Saturday, December 28, 2013

இராமாயணம் - விளம்ப வேண்டுமோ ?

இராமாயணம் - விளம்ப வேண்டுமோ ?


வீடணன் சரண் அடைய வந்திருக்கிறான். அங்கிருந்த குரங்குகள் எல்லாம் அவனை சேர்க்கக் கூடாது, அவனை சிறை பிடிக்க வேண்டும் என்று கூறுகின்றன.

இராமன் மந்திர ஆலோசனை சபையை கூட்டுகிறான்.

சுக்ரீவன், அங்கதன், சம்பாதி எல்லோரும் விபீஷணனை சேர்க்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.

அனுமன் அமைதியாக இருக்கிறான்.

இறுதியில் இராமன், அனுமனிடம் அவன் எண்ணம் என்ன என்று கேட்க்கிறான்.

அவன் என்ன சொன்னான் என்பதை விட எப்படி சொன்னான் என்று பார்ப்போம்.

நம் வீட்டிலோ, அலுவகலத்திலோ, நண்பர்கள் கூட்டத்திலோ நமக்கு எதிரான கருத்துகளை மற்றவர்கள் சொன்னால் நாம் என்ன செய்வோம் ?

முதலில் அவர்கள் மேல் கோபம் வரும் ... இப்படி முட்டாள்களாக இருக்கிறார்களே என்று  எரிச்சல் வரும்....நம் முறை வரும் போது அவர்கள் சொன்னதை  எதிர்த்து நம் கருத்தை வலுவாகக்  கூறுவோம்...அவர்கள் வருத்தப் படுவார்கள், வாதம் வலுக்கும், உணர்சிகள் உச்சம் எட்டும்..

அனுமன் மற்றவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் அதை எவ்வளவு பணிவாக, அன்போடு பண்போடு கூறுகிறான் என்று பார்ப்போம்....

"இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள். அறிவில் உயர்ந்தவர்கள். அவர்கள் எல்லோரும் அது  செய்யத் தக்கது அல்ல என்று கூறி  விட்டார்கள். அவர்கள் நல்லவர்கள். அறிந்து தெரிந்துதான் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு மேலும் நான் எதுவும் கூற வேண்டுமா " என்று அனுமன்  ஆரம்பிக்கிறான்.

பாடல்

'எத்தனை உளர், தெரிந்து எண்ண ஏய்ந்தவர்,
அத்தனைவரும், ஒரு பொருளை, "அன்று" என,
உத்தமர், அது தெரிந்து உணர, ஓதினார்;
வித்தக! இனி, சில விளம்ப வேண்டுமோ?

பொருள்

'எத்தனை உளர் = எவ்வளவு பேர் இருக்கிறார்கள்
தெரிந்து = தெரிந்து
எண்ண  = எண்ணி, நான்றாக நினைத்து 
ஏய்ந்தவர் = அறிந்தவர்கள்
அத்தனைவரும் = அனைவரும்
ஒரு பொருளை = வீடணனை அடைகல்மாக ஏற்றுக் கொள்ளலாமா என்ற அந்த ஒரு பொருளை
"அன்று" என = தேவை இல்லை என்று
உத்தமர் = உத்தமர்கள்
அது தெரிந்து = அதன் நல்லது கெட்டதை தெரிந்து
உணர = உணர்து
ஓதினார் = கூறினார்கள்
வித்தக! = வித்தகனே
இனி, சில விளம்ப வேண்டுமோ? = இனி வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா ?

என்று மிக மிக பணிவுடன் ஆரம்பிக்கிறான்.

அவர்கள் சொன்ன கருத்துகள் எதுவும் அனுமனுக்கு ஏற்புடையது அல்ல. அதற்கான காரணங்களை பின்னால் ஒவ்வொன்றாக கூறுகிறான். கடைசியில் இராமன் அனுமனின் கருத்தை ஏற்றுக் கொள்கிறான்.

சொல்லின் செல்வன் எப்படி பேச வேண்டும் என்று நமக்கு கற்றுத் தருகிறான்.

கற்றுக் கொள்வோமே...




1 comment:

  1. அருமை. அனுமன் எவ்வாறு தன் காரணங்களை சொன்னான் என்பதையும் எதிர்பார்க்கிறேன். எப்படியும் பல பாடல்களை கையாள்வீர்கள். அதனை கூடிய வரை ஒரு கருத்தின்/தலைப்பின் அனைத்து பாடல்களாக தொடர்ந்து அளித்தால் முழுமையாக அனுபவிக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து. சிரமமில்லையெனில் முயற்சிக்கவும்.

    உங்களது முக்கியப் பாடல்களை ஒரு தொகுப்பாக சேமித்து வருகிறேன். வரிசையாக அமைந்தால் முழுமை பெறும்.

    ReplyDelete