?


ஞானம் எப்படி வரும் ? 


நாம் நிறைய தெரிந்து வைத்து இருக்கிறோம். 


யாரிடம் இருந்து? 


தெரியாதவர்களிடம் இருந்து நாம் தெரிந்து வைத்து இருக்கிறோம். 


நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது நம்மைச் சுற்றி இருக்கும் வயதானவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று கேட்டு, அப்படியே நம்பி நம் தலையில் ஏற்றிக் கொண்டு இருக்கிறோம். அந்தச் சின்ன வயதில் பெரியவர்கள் பொய் சொல்வார்கள் என்று நமக்குத் தோன்ற வாய்ப்பில்லை. அவர்களும் பொய் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததை, அவர்கள் நம்பியதை நமக்கு உண்மை என்று சொல்லி தந்தார்கள். நாமும் அவற்றை உண்மை என்றே ஏற்றுக் கொண்டு விட்டோம். 



பின்னாளில், புது புது ஞானங்கள் வரும். ஆனால், நாம் நம்பியதை நம்மால் விட முடியாது. இத்தனை நாள் இது உண்மை என்று என்னவெல்லாமோ செய்து விட்டோம். இப்போது அது உண்மை இல்லை என்றால் கொஞ்சம் கோமாளி மாதிரி இருக்கும். எனவே, அதை விடாமல் பற்றிக் கொண்டு இருக்கிறோம். 



புது ஞானங்கள் வர விடுவதே இல்லை. ஐந்து வயதில் கற்றதுதான் ஞானம். அதற்குப் பிறகு எது புதிதாக வந்தாலும், அவற்றை தவறு என்று ஒதுக்கி விட்டு, நாம் ஐந்து வயதில் கற்றதை மட்டும் உண்மையான ஞானம் என்று பிடித்துக் கொள்கிறோம். 



பழசை மறந்தால் அல்லவா, புதிய சிந்தனைகள், ஞானங்கள் உள்ளே வரும்?



சொல்வது நம்மாழ்வார். 



"எனக்கு மறதியும் இல்லை. ஞானமும் இல்லை. ஒரு வேளை நான் மறந்து போவேனோ என்று அஞ்சி அந்த செந்தாமரைக் கண்ணன் எனக்குள்ளேயே வந்து இருந்து கொண்டான். இனிமேல் அவனை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்" என்கிறார். 


பாடல் 


மறப்பும் ஞானமும் நானொன்றும் உணர்ந்திலன்,

மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு,

மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை,

மறப்பனோ இனி யான் என் மணியையே?


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_6.html


(please click the above link to continue reading)



மறப்பும் = மறப்பதையும் 


ஞானமும்  = ஞானத்தையும் 


நானொன்றும் உணர்ந்திலன், = நான் ஒன்றும் உணர மாட்டேன் 


மறக்குமென்று = நான் மறந்து விடுவேன் என்று 


செந்தாமரைக் கண்ணொடு, = செந்தாமரைக் கண்ணன் 


மறப்பற = மறக்காமல் 


என்னுள்ளே = எனக்குள்ளே 


மன்னினான் = நிரந்தரமாக குடியேறி விட்டான் 


தன்னை = அப்படிப்பட்ட அவனை 


மறப்பனோ இனி யான் = இனி நான் மறப்பேனா? மாட்டேன் 


என் மணியையே? = என் கண் மணியை 



இங்கே மறப்பும், ஞானமும் என்று ஒன்றுக்கு ஒன்று எதிர் போல குறிப்பிடுகிறார். 


எனக்கு மறதி இல்லை. அதனால் ஞானம் இல்லை. மறப்பு உணர்ந்திலன் எனவஞானமும் உணர்ந்திலன். 


நமக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவோ வேலை. சம்பாதிக்க வேண்டும், சாப்பிட வேண்டும், பொழுது போக்கு அம்சங்கள், அரட்டை, டிவி என்று ஆயிரம் வேலை இருக்கிறது. இதில் இறைவனை நாம் மறந்து போய் விடுகிறோம். 



நமக்குத் தான் ஒரு வேலை செய்தால் மற்றது எல்லாம் மறந்து போகும். இறைவனுக்கு அப்படியா?  



இவனை இப்படியே விட்டால் நம்மை மறந்து விடுவான் என்று, அவனே வந்து நம் மனதுக்குள் நம்மை கேட்காமலேயே குடி புகுந்து விடுகிறான். 



"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" 



என்பார் மணிவாசகர். 



அவர் நினைக்கவில்லை. இறைவனே வந்து அவர் மனதில் நீங்காமல் வந்து இருந்து கொண்டான். 



அவர் நினைப்பதாக இருந்தால் என்ன சொல்லி இருப்பார் ?



"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நான் மறவாதான் தாள் வாழ்க'



என்றல்லவா சொல்லி இருப்பார்.  அவர் நினைக்கவில்லை. அவன் வந்து இருந்து கொண்டு ஒரு இமைப் பொழுதும் வெளியே போக மாட்டேன் என்கிறார். 



நம் உள்ளத்தை, நம்மை கேட்காமலேயே அவன் எடுத்துக் கொள்கிறான். 



"என் உள்ளம் கவர் கள்வன்". 


திருட்டுப் பயல், களவாணிப் பயல் என்கிறார் திருஞான சம்பந்தர். 


கேட்டால் நாம் கொடுப்போமா? ஐயோ, டிவி பாக்கணும், whatsapp பாக்கணும், அதுக்கே நேரம் இல்லை. இருக்கிற ஒரு மனதை உன்னிடம் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது என்று தரமாட்டோம். அதனால், அவனே நம் அனுமதி இல்லாமல் திருடிக் கொள்கிறான். 


பக்தி உலகம் ஒரு தனி உலகம். 


அதை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள தனி மன நிலை வேண்டும். 


பெற்றவர்கள் பாக்கியசாலிகள். 



Saturday, June 5, 2021

திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - ஒரு முன்னோட்டம் 


திருக்குறளை ஏன் அறம், பொருள், இன்பம் என்று வகுக்க வேண்டும். 


முதலில் ஏன் இன்பத்தை வைக்கக் கூடாது?


இன்பம், பொருள், அறம் என்று வைத்தால் என்ன?  இன்பம் தானே வாழ்வின் குறிக்கோள்? இன்பம் இல்லாத எதையும் ஏன் செய்ய வேண்டும்? அப்படி இருக்க அதற்குத்தானே முதல் இடம் தந்து இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு ஏன் அறத்தை முதலில் வைத்தார்?


சரி, ஏதோ வைத்து விட்டார். போகட்டும். இரண்டாவது இடத்தையாவது இன்பத்துக்கு தந்து இருக்கலாமே? ஏன் பொருளுக்கு இரண்டாவது இடம். இன்பத்தை ஏன் கடைசியில் தள்ளி விட்டார்? 


உண்பது, உறங்குவது, chat செய்வது, டிவி பார்ப்பது எல்லாம் இன்பம்தான். வேலை செய்வது, படிப்பது (நல்ல நூல்களை) என்பது எல்லாம் கடினம்தான். 

என்ன செய்யலாம்? இன்பம் தருபவற்றை மட்டும் செய்வோம். நேரம் இருந்தால் மற்றவற்றை செய்வோம் என்று இருப்போமா? அப்படி இருந்தால் வாழ்வு தடம் புரண்டு விடாதா?


இன்பம் என்பது இந்த பிறவிக்கு மட்டும் நன்மை பயப்பது. அதுவும் கூட சில நிமிடத் துளிகள்.


பொருள் என்பது இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை பயப்பது. பொருள் இருந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம், நாட்டுக்கு சில நன்மைகள் செய்யலாம். அவற்றால் புண்ணியம் வரும். அதனால் சுவர்க்கம் அல்லது நல்ல மறு பிறவி கிடைக்கும். 


அறம் என்பது இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை பயப்பதோடு அல்லாமால், வீடு பேறு அடையவும் உதவி செய்யும் என்பதால், மிகுந்த பயன் தரக் கூடிய ஒன்றை முதலிலும், அதை விட குறைந்த நன்மை தருவதை இரண்டாவதும், அதையும் விட குறைந்த நன்மை தருவதை மூன்றாவதும் வைத்தார். 


நான் சொல்லவில்லை...பரிமேலழகர் கூறுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_5.html


(Please click the above link to continue reading)


"அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்"


அறம் என்பது இம்மை, மறுமை, வீடு என்ற மூன்றையும் தருவதால், அந்த அறம் மற்ற இரண்டையும் விட உயர்ந்தது என்பதால் அதை முதலில் கூறினார் என்றார். 


நம் முன் பல காரியங்கள் இருந்தால், முதலில் எதைச் செய்வோம்? 


எளிதான காரியத்தை முதலில் செய்வோமா? அல்லது கடினமான வேலையை முதலில் செய்வோமா? 


பெரும்பாலானோர் முதலில் எளிய காரியத்தை செய்யத் தலைப்படுவார்கள்.


முதலில் whatsaap, அப்புறம் கொஞ்சம் மெயில், அப்புறம் facebook, அப்புறம் youtube, அப்புறம் sms, அப்புறம் netflix, என்று இதெல்லாம் முடித்த பின், நேரம் இருப்பின் நல்ல காரியங்கள் செய்ய நேரம் ஒதுக்குவார்கள். 


முதலில் நல்ல காரியங்களை, பெரிய காரியங்களை, பயன் தரும் காரியங்களை செய்ய வேண்டும். பின், மற்ற காரியங்கள். 


முதலில் அறம், அப்புறம் பொருள் பின்தான் இன்பம். முதலில் இன்பத்தின் பக்கம் போனால், அப்புறம் அறத்தின் பக்கம் வர நேரமே இருக்காது. 


சரி, அறம் என்றால் என்ன? எங்காவது எழுதி வைத்து இருக்கிறதா?  எப்படி கண்டு பிடிப்பது? எல்லா காலத்துக்கும் ஒரே அறம் இருக்குமா? 


அதற்கும் பரிமேலழகர் உரை கூறுகிறார் 


"அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள்"


அஃதாவது என்றால், அறமாவது 


அம்முனிவரான் - எம்முனிவரான்? முற்றும் துறந்த முனிவரான், முந்தைய அதிகாரத்தில் கூறிய நீத்தார். அவர்கள் கூறியது தான் அறம். அறம் பற்றிய சந்தேகம் இருந்தால், அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும். 


இன்றைய உலகின் சிக்கல் என்ன என்றால், முதலில் முற்றும் துறந்தவர் என்று யாரும் இல்லை. இரண்டாவது சிக்கல், நாம் நம்மை விட கீழே உள்ளவர்கள் சொல்வதை, செய்வதை அறம் என்று கொண்டு அவற்றை செய்யத் தலைப்படுகிறோம். 


நம்மை விட அறிவில், ஒழுக்கத்தில் குறைந்தவர்கள் செய்வது பலரை வசீகரம் செய்தால், அதுவே புது ஒழுக்கமாகி விடுகிறது.  அதுவே அறமாகி விடுகிறது. 


உயர்ந்தோர் சொல்வதே அறம்.  


அந்த அறத்தின் வலிமை பற்றிக் கூறுவது அடுத்த அதிகாரமான "அறன் வலியுறுத்தல்"


Friday, June 4, 2021

திருக்குறள் - அந்தணர் என்போர்

 திருக்குறள் - அந்தணர் என்போர்


தமிழில் சொற்களை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கிறார்கள்


பெயர்ச் சொல்

வினைச் சொல் 


இந்த பெயர்ச் சொல்லை மேலும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்கள். 

இடுகுறிப் பெயர் 

காரணப் பெயர் என்று 


காரணப் பெயர் என்றால் ஏதோ ஒரு காரணம் பற்றி வந்த பெயர். 


நாற்காலி என்பது காரணப் பெயர். நான்கு கால்கள் இருப்பதால் அது காரணப் பெயர். 


கிளி என்பது இடுகுறிப் பெயர். கிளிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? தெரியாது.  ஏதோ ஒரு பேர் வேண்டும். கிளி என்று வைத்து இருக்கிறார்கள். 


உழவன் என்பது காரணப் பெயர் - உழவு வேலை செய்வதால். 


கணக்கப் பிள்ளை என்பது காரணப் பெயர் - கணக்கு வழக்கு வேலை செய்வதால்?


அந்தணர் என்பது என்ன பெயர்? இடுகுறிப் பெயரா? காரணப் பெயாரா? 


பாடல் 


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான் (3௦)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_4.html


(Please click the above link to continue reading)


அந்தணர் என்போர்  = அந்தணர் என்று அழைக்கப் படுவோர் 

அறவோர் = அற வழியில் நிற்பவர்கள் 

மற் றெவ்வுயிர்க்கும் = வேறு எந்த உயிர்க்கும் 


செந்தண்மை =  தண்மை என்றால் குளிர்ச்சி, இதம். செந்தண்மை என்றால் சிறப்பான குளிர்ச்சி, இதம், தண்ணளி 

பூண்டொழுக லான் =  பூண்டு ஒழுகலான் = மேற்கொண்டு அதன் படி வாழ்வதால் 


உரை எழுதிய பரிமேலழகர் கூறுகிறார் அந்தணர் என்பது ஏதுப் பெயர் என்று. 


ஏதுப் பெயர் என்றால் காரணப் பெயர். 


யாரெல்லாம் அறவழியில் நின்று, மற்ற உயிர்களுக்கு இதம் செய்கிறார்களோ அவர்கள் எல்லாம் அந்தணர். 


அப்படிச் செய்யாதவர் ?


"அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து"


என்கிறார் பரிமேலழகர். 


அருள் இல்லாதவர்களை அந்தணர் என்று கூற முடியாது என்கிறார். 


"பூண்டு ஒழுகலான்" 


மேற்கொண்டு ஒழுகலான். மேற்கொண்டால் மட்டும் போதாது, அதன் படி எப்போதும், இடை விடாமல் வாழ வேண்டும். 


ஞாயிற்றுக் கிழமை மட்டும் மாமிசம் சாப்பிடுவேன். மத்த நாள் எல்லாம் சைவம் என்பது மாதிரி அல்ல. 


உயிர்கள் மேல் எப்போதும் அருளுடன் இருப்பவர் அந்தணர். இல்லாதவர் , அந்தணர் அல்ல. 


அந்தணர் என்போர் அந்தணருக்கு பிறந்தவர் என்று கூறவில்லை. 


இந்தக் குறளோடு இரண்டாவது அதிகாரம் முடிகிறது. 


ஆயாசமாக இருக்கிறதோ? ரொம்ப நீண்டு கொண்டே போகிறதோ? 


Thursday, June 3, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - குணமென்னும் குன்றேறி நின்றார்

 திருக்குறள் - நீத்தார் பெருமை - குணமென்னும் குன்றேறி நின்றார்


பெரியவங்க சாபத்தை வாங்கக் கூடாது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


ஏன்? அவர்கள் சாபம் நம்மை என்ன செய்து விடும் ? அப்படியே ஒரு கெடுதல் வரும் என்றாலும், நம்மால் அந்த கெடுதலில் இருந்து காத்துக் கொள்ள முடியாதா என்றால், முடியாது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது (29)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_3.html


(pl click the above link to continue reading)


குணமென்னும் = நல்ல குணங்கள் என்ற 

குன்றேறி நின்றார் = குன்றின் மேல் ஏறி நின்றார் 

வெகுளி = அவர்களது கோபத்தை 

கணமேயும் = ஒரு நொடியேனும் 

காத்தல் அரிது  = காத்துக் கொள்ள முடியாது (29)


இது கொஞ்சம் நெளிவு சுளிவு உள்ள குறள். 


குணம் என்ற குன்று என்றால் என்ன?  நல்ல குணங்களை குன்றுக்கு உவமையாக சொல்கிறார். ஏன் என்றால், "சலியாமை கருதியும், பெருமை கருதியும்" என்கிறார் பரிமேலழகர். 


நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கும். ஆனால், ஏதாவது ஒரு சிக்கல் வந்தால், அந்த நல்ல குணத்தை விட்டு விடுவோம். 


இலஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்ற நல்ல குணம் இருக்கும். பிள்ளைக்கு நல்ல கல்லூரியில் கொஞ்சம் பணம் கொடுத்தால் இடம் கிடைக்கும் என்றால், கொடுக்காமல் இருப்போமா? 


"இங்க கட்டினா நூறு ரூபாய்...நீதி மன்றத்துக்குப் போனால் ஐநூறு ரூபாய்" என்றால் என்ன செய்வோம்?


முற்றும் துறந்தவர்கள் நல்ல குணங்களில் இருந்து ஒரு போதும் விலக மாட்டார்கள். மலை போல அசையாமால் இருப்பார்கள் என்று சொல்ல அதை உதாரணமாகச் சொன்னார். "சலியாமை"


இன்னொரு காரணம், "பெருமை". மலை போல் உயர்ந்து நிற்பது. 


சரி,


"கணமேயும் காத்தல் அரிது" என்றால் என்ன? 


எல்லா மனிதர்களுக்குள்ளும் சத்வம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்கள் இருக்கும்.  


எப்போதாவது தாமச குணம் மேலிட்டால், முனிவர்களுக்கும் கோபம் வரலாம். கோபமும், காமமும் உயிரின் இயற்கைக் குணங்கள். 


அப்படி அவர்கள் கோபப் பட்டால், யார் மேல் கோபம் கொள்கிறார்களோ, அவர்களால் அந்த கோபத்தின் உக்ரத்தை தாங்கிக் கொள்ள முடியாது என்கிறார். 


"அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. "


என்று முந்தைய குறளுக்கு உரை செய்தார் அல்லவா? 


முற்றும் துறந்த அந்த முனிவர்கள், வெகுண்டு கூறினால் அந்த கூற்றின் பலனை அது தராமல் விடாது என்றதால், யார் மேல் கோபம் கொண்டார்களோ, அவர்கள் அந்த கோபத்தின் உக்ரத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியாது என்று அர்த்தம். 


அதுக்குத்தான் சொல்வது, நல்லவர்கள் வாயில் விழக் கூடாது என்று. 





Wednesday, June 2, 2021

திருக்குறள் - மறை மொழி காட்டி விடும் (28)

திருக்குறள் - மறை மொழி காட்டி விடும் (28)


நீத்தார், அல்லது முற்றும் துறந்தவர் என்று சொல்கிறோமே, அவர்களின் பெருமை பற்றி கூறிக் கொண்டு இருக்கிறார் வள்ளுவர். அவர்களுடைய பெருமை என்ன என்றால், அவர்கள் சொல்லும் சொல்லின் பலன் தான் அவர்களின் பெருமை என்று. 


என்ன அது சொல், பலன், பெருமை?


நான் இலட்டு என்று சொன்னால் என்ன நிகழும்? நீங்கள் இலட்டை பற்றி நினைப்பீர்கள். திருப்பதி இலட்டு அல்லது வேறு ஏதாவது இடத்தில் உள்ள இலட்டு அல்லது மனைவியோ, அம்மாவோ செய்த இலட்டு ஞாபகம் வரலாம். அவ்வளவு தான் என் வார்த்தையின் வலு. 


மிஞ்சி மிஞ்சிப் போனால் சொன்ன சொல்லை ஞாபகக் படுத்தும். 


ஆனால், நீத்தார் சொன்னால், அந்த பொருளே வந்து விடும். இலட்டு என்று அவர்கள் சொன்னால், இலட்டு நேரில் வந்து விடும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/28.html


( Please click the above link to continue reading)



நிறைமொழி  = நிறைந்த மொழியினை உடைய 


மாந்தர் = மாந்தர் என்று இங்கு குறிப்பிடுவது துறந்தாரை 


பெருமை = அவர்களுடை பெருமை 


நிலத்து = இந்த உலகில் 


மறைமொழி = அவர்கள் சொல்லும் மந்திரச் சொல் 


காட்டி விடும் = எடுத்து உரைக்கும் 



இது ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாத மாதிரியும் இருக்கிறது. 


அதற்குதான் பரிமேலழகர் வேண்டும் என்பது.  அவர் இல்லாமல் குறள் புரிவது கடினம். 


நிறை  மொழி என்றால் என்ன என்று பரிமேலழகர் கூறுகிறார் 


" 'நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி" 


அருளிக் கூறினும் = அன்போடு கூறினும், 


வெகுண்டு கூறினும் = கோபம் கொண்டு கூறினாலும் 


அவ்வப் பயன்களைப் = அந்தந்த பயன்களை 


பயந்தே விடும் மொழி = கொடுத்தே விடும் மொழி 


அவர்கள் "நல்லா இரு" என்று ஆசீர்வாதம் செய்தாலும், "நாசமா போ" என்று சபித்தாலும் அப்படியே நடக்கும் என்கிறார். 



புராண கதைகளில் நாம் கேட்டு இருக்கிறோம். "நீ கல்லாகப் போ" என்று சபித்தால் அந்த சாபம் பெற்ற நபர் கல்லாகப் போய் விடுவார் என்று. 



அந்த நம்பிக்கையின் மிச்சம் தான் இன்றும் சாமியார்களை நோக்கி கூட்டம் ஓடுகிறது. எல்லா மதத்திலும் இந்த நம்பிக்கை இருக்கிறது.  குருமார்கள் ஆசீர்வாதம் செய்தால் நல்லது நடக்கும் என்று மக்கள் இன்றும் நம்புகிறார்கள். 


என்ன ஒரு சிக்கல் என்றால் என்றால், இன்றைய குருமார்கள், முற்றும் துறந்தவருக்கு நேர் எதிர் முனையில் இருக்கிறார்கள். எல்லாம் வைத்து இருக்கிறார்கள்.  பெரிய மடம், சொத்து, கணக்கு, ஆள், அம்பு, சேனை என்று துறவுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


முற்றும் துறந்தவர்கள் வாயில் இருந்து வரும் சொல் அப்படியே பலிக்கும் என்பது அவர்களின் சிறப்பு.