Thursday, July 21, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி

 

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html

)


இராமனுக்கு முடி சூட்டிவதாய் முடிவாகி விட்டது.  முடிவு செய்த நேரம் பின்னிரவு. 


தயரதன் எங்கே போயிருக்க வேண்டும்? இராமனின் அன்னை கோசலையிடம் போய் அதைச் சொல்லி இருக்க வேண்டும். 


மாறாக கைகேயின் அரண்மனைக்கு வருகிறான். 


இராமனுக்கு முடி சூட்டுவதில் தயரதனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதை தன் அன்புக்குரிய மனைவியிடம் பகிர்ந்து கொள்ள ஆவலோடு வருகிறான். 


அவ்வளவு அன்பு, ஆசை அவள் மேல்.  நாளைக்கு காலையில சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கவில்லை. 


அங்கே கம்பனின் கவிதை கொஞ்சுகிறது. 


பாடல் 


நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை,

யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்,

‘வாழிய’ என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் -

ஆழி நெடுங் கை மடங்கள் ஆளி அன்னான்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


(please click the above link to continue reading) 




நாழிகை = நேரம் 


கங்குலின் = இரவின் 


நள் அடைந்த பின்றை = நடு (இரவை) அடைந்த பின் 


யாழ் இசை = யாழின் இசையை 


அஞ்சிய = வெல்லும் 


அம் சொல் = அழகிய சொல்லை உடைய 


ஏழை = பெண்ணாகிய  (கைகேயின்) 


கோயில் = மாளிகைக்கு 


‘வாழிய’ என்று = வாழ்க என்று 


அயில் மன்னர் = வேல் ஏந்திய மன்னர்கள் 


துன்ன, வந்தான் - = சூழ வந்தான் 


ஆழி = சக்கரம் ஏந்திய  (அரச சக்கரம்) 


நெடுங் கை = நீண்ட கைகளை கொண்ட 


மடங்கள் ஆளி அன்னான். = சிங்க ஏறு போன்ற (தயரதன்) 



இந்த கங்குல் என்ற சொல் முன்பு எப்போதோ பிரபந்தத்தில் படித்த ஞாபகம் 


கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே


(for meaning click here: http://interestingtamilpoems.blogspot.com/2012/04/blog-post_9408.html)





தயரதன், கைகேயின் அரண்மனைக்கு வருகிறான். 


கைகேயின் அரண்மனையில் சில யாழ் வாத்தியங்கள் இருந்தனவாம். அவை, ஒலி எழ்ப்பப் பயப்படுமாம். காரணம், கைகேயின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்குமாம். அவள் குரலுக்கு முன்னால் நாம் எம்மாத்திரம் என்று யாழ் வாயை மூடிக் கொண்டு இருக்குமாம்.  



வந்த பின் என்ன நடந்தது ?






Wednesday, July 20, 2022

திருக்குறள் - பொறையுடைமை - அறன்அல்ல செய்யாமை நன்று

       

திருக்குறள் - பொறையுடைமை -  அறன்அல்ல செய்யாமை நன்று


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 






)


ஆயிரம்தான் சொன்னாலும், நமக்கு தீமை செய்தவர்களுக்கு, நம்மை நோகப் பண்ணியவர்கள் செய்த செயலை பொறுத்துக் கொண்டு சும்மா இருப்பது என்பது முடியாத காரியம். வள்ளுவர் சொல்லுவார். அதெல்லாம் நடைமுறை சாத்தியம் அல்ல என்றுதான் நமக்குத் தோன்றும். 


சரி. ஒருவன் நமக்குத் தீமை செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக்குத் தீமை செய்கிறோம். 



கணக்கு தீர்ந்து விட்டதா?  அது தொடராதா?  அப்படி தீர்ந்து விடும் என்றால் தீமைக்கு தீமை பதிலுக்குச் செய்யலாம். 


இல்லை. அவன் செய்த தீமைக்கு அவனுக்கு அதன் பலன் கிடைக்கும். அப்படி என்றால் பதிலுக்கு நாம் அறம் அல்லதாவற்றைச் செய்தால், நமக்கு? 


அந்த அறம் அல்லாத செயலுக்கு நமக்கும் பலன் கிடைக்கும் தானே?


ஒருவன் நம்மை அடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பதிலுக்கு நாமும் அடிக்கிறோம். 


இரண்டு பேருக்கும் அறம் அல்லாத தீவினை செய்ததற்கு பலன் கிடைக்கும்தானே?




பாடல்



திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று


பொருள் 




(pl click the above link to continue reading)


திறன்அல்ல  = முறையற்ற செயல்களை 


தன் = தனக்கு 


பிறர் செய்யினும் = பிறர் செய்தாலும் 


நோநொந்து = அதற்காக கவலைப் பட்டு 


அறன்அல்ல = தான் அறம் அல்லாதவற்றை 


செய்யாமை நன்று = செய்யாமல் இருப்பது நல்லது.




இதில் எங்கே வருகிறது, அவன் செய்த பழிக்கு அவனுக்கும் பலன் கிடைக்கும் என்றும், நாம் செய்த பழிக்கு நமக்கு பலன் கிடைக்கும் என்று ? 


பிறர் செய்த துன்பத்தால் வருந்தி அவர்களுக்கு பதில் துன்பம் செய்யாமல் இருப்பது நல்லது என்று தானே சொல்லி இருக்கிறார் என்று தோன்றும். 



பரிமேலழகர் இல்லை என்றால் இவை எல்லாம் நமக்குப் புரியாது. 


"நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று " என்பதற்கு   'அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று'

என்று உரை செய்கிறார். 


அவர் உரைக்கு கொஞ்சம் எளிமையான உரை காண்போம். 


ஒருவன் நமக்கு துன்பம் செய்கிறான் என்றால் "பாவி, நீ எனக்கு செய்த இந்த துன்பத்தினால் நீ என்னென்ன அனுபவிக்கப் போகிறாயோ..." என்று நாம் மனம் நொந்து, அந்த மாதிரி நாமும் செய்தால், நமக்கும் அந்த வினைப் பயன் வந்து சேரும் என்று நினைத்து பதிலுக்கு பாவ காரியம் செய்யாமல் இருப்பது நன்றி. 


ஒருவன் நம் பொருளை திருடிவிட்டான். அது தவறுதான். பதிலுக்கு அவவன் பொருளை நாம் களவாடுவது சரியா?  ஏன், செய்தால் என்ன ? சட்டம் தண்டிக்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அது தவறு என்று நம் மனதிற்கு தோன்றுகிறது அல்லவா? 


இராமன் மனைவியை இராவணன் தூக்கிக் கொண்டு வந்து விட்டான். பதிலும் இராமன் இராவணன் மனைவியை தூக்கிக் கொண்டு வந்தால் சரியாக இருக்குமா? 



மற்றவன் என்னதான் செய்தாலும், நாம் அறம் அற்ற செயல்களை செய்யக் கூடாது. 



செய்தால் என்ன ஆகும், பிறவி தொடரும். அந்த பாவத்தைப் போக்க இன்னொரு பிறவி வரும்.  வாழ்வின் நோக்கம் வீடு பேறு அடைவது. திட்டியவனை எல்லாம் பதிலுக்கு திட்டிக் கொண்டு இருப்பது அல்ல. 


வீடு பேறு என்ற நோக்கம் இருக்குமானால், பிறவிக்கு வழி செய்யும்  பாவதை விட்டு விட வேண்டும். 


இல்லை, என்ன ஆனாலும் சரி, எத்தனை பிறவி வந்தாலும் சரி, மற்றவர்களுடன் சரி மல்லுக்கு நிற்பேன், அது தான் எனக்கு திருப்தி என்றால், என்ன செய்ய முடியும். நல்லது, அதுவும் நடக்கட்டும் என்றுதான் சொல்லத் தோன்றும். 


Monday, July 18, 2022

திருக்குறள் - பொறையுடைமை - ஒரு நாள் இன்பம்

      

திருக்குறள் - பொறையுடைமை -  ஒரு நாள் இன்பம் 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




)


இந்த அதிகாரத்தை இது வரை படித்தவர்களுக்கு ஒன்று மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். 


இப்படி எல்லாம் பொறுமையாக இருக்க முடியுமா? இருந்துதான் என்ன பயன்? பொறுமையாக இருப்பவரை இந்த உலகம் ஏமாளி, கோமாளி, பலவீனமானவன் என்றுதானே நினைக்கும். பதிலுக்குப் பதில் கொடுத்தால்தானே அடங்கி இருப்பார்கள் என்று தோன்றும். 

ஒருவன் நமக்கு தீமை செய்தால் அவனுக்கு உடனே நாம் பதிலுக்கு தீமை செய்தால்தானே நமக்கு ஒரு நிம்மதி, ஒரு திருப்தி, ஒரு இன்பம். 

"அவன் என்னை ஒன்று சொன்னான். நான் பதிலுக்கு நாலு விடு விட்டேன். அப்படியே வாய் அடைச்சு போய்ட்டான்...யாரு கிட்ட" என்று ஒரு பெருமிதத்தோடு சொல்லிக் கொள்வோம். 

பதிலுக்கு செய்வதில், சொல்வதில் இன்பம் இல்லையா?  என்று கேட்டால் கட்டாயம் இன்பம் இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 

உன்னை ஒருவன் அடித்தால், பதிலுக்கு அவனை திருப்பி அடித்தால் ஒரு சந்தோஷம், இன்பம் இருக்கத்தான் செய்கிறது என்று ஒத்துக் கொள்கிறார் வள்ளுவர். 

ஆனால், 

உனக்கு ஒரு நாளைக்கு இன்பம் வேண்டுமா அல்லது நீண்ட நாட்களுக்கு இன்பம் வேண்டுமா என்று கேட்கிறார் வள்ளுவர்.



பாடல்



ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்



பொருள் 





(pl click the above link to continue reading)



ஒறுத்தார்க்கு = தனக்கு துன்பம் செய்தவற்குகு பதில் துன்பம் செய்தவருக்கு 


ஒருநாளை இன்பம் = அந்த ஒரு நாள் மட்டுமே இன்பம் 


பொறுத்தார்க்குப் = மாறாக, தனக்கு துன்பம் செய்தவரை பொறுத்துக் கொண்டவருக்கு 


பொன்றும் =  அழியும் அளவும் 


துணையும் = துணை நிற்கும் 


புகழ் = அவனது புகழ்



பதிலுக்குப் பதில் செய்துவிட்டால் அந்த ஒரு நாளைக்கு இன்பம் இருக்கும். ஆனால், அது பெரிதாக ஒன்றும் செய்து விடாது. நமக்கும் மறந்து போகும். மற்றவர்களும் மறந்து போவார்கள். 


மாறாக பொறுமையாக இருந்தால், நமக்குத் தீமை செய்தவன் கூட வாழ் நாள் எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பான். உலகம் நம்மைப் போற்றும். 



இங்கே "பொன்றும் துணையும் புகழ்" என்றார். 


அழியும் வரை துணையாக புகழ் இருக்கும் என்கிறார். எது அழியும் வரை என்று சொல்லவில்லை. 



அதற்குத்தான் பரிமேலழகர் வேண்டும். 


இந்தப் புகழ் எங்கு தங்கி இருக்கும்? இந்த உலகில்தானே புகழ் தங்க வேண்டும்? எனவே, இந்த உலகம் உள்ள அளவும் அவன் புகழ் நிற்கும் என்று உரை எழுதினர். 


"ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது"


பொறுமையாக இருந்தால் புகழ் இருக்குமா இருக்காதா என்று நமக்குத் தெரியாது. 


ஆனால் 


பொறுமை இல்லாமல் பதிலுக்குப் பதில் நிறைய செய்திருப்போம். பேசி இருப்போம், செய்திருப்போம். அவற்றால் என்ன பயன் என்று சிந்தித்துப் பார்ப்போம். ஒரு வேளை அப்படிச் செய்யாமல், பேசாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்போம். 


Sunday, July 17, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு 


கணவன் மனைவி உறவு என்பது சிக்கலானது. முன் பின் தெரியாத இருவர், எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்கள். முன் பின் தெரியாத ஒருவரிடம் வாழ்வின் மீதி நாட்களை ஒப்புக் கொடுக்கிறார்கள். எனக்கு நீ, உனக்கு நான் என்று வாழத் தலைப் படுகிறார்கள். 


ஆயிரம் சிக்கல்கள் வரும். பணம் இருந்தாலும் சிக்கல். இல்லாவிட்டாலும் சிக்கல். 


எப்படி இதைச்  சமாளிப்பது? 


இராமாயணத்தில் எவ்வளவோ இருக்கிறது தெரிந்து கொள்ள. 


கணவன் மனைவி உறவு பற்றி ஏதாவது இருக்கிறதா?  


இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டார்கள், கானகம் போனார்கள். இராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். பின் இணைந்தார்கள். சுபம் என்று முடிந்து விடுகிறது. 


இடையில் ஆரண்ய காண்டத்தில் இயற்கையை இருவரும் இரசிக்கிறார்கள். பின் இருவரும் பிரிவில் வாடுகிறார்கள். 


தாரை, மண்டோதரி, ஊர்மிளை (இலக்குவன் மனைவி) எல்லாம் வருகிறார்கள். ஒரு ஆழ்ந்த உறவு பற்றிய செய்தி இல்லை. 


ஆச்சரியமாக, தயரதன் வாழ்க்கை பல விடயங்களை தருகிறது இந்த உறவு பற்றி. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


(please click the above link to continue reading)



மனைவியோ, கணவனோ, திருமணம் என்று ஆனபின் ஒருவரை ஒருவர் போற்றத் தான் வேண்டும். 


அந்த உறவை கொண்டாட வேண்டும். பொன் போல பொதிந்து காக்க வேண்டும். 


ஒருவருக்கு பிடிக்காததை மற்றவர் செய்யலாம், பேசலாம். சகிக்கத்தான் வேண்டும். 


பல திருமணங்களில் பிள்ளைகளால் சிக்கல் வந்து சேரும். 


பிள்ளையை எப்படி வளர்ப்பது என்பதில் கணவன் மனைவி சண்டையிட்டுக் கொள்வார்கள். யார் சொல்வது சரி, யார் பிழை என்று. யார் செல்லம் கொடுத்து கெடுப்பது, யார் ரொம்ப கண்டிப்பு காட்டுவது, என்பதில் எல்லாம் கருத்து வேறுபாடு வரும். 


நான் பெரிய ஆள். நான் நிறைய படித்து இருக்கிறேன். எவ்வளவு சம்பாதிக்கிறேன். நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது. என்ற ஆணவம் தலை தூக்கத்தான் செய்யும். 


உன் வீட்டார், என் வீட்டார் என்ற பாகுபாடு வரும். 


தயரதன் மூலம் கம்பன் இத்தனை சிக்கலுக்கும் விடை தருகிறான். 


ஆச்சரியமான விடயங்கள். 


என்னைக் கேட்டால், கம்ப இராமாயணத்தில் மற்ற எல்லாவற்றையும் கூட விட்டு விடலாம். தயரதன் மூலம் கம்பன் காட்டும் இல்லறத்தை படித்தால் கூட ஏ கணவன் மனைவி உறவு அவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. 


சசிந்திப்போம். 





Friday, July 15, 2022

திருக்குறள் - பொறையுடைமை - பொன் போல பொதிந்து

     

திருக்குறள் - பொறையுடைமை - பொன் போல பொதிந்து 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :




)



ஒருவன் நமக்கு தீங்கு செய்கிறான். அவனுக்கு நாம் பதிலுக்கு தீமை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக ஒருவன் நம்மை ஒரு தகாத சொல் சொல்லி திட்டிவிடுகிறான். நாமும் கோபம் கொண்டு இன்னொரு தகாத வார்த்தை சொல்லி திட்டி விடுகிறோம்.


இப்போது என்ன ஆயிற்று? 


அவன் தகாத வார்த்தை சொன்னான். நாமும் தகாத வார்த்தை சொன்னோம். ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ? அவன் முதலில் சொன்னான், நாம் இரண்டாவது சொன்னோம் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் என்ன?

அவன் முதலில் சேற்றை வாரி நம் மீது எறிந்தான். பதிலுக்கு நாம் அவன் மீது சேற்றை வாரி எறிந்தோம். இப்போது இருவர் முகத்திலும் சேறு. வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? 

மாறாக,  அவன் ஒரு கடும் சொல் சொல்கிறான். நாம் பொறுமையாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.  என்ன ஆகும்?



உலகம் இரண்டு விதமாக பேசும்,


சிலர் நம்மை "சரியான ஏமாளி, கையாலாகதவன், பலவீனமானவன்" என்று எள்ளி நகையாடுவார்கள் 


வேறு சிலர், "அந்த மடையன் எவ்வளவு சொன்னாலும், இவனைப் பார் எப்படி பொறுமையாக இருக்கிறான். இவன் மனிதனா? அவன் மனிதனா"" என்று நம்மை பற்றி பெருமையாக நினைப்பார்கள். 


யார் நம்மை பெருமையாக நினைப்பார்கள் என்றால், படித்த, அறிவுடைய,சான்றோர் அப்படி நினைப்பார்கள். 


யார் நம்மை இகழ்வாக நினைப்பார்கள் என்றால் அறிவு மற்றும் அனுபவ முதிர்ச்சி இல்லாதவர்கள். 


யாருடைய எண்ணங்களுக்கு நாம் மதிப்பு தரப் போகிறோம்?  படித்தவர்களுக்கா, முட்டாள்களுக்கா?


வள்ளுவர் சொல்கிறார் 


"தீமை செய்தவனுக்கு பதிலுக்கு தீமை செய்தவனை பெரியவர்கள் இருவரையும் ஒரே மாதிரித்தான் கொள்வார்கள். மாறாக, பொறுமையாக இருப்பவரை பொன்னைப் போல மனதில் போற்றி பாதுகாப்பாக வைப்பார்கள்" 

என்று. 



பாடல் 


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து



பொருள் 





(pl click the above link to continue reading)


ஒறுத்தாரை= தனக்கு தீங்கு செய்தவருக்கு பதிலுக்கு தீங்கு செய்பவர்களை 


ஒன்றாக  = ஒரு பொருட்டாக, சிறப்பாக 


வையாரே = வைத்து எண்ண மாட்டார்கள் (ஆன்றோர்) 


வைப்பர் = வைப்பார்கள் 


பொறுத்தாரைப் = பொறுத்துக் கொண்டவரை 


பொன்போல் பொதிந்து = பொன்னைப் போல பத்திரமாக மனதில் பொதிந்து 




இங்கே ஒன்றாக என்பதற்கு முதல் இடத்தில் என்று பொருள் கொள்ள வேண்டும். 


"ஒருவனைத் தருதி" என்று விஸ்வாமித்திரன் தசரதனிடம் கேட்டான். ஒருவன் = உயர்ந்தவன், இராமன். 


"ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன்" என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.



பொன் போல் பொதிந்து = மற்றதெல்லாம் வீட்டில் கண்டபடி கிடந்தாலும், பொன் நகையை பத்திரமாக எடுத்து பெட்டகத்தில் வைப்போம் அல்லவா?



மற்றவர்கள் எல்லாம் எப்படியோ இருந்தாலும், பொறுமை காப்பவர்களை மனதுக்குள் உயர்வாக நினைப்பார்கள்.


Thursday, July 14, 2022

திருவாசகம் - பரிணாம வளர்ச்சி

 திருவாசகம் - பரிணாம வளர்ச்சி 


ஒரு காலத்தில் தமிழ் புலவர்களை திருவாசகத்துக்கு உரை எழுதித் தாருங்கள் என்று சொன்னால் "கடலில் விழுந்து சாகச் சொல்கிறீர்களா....சந்தோஷமாக சாகிறேன்...திருவாசகத்துக்கு உரை எழுத என்னால் முடியாது " என்று சொல்லி ஓடி விடுவார்களாம். 


திருவாசகம் என்பது அப்படிப்பட்ட ஒரு நூல். 


உணர்வு என்றால் உணர்ச்சி கொட்டிக் கிடக்கும் நூல். 


ஞானம் என்றால் ஞானத்தின் உச்சியை தொடும் நூல். 


இது ஏதோ சொல்லுக்கு உரை சொல்லும் கதை அல்ல. 


படிக்கப் படிக்கப் புதுப் புது அர்த்தங்கள் வந்து கொண்டே இருக்கும் ஒரு நூல். இதுக்கு இதுதான் அர்த்தம் என்று சொல்லி விட முடியாது. 


இன்று இப்படித் தோன்றுகிறது. நாளை என்ன தோன்றுமோ? யாருக்குத் தெரியும். 


மணிவாசகரிடமே கேட்டார்கள்...."நீங்கள் எழுதிய இந்த நூலுக்கு என்ன பொருள்" என்று. சிவன் திருவடியைக் காட்டி "இது தான் பொருள்" என்று சொல்லி அதில் ஐக்கியமானார் என்று சொல்லுவார்கள். 


சிவ பெருமான், தானே தன் கையால் எழுதிய நூல் என்பார்கள். ஊழிக் காலத்தில் இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் அழிந்த பின்,தனித்து நிற்கும் இறைவன் தான் வாசிக்க ஒரு நூல் வேண்டும் என்று திருவாசகத்தை தன் கைப்பட எழுதினான் என்று சொல்லுவார்கள். 



பாடல் 


புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,

பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,

கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,

வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!

மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;



https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_63.html


(Please click the above link to continue reading)


நாம் பலமுறை கேட்டது தான். வாசித்தது தான். 


நாம் புல், பூண்டு, புழு இவற்றில் இருந்து வந்தோமா?


சரி, ஏதோ ஒரு பரிணாம வளர்ச்சியில் வந்தோம் என்று வைத்துக் கொள்வோம். இன்றைய அறிவியலும், டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றி கூறும் போது நாம் ஒரு செல் நுண்ணுயிரிகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதர்களானோம் என்கிறது. 


ஆனால், கல்லாய் என்கிறார் மணிவாசகர். கல்லில் இருந்து நாம் வந்தோமா?


உயிரற்ற கல்லில் இருந்து எப்படி உயிர் வந்திருக்கும்? 


அறிவியலில் விடை இல்லை. 


ஒரு எளிய உயிரில் இருந்து ஒரு சிக்கலான உயிர் வருவதை அறிவியல் ஏற்றுக் கொண்டுள்ளது. 


உயிரற்ற ஒன்றில் இருந்து உயிர் வருமா?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இந்த பிரபஞ்சம் தோன்றி, நட்சத்திரங்கள் தோன்றி, ,பின் கோள்கள் தோன்றின. 


நம் பூமியும் அப்படி பிறந்த ஒன்று தான். முதலில் வெறும் தூசியாக இருந்து, ,பின் அவை ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்பட்டு, ஒன்றாகி ஒரு பெரிய பாறையாகி, இந்த பூமி உண்டானது. அந்தப் பாறையின் மேல் அமில மழை, வெயில் காற்று என்று மாறி மாறி தாக்கி அது மணலானது. அதில் இருந்து புல் முளைத்தது என்று நாம் அறிகிறோம். 


முதலில் பாறைதான் இருந்தது. அது வெடித்து, துகளாகி, மணலாகி, அதில் இருந்து தாவரங்கள், மற்றும் பிற உயிர்கள் தோன்றின. 


எனவே, எல்லாம் கல்லில் இருந்துதான் வந்தது. 


மணிவாசகர் சொல்லும் வரிசையில் அவை தோன்றவில்லை. மணிவாசகரும் அப்படிச் சொல்லவில்லை. 


இதற்கு முன்னால் அவையெல்லாம் ஆக இருந்தேன் என்கிறார். அந்த வரிசையில் வந்தேன் என்று சொல்லவில்லை. 


நாம் மனிதர்களாக பிறப்பதற்கு முன்னால் கல்லாகத்தான் இருந்தோம். நம்மை எல்லாம் "star dust" என்று கூறுவார்கள். நட்சத்திர தூசிகள் நாம். 


மணிவாசகருக்கு இந்த உலகம் எப்படி உருவானது என்று தெரியுமா? 


இப்படி ஒரு சிந்தனை அவருக்கு எப்படி வந்தது? 


நம் அறிவியல் ஓர்செல் உயிரில் இருந்து மனிதன் வரை எப்படி உயிர்கள் வளர்ந்தன என்று சொல்கின்றன. 


குரங்கில் இருந்து மனிதன். 


மனிதனில் இருந்து? 


அடுத்து என்ன? தெரியாது.


மணிவாசகர் சொல்கிறார் 



"மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,

வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,"


பரிணாம வளர்ச்சி என்றால் அது மனிதனோடு ஏன் நிற்க வேண்டும்? 


மணிவாசகர் மனிதாராக இருந்து இந்தப் பாடலை எழுதி இருக்கிறார். 


ஆனால்,பேயாகவும் அசுரராகவும், முனிவராகவும், தேவராகவும் இருந்தேன் என்கிறார். 


அதாவது, பரிணாமம் கீழ் நோக்கியும் போகும் என்கிறார். 


தேவராக இருந்து மனிதராக ஆகி, ,பின் புல் பூண்டு கல்லாகவும் முடியும் என்கிறார். 


நாம் பல கதைகளில் படிக்கிறோம். தேவர்கள், கந்தர்வர்கள் சாபம் பெற்று மனிதராக, விலங்குகளாக பிறக்கிறார்கள் என்று படிக்கிறோம். 


கல்லாய் போகும் படி அகலிகை சபிக்கப் பட்டாள் என்று படித்து இருக்கிறோம் அல்லவா. கல் பின் பெண்ணானது. 


"முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக"


என்று இரண்டு தீயவர்களை கவுந்தி அடிகள் சபித்தார் என்று சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம்.  


மனிதர்கள் விலங்காகப் போனதற்கு அது ஒரு கதை. .


திருவாசகத்தை எப்படிப்  புரிந்து கொள்வது? 


படித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். தெரிய வரும் நேரத்தில் தெரியும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 







திருக்குறள் - பொறையுடைமை - நிறையுடைமை வேண்டின்

    

 திருக்குறள் - பொறையுடைமை - நிறையுடைமை வேண்டின்


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :


)


ஏன் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்?


பிறரால் நல்லவன், பெரியவன், உயர்ந்தவன் என்று பாராட்டப் படுவதை விரும்பாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? 



புகழ் என்பது எல்லோருக்கும் விருப்பமான ஒன்றுதான். எல்லோராலும் இகழப் படுவதை யார் விரும்புவார்கள்?



பிறர் புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும், நமக்கு நாமே ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டாமா?


சிறந்த வாழக்கை என்றால் என்ன?  


தமிழிலே "சால்பு? என்று ஒரு வார்த்தை உண்டு. 


சால்பு என்றால் உயர்ந்த, சிறந்த, மேன்மை மிகுந்த, நிறைவு பட்ட என்று அர்த்தம். 


அந்த சால்பு என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் "சான்றோர்" என்ற சொல். அனைத்து நல்ல குணங்களும் நீங்காமல் இருக்கப் பெற்றவர்கள் என்று அர்த்தம். 


"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்டத் தாய்"


என்பார் வள்ளுவப் பெருந்தகை. 

 
சால்புடைய வாழ்கையே நிறைவான வாழ்க்கை. 

"அப்படிப்பட்ட ஒரு நிறைவான வாழக்கை வாழ வேண்டும் என்றால், பொறுமையை விடாமல் கடைப் பிடிக்க வேண்டும்"  என்கிறார் வவ்ள்ளுவர்.


அதாவது, பொறுமையாக இருந்தால், நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.



பாடல் 


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்


பொருள் 




(pl click the above link to continue reading)



நிறையுடைமை  = நிறைவான வாழ்கை, சால்புடைய வாழ்க்கை என்பார் பரிமேலழகர் 


நீங்காமை வேண்டின் = எப்போதும் தன்னுடன் இருக்க ஒருவன் விரும்பினால் 


பொறையுடைமை = பொறுமை என்ற குணத்தை 


போற்றி ஒழுகப் படும் = விரும்பி, விடாமல் எப்போதும் காக்க வேண்டும். 


வெறுமனே "ஒழுகப்படும்" என்று போட்டு இருக்கலாம். "போற்றி ஒழுகப்படும்" என்று கூறினார். 


வேண்டா வெறுப்பாக, கடமையே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருப்பது அல்ல. விரும்பி, முழு மனதுடன், இது நமக்கு நல்லது செய்யும் என்று எண்ணி, பொறுமையை கடைப் பிடிப்பது. 


உயர்ந்த குணங்களை கடைப் பிடிப்பதில் பெருமை கொள்ள வேண்டும். ஏதோ விதியே என்று கடைப் பிடித்தால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு வாய்ப்பு கிடைத்தால் நழுவ விட்டு விடுவோம். 


தீயவை செய்பவர்கள், அதைச் செய்வதில் பெருமை கொள்கிறார்கள். நல்லதைச் செய்ய நல்லவர்கள் தயங்குகிறார்கள், சந்தேகம் கொள்கிறார்கள். 


புகை பிடிப்பவன் அது ஏதோ பெரிய செயற்கரிய செயல் போல் பிடிக்கிறான். தண்ணி அடிப்பவன் அது ஏதோ ஒரு மகத்தான செயல் போல் செய்கிறான். அந்தக் கூட்டத்தில் இருக்கும் தண்ணி அடிக்காதவன் கூனி, குறுகிப் போகிறான். "வேண்டாம், நான் மது அருந்துவதில்லை" என்று சொல்ல வெட்கப் படுகிறான். அவனை எல்லோரும் கேலி செய்கிறார்கள். 


மது அருந்தாதவன் நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல வேண்டாமா? அவன் முன்னால் மது அருந்துபவன் வெட்கப் பட வேண்டாமா? 


மது அருந்துவது சரியா தவறா என்பதல்ல இங்கே கேள்வி. 


சரி என்று படுவதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். விரும்பிச் செய்ய வேண்டும். மது அருந்துபவன் எப்படி அதை மகிழ்வோடு செய்கிறானோ, அதே போல அருந்தாதவனும் செய்ய வேண்டும். 


"போற்றி" ஒழக வேண்டும். 


ஒழுகுதல் என்றால் விடாமல் கடைப் பிடித்தல். எந்த சூழ்நிலையிலும் அதை விட்டு விடக் கூடாது. முடிந்தவரை கடைப் பிடிப்போம், இல்லை என்றால் விட்டு விடுவோம் என்று அல்ல. 



அரிச்சந்திரன் மாதிரி, என்ன ஆனாலும் சரி, பொய் சொல்லுவதில்லை என்பதில் உள்ள வைராக்கியம். 



பிள்ளை இறந்தாலும், மனைவியை விற்க வேண்டி வந்தாலும், கொண்ட கொள்கையில் இருந்து மாறுவது இல்லை என்ற பிடிப்பு இருக்க வேண்டும். 



அப்படி இருந்தால், நிறையுடைமை ஒருவனை விட்டு ஒருபோதும் நீங்காது. 



பொறுமை என்பது நாம் மற்றவர்களுக்குச் செய்யும் உபகாரம் அல்ல. நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை.