Sunday, December 29, 2013

அபிராமி அந்தாதி - நலம் கொண்ட நாயகி

அபிராமி அந்தாதி - நலம் கொண்ட நாயகி 



இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே 

பெண்.

அவளன்றி ஏது இந்த உலகம். அவளன்றி அன்பு ஏது, இனிமை ஏது, சுகம் ஏது ?

பெண்மை இயற்கைலேயே  அழகானது.

அவர்களின் குரல் அதை மிக சுகமானது. இனிமையானது.

அழகோடு அறிவும் சேர்ந்து விட்டால்  அதற்கு இணை ஏது ?

ஆண் இயற்கையிலேயே கொஞ்சம் முரடு. கரடு முரடான குரல். சண்டை பிடிக்கும் சுபாவம். வலிமையான உடல்.

பட்டர் அபிராமியை பார்க்கிறார்.

என்ன ஒரு பேரழகு. அவள் உடல் அழகை பார்த்து வியக்கிறார். அதற்கு மேல் அவளின் இனிய குரல். இனிமை என்றால் பனி போல சில்லென்று இருக்கும் இனிமை.

அவளின் அறிவோ - வேதங்களின் முடிவான அறிவு. கரை கண்ட அறிவு.

இத்தனையும் ஒன்றாக சேர்ந்த அவளை பார்க்கிறார்.

அவளுடைய கழுத்தில் ஒரு முத்து மாலை இருக்கிறது. அந்த மாலை அவளின் மார்பில் கிடந்து புரள்கிறது. அவளுடைய மார்புகள் இளமையானவை. வலிமையானவை. அவள் மூச்சு விடும் போது அவை நெருங்கி வருகின்றன. அந்த முத்து மாலை அவளின் மார்புகளுக்கு இடையே அகப்பட்டு இருக்கிறது. பின் இளகுகிறது.

சிவனின் வலிமையான மார்பை தாங்கும் மார்புகள் அவளுடையவை.

பட்டர்  உருகுகிறார்.

இடங் கொண்டு = நல்ல இடத்தில் இருந்து கொண்டு

விம்மி = விம்மி

இணை கொண்டு = இணையான இரண்டு மார்புகளின் இடையே 

இறுகி = அவை ஒன்று சேரும்போது இறுகி

இளகி = பின் அவை விலகும்போது இளகி

முத்து வடங் = முத்து மாலை

கொண்ட கொங்கை = கொண்ட மார்புகள்

மலை கொண்டு = மலை போன்ற

இறைவர் = சிவனின்

வலிய நெஞ்சை = வலிமையான நெஞ்சை

நடங் கொண்ட = உன் விருப்பப் படி நடனம் ஆட வைக்கும் 

கொள்கை நலம் = நல்ல எண்ணங்கள்

கொண்ட நாயகி = கொண்ட நாயகி

நல் அரவின் = நல்ல பாம்பின்

படம் கொண்ட = பாம்பின் படத்தை போன்ற

அல்குல் = அல்குல்

பனி மொழி = பனி போன்ற மொழி

வேதப் பரிபுரையே = வேதங்களை கால் சிலம்பாக கொண்டவளே அல்லது வேதங்களின் முடிவே

அவளின் அங்க அழகுகள் = மார்பு, அல்குல்
அவளின் குரல் இனிமை = பனி மொழி
அவளின் குணம் = நலம் கொண்ட கொள்கை
அவளின் அறிவு = வேதப் பரிபுரை

அபிராமி.


2 comments:

  1. இன்று ஆயிரமாவது பாடலை எங்களுக்காக பதித்துள்ள உங்களுக்கு மனமார்ந்த நன்றி. பல தலைப்புகளில் பல பாடல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் . உங்களால் நாங்கள் ஆயிரம் பாடல்கள் தெரிந்து கொண்டுள்ளோம் என்று நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதற்கு நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமை பட்டுள்ளோம். இந்த பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.. நன்றி

    ReplyDelete
  2. 2013 முடியப்போகும் இத் தருவாயில், ஆயிரம் பாடல்களும் இந்த ப்ளோகில் நிறைவு பெறுகின்றன. எங்கள் எல்லோருக்கும் என்ன ஒரு இனிமையான தமிழ்ப் பயணம்!

    "நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்" என்ற நோக்கில், இத்தனை நேரம் செலவழித்து, சிரமமும் மேற்கொண்டு எங்களை இந்தப் பயணத்தில் கொண்டு சென்றதற்கு நன்றி.

    2014 மட்டுமல்ல, இன்னும் பல்லாண்டுகள் இப்பயணம் நீடிக்க எனது (சுயநலமான) வாழ்த்துக்கள்!

    ReplyDelete