Monday, March 21, 2016

இராமாயணம் - பித்தரும் பேதையரும் சொன்னது - அவை அடக்கம்

இராமாயணம் - பித்தரும் பேதையரும் சொன்னது - அவை அடக்கம் 



பாடல்


முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-
‘பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், 
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?’ 

பொருள்

முத்தமிழ்த் = இயல், இசை, நாடகம் என்ற மூன்று பகுதியான தமிழின்

துறையின் = ஒவ்வொரு துறையிலும்

முறை நோக்கிய = முறையாக பயின்ற

உத்தமக் கவிஞருக்கு = உயர்ந்த கவிஞர்களுக்கு

ஒன்று உணர்ந்தவென் = ஒன்று உணர்த்துவேன்

‘பித்தர் சொன்னவும் = பைத்தியம் பிடித்தவர்கள் சொன்னதும்

பேதையர் சொன்னவும் = பேதையர் சொன்னதும்

பத்தர் சொன்னவும் = பக்தர்கள் சொன்னதும்

பன்னப் பெறுபவோ? = ஆராயத் தக்கதோ ? (இல்லை)

பாடலையும், அதன் சொற்களுக்கு அர்த்தத்தையும் பார்த்தாச்சு. வேறு என்ன இருக்கிறது  இந்த பாடலில்.

பித்தர்கள், பக்தர்கள், பேதைகள் சொன்னதை பெரிய கவிஞர்கள் ஆராய்வார்களா என்று கேட்டு முடிக்கிறான் கம்பன்.

பாடலுக்கு பின்னால் வருவோம்.

தமிழர்களின் மேல் பொதுவாக சொல்லப் படும் ஒரு குறை என்னவென்றால் நல்ல விஷயங்களை பாராட்டுவதே கிடையாது. என்ன செய்தாலும் ஒரு திருப்தி இல்லை. ஏதோ குழந்தைகளை பாராட்டி விட்டால் அவர்களுக்கு தலைக்கனம் வந்து விடும் என்று பிள்ளைகளை பாராட்டுவதே இல்லை.

அதே போல், தான் ஏதாவது பெரியதாக சாதித்தாலும், அதெல்லாம் ஒண்ணும் இல்லை..இது என்ன பெரிய சாதனை என்று நினைத்துக் கொள்வது.

14000 பாடல்களுக்கு மேலே பாடிய கம்பன், தன் பாடல்களை ஏனோ பைத்தியக்காரன் பாடியது, முட்டாள் பாடியது , என்று குறைத்து சொல்கிறான்.

இது என்ன ஒரு வித தாழ்வு மனப்பான்மையா ?

கம்பன் மட்டும் அல்ல, அனைத்துப் புலவர்களும் அவை அடக்கம் பாடுகிறார்கள். "நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை, என் பாட்டு ரொம்ப சுமாரு தான் " என்று தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.

ஏன் ?

காரணம், தாழ்வு மனப்பான்மை இல்லை.

கல்வியின் வீச்சு, கல்வியின் ஆழம் தெரிந்தமையால் வந்த அடக்கம்.

கல்வி கடல் போன்றது. அதில் எந்த கொம்பனும் கரை கண்டு விட முடியாது.

இது புரிந்ததால் தான், அடங்கி ஒடுங்கி அவை அடக்கம் வாசிக்கிறார்கள்.


ஒண்ணும் தெரியாதவன் தான், ஏதோ கொஞ்சம் வாசித்து விட்டு தனக்குத் தான்  எல்லாம் தெரியும் என்று தலைக் கனம் பிடித்துத் திரிவான்.

படிக்க படிக்க, பயம் வரும்.

நாம் என்ன புதிதாகச் சொல்லி விடப் போகிறோம் என்று. அவ்வளவு இருக்கிறது.

எனவே, அவை அடக்கம் பாடுகிறார்கள்.

ஆனாலும், கம்பன் ஒரு கொம்பன். அவனுக்குத் தெரியும் தான் ஒரு நல்ல கவிஞன் என்று.

தன் பாடல்களை குறை சொல்லவே கொஞ்சம் பேர் வருவார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

அவர்களின் வாயை அடைக்க வேண்டும்.

எப்படி ?

பார்த்தான் கம்பன் ...


பித்தர் சொன்னதும், பேதையர் சொன்னதையும் பெரிய கவிஞர்கள் ஆராய்வார்களா என்று கேட்பதன் மூலம், என் கவிதையை நீங்கள் ஆராய்ந்தால், நீங்கள் பெரிய கவிஞர்கள் இல்லை என்று நிரூபணம் ஆகிவிடும் என்றான்.

இனிமேல் அவன் ஏன் வாயைத் திறக்கப் போகிறான்.

இப்படி, பெரிய புலவர்களை ஒரே வரியில் ஓரங் கட்டிவிட்டான் கம்பன்.

அது மட்டும் அல்ல, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல ஒரு விஷயம் சொல்கிறான்.


முத்தமிழ் துறையின் முறை போக்கிய

அப்படினா என்ன அர்த்தம்.

வெறும் தமிழ் பாடம் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. இசை ஞானமும் வேண்டும். நாடக ஞானமும் வேண்டும். ஒரு பாட்டு என்ன இராகம் என்று சொல்லத் தெரிய வேண்டும். அந்த இராகத்தில், சொன்ன தாளத்தில், பாவத்தோடு பாடத் தெரியவும் வேண்டும். அது மட்டும் அல்ல, நடிக்கவும் தெரிய வேண்டும்.

அப்போதுதான், ஒருவன் முழுமையான தமிழ் அறிஞன் என்று ஏற்றுக் கொள்ள முடியும்.


உங்களில் எத்தனை பேருக்கு இசையும் நடிப்பும் தெரியும் என்று கேட்கமால் கேட்கிறான் கம்பன்.

அவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் சேர்த்துத்தான் கம்பன் சொல்கிறான்...தமிழ் படிக்க வேண்டுமா ? இசையும் நடிப்பும் சேர்ந்து படியுங்கள் என்று.

நாளை முதல் யாரவது தமிழ் தெரியுமா என்று கேட்டால், 1/3 -ல் கொஞ்சம் தெரியும் என்று தான்  சொல்ல வேண்டும்.

தமிழ் பாடல்களை இசையோடு படிக்கும் போது அதற்கு உள்ள அழகே வேறு. சில சமயம் அர்த்தமே கூட மாறிப் போகும்.

தமிழை இரசிக்க வேண்டுமா , கொஞ்சம் இசையும் தெரிந்திருக்க வேண்டும்.

அவை அடக்கத்துக்குள் இவ்வளவு அர்த்தங்களை அடக்கியவன் கம்பன்.

எப்பேர்பட்ட பரம்பரையில் பிறந்தவர்கள் நாம் !

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_21.html )

1 comment: