Monday, January 30, 2017

இராமாயணம் - பரதன் குகன் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ?

இராமாயணம் - பரதன் குகன் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ?


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வந்து அரசை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரதன் புறப்பட்டு வருகிறான். வந்த பரதனை முதலில் தவறாக எண்ணிய குகன் அவனின் நோக்கம் அறிந்து தன் தவறை அறிந்து மாற்றிக் கொள்கிறான்.

பரதனை நோக்கி குகன் கூறுகிறான் "தாயின் வரத்தினால் , தந்தை தந்த அரசை தீவினை என்று நினைத்து , அந்த அரசை மீண்டும் இராமனிடம் தர வந்திருக்கும் உன்னைப் பார்த்தால், ஆயிரம் இராமர் உனக்கு இணையாவார்களா , தெரியவில்லை "  என்றான்.

பாடல்

தாய் உரை கொண்டு, தாதை
    உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
    சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து,
    புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ்
    ஆவரோ? தெரியின் அம்மா

பொருள்

தாய் உரை கொண்டு = தாய் கொண்ட வரத்தினால்

தாதை  உதவிய = தந்தை தந்த

தரணி தன்னைத் = உலகம் தன்னை (அரசை)

தீ வினை என்ன = தீவினை என்று

நீத்துச் = விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கிப் = சிந்தனை தோய்ந்த முகத்துடன்

போயினை என்ற போழ்து = கானகம் வந்தாய் என்ற போது

புகழினோய்! = புகழை உடையவனே

தன்மை கண்டால் = உன்னுடைய தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் = ஆயிரம் இராமர்

நின் = உனக்கு

கேழ் = ஒப்பு, சமம்



கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங் கருணை, கேழ் இல் விழுப்பொருள் என்பார் மணிவாசகர். 

ஆவரோ? = ஆவர்களா

தெரியின் அம்மா = தெரியவில்லை அம்மா

ஆயிரம் இராமர் உனக்கு இணையாவார்களா என்று.

அப்படி என்ன பரதன் செய்து விட்டான்  ?


தனக்கு உரிமை இல்லாத ஒரு அரசை உரியவரிடம் தருவதற்கு வந்திருக்கிறான். அது ஒரு பெரிய பெருமையா ?

இராமன் தனக்கு உரிய அரசை விட்டுக் கொடுத்தான் . அவனை விட பரதன் எப்படி  உயர்ந்தவன் ?

இராமன் தானே விட்டு கொடுக்கவில்லை. தாய் பெற்ற வரத்தால் , தந்தை சொன்னதால் இராமன் பதவியை துறக்க நேர்ந்தது. இராமனுக்கு அது இரண்டுவிதமான கட்டளை...

ஒன்று தந்தையின் கட்டளை.

இன்னொன்று அரச கட்டளை.

மீற முடியாது.

ஆனால், பரதனின் நிலை அப்படி அல்ல.

தாய் கைகேயி பெற்ற வரம். தந்தை மற்றும் அரசன் ஒத்துக் கொண்டு தந்த அரசு. குல குரு, அமைச்சர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

பரதன் அரசை ஏற்றுக் கொண்டால் யாரும் அவனை குறை கூற முடியாது.

யார் என்ன சொன்னாலும், அது தவறு, அறம் அல்ல என்று பரதன் நினைத்தான்.

அவன் மனமும் செயலும் அறத்தின் வழி நின்றது.

அது , அதிகம் படிக்காத குகனுக்குக் கூட தெரிந்தது.

அடுத்தது காட்டும் பளிங்கு போல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்பது வள்ளுவம்.

பரதன் மனதில் இருந்தது அவன் முகத்தில் தெரிந்தது.

அதை அறிந்த குகன் "ஆயிரம் இராமர் உனக்கு இணையாக மாட்டார்கள்" என்றான்.


3 comments:

  1. இந்தப் பாடலை முன்பே படித்திருக்கிறேன். ஆனால் போன BLOG-இல் எழுதிய விளக்கத்தையும், இந்தப் பாடலின் விளக்கத்தையும் சேர்ந்து படிக்கும்போது ஒரு அருமையான புது அர்த்தம் தெரிகிறது. இந்த இனிமையான அமுதைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. அதியத்புதமான கட்டுரை 🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete