Friday, February 24, 2017

இராமாயணம் - பரதன் குகன் - மூவுலகும் ஈன்றானை ஈன்றவள்

இராமாயணம் - பரதன் குகன் - மூவுலகும் ஈன்றானை ஈன்றவள் 


குகனோடு பேசி முடிந்த பின், தங்களை கங்கை ஆற்றின் மறு கரையில் சேர்க்குமாறு பரதன் வேண்டுகிறான். குகனும் படகுகளை கொண்டு வருகிறான். எல்லோரும் ஏறுகிறார்கள்.

கோசலை படகில் ஏறும் போது குகன் கேட்கிறான், இந்த அம்மா யார் என்று.

"சுற்றத்தாரும், தேவரும் தொழ நின்ற கோசலையை நோக்கி , வெற்றி மாலை அணிந்த பரதனே , இவர் யார் என்று குகன் கேட்டான்.  அரசர்களுக்கு எல்லாம் அரசனான தயரதனின் முதல் தேவி. மூன்று உலகங்களை படைத்த பிரமனை படைத்த திருமாலின் தாய். அப்படிப்பட்ட இராமனை பெற்றதால் வர வேண்டிய செல்வம் அனைத்தையும் நான் பிறந்ததால் இழந்தவள் "

என்றான் பரதன்.

நெஞ்சை உருக்கும் அருமையான பாடல்

பாடல்

சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற
    கோசலையைத் தொழுது நோக்கிக்
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்? ‘என்று
    குகன் வினவக் ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி, மூன்று உலகும்
    ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம் யான்
    பிறத்தலால் துறந்த பெரியாள் ‘என்றான்.


பொருள்

சுற்றத்தார் = உறவினர்களும்

தேவரொடும் = தேவர்களும்

 தொழ நின்ற = தொழுது நின்ற

கோசலையைத் = கோசாலையை

தொழுது நோக்கிக் = தொழுது, நோக்கி


‘கொற்றத் தார்க் குரிசில்! = வெற்றி மாலை சூடிய பரதனே

இவர் ஆர்? ‘என்று = இவர் யார் என்று

குகன் வினவக்  = குகன் கேட்க

‘கோக்கள் = ஏனைய அரசர்கள்

வைகும் = வந்து காத்து நிற்கும்

முற்றத்தான் = வாசலைக் கொண்ட  (தயரதன்)

முதல் தேவி = முதல் மனைவி

மூன்று உலகும் = மூன்று உலகையும்

ஈன்றானை = படைத்தவனை (பிரமனை)

முன் ஈன்றானைப் = முன்பு தனது நாபிக் கமலத்தில் உருவாக்கியவனை (இராமனை)

பெற்றத்தால் = பிள்ளையாகப் பெற்றதால்

பெறும் செல்வம் = பெற வேண்டிய செல்வம் அனைத்தையும்

யான் = நான்

பிறத்தலால் = பிறந்ததால்

துறந்த பெரியாள் = துறந்த  பெரியாள்

என்றான்.= என்றான்

இதில் சில நுணுக்கங்களை நாம் கவனிக்க வேண்டும்.


எதைச் சொல்வதாக இருந்தாலும், முதலில் உயர்ந்தவற்றை சொல்லி பின் மற்றவற்றை சொல்ல வேண்டும்.

எது முக்கியமோ , அதை முதலில் சொல்ல வேண்டும். முக்கியம் குறைந்தவற்றை பின்னால் சொல்ல வேண்டும்.

"சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற"

என்ற வரியில் முதலில் சுற்றத்தாரை கூறி பின் தேவர்களை கூறுகிறார் கம்பர்.

அது சரியா ? தேவர்கள் உயர்ந்தவர்கள். முதலில் அவர்களை சொல்லி பின் மனிதர்களான சுற்றத்தாரை சொல்ல வேண்டும்.

பின் மாத்தி சொல்லக் காரணம் என்ன ?

முதலாவது, இராமனின் சுற்றத்தார் என்றால் அவர்கள் தேவர்களை விட உயர்ந்தவர்கள் என்று  கம்பர் நினைத்திருக்கலாம்.

இரண்டாவது, சுற்றத்தார் இராமனை நாட்டுக்கு வரும்படி அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். தேவர்களோ, இராமன் நாட்டுக்குப் போய்விட்டால் , இராவண  சம்காரம் நிகழாது. எனவே அவன் காட்டுக்கே போகட்டும் என்று வந்து இருக்கிறார்கள்.

சுற்றத்தார் கோசாலையை தொழுது , 'எப்படியாவது இராமனை நாட்டுக்கு அழைத்து வந்து விடு " என்று வேண்டுகிறார்கள்.

தேவர்களோ, "அம்மா, தயவுசெய்து இராமனை நாட்டுக்கு அழைத்து விடாதே " என்று தொழுது நிற்கிறார்கள்.

இராமன் துன்பப் படக்கூடாது என்று நினைத்த சுற்றத்தார் உயர்ந்தவர்கள் என்று கம்பர் நினைத்திருக்கலாம்.

யாருக்குத் தெரியும் ?

"துறந்த பெரியாள் "

கோசலை நினைத்திருந்தால் , சண்டைபோட்டு அரசை இராமனுக்கு வாங்கித் தந்திருக்கலாம். அது  தயரதனின் புகழுக்கும், இராமனின் கொள்கைக்கும்  விரோதமாக போயிருக்கும். எனவே, இழந்தாள் என்று சொல்லாமல் துறந்தாள் என்றான்.

இராமனின்  பெருமையைச் சொல்லி, தன் சிறுமையைச் சொல்லி முடிக்கிறான் பரதன்.

http://interestingtamilpoems.blogspot.com/2017/02/blog-post_24.html





3 comments:

  1. கம்பர் என்ன நினைத்து சுற்றவரை தேவர்களுக்கு முன் சொன்னாரோ தெரியாது .ஆனால் உங்கள் வாக்குசாதுர்யத்தினால் இப்படியும் இருக்கலாம் என தோன்றும்படி செய்து விட்டீர்கள். ரொம்ப அருமை

    ReplyDelete
    Replies
    1. True... thought the same . Shows your in-depth knowledge ..:)

      Delete
  2. "யான் பிறத்தலால் துறந்த பெரியாள்" என்று சொன்னது என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. பரதனுக்கு எவ்வளவு துக்கம் இருந்திருந்தால் "நான் பிறந்ததால்" என்று தன்னையே நொந்து கொள்ளச் செய்திருக்கும்?! பாவம்!

    ReplyDelete