Wednesday, February 8, 2017

முத்தொள்ளாயிரம் - யானையே , பைய நட

முத்தொள்ளாயிரம் - யானையே , பைய நட


பாண்டிய மன்னன் மேல் அவளுக்கு காதல். அவ்வப்போது பாண்டியன் நகர் வலம்  வருவான். அப்போது அவனை பார்த்து இரசிப்பாள் அவள்.  சாதாரணப் பெண். மன்னன் மேல் காதல் கொண்டாள் . நேரில் சென்று பேசவா முடியும் ? வெளியில் சொல்லவா முடியும்.

பாண்டியன் அமர்ந்து வரும் பெண் யானையிடம் சொல்லுகிறாள்....

"ஏய் , யானையே...உனக்கு என்ன  அவசரம்.ஏன் இவ்வளவு வேக வேகமாக போகிறாய். ஒரு பெண்ணா , இலட்சணமா மெல்ல நடந்து போகக் கூடாது ? இப்படி விசுக் விசுக்கென்று வேகமாக நடந்து போனால் , பாக்குறவங்க நீ ஒரு பெண் தானா என்று சந்தேகப்  படுவார்கள்.மெல்லமா நடந்து போ...என்ன ?"

என்று அந்த பெண் யானையிடம் மெல்ல போகச் சொல்லுகிறாள்.

அப்படி மெதுவாகப் போனால் , அவள் பாண்டியனை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் அல்லவா ...அதுக்குத்தான்.

நேரடியா சொல்ல முடியுமா ? நாணம்.


பாடல்

எலாஅ மடப்பிடியே! எங்கூடல்க் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன், உலா அங்கால்ப்
பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ(து) உடைத்து!


பொருள்


எலாஅ மடப்பிடியே! = ஏய் , பெண் யானையே

எங்கூடல்க் = எம்முடைய கூடல் (மதுரை) மாநகரத்து

கோமான் = மன்னன்

புலாஅல் = எப்போதும் புலால் இருக்கும்

நெடுநல்வேல் = பெரிய நல்ல வேலைக் கொண்ட (அவனுடைய வேலில் எதிரிகளின் உடல் சதை ஒட்டிக் கொண்டிருக்குமாம். எப்போதும் புலால் இருக்கும் நல்ல வேல்)

மாறன் =மன்மதன்  போன்ற அழகு உடையவன்

உலா அங்கால்ப் = உலா வரும் அந்த வேளையில்

பைய = மெல்ல

நடக்கவுந் தேற்றாயால் = நடக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா

நின்பெண்மை = உன்னுடைய பெண் தன்மையை

ஐயப் படுவ(து) உடைத்து = சந்தேகப் படும்படி இருக்கிறது !


மெல்ல நடக்காமல் வேகமாக நடப்பதால் ஒரு சந்தேகம்.

ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்று சொல்வார்கள். என் மனம் உனக்குத் தெரியாததால் , நீ ஒரு ஒரு பெண் தானா என்று  சந்தேகம்.

ஒரு தலைக் காதல்தான். அதன் சோகம் தெரியாமல், நகைச் சுவையாக சொல்லும் அந்தப்  பெண் நம் கண் முன் வந்து போகிறாள்.

இலக்கியம் ஒரு கால இயந்திரம். நம்மை வேறு ஒரு கால கட்டத்துக்கு கொண்டு சென்று  விடும்.

மதுரை வீதி, மன்னன் மேல் காதல் கொண்ட சாதாரணப் பெண், அவளின் மன  ஏக்கங்கள், உலாப் போகும் மன்னன், மதுரையின் வீதிகள் எல்லாம் நம் கண்  முன்னே விரிகின்றன - இந்த நாலு  வரியில்.


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஒரு லேசான புன்முறுவலுடன் ரசிக்கும்படியாகவும் சுவையாகவும் விளக்கி உள்ளீர்கள்.

    ReplyDelete