திருப் புகழ் - வந்தித்து அணைவோனே
அவன்: உன் கிட்ட ஒண்ணு கேட்கலாமா ?
அவள்: ம்ம்..என்ன கேட்கப் போற ?
அவன்: சரின்னு சொல்லணும் ...மாட்டேன்னு சொல்லக் கூடாது...
அவள்: ஆத்தாடி, அது எல்லாம் முடியாது...நீ பாட்டுக்கு ஏதாவது எசகு பிசகா கேட்டேனா ?
அவன்: அப்படி எல்லாம் கேப்பனா ? கேக்க மாட்டேன்...சரின்னு சொல்லு...
அவள்: ரொம்ப பயமா இருக்கு...
அவன்: சரின்னு சொல்லேன்...என் மேல நம்பிக்கை இல்லையா ? ப்ளீஸ்...என் செல்ல குட்டில, என் கண்ணு குட்டில...சரின்னு சொல்லு
அவள்: ம்ம்ம்...சரி...என்னனு சொல்லு
அவன்: ஒரே ஒரு தடவை உன்னை கட்டி பிடிக்கணும் போல இருக்கு...கட்டிக்கவா ?
அவள்: ம்ம்ம்ம்....
-------------------------------------------------------------------------------------------------
என்னடா ஏதோ திருப்புகழ்னு தலைப்பை போட்டுட்டு ஏதேதோ எழுதிக் கொண்டு போறானே என்று நினைக்கிறீர்களா "
இல்லை....அருணகிரி நாதர் சொல்கிறார்....
வள்ளியை வணங்கி, பின் அவளை அணைத்துக் கொண்டானாம் முருகன்.
முருகன், வள்ளியை வணங்கினான் என்கிறார் அருணகிரி. வணங்கிய பின் அணைத்துக் கொண்டானாம். எதற்கு வணங்கி இருப்பான் ?
பாடல்
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.
சீர் பிரித்த பின்
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே
உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே
மயில் தகர் கல் இடையர் அந்தத் திணை காவல்
வனச குற மகளை வந்தித்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
கரி முகனுக்கு இளைய கந்தப் பெருமாளே
பொருள்
இயல் இசையில் = அழகான பேச்சிலும், இனிமையான இசையிலும். இசை என்று சொன்னால் நான் குரல் என்று கொள்வேன். பெண்களின் குரலுக்கே ஒரு இனிமை உண்டு. அவர்கள் பேச்சில் ஒரு வசீகரம் இருக்கும்.
உசித = சிறந்து விளங்கும்
வஞ்சிக்கு = பெண்களிடம்
அயர்வாகி = சோர்ந்து
இரவு பகல் = இரவும் பகலும், அவர்களையே நினைத்து மனம் சோர்ந்து போய் .
மனது சிந்தித்து = எந்நேரமும் அவர்கள் நினைவாகவே இருந்து
உழலாதே = உழலாமல்
உயர் கருணை புரியும் = உயர்ந்த கருணையை புரியும்
இன்பக் கடல் மூழ்கி = இன்பமாகிய கடலில் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே = இறைவன் என்பவன் வெளியில் இருப்பவன் அல்ல. நமக்குள்ளேயே இருக்கிறான். நாம் அறிவது இல்லை. அந்த அறிவைத் தருவாயே என்று வேண்டுகிறார்.இறைவனின் அருள் வேண்டாமாம். அன்பு வேண்டுமாம்.
மயில் = மயில்கள் ஆடும் மலை
தகர் = ஆடுகள் இருக்கும் மலை
கல் இடையர் = கல் என்றால் மலை. மயில்களும் ஆடுகளும் இவற்றிற்கு இடையே வாழும் வேடுவர்கள்
அந்தத் திணை காவல் = அந்தத் திணைக்கு காவல் இருக்கும்
வனச குற மகளை= திருமகள் போல அழகு கொண்ட வள்ளியை
வந்தித்து = கும்பிட்டு, வணங்கி
அணைவோனே = அனைத்துக் கொள்பவனே
கயிலை மலை அனைய = கயிலை மலை போன்ற
செந்தில் பதி வாழ்வே = திரு செந்தூரில் வாழும் முருகனே
கரி = யானை
முகனுக்கு = முகத்தை உடைய விநாயகருக்கு
இளைய = தம்பியான
கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே
இது எனக்குத் தோன்றிய பொருள்.
இந்த பாடலுக்கு உரை எழுதிய பல பெரியவர்கள், பரமாத்மா கருணை கொண்டு ஜீவாத்மாவை ஏற்றுக் கொண்டது என்று "வனச குற மகளை வந்தித்து அணைவோனே" என்ற வரிக்கு பொருள் தந்திருக்கிறார்கள்.
மகான்களின் பாடல்களுக்கு சிந்தித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.
உங்கள் சிந்தனைக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்.