Monday, August 22, 2016

இராமாயணம் - வாலி வதை - மூல மந்திரத்தை

இராமாயணம் - வாலி வதை - மூல மந்திரத்தை 


வாலி வதத்தின் மிக மிக முக்கியமான பாடல்.

தன் மார்பில் பாய்ந்த அம்பை பற்றி இழுத்து , அதில் யார் பெயரை எழுதி இருக்கிறது என்று பார்த்தான்.

கம்பனின் உச்ச பச்ச பாடல்.

என் போன்ற சாமானியர்களால் இந்த பாடலுக்கு ஒரு விளக்கமும் தர முடியாது. தராமல் இருப்பது நலம்.

இருந்தும், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றார் போல, நான் அடைந்த இன்பத்தைப் பற்றி சொல்கிறேன்.

ஆழ்ந்து ஆராய்ந்து மேலும் அறிந்து கொள்க.

அந்த அம்பில் என்ன எழுதி இருந்தது ?


மூன்று உலகுக்கும் மூலமான மந்திரத்தை, முழுவதும் தன்னையே தன் அடியவர்களுக்கு அருளும் சொல்லை, பிறவி பிணிக்கு மருந்தை, இராமன் என்ற நாமத்தைக் கண்டான்.

பாடல்

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தெரியக்  கண்டான்.

பொருள்


மும்மை சால் உலகுக்கு  = மூன்று என்று சொல்லப் படும் உலகுக்கு


எல்லாம் = அனைத்திற்கும்

மூல மந்திரத்தை = மூலமான மந்திரத்தை

முற்றும் = முழுவதும்

தம்மையே= தன்னையே

தமர்க்கு = அடியவர்களுக்கு

நல்கும் = கொடுக்கும்

தனிப் பெரும் பதத்தை = தனிச் சிறப்பான உயர்ந்த சொல்லை

தானே = அவனே

இம்மையே எழுமை நோய்க்கும் = இந்தப் பிறவிக்கும், ஏழேழு பிறவிக்கும்

மருந்தினை = மருந்தினை

இராமன்  = இராமன்

என்னும் = என்னும்

செம்மை = சிறப்பு

சேர் = சேர்க்கும்

நாமம் தன்னைக் = நாமத்தை

கண்களின் தெரியக்  கண்டான். = கண்களில் தெரியக் கண்டான்


ஆழ்ந்து அறிய வேண்டிய பாடல்.

பாடலின் பொருளை அறியும் முன்,   இப்படி இராமன் என்ற நாமத்தைப் பார்த்தவன் யார் ? வாலி ? வாலியின் பார்வையில் இருந்து  இந்தப் பாடலின் பொருளை நோக்கினால், பாடலின் ஆழமான அர்த்தம் விளங்கும். 


மும்மை சால் உலகுக்கு எல்லாம் ...மேல், நடு , கீழ் என்று சொல்லப் படும்  மூன்று உலகங்கள். சொர்கம், நரகம், பூமி என்று சொல்லப் படும் மூன்று  உலகங்கள். இருந்தது, இருப்பது, இனி வர போகும் என்ற மூன்று  உலகங்கள் என்று எப்படி பிரித்தாலும் அந்த அனைத்து உலகங்களுக்கும் மூலமான மந்திரம்  இராம நாமம். 

முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும்....தன்னுடைய அடியவர்களுக்கு தன்னை  அப்படியே முழுமையாக தந்து விடுவானாம் இராமன். ஏதோ  கொஞ்சம் உனக்கு என்று மிச்சம் வைக்காமல் முழுவதும் தந்து விடுவான். பக்தன் இறைவனிடம் சரணாகதி அடைவது இருக்கட்டும். ஆண்டவனே தன்னை முழுவதும் பக்தனிடம் தந்து விடுகிறான். "கேட்டாய் அல்லவா , எடுத்துக் கொள் " என்று சொல்லுவது போல.


இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை .... தமிழிலே நோய் , பிணி என்று இரண்டு சொல் உண்டு. நோய் என்றால் மருந்து தந்தால் போய் விடும்.  பிணி போகவே போகாது.

பசிப் பிணி என்று சொல்லுவார்கள். பசி வந்தால் நோய் வந்தது மாதிரி  உடல் அல்லல் படும். உணவு உண்டால் பசி போய் விடும். ஆனால்,  சில மணி நேரங்களில் மீண்டும் வந்து விடும். எவ்வளவு சாப்பிட்டாலும்,  எல்லாம் சில மணி நேரம் தான். மீண்டும் பசிக்கும். பசி பிணிக்கு நிரந்தர மருந்து இல்லை.

அதே போலத்தான் பிறவிப் பிணியும். அதற்கு மருந்து இருக்கிறதா ? இது வரை இல்லை. இப்போது இருக்கிறது.

ஏழு பிறப்புக்கும் மருந்தினை என்கிறார் கம்பர். இந்த மருந்தை உட்கொண்டால், ஏழேழு பிறவி என்ற நோய் தீர்ந்து போய் விடும்.

தீராத பிறவி பிணியை தீர்க்கும் அருமருந்து.


செம்மை சேர் நாமம் ...இதற்கு பல பொருள்.

ஒன்று, சிவப்பு சேர்ந்த நாமம். மார்பில் பாய்ந்து , வாலியின் இரத்தத்தில் தோய்ந்ததால் சிவந்த நாமம். சிவப்பு சேர்ந்த நாமம். செம்மை சேர் நாமம்.


இரண்டாவது, செம்மையான நாமம்.  சிறப்பு சேர்ந்த நாமம். செம்மை சேர் நாமம்.


மூன்றாவது, செம்மையான இடத்தில் கொண்டு சேர்க்கும் நாமம். செம்மை சேர் நாமம்.

நான்காவது, வினைத் தொகையாக செம்மையான இடத்தில் முன்பு இருந்தவர்களை சேர்த்த நாமம், இப்போது இருப்பவர்களை சேர்க்கும் நாமம், இனி வரும் காலத்தில் வர இருப்பவர்களையும் சேர்க்கும் நாமம்.


கண்களின் தெரியக்  கண்டான்....அது என்ன கண்களின் தெரியக் கண்டான்.

கண்டான் என்று சொன்னால் போதாதா ? கண்களால் தான் காண முடியும். எதற்காக கண்களின் தெரியக் கண்டான் என்று தேவை இல்லாமல்  இரண்டு வார்த்தைகளை போடவேண்டும் ?

காணுதல் வேறு ,  தெரிதல் வேறு.

இயற்பியலில் ஒரு சிக்கலான விதியை எழுதி என்னிடம் காண்பித்தால் என்னால் அதை காண முடியும். ஆனால், அது என்ன என்று  தெரிந்து கொள்ள முடியாது.

காதலியின் கண்கள் சொல்லும் காதலை அவளுடைய காதலனைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது.

செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும் 
உறாஅர்போன் றூற்றார் குறிப்பு.

ஒண்ணும் தெரியாத மாதிரி பார்க்கும் பார்வையில் பொதிந்து கிடைக்கும் ஆயிரம் காதலை அவன் மட்டுமே அறிய முடியும்.

அது போல,  தெரிவது வேறு, காண்பது வேறு.

வாலி, இத்தனை சிறப்பு மிக்க நாமத்தை கண்டது மட்டும் அல்ல, தெரிந்தும் கொண்டான்.

காண்பது, தெரிவது என்று இரண்டு இருந்தாலும், கண் ஒன்றுதானே ?

இல்லை.

அகக்கண், புறக்கண் என இரண்டு உண்டு.

அம்பில் உள்ள நாமத்தை அகக் கண்ணால் கண்டான். அதன் சிறப்பை மனதில் 'தெரிந்து' கொண்டான்.

ஒரு மனிதன் ஆன்மீக வளர்ச்சியின் இரண்டாம் படி.

வாலி என்ற மனிதன் (அல்லது குரங்கு) எப்படி ஒரு ஆன்மீக வளர்ச்சி அடைந்தான் என்று கம்பன் காட்டுகிறான்.

குரங்குக்குச் சொன்னால் என்ன, நமக்குச் சொன்னால் என்ன.


அது என்ன ஆன்மீக வளர்ச்சி...அதற்கும் இந்த மறைந்து இருந்து அம்பு எய்வதற்கும் என்ன சம்பந்தம் ?

(வளரும்)

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_22.html


2 comments:

  1. சும்மா போட்டுப் பின்னி எடுத்து விட்டாய்!

    "இராமன்" என்ற சொல்லுக்கு அப்படி ஒரு பலன் இருக்கிறதோ இல்லையோ, கவிச் சுவை என்பதைப் பருக வைத்து விட்டாய். உன்னால்தான் இப்படிப்பட்ட பாடல்களைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் கொடுத்து வைத்திருக்கிறோம். மிக மிக நன்றி.

    ReplyDelete
  2. அற்புதமான விளக்கம்.மேலெழுந்த வாரியாக வார்த்தைகளை பார்ப்பதற்கும் ஆழ்ந்து உள் நோக்கினால் உள்ளர்த்தம் தெரிவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாக உணர்ந்தேன்

    ReplyDelete