Thursday, March 10, 2016

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம்

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம் 




அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்


உலகத்தில் ஒரே ஒரு கதை தான் உண்டு. மீதி அத்தனை கதையும் அந்த மூலக் கதையின் கருவை எடுத்துக் கொண்டு, பெயர்களை, சூழ்நிலைகளை மாற்றி மாற்றி எழுதுவதுதான்.

அது என்ன கதை.

ஒரு ஊரில் ஒரு கதாநாயகன் இருந்தான். அவனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தன. ஒரு நாள் அவனுக்கு ஒரு துன்பம் நிகழ்ந்தது. தன்னுடைய நல்ல குணங்களைக் கொண்டு அவன் அந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு வந்தான்.

இந்த ஒரு கதை தான் உண்டு.

அது இராமாயணமாகட்டும் , பாரதமாகட்டும், எந்த தமிழ், ஆங்கிலப் படமாக இருந்தாலும் , இது ஒன்று தான் கதை.

கதைக்கு ஒரு கதாநாயகன் இருப்பான், அவனுக்கு துணையாக ஒரு நாயகி, அவர்களுக்கு சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள். இவர்களுக்கு ஒரு எதிரி அல்லது வில்லன். வில்லனின் கொடுமைகளை வென்று எடுப்பதுதான் கதை.

ஆனால்,

இதிலிருந்து மாறுபட்டு, மிக மிக மாறுபட்டு எழுதப் பட்ட கதை சிலப்பதிகாரம்.

உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

கோவலன், கண்ணகியை மணந்தான். பின் மாதவியிடம் காதல் வசப்பட்டான். செல்வத்தை இழந்தான். பின் கோவலனும் கண்ணகியும் மதுரை சென்றார்கள். பொய் பழி சுமத்தப் பட்டு கோவலன் கொலையுண்டான். அதனால் சினந்த கண்ணகி மதுரையை தீகிரையாக்கினாள்.

கோவலன் கதாநாயகன்.
கண்ணகி கதாநாயகி.

வில்லன் யார் ?

கோவலனுக்கு வில்லன் யார் ? மாதவியா ? அவள் மேல் அவன் கொண்ட காதலா ?  தான் தப்பிக்க கோவலனைக் கை காட்டி விட்ட பொற்கொல்லனா ? தவறான தீர்ப்பு சொன்ன பாண்டியனா ?

யாரும் இல்லை. கோவலன் அங்கு வருவான் என்று போர்கொல்லன்னுக்குத் தெரியாது. அவனுக்கு கோவலன் மேல் பகை இல்லை.

விதி.

விதிதான் வில்லன் என்று கொள்ளலாம்.

நம் தமிழ் இலக்கியம் விதியை வெகுவாக நம்பி இருக்கிறது.

ஊழ் என்று அவர்கள் அழைத்தார்கள். வினை என்றும் கூறப் பட்டது.

திருக்குறள், கம்ப இராமாயணம் என்று எங்கு பார்த்தாலும் விதியின் பலம் நம்பப் பட்டது.


அவன் கால் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கை எழுத்தே என்பார் அருணகிரிநாதர்.

விதியை நம்பாத  இலக்குவன் கூட பின்னாளில், சீதை அவனை கடிந்து பொன் மான் பின்னே அனுப்பிய   போது , விதியின் போக்கை எண்ணி நொந்து சென்றான்.

சிலப்பதிகாரம் மூன்று அறத்தை முன்னிறுத்தி காப்பியம் சொல்கிறது.


1. அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
2. உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
3. ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.  அரசியல் என்றால் இந்த பொறுப்பும் அரசியல் தான். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருவது மட்டும் அரசியல் அல்ல.

அரசியல் பற்றி கூறவந்த வள்ளுவர், அதனை இறைமாட்சி என்று குறிப்பிடுகிறார். இறைவனின் தொழில் அது.  உயிர்களைக் காப்பது.

அரசியலில் பிழை செய்தவர்களை யார் தண்டிப்பது ?  அரசன் தவறு செய்தால் அவனை யார்   தண்டிப்பது. அறம் அவர்களைத் தண்டிக்கும்.  இதை எல்லா சட்ட சபையிலும், பார்லிமென்ட்டிலும், நிறுவனகளின் தலைமை இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும். சட்டம் தண்டிக்காமல் விடலாம். நீதி மன்றம் தண்டிக்காமல் விடலாம். தெய்வம் கூட மன்னிக்கலாம். அறம் தண்டித்தே தீரும். யாரும் விதி விலக்கு இல்லை.

நல்ல குணம் உள்ள பெண்களை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள். பெண் குணம் கெட்டால் சமுதாயம் சீரழிந்து போகும். எனவே, ஒரு சமுதாயம் உயர வேண்டுமானால், அது நல்ல பெண்களை போற்றியே ஆக வேண்டும்.

ஊழ்வினை எங்கு போனாலும் விடாது. செய்த வினைக்கு பலன் கிடைத்தே தீரும். இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்த பிறவியில் கிடைக்கும்.

இந்த மூன்று கருத்துக்களை கொண்டு பின்னப்பட்ட காவியம் சிலப்பதிகாரம்.

அதிலிருந்து சில பாடல்களை வரும் நாட்களில் சிந்திப்போம்.

(for other poems , http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_10.html )

19 comments:

  1. "ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்" என்று நினைக்கிறேன்.
    சிறப்பான விளக்கங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்

      Delete
  2. தமிழ் இலக்கியத்தில் உள்ள சுவையான பாடல்கள் உங்கள் மூலம் எங்களுக்கு அறிமுகமாகும் நல்லூழ் தொடர்ந்து அமைக....

    ReplyDelete
  3. தமிழ் இலக்கியத்தில் உள்ள சுவையான பாடல்கள் உங்கள் மூலம் எங்களுக்கு அறிமுகமாகும் நல்லூழ் தொடர்ந்து அமைக....

    ReplyDelete
  4. நம் தமிழ்க் காவுயங்களில் மட்டும் அல்ல, கிரேக்கக் (Greek) காவியங்களிலும் விதி என்பது ஒரு விசையாக அமைந்திருக்கிறது. அதை ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ, சிலப்பதிகாரத்தின் சுவையை அனுபவிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. Very good explanation

    ReplyDelete
  6. இது போன்ற ஒரு பதிலை எதிர்பார்த்து தான், தேடி வந்தேன். கிடைத்தது மகிழ்ச்சி..

    ReplyDelete
  7. மிக அருமையான தெளிவான விளக்கம். தெளிந்த சுருக்கமான சொற்கள்.

    ReplyDelete
  8. மிகஅருமையான விளக்கம்

    ReplyDelete
  9. சரியான பதிவு நன்றி

    ReplyDelete
  10. தெய்வங்களை பற்றிய கதையை விட மனிதனை பற்றிய கதையே யதார்த்தம்.சரியான படிப்பினை தரும். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் இந்த உண்மையை உணரவேண்டியது இன்றைய தர்மம்; கட்டாயம்



    ReplyDelete
  11. இதை இந்திய அனைத்து சட்ட மன்றங்களில், மற்றும் parliament லும் எழுதி வைக்க வேண்டும்

    ReplyDelete