Sunday, August 28, 2016

இராமாயணம் - செவியுறு கேள்விச் செல்வன்

இராமாயணம் - செவியுறு கேள்விச் செல்வன்


இராமனின் அம்பால் அடிபட்டு வீழ்ந்த வாலி, முதலில் இராமனின் நாமத்தை அம்பில் கண்டான். பின், இராமனே நேரில் வரக் கண்டான். நேரில் வந்த இராமனை வாலி பலவாறு கேள்வி  கேட்கிறான்.அவன் குற்றச்சாட்டெல்லாம் , ஏன் மறைந்து இருந்து அம்பு எய்தாய் , என்பதுதான்.

இராமன் கொஞ்சம் சமாதானம் சொல்கிறான். வாலி ஏற்கவில்லை.

இலக்குவன் கொஞ்சம் சமாதானம் சொல்கிறான். வாலியின் மனம் ஒப்பவில்லை.

அடுத்து என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.

ஏதோ நடந்திருக்கிறது.

யாருக்கும் தெரியாது.

ஒரு மனமாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

கீழே வரும் பாடல் மிக நுண்ணிய பாடல்.

பாடல்

கவி குலத்து அரசும் அன்ன
      கட்டுரை கருத்தில் கொண்டான்;
அவியுறு மனத்தன் ஆகி, 'அறத்
      திறன் அழியச் செய்யான்
புவியுடை அண்ணல்' என்பது
     எண்ணினன் பொருந்தி, முன்னே
செவியுறு கேள்விச் செல்வன்
      சென்னியின் இறைஞ்சி, சொன்னான்:

பொருள்

கவி குலத்து அரசும் = குரங்கு கூட்டத்தின் அரசனான வாலி

அன்ன = அந்த

கட்டுரை கருத்தில் கொண்டான் = இராமன் மற்றும் இலக்குவன் சொன்ன கருத்துகளை மனதில் கொண்டான் ;

அவியுறு மனத்தன் ஆகி, = மனதில் பொங்கிய கோபம் அமைதி உற்று

'அறத் திறன் அழியச் செய்யான் = அறத்தின் வலிமையை அழிய விடமாட்டான்

புவியுடை அண்ணல்' = புவியின் அரசனான இராமன்

என்பது எண்ணினன் பொருந்தி = என்று மனதுள் பொருந்தி

முன்னே = முன்பே

செவியுறு கேள்விச் செல்வன் = செவியுற்ற கேள்விச் செல்வனான வாலி

சென்னியின் இறைஞ்சி, சொன்னான்: = தலையால் வணங்கிச் சொன்னான்

அறம் என்பது இன்னது என்று யாரும் அறுதியிட்டு கூற முடியாது.

ஈறில் அறம் என்பான்  கம்பன்.

அறம் என்று ஒன்று உண்டு அதை தேவரும் அறிய மாட்டார்கள் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்

இராமன் மறைந்து இருந்து அம்பு போட்டது அறமா , அறம் அற்ற செயலா ?

வாதம் பண்ணிக் கொண்டே வந்த வாலி, திடீரென்று மனம் மாறுகிறான்.

இராமன் செய்தது சரி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான்.

அவன் படித்த அறத்தின் படி, மறைந்து நின்று அம்பு போடுவது வில்லறம் பிறழ்ந்த செயல்தான்.

பின், வாலி மனம் மாறக் காரணம் என்ன ?

அம்பு அவன் மார்பில் பட்டு அவன் கேள்விகள் கேட்பது வரை , அவன் கண்ட அறம் அவன் படித்து உணர்ந்த அறம்.

இப்போது , அவன் இராமனிடம் கேட்ட அறம் .

அப்படி என்ன இராமன் சொல்லி விட்டான் ?

நமக்குத் தெரியாது.

கம்பன் நேரடியாகச் சொல்லவில்லை.

உயர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் சொல்லி உணர வைக்க முடியாது.

அது மௌனத்தில் உணரப் படவேண்டிய ஒன்று.

காதலி, தன் காதலை , அவளுடைய காதலனுக்கு கண்ணால் சொல்லுவது போல.

ஆயிரம் வார்த்தைகளை ஒரு கண் அசைவு காட்டி விடும்.

ஒரு புன்முறுவல் சொல்லி விடும்.

பக்கம் பக்கமாக வசனம் பேச முடியாது.

இராமன் சொன்னான். வாலி கேட்டான்.


"செவியுறு கேள்விச் செல்வன்"

காதில் கேட்டுக் கொண்ட கேள்வியின் செல்வன் என்று வாலியை கம்பன்  அழைக்கிறான். 

செவியுறு கேள்விச் செல்வன் என்று அவனுக்கு ஒரு அடை மொழி  தருகிறான்.

அவன் என்ன கேட்டான். கேட்ட பின் மனம் மாறினான்.

அவன் கேட்டதில் கொஞ்சம் தான் நாம்  கேட்டோம்.

நேரில் வந்த இராமன் ஏதோ சொல்லி இருக்கிறான். வாலியும் கேட்டிருக்கிறான். 

கேட்ட பின் தலையால் வணங்கி வாலி கூறுகிறான். 

என்ன கூறினான் ?


1 comment:

  1. இது வரை வாலி வதம் என்ற தலைப்பில் நீ எழுதியுள்ள கம்ப இராமாயணப் பாடல்கள் எல்லாவற்றையும் முழுமையாக நோக்கினால், எல்லாமே சப்பைக்கட்டு என்றே தோன்றுகிறது. இராமன் இறைவன், தப்பு செய்ய மாட்டான், அருள் உடையவன், என்றெல்லாம் எழுதி விட்டால் போதுமா? இராமன் செய்த செயல் தவறு அல்ல என்பதை தெளிமையாக எடுத்துக் காட்ட வேண்டாமா? சும்மா "நம்ம தலைவர் தப்பு செய்ய மாட்டார்" என்று எழுதி விட்டால் போதுமா?!

    ReplyDelete